சோம்பி இருக்காதே இளைஞனே!

By நந்தகுமார் சிவா

குளித்தலை சத்தியமங்கலம் கிராமத்தில் பல ஆண்டுகளாகச் சமூகப் பணியாற்றிவருகிறார் பிரேம் ஆனந்த். துடிப்பான இளைஞர் அவர். ‘இந்தியா 2020’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நீர்நிலைகள் பாதுகாப்பு, இயற்கை வழி வேளாண்மை, மரம் வளர்ப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்ற செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகத் தனது கிராமத்தில் செயல்படுத்தி வருபவர். தனது கிராமத்தை முன்மாதிரி கிரமமாக மாற்ற வேண்டுமென முயற்சித்துவருபவர்.

மாற்றத்தை ஏற்படுத்தும் இளைஞர்கள்

பிரேம் ஆனந்தைப் போல திருமயம் நீலமேகம், மதுரை உசிலம்பட்டி கல்லானை சுந்தரம் போன்ற இளைஞர்களும் தொடர்ந்து தங்கள் பகுதியில் சமூகப் பணியாற்றி வருகிறார்கள். அதுமட்டுமல்ல, இந்த இளைஞர்களுக்குள் வேறொரு ஒற்றுமையும் இருக்கிறது.

இவர்கள் அனைவரும் கடந்த பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட முன்வந்தவர்கள் என்பதுதான் அது!

இவர்களைப் போல நடைபெற இருந்த பஞ்சாயத்துத் தேர்தலில் தமிழகமெங்கும் பல இளைஞர்கள் களம் இறங்கினார்கள். பெரும்பாலும் இவர்களுக்குப் பெரிய அரசியல் பின்புலம் எதுவும் கிடையாது. அவர்களுள் பலருக்குத் தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.

தன்னார்வத்தோடு பல எதிர்ப்புகளையும் தாண்டிப் போட்டியில் பங்கேற்க முடிவெடுத்தனர். நல்ல கல்வித் தகுதியும், திறமையும் உள்ள இந்த இளைஞர்களுக்கு, தங்கள் கிராமத்தை முன்மாதிரி கிராமமாக மாற்றிவிட வேண்டும் என்பதுதான் ஒரே லட்சியம்.

தமிழகத்தில் உள்ள 12,524 பஞ்சாயத்துக்களைப் பார்க்கும்போது இந்த எண்ணிக்கை மிகச் சொற்பம்தான். ஆனால் பண்பட்ட சிறு குழுக்கள்தானே மாற்றத்தை ஏற்படுத்தும் வலிமை கொண்டது..?

புதிய சூழல்... புதிய அணுகுமுறை

இதுநாள் வரை இந்த இளைஞர்கள் தங்கள் கிராமங்களில் பணியாற்றி வந்த சூழல் வேறு, தற்போதைய சூழல் வேறு. காரணம், தற்போது உள்ளாட்சித் தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டுப் பஞ்சாயத்துகளில் அதிகாரிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இதனால், தேர்தலில் போட்டியிட ஆர்வமாக இளைஞர்களிடத்தில் தற்சமயம் கொஞ்சம் தொய்வு தென்படுகிறது. ‘இனி அவ்ளோதான்’ என்கிற சோகம் சுமந்துகொண்டு நடமாடுகிறார்கள். சோம்பி இருக்கிறார்கள். ‘இனி அவ்வளவுதான்’ என்பதற்குப் பதில் ‘இனி என்ன செய்ய வேண்டும்?’ என்பதுதான் அவர்களின் திட்டமாக இருக்க வேண்டும். தங்கள் ஊரில் எவ்விதப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், அடுத்த உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து முடியும் வரை தங்கள் ஊரில் தாங்கள் கவனிக்க வேண்டிய பணிகள் என்னென்ன என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

கிராம முன்னேற்றத்தில் ஆர்வமுள்ள பல இளைஞர்களுக்கு இவை பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன். காரணம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இருக்கும்போதே கிராம அளவில் மக்களுக்கு நலத்திட்டங்கள் கிடைப்பதில் காலதாமதமாகும். மக்கள் தங்கள் தேவைகளை முறையிடுவதில் பல தடைகள், சிக்கல்கள் இருக்கும்.

தற்போது, பஞ்சாயத்து மன்றமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாலும், ஒரு கிராமத்தின் நிர்வாகத்தை ஒரே ஒரு அதிகாரி மட்டுமே பார்க்கும் நிலை அமைந்துள்ளதாலும் தற்சமயம் இளைஞர்களின் பணி நமது பகுதி மக்களுக்கு மிக மிக அவசியமாகிறது. மேலும், முன்பு கிராம சபையில் மக்களாகிய நாம் பங்கேற்று நமது பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் பற்றியும் வரவுசெலவுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள வாய்ப்பிருந்தது. தற்போது கிராம சபைகள் நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகள்

முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை போன்ற அடிப்படை உதவித்தொகைகள் காலதாமதமின்றிக் கிடைத்திட நாம் உதவிடலாம். உதவித்தொகைகளில் மிக முக்கியமானது ஈமக் கிரியைத் தொகை. ஆதரவற்றோர் காலமான பிறகு கொடுக்கப்படும் இத்தொகை பஞ்சாயத்துத் தலைவர் இருக்கும்போது உடனடியாகக் கிடைத்துவிடும்.

