வெற்றியோ தோல்வியோ எதுவும் நம் கையில் இல்லை. இது பெரும்பாலானோர் சொல்கிற வார்த்தை. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன? பதிலை சொல்வதற்க்கு முன்பு நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி ஒன்று இருக்கிறது. எந்த ஒரு செயலின் நகர்வும் முடிவும் நம்மை மீறி நடக்கிறதா, அப்படியே நடந்தாலும் அதை சரிசெய்ய கூடிய விஷயங்கள் நம்மிடையே இருக்கிறதா? என்பதுதான் அந்தக் கேள்வி. இந்தக் கேள்விக்கான காரணம், இரண்டு சூழல்களை கடந்துதான் இலக்குகளை அடைய வேண்டியிருக்கிறது. கட்டுப்பாடு, கட்டுப்பாடற்ற சூழல் என்ற இந்த இரண்டு சாலைகளிலும்தான் நாம வாழ்க்கை வண்டியை ஓட்ட வேண்டியிருக்கிறது.
ஆனால், இதில் நம் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. அந்த விஷயங்களில் நம் கவனத்தை முழுமையாக செலுத்துவோமென்றால் பலன்கள் அதிகரிப்பதை கண்கூடாகவும் பார்க்கலாம். நம் கவனத்தில் முதன்மையாக இருக்க வேண்டியது, எண்ணமும் அதை ஒட்டிய செயல்பாடுகளும்தான். பிறகு இந்தச் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றல். ஆற்றல் என்பதை எல்லோருக்கும் இயற்கை கொடுத்திருக்கிறது. அதை முறையாக முழுமையாக பயன்படுத்தும்போதுதான் அளப்பரிய சாதனைகள் சாத்தியமாகின்றன. இங்கு நமக்கு முன் நிற்கிற கேள்வி, உங்களுடைய ஆற்றலை எப்படி செலவிடப்போகிறீர்கள்? பிரயோஜனமாகவா, இலக்கிலிருந்து விலகிய செயல்களுக்காகவா? இலக்கை நோக்கி செல்லும்போது எதிர்ப்படும் தடைகளில் தங்கிவிடுகிறீர்களா அல்லது அதை படிக்கல்லாக மாற்றும் எண்ணம் அழுத்தமாக இருக்கிறதா?
அண்மையில் ஒரு பள்ளிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அது பார்வையற்ற குழந்தைகள் படிக்கிற பள்ளி. அங்கே அவர்கள் மற்ற பிள்ளைகளை போலவே செயல்படுகிறார்கள். வகுப்புகளுக்கு தங்களாகவே சுவற்றைப் பிடித்து நடந்துபோகிறார்கள். யார் உதவியும் இன்றி ஆசிரியர்கள் வழிகாட்டலுக்கு ஏற்ப தங்கள் இருக்கைகளில் அமர்கிறார்கள். பிறர் உதவியின்றி உணவுகளை உட்கொள்கிறார்கள். பார்வை திறனில் குறைபாடு என்று அவர்கள் தங்கள் செயல்களை கட்டிப்போட்டு முடங்கிவிடவில்லை. இந்த சூழலிலும் அவர்கள் தாங்கள் படிக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி வெற்றி நடைபோட்டு செல்கிறார்கள். அன்று அவர்களிடமிருந்து ஓர் அருமையான பாடத்தை கற்றுக்கொண்டேன்.
ஆனால், யதார்த்த சூழலில் வித்தியாசமான குரல்களும் கேட்கத்தான் செய்கின்றன. “சார், ஜாலியா ஒரு கோர்ஸ் இருக்கா, பிரச்சினையே இல்லாத ஒரு வேலை கிடைக்குமா” என்பதுதான். மனத்தில் பதிந்து வைத்துக்கொள்ள வேண்டிய பதில் ஒன்று இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையும் சவால்களையும் பிரிக்கவே முடியாது. சவால் இல்லாத துறை என்று ஏதாவது இருக்கிறதா என்ன? வங்கித் துறை, சுற்றுலாத் துறை, உணவகம் என்று ஆரம்பித்து எல்லா துறையிலும் சவால்களும் அதை எதிர்நோக்கும்போது சங்கடங்களை சந்திக்கவும் வேண்டியிருக்கிறது. நமக்கு தேவை சரியான எண்ணங்களும் சலிப்பான மனதை தவிர்க்கும் மனப்பான்மையும்தான்.
