வேலையற்ற இளைஞன், கவிதை எழுத ஆரம்பிப்பது ஒரு ஆபத்தான அறிகுறி. அவர்கள் தங்கள் முதல் கவிதையை எழுதிய மூன்றாம் நிமிடத்திலிருந்து, எப்போது வேண்டுமானாலும் காதல் வசப்படும் சாத்தியங்கள் அபாரமாக உள்ளன. தாடி வளர்த்துக்கொண்டு, கண்களில் விரக்தியுடன், வானத்தைப் பார்த்து சிகரெட் புகை விட்டபடி கவிதை போல் பேசும், கவிதை எழுதும் இளைஞர்களை, கல்லூரி முடித்துவிட்டு அப்போதுதான் கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்திருக்கும் இளம் பெண்களுக்குப் பிடித்துவிடும். இவர்கள் சந்திக்கும்போது ஒரு காதல் மலர்கிறது!
காதல் என்பது பேசிப் பேசிக் கரையும் அல்லது கரைக்கும் விளையாட்டு. அதனால்தானோ என்னவோ, காதல் காட்சிகளில் வசனம் மூலம் கவித்துவம் செய்கிற கௌதம் மேனன் திரைப்பட டிவிடிக்களை இன்றைய காதலர்கள் பரிசளித்துக்கொள்கிறார்கள்.
தள்ளிப் போகாதே
எனையும்
தள்ளிப் போகச் சொல்லாதே
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே...
ஒவ்வொரு காலகட்டத்திலும், காதலர்களின் தேசத்தில், ஒரு புதிய காதல் கீதம் இசைக்கப்படுகிறது. 2016-ன் காதல் கீதம், ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படத்தில், ஏ.ஆர். ரஹ்மானின் அற்புதமான இசையில் ஒலிக்கும், ‘தள்ளிப் போகாதே’ பாடல்.
அந்தப் பாடல் வெளியான இந்த ஆண்டு ஜனவரிக்குப் பிறகு, காதலில் விழுந்தவர்களெல்லாம் ‘தள்ளிப் போகாதே பாட்டு கேட்டுருக்கீங்களா?’ என்று தங்கள் முதல் உரையாடலைத் தொடங்கினார்கள். காதலைச் சொல்லியும் சொல்லாமலும் பிரிந்து சென்ற முன்னாள் காதலர்கள், கடந்த காலத்தில் தள்ளிப் போய்விட்ட நாட்களை நினைத்துக் கண்கள் கசிந்தார்கள்.
படம் வெளியாகி இரண்டு வாரமாகியும், இன்னும் அதன் வீடியோ பாடல் காட்சி யூடியூப்பில் ஏறவில்லை. ஆனால் தியேட்டரில் படம் ஓடும்போது, செல்போனில் படமெடுக்கப்பட்ட வீடியோக்கள் யூடியூப்பில் நிரம்பி வழிகின்றன. இந்தப் பாடல் ஏன் இளைஞர்களுக்கு அப்படிப் பிடித்துப்போனது?
ஒரு ஆண்-பெண் நட்பு, காதலாக மாறுவதற்கு முந்தைய காலத்தை, ‘முன்காதல் காலம்’ என்று சொல்லலாமா? அது… காதலின் மகத்தான போராட்ட காலம். அப்போது இரண்டு இதயங்களுக்குள் ஆயிரம் புயல்கள் வீசுகின்றன. ஆயிரம் கடல்கள் சீறுகின்றன. காதலைச் சொன்னவுடன் ஆயிரம் பூக்கள் மலர்கின்றன. ஆனால் அவ்வாறு சொல்வதற்கு முந்தைய காலத்தை, இந்தப் பாடல் துல்லியமாகச் சித்தரிக்கிறது.
காதல் தோன்றியவுடன், காதலர்களுடைய வானத்தில் மட்டும் வானிலை மாறுகிறது. மார்பின் வேகம் கூடுகிறது. காதலைச் சொல்லாமல் நகரும் ஒவ்வொரு நொடியும், கசையடி போல் முதுகில் விழுகிறது. ஏன் முதல் முத்தம் தரத் தாமதமாகிறது என்று அந்தத் தாமரைகள் வேகின்றன. வெந்த தாமரைகளின் உணர்வை, கவிஞர் தாமரை இப்பாடலில் தன் கவித்துவமான தமிழில் துல்லியமாகச் சொல்லியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் இந்தப் பாடலில் ஒலிக்கும் ஒவ்வொரு கிடார் தந்தியின் ஓசையும், நமக்குள் இருக்கும் காதல் நரம்புகளைச் சுண்டிவிடுகின்றன.
ஒரு காதலின் வலியையும் சுகத்தையும் ஆக்ரோஷத்தையும் அழகாகப் படமாக்கியிருப்பதைப் பார்க்கப் பார்க்க… அழகிய இசையை, கலர் கண்ணாடி அறைக்குள், ஈர மணலில் படுத்துக்கொண்டு கேட்பது போல அவ்வளவு அற்புதமாக இருக்கிறது.
