மாரியப்பன்
தமிழகத்தில் சேலம் அருகே பெரிய வடக்கம்பட்டி கிராமத்தில் பிறந்து வளர்ந்த மாரியப்பன், ஒரே நாளில் தன் சாதனையின் மூலம் உலக அளவில் பேசப்பட்டார். அதற்குக் காரணம் மாற்றுத் திறனாளிகளுக்காக நடத்தப்பட்ட ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் அவர் வென்ற தங்கப் பதக்கம். அதுவும் இறுதிப் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி புதிய உலகச் சாதனையையும் படைத்தார் மாரியப்பன். பாராலிம்பிக் வரலாற்றில் தங்கம் பெறும் மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையும் மாரியப்பனுக்குக் கிடைத்தது.
விராட் கோலி
இந்தியாவின் ‘ரன் மெஷின்’ விராட் கோலி, இந்த ஆண்டு விஸ்வரூபம் எடுத்தார். டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவங்களிலும் 70-க்கும் மேற்பட்ட ரன் சராசரியை இந்த ஆண்டு வைத்திருக்கும் ஒரே வீரர் இவர் மட்டுமே. ஒரு நாள் போட்டிகளில் விரைவாக 25 சதங்களைக் கடந்த வீரர், ஒரு நாள் போட்டியில் விரைவாக 7,500 ரன்களைக் கடந்த வீரர், தொடர்ச்சியாக 18 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடையாத கேப்டன் எனக் கோலி தொட்ட மைல் கற்கள் ஏராளம். அதோடு ஐ.சி.சி. ‘ஒரு நாள் கனவு அணியின் கேப்டன்’ என்ற அந்தஸ்தும் அவருடைய சாதனையில் தனி மகுடமாக ஜொலிக்கிறது.
அஸ்வின்
சுழல் பந்துவீச்சில் மாயாஜாலம் நிகழ்த்திய தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், இப்போது ஆல் ரவுண்டராகவும் கலக்குகிறார். இந்த ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் 1000 ரன்களையும், 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திச் சாதனை புரிந்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 72 விக்கெட்டுகளை இந்த ஆண்டு வீழ்த்திய ‘தனி ஒருவனான’ அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
உசேன் போல்ட்
தடகளப் போட்டிகளின் வரலாற்றை மீண்டும் மாற்றி எழுதி யிருக்கிறார் உலகின் அதிவேக மனிதனான ஜமைக்காவின் உசேன் போல்ட். ரியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றதன் மூலம், இந்தப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று தங்கப் பதக்கங்களை வென்று சாதித்தார். ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றுள்ள உசேன் போல்ட், ஆறாவது முறையாகச் சிறந்த சர்வதேசத் தடகள வீரர் விருதையும் பெற்று அசத்தினார்.
மைக்கேல் பெல்ப்ஸ்
ஒலிம்பிக் தங்க வேட்டை நாயகன், உலகின் தலைசிறந்த நீச்சல் வீரர் எனப் பெயரெடுத்த மைக்கேல் பெல்ப்ஸ், இனி யாரும் எட்ட முடியாத சாதனைகளை இந்த ஆண்டு படைத்தார். ரியோ ஒலிம்பிக்கில் ஐந்து தங்கம், ஒரு வெள்ளி என அவருடைய தங்க வேட்டை தொடர்ந்தது. 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி இதுவரை 23 தங்கப் பதக்கங்களைப் பெல்ப்ஸ் வென்றுள்ளார்.
தலைநிமிர வைத்த நங்கைகள்
பி.வி. சிந்து
ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்ட பட்டியலில்கூட இடம்பெறாத பி.வி. சிந்து, பேட்மின்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதிலும் இறுதிப் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆக்ரோஷமான ஆட்டம், பேட்மின்டனுக்கு புதிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. கடந்த நான்கு ஆண்டுகளாகச் சர்வதேசக் களத்தில் கணிக்க முடியாத ஒரு கறுப்புக் குதிரையாக இருந்துவந்த சிந்துவின் மிகப் பெரிய சாதனை இது.
தீபா கர்மாகர்
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் இந்த முறை ஜொலித்தவர்கள் எல்லோருமே பெண்கள். அவர்களில் பதக்கம் வெல்லாமலேயே மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர், வடகிழக்கில் ஒதுங்கி நிற்கும் திரிபுராவைச் சேர்ந்தவர். இந்தியா சார்பில் ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டிக்கு முதன்முதலில் தகுதி பெற்ற பெண் என்ற பெருமையைப் பெற்றார். இறுதிச் சுற்றில் 0.15 புள்ளிகள் வித்தியாசத்தில் வெண்கலப் பதக்கத்தை அவர் தவறவிட்டார். ஆனால், ரசிகர்கள் அவரை ஏமாற்றவில்லை. பதக்கத்தைப் பற்றி கவலைப்படாமல் தீபாவின் சாதனையைப் பாராட்டித் தள்ளிவிட்டனர்.
சாக்ஷி மாலிக்
2016 ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கமே வெல்லாதோ என்ற தவிப்பைத் தன் வெற்றியின் மூலம் தீர்த்துவைத்தார் ஹரியாணாவின் சாக்ஷி மாலிக். 2016 ஒலிம்பிக் மல்யுத்தப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், இந்தியாவின் பதக்கக் கணக்கைத் தொடங்கிவைத்தவர். ஒலிம்பிக் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையும் அவருக்குச் சேர்ந்து கிடைத்திருக்கிறது. சமீபத்தில் வெளியான ஆமிர்கானின் ‘தங்கல்’ திரைப்படத்தில் வருவதைப் போன்ற கதையை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர்.
சானியா மிர்சா
சர்வதேசப் பெண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸுடன் இணைந்து 2016 ஆஸ்திரேலிய ஒபன் உட்பட ஆறு கிராண்ட்ஸ்லாம் வென்றவர் சானியா மிர்சா. இந்த ஆண்டில் அவரிடமிருந்து பிரிந்தார். தொடர்ச்சியாக 41 போட்டித் தொடர்களில் வென்ற பெருமையை இருவரும் பெற்றிருக்கிறார்கள். பெண்கள் இரட்டையர் தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைக் கடந்த ஆண்டு சானியா பெற்றார். தொடர்ச்சியாக 84 வாரங்களாக முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டும் வருகிறார்.
சிமோன் பைல்ஸ்
ரியோ ஒலிம்பிக்கில் அதிகம் உச்சரிக்கப்பட்ட வீராங்கனையின் பெயர். தான் பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே ஜிம்னாஸ்டிக் போட்டிகளின் ஐந்து பிரிவுகளில் நான்கு தங்கமும் ஒரு வெண்கலமும் (பீம் பிரிவு) வென்றுள்ளார். வெண்கலம் வென்றபோதும் தன் அக்மார்க் புன்னகையுடன் பதக்கத்தைக் கழுத்தில் ஏந்திக்கொண்டவர். வரலாற்றின் மிகச் சிறந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் பட்டியலில் 19 வயதிலேயே தன் இடத்தை உறுதி செய்த பெருமையைப் பெற்றவர்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago