கலிபோர்னியா பாட்டுக் குயில்

By ஜெயந்த் ஸ்ரீராம்

ஒரு ஹாட்டான செய்தி, மற்றொரு க்யூட்டான சிங்கிள் ஆகிய இரண்டு காரணங்களுக்காக மீண்டும் சுடச் சுடச் செய்திகளில் இடம் பிடித்திருக்கிறார் இளம்புயல் பிரகதி. பாலா இயக்கத்தில் உருவாகிவரும் ‘தாரை தப்பட்டை’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் முதல்முறையாக நடிக்க இருப்பது அந்த முதல் செய்தி.

இரண்டாவது பிரகதியின் வயதையொத்த அமெரிக்கவாழ் தமிழரான நளினி கிருஷ்ணன் எழுதி, இசையமைத்திருக்கும் ‘டீம் மீ’ என்ற துறுதுறு இந்தோ- அமெரிக்கன் ஃப்யூஷன் சிங்கிளை அவருடன் இணைந்து பாடியிருப்பதற்குக் குவியும் அன்-லிமிடெட் பாராட்டுகள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 3-ல் பிரகதி பாடிய ‘மையா மையா’ பாடலின் வீடியோ, சமூக இணையத்தில் அதிகம் பேரால் பார்க்கும் பகிரும் காணொளியாக வலம் வந்துகொண்டிருக்கிறது. இத்தனை கடினமான சங்கதிகள் கொண்ட ‘மையா’ பாடலை அதன் அங்க லட்சணங்கள் சிதையாமல் பாடி, கடந்த 2012-ல் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியில் இரண்டாம் இடத்தை அள்ளிக்கொண்ட கையோடு அவரைத் தமிழ்த் திரையிசை அழைத்துக் கொண்டது.

பாலா இயக்கத்தில் வெளியான ‘ பரதேசி’ படத்தில் இடம்பெற்ற ‘செங்காடே..!’ , ‘ஒரு மிருகம்’ ஆகிய இரண்டு பாடல்களைப் பாடவைத்தார் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பி. பிரகாஷ். அதன்பிறகு பிரகதிக்குத் தமிழ்த் திரையில் பாடும் வாய்ப்புகள் குவிந்தாலும், “எல்லா வாய்ப்புகளையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எக்காரணம் கொண்டும் என் படிப்புக்கு எந்தப் பங்கமும் வந்துவிடக் கூடாது என்பது அப்பா அம்மாவின் ஸ்ட்ரிக்ட்டான கட்டுப்பாடு. அதனால் நான் சென்னை வரும்போதெல்லாம் சினிமாவுக்குப் பாடிக் கொடுக்கிறேன்.” என்று சொல்லும் பிரகதி, தற்போது 11-வது கிரேடு படிப்பது கலிபோர்னியா மாநிலத்தின் ஃப்ரிமோண்டில் உள்ள மிஷன் ஜேன் ஜோஸ் உயர்நிலைப்பள்ளியில்.

“சென்னைக்கு வந்துதான் பாட வேண்டும் என்றில்லை. அமெரிக்காவிலும் ஆன்லைன் கோடம்பாக்கத்தை உருவாக்கும் வசதியை டெக்னாலஜி நமக்குக் கொடுக்கும்போது என்ன கவலை?” என்று ஆங்கில வார்த்தைகள் கலந்து பேசினாலும் பிரகதியின் சுத்தமான தமிழ் உச்சரிப்பு நச்சென்று இருக்கிறது.

சூப்பர் சிங்கரிலும், தமிழ் சினிமாவிலும் பிரகதி அறியப்படும் முன்பே அமெரிக்காவின் ‘க்ளீவ்லேண்ட்’ பாரம்பரிய இசைக் கச்சேரியில் அவர் பிரபலமான கிளாசிக்கல் பாடகி. சூப்பர் சிங்கர் வெற்றிக்குப் பிறகு கடந்த டிசம்பர் இசைவிழாவுக்குப் பாட்டியுடன் சென்னை வந்தார்.