அதிலும் தன் உடம்பைக் கொஞ்சம் ஏற்றி, ‘நோ ஷேவ் நவம்பர் மேன்’ போல தாடி வைத்துக்கொண்டு வரும் சிம்பு, ‘வேலையற்ற காதல’னுக்குள் இருக்கும் தகிப்பை அசாதாரணமாக வெளிப்படுத்துகிறார். அதுசரி, காதலில் தோற்றால் மட்டும்தான் தாடி வைக்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா என்ன?
இப்படி தாடி வைப்பது, இளைஞர்களின் உடல்மொழியின் புதுமொழி. இந்த நவம்பரில் உலகம் முழுக்க ‘நோ ஷேவ் நவம்பர்’ என்றொரு விஷயம் இளைஞர்கள் மத்தியில் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘இது என்னப்பா வித்தியாசமா..?’ என்று கூகுளில் தேடினால், ஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், அதனால் நிகழும் ஆண்களின் தற்கொலைகள் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இந்த ‘தாடி வளர்ப்பு’ திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம்.
இப்படி தாடி வைப்பது, இளைஞர்களின் உடல்மொழியின் புதுமொழி. இந்த நவம்பரில் உலகம் முழுக்க ‘நோ ஷேவ் நவம்பர்’ என்றொரு விஷயம் இளைஞர்கள் மத்தியில் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ‘இது என்னப்பா வித்தியாசமா..?’ என்று கூகுளில் தேடினால், ஆண்களைத் தாக்கும் புராஸ்டேட் புற்றுநோய், டெஸ்டிகுலர் புற்றுநோய், அதனால் நிகழும் ஆண்களின் தற்கொலைகள் ஆகியவற்றுக்கு எதிரான விழிப்புணர்வுக்காக இந்த ‘தாடி வளர்ப்பு’ திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்களாம்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சையின்போது உடலில் உள்ள ரோமங்கள் எல்லாம் உதிர்ந்து களையிழந்து காணப்படுவார்கள். பார்க்கவே அவ்வளவு பரிதாபமாக இருக்கும். அதை மனதில் வைத்தே இந்த மாதம் முழுவதும் ‘ஷேவ்’ செய்யாமல், அந்த ஷேவிங்கிற்கு ஆகும் செலவுகளைப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்குக் கொடுங்கள் என்று ‘மெஸேஜ்’ சொல்கிறது இந்த ‘நோ ஷேவ் நவம்பர்’ திட்டம்.
‘எழுதும் வலிகள்... எழுதா மொழிகள் எனது!’ என்று சிம்பு தாடியுடன் பாடும்போது, அதை ஒட்டுமொத்த ஆண்களின் நலனுக்கான பிரார்த்தனையாகவே நான் பார்க்கிறேன்.
இந்த நூதன விழிப்புணர்வு குறித்து மனம் மெச்சும் அதே நேரத்தில், இனி யாராவது ‘என்னப்பா தாடி..?’ என்று கேட்டால் ‘அவேர்னெஸ் மச்சி!’ என்று கூச்சமில்லாமல் சொல்ல ஒரு காரணம் கிடைத்ததை நினைத்து அல்ப மகிழ்ச்சியும்.
நெடுநாள் கழித்து, ஒரு பாடலுக்காகவென்று ரிலீஸான நாளன்றே நான் பார்த்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இப்படத்தில் ஒரு விபத்துக்குப் பிறகு, முற்றிலும் எதிர்பாராத ஒரு தருணத்தில், அந்தப் பாடலை படமாக்கியிருந்த வித்தியாசமான மேக்கிங்கிற்காக இயக்குநர் கௌதம் மேனனுக்கு ஒரு லவ் சல்யூட். சரி… படம் எப்படி?
முதல் பாதி ஓகே. ஒரு இளம் பெண்ணுடன், பைக்கில் பல நாள் பயணம் செல்ல வேண்டும் என்பது லட்சக்கணக்கான இளைஞர்களின் கனவு. அப்படி ஒரு செமையான களத்தை எடுத்துக்கொண்ட கௌதம் மேனன், படம் முழுவதும் அந்தக் காதல் பயணத்தைத் தொடர்ந்திருந்தால், ‘நார்த் 24 காதம்’ மலையாளப் படம் போல, தமிழுக்கு ஒரு அற்புதமான 'ரோட் ட்ரிப்' படம் கிடைத்திருக்கும். ஆனால் சினிமாவின் வியாபாரத் தேவைகள், ஒரு நல்ல கலைஞனை எப்படித் தடுமாறச் செய்கிறது என்பதற்கான அனைத்து சாட்சியங்களும் படத்தின் இரண்டாம் பாதியில் உள்ளன.
இடைவேளைக்குப் பிறகு, சிம்புவின் கைகளில் கௌதம் மேனன் துப்பாக்கியைக் கொடுத்திருக்கக்கூடாது. அதற்குப் பதிலாக பனித்துளிகள் படர்ந்த ரோஜா இதழ்களைக் கொடுத்திருக்கலாம்.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
5 days ago