வேலையற்றவனின் டைரி 01 - இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையே கிடையாது!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

20.1.1992

இன்று டி.வி.யில் இந்தியா-ஆஸ்திரேலியா விளையாடிய பென்ஸன் & ஹெட்ஜஸ் செகன்ட் ஃபைனல் போட்டி பார்த்தேன். இந்தியா தோல்வி. டெண்டுல்கர்: 69. இந்த பதினெட்டு வயது சிறுவன் வருங்காலத்தில் கிரிக்கெட் உலகில் முதன்மையான மனிதனாகப் போகிறான்.

23.1.92

மதியம் மாமா வீட்டு கேபிள் டிவியில் ‘சில்க்… சில்க்… சில்க்’(சில்க் ஸ்மிதா கதாநாயகியாக மூன்று வேடங்களில் நடித்த திரைப்படம்) பார்த்தேன். பெயரே இப்படி என்றால், படம் எப்படி இருந்திருக்கும்?

6.3.92

இந்த அழகான பெண்கள் எது செய்தாலும், ஏன் அழகாகவே தோன்றுகிறது என்று தெரியவில்லை.

31.5.1992

இன்று மாலை ஜாபர்ஷா தெரு, ஜெயின் பவனில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சத்யஜித் ரே இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டேன். இருபது பேர்தான் வந்திருந்தனர்.

29.6.1992

ஸ்ரீதேவியின் ஜிலுஜிலு பாட்டு ஜோர்.



‍இவையெல்லாம் எனது 1992-ம் ஆண்டு டைரியிலிருந்து.

எனக்குத் திருமணமான புதிதில், ஒரு வார இதழில் எனது சிறுகதை பிரசுரமாகியிருந்தது. அதில் கதாநாயகியை நான் அதிதீவிரமாக வர்ணித்திருந்ததைப் படித்துவிட்டு, என் மனைவி என்னைப் பார்த்த பார்வையை மொழிபெயர்த்தபோது, ‘சரியான ஒண்ணாம் நம்பர் பொறுக்கிக்கு வாழ்க்கைப்பட்டுட்டோமே…' என்று வந்தது. அன்று அந்தக் கதையைப் படித்த எனது மனைவியின் உறவினர்கள் அனைவரும், அறைக்குள் அமர்ந்திருந்த என்னைச் சிறையிலிருந்து சற்று முன் விடுதலையாகி வந்தவனைப் பார்ப்பது போல், ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.

சமீபத்தில் எனது 17 வயது மகன் எனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றைப் படித்துவிட்டு என்னைத் தனியாக அழைத்துச் சென்று, ‘யூத்ல செமையா வாழ்ந்துருக்கீங்க போல…' என்றான். வெலவெலத்துப் போன நான், ‘டேய்… அதெல்லாம் கற்பனைக் கதைடா…' என்றேன். அதற்கு அவன், ‘இருக்கட்டும்… இருக்கட்டும்… நானும் யூத்துதான். இதையெல்லாம் கண்டுக்க மாட்டேன்' என்று என் தோளில் ஆறுதலாகத் தட்டிவிட்டுச் செல்ல, நான் திருட்டு முழி முழித்தேன்.

கதைகள் எழுதியதற்கே இப்படியெல்லாம் நடக்கிறது. நான் இளமைக் காலத்தில், டைரியில் எழுதியவற்றை வைத்துக் கட்டுரை எழுதினால் என்னாகும் என்று நினைக்கும்போதே வியர்த்து விறுவிறுத்துவிட்டது. இருந்தாலும் வியர்வையைத் துடைத்துக்கொண்டு எழுதிவிட்டேன்.

இக்கட்டுரைக்காக, நான் எனது இருபத்தொரு வயதில் எழுதிய 1992-ம் வருட டைரியைப் படித்துப் பார்த்தேன். டைரிக்கே முன்னுரை எழுதி அதற்கு, ‘எதிர்கொள்ளல்கள்… ஏமாற்றங்கள்…. சில குறிப்புகள்' என்று சோகமாகத் தலைப்பு வைத்திருக்கிறேன். எனது தமிழ் வாக்கிய அமைப்புகளில், ஒரு அரைகுறை இளம் போலி அறிவுஜீவிக்கான அலட்டல்கள் தெரிகின்றன‌. எனது நிலைமையே கவலைக்கிடமாக இருந்தபோது, ‘அடுத்த தலைமுறையை நினைத்தால் கவலையாக இருக்கிறது' என்று அநியாயத்திற்கு ஃபீல் பண்ணியிருக்கிறேன்.

சில நாட்கள் ஆங்கிலத்தில்கூட எழுதியிருக்கிறேன். சும்மா இல்லை. நானே பல புதிய ஆங்கில வார்த்தைகளை உருவாக்கியிருக்கிறேன். உதாரணத்திற்கு ‘earlier' என்ற வார்த்தைக்கு இணையாக நான் பயன்படுத்தியிருந்த ‘beforely’ என்ற சொல்லைப் பார்த்தபோது, எனது அபாரமான(?)ஆங்கில மொழியறிவை(?) கண்டு புல்லரித்துவிட்டது. அத்துடன் ஆங்கில இலக்கணத்திலும் சில அதிரடி மாற்றங்களைச் செய்திருக்கிறேன் என்பதைத் தன்னடக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நான் மறந்துவிட்ட பல விஷயங்கள் டைரியில் உள்ளன‌. ஒரு வெகுளியான தோழியிடம் நான், ‘தினம் பூமி 24 மணி நேரத்துக்கொரு தடவை சுத்தும். ஆனா வர்ற சனிக்கிழமை 24 மணி நேரத்துல ரெண்டு தடவை சுத்திடுமாம். அதனால இந்த வாரம் ஞாயித்துக்கிழமையே கிடையாதாம். நியூஸ்பேப்பர்ல போட்டுருக்கு' என்று விளையாட்டுக்காகக் கூற, அவளும் அதை நம்பியிருக்கிறாள்.