அவர் பங்கேற்றுப் பாடிய ஏழு நாட்கள், எல்லாக் கச்சேரிகளிலும் இசை ரசிகர்களின் கூட்டம் அள்ளியது. முக்கியமாக இளம் இசை ரசிகர்களை பிரகதியின் விசாலமான குரல் சுண்டி இழுத்தது இசைவிழாவில்.

“போன டிசம்பர் சீசனுக்குச் சென்னை வந்து பாடினபோது, நிறைய தமிழ்ப் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். இது என்னோட அப்பா- அம்மா விருப்பம். நம்ம தாய்மொழியில சாஸ்த்ரிய சங்கீதம் பாடும்போது, ஆடியன்ஸ் சைட்லேர்ந்து கிடைக்கிற அப்ளாஸ் தனி விதம்.

நிறைய தமிழ்ப் பாடல்கள் கேட்கணும்னு நினைக்கிறவங்க என்னோட கிளாசிக்கல் கச்சேரிக்கு வரலாம்” என்று சொல்லும் பிரகதி தனது படிப்புக்கு மத்தியில் சிங்கிள்கள் பாடுவற்கும், அவற்றுக்கான மியூசிக் வீடியோகளில் தோன்றுவதற்கும் மறுப்பு சொல்வதில்லை.

மியூசிக் வீடியோகளில் மாடர்ன் உடைகளில் ஒரு குட்டித் தேவதையாகச் சிறகடித்தாலும், பிரகதிக்குப் பிடித்ததெல்லாம் சல்வாரும், அம்மா மிகவும் விரும்பி அணியச் சொல்லும் பட்டுப் பாவாடை சட்டையும்தான்.

பால்யம் முதலே கர்நாடக சங்கீதம், இந்துஸ்தானி இரண்டையும் கற்றுத் தேர்ந்துவரும் பிரகதியிடம் உள்ள இன்னொரு வாத்தியத் திறமை வீணை. வீணை வாசித்துக்கொண்டே, வாய்ப்பாட்டுப் பயிற்சி செய்வதுதான் பிரகதிக்குப் பிடித்தமான காலை நேர மியூசிக் மெடிட்டேஷன்.

இப்போது இசையோடு திரை நடிப்பிலும் கால்பதிப்பதன் மூலம் முழுவீச்சில் ஹீரோயின் ஆகத் திட்டமிடுகிறாரா? கேட்டதும் கிளிஞ்சல்கள் சிதறியதுபோலச் சிரிக்கிறார். தன்னோட போட்டோவை ரெஃபரென்ஸா வெச்சு ஒரு கேரக்டருக்கு ஃபிரெஷ்ஃபேஸ் தேடியும் கிடைக்காததால் தானே அதுல நடிச்சிட்டா ரொம்ப சரியாக இருக்கும் என்று நினைத்து அப்பா- அம்மாவிடம் பாலா சார் பேசியதாக பிரகதி தெரிவிக்கிறார்.

“அவர் கேட்டு மறுக்க முடியுமா? இசைக்கு அவ்ளோ முக்கியத்துவம் கொடுத்து அவர் எடுக்கிற படம். கண்டிப்பா இசை சம்பந்தப்பட்ட கேரக்டர்தான் என்னோடது. அடுத்த பேட்டியில் கண்டிப்பா அது பத்தி சொல்றேன்” என்று முடித்துக்கொண்ட பிரகதிக்கு சர்வதேச ஆல்பங்களில் அதிகம் பங்கேற்க வேண்டும் என்பதில் விருப்பம் இருக்கிறது. சர்வதேச யூத் ஐகான் என்ற இடத்தை இப்போதே எட்டிப்பிடித்துவிட்டது இந்தக் கலிபோர்னியா இளங்குயில்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்