தற்போது நிர்வாகக் காரணங்களால் கால தாமதம் ஏற்படலாம். மற்ற உதவிகள் கிடைப்பதற்கு நிர்வாகத்தில் கால தாமதம் ஏற்பட்டாலும், ஈமக் கிரியை உதவியைத் தள்ளிப்போட முடியாதல்லவா? சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு/பாதுகாவலருக்கு ஈமக் கிரியை உதவி உடனடியாகக் கிடைத்திட வழிகாட்டலாம்.

மதுவிலிருந்து மக்களைக் காத்திடல்

தற்சமயம் புதிய மதுபானக் கடைகள் திறக்கப்படுவதில்லை. இருப்பினும், உங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதாகத் தெரிந்தாலோ அல்லது உங்கள் பகுதியில் ஏற்கெனவே உள்ள மதுபானக் கடைகளால் பொது மக்களுக்குத் தொல்லைகள் அதிகமாக இருப்பதாகத் தெரிந்தாலோ நீங்கள் உடனடியாகச் செயலாற்றிட வேண்டியிருக்கும். இம்மாதிரி யான சூழ்நிலையில் முன்பு ஊராட்சி மூலம் ஆட்சேபணை தெரிவிக்கலாம். கிராமசபையிலும் கடை திறப்பதற்கு அல்லது கடை செயல்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துத் தீர்மானம் நிறை வேற்றி நடவடிக்கை எடுக்கலாம்.

ஆனால் தற்போது, ஊராட்சி மன்றம் இல்லாத காரணத்தால் அதன் மூலம் ஆட்சேபணை தெரிவிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும் கிராம சபைகளைக் கூட்டுவதிலும் குழப்பம் உள்ளது. இந்நிலையில், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மக்களின் கருத்துகளை, ஆட்சேபணைகளைத் தொகுக்கும் பணியை மேற்கொள்ளலாம். புதிய பஞ்சாயத்துக்காகவோ அதிகாரிக்காகவோ காத்திருக்க வேண்டியதில்லை. மக்கள் கருத்தைத் தொகுத்து, அதனை அரசுக்குத் தெரியப்படுத்தலாம். தேர்தல்கள் நடந்து புதிய பஞ்சாயத்து வரும் வரை நாம் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு

பொதுவாக நமது கிராமப் பகுதியில் எந்த ஒரு புதிய நிறுவனம் வருவதாக இருந்தாலும், பஞ்சாயத்தின் மற்றும் கிராம சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும் (சென்னையைச் சுற்றியுள்ள கிராமங்களில் சி.எம்.டி.ஏ அனுமதி வேண்டும்). அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் கிராமத்தில் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எனத் தெரிந்தால் கிராமப் பஞ்சாயத்து அத்திட்டத்துக்கு அல்லது நிறுவனத்துக்கு அனுமதி வழங்க மறுக்கலாம்.

உதாரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குத்தம்பாக்கம் கிராமத்துக்குச் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்படி ஒரு திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்தக் கிராமத்தின் அருகில் இருந்த நகரங்கள் அதன் அனைத்துக் கழிவுகளையும் குத்தம்பாக்கம் கிராமத்தில் உள்ள 100 ஏக்கர் மேய்க்கால் நிலத்தில் கொட்ட முற்பட்டன. அந்த நிலமோ செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப் பிடிப்புப் பகுதி வேறு. அப்போதிருந்த பஞ்சாயத்து மன்றமும் கிராம சபையும் அந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. குத்தம்பாக்கம் கிராமத்தின் சுற்றுச்சூழல் அந்த கிராம மக்களின் முயற்சியால் காக்கப்பட்டது.

அதே போன்று, நாம் நமது கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. நமது கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும்படி ஏதேனும் முயற்சிகள் நடந்தால், தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமோ, ஊடகங்களின் உதவியைப் பெற்றோ, சிறப்பு கிராம சபைகளைக் கூட்டியோ நம் கிராமத்தைக் காத்திட வேண்டும்.

அடிப்படை வசதிகள், மதுவிலிருந்து மக்களைக் காப்பது, நமது பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போன்ற சில விஷயங்களை மட்டுமே நாம் இங்கே குறிப்பிட்டுளோம். இளைஞர்கள் களம் இறங்கினால் எத்தனையோ பணிகளைச் செய்து முடிக்கலாம். பட்டியலில் அடக்க முடியாதவை அவை. அளவிட முடியாதது இளைஞர் சக்தி.

ஆம் இளைஞர்களே... இப்போது நமது ஊர் நமது பொறுப்பு. வாழ்த்துகள்!

கட்டுரையாளர், சமூகச் செயல்பாட்டாளர்.
‘உள்ளாட்சி உங்களாட்சி' எனும் பிரசாரத்தின் மூலம் பல கிராமங்களில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.
தொடர்புக்கு: ulaatchi@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்