என் நண்பன் சந்துரு என் பிறந்தநாளுக்குத் தந்தி அடித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறான். பல மாத ஆய்வுக்குப் பிறகு, திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரிப் பெண்கள் சுடிதாரும், எஸ்.ஆர்.சி., கல்லூரிப் பெண்கள் சேலை அல்லது தாவணி கட்டுவதாகவும் கண்டுபிடித்திருக்கிறேன். ஆனால், இந்த இரு கல்லூரிப் பெண்களுமே பஸ் ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு உம்மென்று வருவதாக வருத்தப்பட்டிருக்கிறேன்.

டிவியில் ‘ஹைபிஸ்கஸ் டவுன்’ என்ற சீனப் படம் பார்த்துப் பாராட்டியிருக்கிறேன். சுப்ரபாரதி மணியனின் ‘அப்பா' என்ற நூலின் முன்னுரையில், எழுத்தாளர் சுஜாதா, கவிஞர்கள் சிறுகதை எழுதுவது பற்றிக் கூறும்போது, ‘கவிஞர்கள் ‘செல்லம்மாள் நினைவில் இருக்கிறாள்’ என்று சொல்லமாட்டார்கள். ‘ஒரு புராதன காலத்து ஓவியம் போல் செல்லம்மாள் என் நினைவில் இன்னும் இருக்கிறாள்' என்றுதான் கூறுவார்கள்” என்கிறார்.

‘ரெமோ' படத்தில் கீர்த்தி சுரேஷும், ‘ஓ… காதல் கண்மணி’ படத்தில் நித்யாமேனனும் அழகாக, ‘ஓய்…' என்று கூப்பிடுவதற்குப் பல ஆண்டுகள் முன்பே, என்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண், ‘ஓய்…' என்று செல்லமாகத் தன் தோழிகளை அதட்டியிருக்கிறாள். மொட்டை மாடி இரவில் இளையராஜாவின் ‘நத்திங் பட் வின்ட்' கேட்டுக் கண் கலங்கியிருக்கிறேன்.

மொத்தத்தில் பல வண்ணக் கண்ணாடி வளையல்களை உடைத்து, ஒரு கண்ணாடிக் குடுவைக்குள் போட்டது போல் வாழ்க்கை கலர்ஃபுல்லாக, பளபளவென்று இருந்திருக்கிறது. ஏனெனில் அப்போது எம்.எஸ்சி. சீட் கிடைக்காமல் சிறிது காலம் சும்மா இருந்திருக்கிறேன்.

வேலையற்ற இளைஞர்கள், தங்கள் விடியற்காலைக் கனவுகளில் சமந்தாவுக்கு ஸ்கூட்டி ஓட்டக் கற்றுத் தருகிறார்கள். தூங்கி எழுந்தவுடன், தனி ஒருவனுக்குத் தம்மடிக்க காசில்லை என்று ஜகத்தினை அழிக்க நினைக்கிறார்கள். சுழல் நாற்காலியில் சுற்றும் கனவுகளுடன் ஐஏஎஸ் தேர்வெழுதுகிறார்கள். நேற்றைய காதலிகளின் திருமணங்களுக்குச் சென்று வாழ்த்திவிட்டு, ‘இனிமே பொண்ணுங்க பின்னாடி சுத்துற வேலையே கூடாதுடா… மாப்பிள்ளைக்குப் பின்னாடி ஒரு பொண்ணு மொய் கவர்ல்லாம் வாங்கி வச்சுட் டிருந்ததே… அது யாரு?' என்று விரக்தியாக(?) நண்பர்களிடம் கேட்கிறார்கள். திரையரங்கு காலைக் காட்சிகளில் ‘டேய்… தீயத் தொட்டாதான் சுடும். என்னைப் பாத்தாலே சுடும்டா…' என்று பேசுவதைப் பார்த்துவிட்டு, சுடுகிறதா என்று கழுத்தில் கைவைத்துப் பார்த்துக்கொள்கிறார்கள்.

எனவே, வேலையற்றவனின் டைரி என்பது, பல வகைப்பட்ட சுவாரஸ்யங்களை உள்ளடக்கியது. சாதாரண மனிதனின் டைரியை விட, வேலையற்ற இளைஞனின் டைரி, மிகவும் அடர்த்தியான சம்பவங்களால் நிரம்பியது. ஏனெனில் மற்றவர்கள் வாழ்க்கையும், வேலையற்றவர்கள் வாழ்க்கையும் ஒன்றல்ல.

(தொடரும்)

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தீராக்காதல், ஆண்கள், கனவுக்கன்னிகள் உள்ளிட்ட 13 நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்