‘பாப்(புலர்) நோபல்!

By அ.பார்வதி

‘உன் பாடல்களைக் கேட்க முடியவில்லை. இரைச்சலாக இருக்கிறது. முதலில், மேடையை விட்டுக் கீழே இறங்கு' என்று ஆரம்ப காலத்தில் பலராலும் கேலி செய்யப்பட்ட ஒருவர்தான், பின்னர் இசை உலகிலேயே மிகப் பெரிய ஜாம்பவானாக உருவெடுக்கிறார்.

அமெரிக்க இசை மரபை மாற்றியமைத்த பெருமை இவருக்கே சேரும். 1960களில் வெளிவந்த இவரது போர் எதிர்ப்பு, உலக அமைதி மற்றும் ஆழமான தத்துவப் பாடல்களின் எதிரொலியை இன்றும் கேட்கலாம். இந்த இசைப் பித்தனுக்கு ஒரு பெயர் உண்டு... பாப் டிலன்! இவருக்குத்தான் 2016-ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அறிவிப்பைக் கேட்டவுடன் அதிர்ச்சியும் இன்பமும் கலந்த ஒரு குழப்பமான மனநிலைக்கு ஆளாகிறது, இலக்கிய உலகம். ஏன் இந்த இன்ப அதிர்ச்சி என்று கேட்டால், முதல் முறையாக ஒர் அமெரிக்கப் பாடகர், பாடலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

இலக்கியத்திற்கும் இசைக்கும் என்ன தொடர்பு? எப்படி பாப் டிலனுக்கு விருது வழங்கலாம் என்று ஒருசிலர் கேள்வி எழுப்ப, ‘புதிய கவித்துவ வடிவத்தை உருவாக்கியவர் என்பதற்காக பாப் டிலனைத் தேர்வு செய்கிறோம்' என்று சொல்லி பலர் வாயை அடைத்துள்ளது நோபல் கமிட்டி.

மக்கள் ரசனையின் முகம்

மெத்தப் படித்த மக்களுக்கானதாக அல்லாமல், சாதாரணர்களின் ரசனை, அறிவு ஆகியவற்றுக்கு ஏற்ப அவர்களின் வாழ்க்கையிலிருந்தே, அவர்களின் உலகிலிருந்தே படைக்கப்படும் கலை, எழுத்து, சினிமா உள்ளிட்ட விஷயங்கள் ஆங்கிலத்தில் ‘பாப்புலர் கல்ச்சர்' (வெகுஜனப் பண்பாடு) என்று அழைக்கப்படுவதுண்டு.

அமெரிக்காவின் அத்தகைய ‘பாப்புலர் கல்ச்சரின்' நவீன முகம் பாப் டிலன். இதுவரையிலும் இலக்கிய மேதாவிகள் என்று கருதப்பட்ட வர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலக்கியத்துக்கான நோபல், இந்த முறை ஒரு ஜனரஞ்சகப் படைப்பாளிக்கு வழங்கப்பட்டு விட்டதே, என்பதுதான் இன்று பலரின் ஆதங்கம்! ஆனால், அந்த ஆதங்கம் அர்த்தமுள்ளதுதானா?

அமெரிக்கப் பாடல் பாரம்பரியத் திற்குள் புதுமையை உருவாக்கிய இவரது இசையில், ஆழமான தத்துவம் உள்ளது. வாழ்க்கை உள்ளது. சுதந்திரம் உள்ளது. இன்றைய இளம் தலைமுறை, ஒரு முறையாவது பாப் டிலனின் பாடல்களைக் கேட்டுவிட வேண்டும். அப்போதுதான் வாழ்கை யின் பல அர்த்தங்கள் புரியும்..!