சரி, தடை போடும் சூழல்களை தாண்டி செயல்பட வேண்டும் என்று சொல்கிறீர்களா? எல்லா நேரமும் அது பலன்களை தரும் என்ற உத்திரவாதம் இருக்கிறதா என்று கேட்டால், இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. 1999 ஜனவரி 31 இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்றது இன்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவிருக்கும். சச்சின் நன்றாக திறமையை வெளிப்படுத்தி விளையாடியும் இந்திய அணி வெற்றியை நூலிழையில் இழந்தது. காரணம், அவர் முதுகு வலியோடு கஷ்டப்பட்டு வெற்றிக்கு அருகே வந்து இந்தியாவை நிறுத்தியபோது அவுட் ஆனார். ஆனால், தொடர்ந்து விளையாடிய வீர்கள் தங்கள் விக்கெட்டை இழக்க நேரிட இந்தியா வெற்றியை இழந்தது. தோல்வியால் சச்சின் உண்மையில் பெரிதாகவே மனமுடைந்தார். ஆனால், இந்த சூழல் தனது கட்டுப்பாட்டை மீறிய செயல் என்பதை உணர்ந்ததால் இந்தக் கவலை வலையில் சிக்காமல் அதிலிருந்து மீண்டு வந்தார். அதன் பிறகு பல சாதனைகளை நிகழ்தினார் என்பதுதான் வரலாறு.
தோல்விகளை ஏமாற்றங்களை எப்போதும் நினைவுகளில் சுமப்பதை தூக்கி எறியுங்கள். கடந்த கால தேதிகளை போலவே கடந்த கால தோல்விகள் மீண்டும் வராது என்ற நம்பிக்கையை மனதில் வையுங்கள். நமக்கு நாமே போட்டுக்கொள்ளும் கற்பனை தடைகளை தூக்கி எறியுங்கள். நம்மை பற்றி அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்ற சிந்தித்து சிக்கலில் மாட்டி கொள்ளாதீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் மனநிலை கொண்ட மனிதர்களின் விமர்சனங்களை சற்றே ஓரமாக வையுங்கள். ஏனென்றால், மற்றவர்கள் என்ன நினைக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் நிலையில் ஒருநாளும் நாம் இருக்கப்போவதில்லை.
பரம்பரை சொத்து வைத்திருப்பவர்கள், நமக்கு முன்னால இருந்தவர்கள் இன்னும் கொஞ்சம் சேர்த்து வைத்திருக்கலாம், இந்தச் சொத்தை இன்றைய தேதிக்கு விற்று இருந்தால் பல கோடி லாபம் பார்த்திருக்கலாம் என்று புலம்பினால் அதில் என்ன பயன்? இருக்கும் ஆற்றலை பெருகும் வகையில்தான் நாம் செயல்படவேண்டுமே தவிர, அதை இழக்கும் வகையில் ஒருபோதும் செயல்படக் கூடாது.
இலக்குகளை சில சமயங்களில் நாம் குறித்த நேரத்தில் அடையாமல் போகலாம். அதற்காக, நமக்கு தேவைப்படுவது இலக்கை அடைய மாற்றி யோசிக்கும் மனப்பான்மையும் தொடர் முயற்சியுமே தவிர அந்த இலக்கையே கைவிடும் எண்ணம் அல்ல என்பதை உணர வேண்டும். தோல்விகள் என்பது நமது முயற்சிகளின் அடையாளம். ஏமாற்றங்கள் தடைகற்கள் அல்ல. சாதனைகளை நோக்கி நகர அதுவே படிகற்கள். இதை உணர்ந்தால் இனி எல்லாம் உங்கள் கையில்.
(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago