இமயம் எனும் கொடிமரம்

By அ.வெண்ணிலா, மு.ராஜேந்திரன்

இமயம். ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு இந்த மலை ஒரு புண்ணியத் தலம். இந்துக்களின் நம்பிக்கைப்படி இமயமலையின் கொடுமுடியே சிவனின் இருக்கை. கயிலாயம் அங்குதான் இருக்கிறது. இந்து மதத்தின் அனைத்துக் கடவுள்களின் இருப்பிடமும் அதுவே. சைவர்களின் புண்ணியத் தலங்களான கேதார்நாத்,கங்கோத்ரி,யமுனோத்திரி போன்றவையும் வைணவர்களின் முக்கியத் தலமான பத்ரிநாத்தும் இமயமலையிலேதான் உள்ளன.

புவியியல் அடிப்படையில் இமயமலை இந்தியாவின் நுழைவாயில். இந்தியாவிற்குள் நுழைந்த நல்லதும் கெட்டதும் இமயமலையையே தங்களின் நுழைவாயிலாகக் கொண்டன. இந்தியா சந்தித்த ஏராளமான அந்நியப் படையெடுப்புகளுக்கு இமயமலையே வழிவிட்டு சாட்சியாக நின்றிருக்கிறது.

இயற்கையின் அடிப்படையில் இமயமலை இந்தியாவைக் காக்கும் பேர் அரண். பருவக் காற்றுகளைத் தடுத்து இந்தியாவிற்கு அதிக மழைப்பொழிவையும் பனிப்பொழிவையும் கொடுப்பது இம்மலைதான். எல்லாவற்றையும் விட வற்றாத நதிகளின் பிறப்பிடமாகவும் இருக்கிறது. இமயம் இயற்கைக் கொடையின் அரசி. அதனால்தான் இமயத்தை வெல்வதும் இமயத்தின் மீது வெற்றிக் கொடி நாட்டுவதும் நம் மன்னர்களுக்கு பெரும் சாதனையாக் இருந்திருக்கிறது.

வரலாற்றுக்கு முந்திய காலத்தில் (கி.மு.10000 முதல் கி.மு.5000 வரை என இந்தக் காலம் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருக்கிறது) பாண்டிய மன்னன் நெடியோன்தான் முதன்முதலில் இமயத்தில் தன் கயல் சின்னத்தைப் பொறித்த முதல் அரசன் என்று இலக்கியங்கள் கூறுகின்றன. தென் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட இம்மன்னன் தன்னுடைய நாடு, முதல் கடல்கோளால் அழிந்த பிறகு, எஞ்சியிருந்த குடிகளுடன் வடதிசை நோக்கி நகர்கிறான். கங்கைச் சமவெளியை உள்ளடக்கி அவன் உருவாக்கிய ஒரு பேரரசில்தான் முதன்முதலில் குமரி துவங்கி இமயம் வரையான நிலப்பரப்பு ஒரே ஆட்சியின் கீழ் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இமயத்தில் தமிழ்த் தடம்

சோழ அரசர்களில் இமயத்தில் தன்னுடைய புலிச் சின்னத்தைப் பொறித்தவன் கரிகால் சோழனே. கரிகால் சோழன் என்ற பெயரில் வரும் இலக்கிய, வரலாற்றுக் குறிப்புகள் இரண்டு, மூன்று கரிகால் சோழ மன்னர்கள் இருந்திருக்கக்கூடும் என்பதை உணர்த்துகின்றன. ஆனால் சிலப்பதிகாரம் சொல்லும் கரிகால் சோழன் இமயத்தை வென்று தன் ஆட்சியின் பரப்பை இமயம் வரை நிலைநாட்டியிருப்பான் என்பது நம்பத் தகுந்ததாக இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கரிகால் சோழன் தென்னாட்டில் எவருடனும் போர் செய்யும் வாய்ப்புக் கிடைக்காமல், தோள் தினவெடுத்து வடதிசை நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான். அங்கு சென்ற அவன் இமயத்தின் உச்சியைத் தாக்கினான். அதைத் தன் செண்டாயுதத்தால் (கைத்தடியால்) அடித்து அதன் பெருமையை அடக்கினான். அதன் முன்புற நெற்றியில் மட்டுமின்றிப் பின் புறத்திலும் தன் புகழை எழுதுவதற்காக அதன் தலையைத் திருகி முன்புறம் திருப்புகிறான். இமயத்தின் நெற்றியிலும் அதன் பின்புறத்திலும் தன் புலிக்கொடியைப் பொறித்து தன் நாடு மீண்டான். ஜெயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப் பரணி கரிகாலனின் வெற்றியை இப்படி விவரிக்கிறது.