மக்களுக்காக, பாடல் ஆயுதம்

பாப் டிலனின் கூர் ஆயுதமே அவரது பாடல் வரிகள்தான். வாழ்கையின் கசப்பான உண்மைகளைத் தன் கற்பனைக் கதாபாத்திரங்கள் மூலம் மிக அழகாகச் சொல்லிவிடுவார். அப்படி அவர் கற்பனையில் உதிர்த்த பாடலே ‘ஹே மிஸ்டர் டாம்புரின் மேன்'. டாம்புரின் மேன் என்றால், ஒரு வகையான இசைக் கருவியை வாசிக்கும் இசைக் கலைஞர் என்று பொருள். அந்தக் கலைஞனின் இசையானது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்ற உட்கருத்தோடு பாடியிருப்பார்.

இசைக்குப் பாகுபாடுகள் இல்லை, குறிப்பிட்ட மக்கள் மட்டுமே கேட்க வேண்டும் என்ற விதிகள் இல்லை, சுதந்திரமாக இசையைச் சுவாசிக்க வேண்டும், இசைக் கலைஞர்களை நேசிக்க வேண்டும் என்பதைப் புரிய வைக்கும் இந்தப் பாடலின் வரிகள். 1964ல் வெளிவந்த இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பும் கிடைத்தது. உச்சஸ்தாயியில் ‘ஹேய்... மிஸ்டர் டாம்புரின் மேன், ப்ளே எ ஸாங் ஃபார் மீ, ஐயாம் நாட் ஸ்லீப்பி' என்று அவர் பாடும் அந்த வரிகளில் மட்டும் லயிப்பதே ஒரு சுகானுபவம்!

1962-களில் வெளிவந்த ‘ப்ளோயிங் இன் தி விண்ட்' என்ற பாடலுக்கு உலகம் முழுவதிலிருந்தும் ரசிகர்கள் குவிந்தனர். இப்பாடல், 1994-ல் கிராமி விருதுகளின் ‘ஹால் ஆஃப் ஃபேம்' பட்டியலிலும் இடம் பிடித்துள்ளது. மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டாலோ, அல்லது வாழ்கையில் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டாலோ ஒரே ஒருமுறை இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். தாயின் அணைப்பைப் போல இருக்கும்.

‘ஆம், மனிதர்களின் அழுகையைக் கேட்பதற்கு

எத்தனை காதுகள் வேண்டும்?

ஆம், இத்தனை பேர் மரணித்தார்கள் என்று அறிவதற்கு

இன்னும் எத்தனை மரணங்கள் தேவைப்படும்?

விடை இதுதான், நீயே அந்த அனுபவமாக மாறு...'

என்று அன்பாகத் தட்டிக்கொடுக்கும் இந்தப் பாடலை ஆயிரம் முறை கேட்கலாம். சலிக்கவே சலிக்காது! இதில் ‘வீசும் காற்றினூடே கலந்துபோ' என்பது ஒரு உருவகம். அவ்வளவுதான்.

நாட்டுப்புற இசையில் புலமை பெற்றவர் என்று போற்றப்பட்ட பாப் டிலனுக்கு, ராக் மியூசிக்கில் சிவப்புக் கம்பளம் விரித்துக் கொடுத்த பாடல், ‘லைக் எ ரோலிங் ஸ்டோன்'. தன் இளம் குரலுடன் பல இசைக் கருவிகளை இணைத்துப் பாடியிருந்ததால் ராக் ரசிகர்களின் கவனத்தை இப்பாடல் ஈர்த்தது. மேலும், இந்தப் பாடல் வெளிவருவதற்கு முன், பாப் டிலன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். மக்களுக்குத் தன் பாடல்கள் பிடிக்காமல் போகிறது என்று, தானே முடிவு செய்துகொண்டு, தன் இசைப் பயணத்தையே நிறுத்திக்கொள்ளலாம் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் புதுமையான இசையை மக்களுக்குத் தர வேண்டும் என்ற எண்ணம் தொடர்ந்து அவரிடம் இருந்ததால்தான் இப்படியோர் வெற்றிகரமான பாடலை அவரால் கொடுக்க முடிந்தது.

விருதுகளுக்காகப் பாடாதவன்

அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பல பாடல்கள் ஏகபோக வரவேற்பைப் பெற்றன. சீரிய கருத்துக்களோடு மிகக் கூர்மையாக அரசாங்கத்தைத் தாக்கியிருப்பார். 1960களில் மக்களை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த முதலாளித்துவத்தை எதிர்த்து உரக்கப் பாடினார். அப்படிக் கோபத்தோடு பாடிய பாடலே ‘இட்ஸ் ஆல்ரைட், மா'.

அமெரிக்கக் கலாச்சாரத்தில் ஊடுருவியிருந்த போர்க் குணம், தொழிலாளர்களின் அவல நிலை, கம்யூனிசத்தின் தேவை போன்ற முற்போக்குக் கருத்துகள் கொண்ட பாடலாக அது அமைந்திருக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொரு பிறவிக்குள்ளும் ஒரு போராளி இருக்கிறான் என்பதை உணர வைத்தன அந்தப் பாடலின் வரிகள்.

‘மேதாவிகளும் முட்டாள்களும் பின்பற்ற‌

எஜமானர்கள் படைத்தார்கள் விதிகள்'

என்று இந்தப் பாடலில் வரும் வரிகள், முதலாளித்துவத்தை முற்றிலும் புறக்கணிப்பதாக அமைந்திருக்கும். நம் கண் முன்னே பொய்யான உலகத்தைச் சித்தரித்துவிட்டு நம் சுதந்திரத்தை ஆட்டிப் படைக்கின்றனர் என்ற அழுத்தமான சிந்தனையை அந்தப் பாட்டுக்குள் விதைத்திருப்பார். சமூக எதிர்ப்பை இசையில் காட்டிய மாமனிதன், அந்தப் பாடலின் கடைசி வரியை இப்படி முடிக்கிறான்:

‘நான் எல்லாப் பாடுகளையும் கண்டுவிட்டேன்

நீ காட்டுவதற்குப் புதிதாக என்ன இருக்கிறது

நான் நினைப்பது சரியாக இருந்தால்

அவர்கள் என் தலையை வெட்டலாம்

அதனாலென்ன, இது வாழ்க்கை...

வாழ்க்கை மட்டும்தானே...'

சீரிய கருத்துக்களை மக்கள் மனதில் பதியவைக்கும் பாப் டிலனின் குடும்பத்தையும் ஆதிக்க அரசு விட்டுவைக்க‌வில்லை. யூதர்கள் மீது தொடுக்கப்பட்ட இன‌ப்படுகொலையால் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது பாப் டிலனின் குடும்பம். தனது சிறு வயதிலிருந்தே பல ஒடுக்குமுறைகளை அனுபவித்து வந்ததால், இயல்பாகவே போராடும் குணத்தைப் பெற்றார். அமெரிக்கக் குடியுரிமைப் போராட்டங்களுக்கு டில‌னின் பாடல்களே உயிர் மூச்சாக அமைந்தன என்று சொன்னால் அது மிகையில்லை.

தனது கிட்டார் நரம்புகளினால் மக்களை இசையில் கட்டிப்போட்ட‌ இந்தப் பெரும் படைப்பாளிக்கு, நோபல் பரிசு மிகத் தாமதமாகத்தான் கிடைத்துள்ளது. ஆனால் விருதுகளுக்காக பாப் டிலனும் பாடவில்லை. விருது கிடைத்திருப்பதாலேயே அவரது பாடல்கள் இலக்கியமாகாது என்று சொல்பவர்களின் எண்ணிக்கையும் குறையப் போவதில்லை.

அந்த விமர்சனங்களுக்கு பாப் டிலனின் ரசிகர் பதில் சொல்ல வேண்டுமென்றால், ஆஸ்கார் விருது பெற்ற ‘திங்ஸ் ஹேவ் சேஞ்ச்ட்' எனும் அவரின் பாடலில் வரும் வரியையே பாடலாம்: ‘பீப்பிள் ஆர் க்ரேஸி அண்ட் டைம்ஸ் ஆர் ஸ்ட்ரேஞ்ச்!'

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்