வட இமயத்தில் தமிழ்த்தடம் பொறித்த முதல் சேர வேந்தன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே. இமயவரம்பன் என்று தன் பெயரிலேயே இமய வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள இம்மன்னனைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் குமட்டூர்க்கண்ணனார் பாடியுள்ளார்.

இமயம் சென்ற முதல் மன்னனாக இமயவரம்பன் இருந்தபோதும், சேர மன்னன் செங்குட்டுவனே அதிகம் சிறப்பிக்கப்படுபவன். அவன் இமயத்தில் இருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்குச் சிலை வடித்ததே இதற்குக் காரணம் (சிலை வடிக்கும் வழக்கம் இரண்டாம் நூற்றாண்டில் கிடையாது. எனவே செங்குட்டுவன் கண்ணகிக்கு வடித்த சிலை என்பது நாம் இன்று கோவில்களில் காணும் முழுமையடைந்த சிலையாக இருந்திருக்காது).

இமய வெற்றியை இன்றைக்கு நாம் இப்படிப் புரிந்துகொள்ளலாம். நில உலகின் கூரையான இமயம் மன்னர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்திருக்கும். தன் நாட்டில் போர் இல்லாத நேரங்களில் தன் அரசின் எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் மன்னர்கள் வடதிசை நோக்கிப் படை எடுத்திருக்கலாம். இமயத்தை வென்று அடக்குதல் என்பதைக் கயிலாயத்தை அடைவதற்குத் தடையாக உள்ள பனி அடர்ந்த மலை முகடுகளை அடித்து நொறுக்கி வழி உண்டாக்கிச் செல்லுதல் என்று அர்த்தப்படுத்தலாம். இந்துக்களான தமிழ் மன்னர்களுக்கு மண்ணுலக கயிலாயம் எனப்படும் இமயம் சென்று வருவது ஆன்மிகத் தேடலின் ஒரு வழியாகவும் இருந்திருக்கலாம்.

மிகப் பெரிய வாணிப நோக்கமும் இந்தப் படையெடுப்புகளுக்குப் பின் இருந்திருக்க முடியும். இமயத்தைக் கடந்து சீனத்துடன் நமக்கு வரலாற்றுக் காலந்தொட்டு வாணிப உறவு இருந்துவந்திருக்கிறது. சீனத்திற்குச் செல்லும் பாதையில் உண்டாகும் தடைகளைப் போக்கவும், அங்கு செல்லும் நம்முடைய வியாபாரக் குழுக்களுக்கு ஆதரவாக எதிரிகளிடம் தம் பலத்தைக் காண்பிக்கவும்கூட அரசர்கள் தங்களின் படைகளை அங்கு அனுப்பியிருக்கலாம். இயற்கையின் காரணமாகவோ, மனிதர்களாலோ உண்டாகும் தடைகளை நீக்குவதை, அடக்குதல் என்று புலவர்கள் பாடியிருக்கலாம்.

வெற்றியின் அடையாளம்

இமயத்தில் வெற்றிச் சின்னத்தை நாட்டுதல் என்றால் 1953-ம் ஆண்டு ஹிலாரியும் டென்சிங்கும் ஏறிய இமயத்தின் முகட்டிலேயே என்று பொருளல்ல. வடதிசையில் அவர்கள் சென்ற பாதையில் எங்கு வேண்டுமானாலும் மன்னர்கள் தங்களின் சின்னத்தைப் பொறித்துள்ளனர். வாரணாசி வழியாக சென்றவர்கள் சிம்லாவிலும்,டேராடூன் வழியாகச் சென்றவர்கள் சரஸ்வதி நதிக்கரையிலுமாக அவர்கள் சென்ற பாதையிலேயே தங்களின் சின்னத்தைப் பொறித்துள்ளனர்.

சோழாபாத் என்று முசோரிக்கும் நைனிடாலுக்கும் இடைப்பட்ட பகுதியில், உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு பாதை சோழர்கள் சென்ற வழியாக இருக்கக்கூடும். வடதிசை வழியாக உலகின் பல நாடுகளுடன் பண்பாட்டு, வாணிப தொடர்பு கொண்டமையை அந்நாடுகளில் உள்ள மொழி,பண்பாட்டுக் கூறுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. தமிழன் இமயம் சென்று தன் வெற்றிச் சின்னத்தை நிலைநாட்டினான் என்பதை இவ்வுறவுகளில் இருந்து அறிய முடிகிறது.

இம் மாமலையின் வெற்றியைப் பற்றி பாடிய புலவர்களின் வார்த்தைகளில் கூடுதல் குறைவைக் காண முடியுமே தவிர இமயம் தமிழர்களின் கொடிமரம் போல் ஒரு காலத்தில் இருந்ததில் சந்தேகம் இல்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்