பழைய புத்தகக் கடையில் கிடைத்த சில ஒளிப்படங்களை மையமாக வைத்து, அமெரிக்காவிலேயே மிக அதிகம் விற்பனையான நாவலை எழுத முடியுமா? அப்படி எழுதி, அதைத் திரைப்படமாக மாற்ற முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் ரான்சம் ரிக்ஸ் என்ற இளைஞர். அக்டோபர் 7-ம் தேதி டிம் பர்ட்டனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘Miss Peregrine’s Home For Peculiar Children’ என்ற திரைப்படம் தோன்றிய கதைதான் இது.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் பிறந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் படித்து, பின்னர் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றவர் ரான்சம் ரிக்ஸ். திரைப்படத் துறை ஆர்வம் காரணமாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், ஓய்வு நேரத்தில் வலைப்பூக்களில் எழுதுவதையும், வித்தியாசமான குறும்படங்களை இயக்கி இணையத்தில் அப்லோட் செய்துகொண்டும் இருந்தார். இவரது திறமையைக் கண்ட ‘க்யுர்க் புக்ஸ்’ பதிப்பகத்தின் பதிப்பாசிரியர், 2009-ம் ஆண்டு இவருக்கு ஒரு வாய்ப்பு அளித்தார்.
ஷெர்லாக் தந்த கவனம்
ஹாலிவுட் படங்கள் வெளியாகும்போது, அதனுடன் பலவிதமான இணைத் தயாரிப்புகளும், சந்தைப்படுத்துதலும் நடக்கும். திரைப்படம் சார்ந்த காமிக்ஸ், டீ-ஷர்ட்டுகள், வீடியோ கேம் என்று ஒரு திரைப்படத்தை பலவிதமாகச் சந்தைப்படுத்துவார்கள். பிரபல இயக்குநர் கை ரிட்சி, ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ திரைப்படத்தை இயக்கிக்கொண்டிருந்த நேரம். அத்திரைப்படத்தின் சந்தைப்படுத்தும் வேலையை க்யுர்க் புக்ஸ் பதிப்பகம் ஏற்றுக்கொண்டிருந்தது. ஷெர்லாக் ஹோம்ஸ் படத்துடன் வெளியாகும் இணைப்புப் புத்தகத்தை எழுதப் புதிய, திறமையான எழுத்தாளரைத் தேடிக் கொண்டு இருந்த கை ரிட்சியின் கண்ணில் பட்டவர்தான் ரான்சம் ரிக்ஸ். ஷெர்லாக் ஹோம்ஸ் திரைப்படத் துக்கான இணைப்புப் புத்தகத்தை எழுதியதால் ரான்சம் ரிக்ஸ் பலராலும் கவனிக்கப்பட்டார்.
பலரும் அஞ்சல் தலை, நாணயங்கள் சேகரிப்பதைப் போல ரான்சம் ரிக்ஸ் ஒரு ஒளிப்படச் சேகரிப்பாளர். வித்தியாசமான, அரிய, பழைய ஒளிப்படங்களைச் சேகரிப்பதில் பேரார்வம் கொண்டவர். இப்படியாகச் சில விசித்திரமான ‘ட்ரிக் ஷாட்’ ஒளிப்படங்களைச் சேகரித்து, அதை ஒரு புத்தகமாக வெளியிட க்யுர்க் புக்ஸ் பதிப்பாசிரியரை இவர் அணுகினார். ஆனால், அவரோ ‘இந்த ஒளிப்படங்களை மையமாக வைத்து ஏன் ஒரு கதையை எழுதக் கூடாது?’ என்று கேட்க, இப்படியாக அமெரிக்காவில் புத்தக விற்பனையில் தொடர்ந்து 45 வாரங்களுக்கு முதலிடத்தைப் பிடித்த கதைக்கான மையக்கரு உருவானது.
உத்வேகம் தந்த ஒளிப்படங்கள்
பின்னர் லியோனார்ட் என்பவரை ரிக்ஸ் சந்தித்தார். லியோனார்ட் கலிஃபோர்னியாவில் உள்ள ‘ரோஸ் பவுல் ஃப்ளீ மார்க்கெட்’டின் பிரபலமான பழம்பொருள் சேகரிப்பாளர். அவருடைய நண்பர்கள் மூலமாக, மேலும் பல விசித்திரமான ஒளிப்படங்களை இவர் சேகரித்தார். இதற்கு ‘ஃபவுண்ட் போட்டோகிராஃபி’ (Found Photography) என்று பெயர். இப்படிச் சேகரித்த விசித்திரமான ஒளிப்படங்களைத் தனக்கான வழிக்காட்டியாக வைத்து, ‘Miss Peregrine’s Home For Peculiar Children’ என்ற இந்தக் கதையை எழுதி முடித்தார். இப்படியாக ஒன்றுக்கும் உதவாத, தொடர்பில்லாத பழைய ஒளிப்படங்களையும்கூட உத்வேகமாகக் கொள்ளலாம் என்பதை உணர்த்தினார் ரிக்ஸ்.
2011-ம் ஆண்டு வெளியான முதல் பாகத்தின் அசாதாரண வெற்றிக்குப் பிறகு, அடுத்த பாகத்தை 2014-ம் ஆண்டு வெளியிட்டார் ரிக்ஸ். இந்தத் தொடரின் மூன்றாவதான இறுதிப் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. ‘பேட்மேன்’ திரைப்படப் புகழ் இயக்குநர் டிம் பர்ட்டன் இந்தக் கதையை திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். ஹாலிவுட்டின் பிரபல நடிகர்கள் பலரைக் கொண்ட இத்திரைப்படம் அடுத்த வாரம் வெளியாகிறது.
கலரில் கடந்த காலம்
ஓவியர் கேஸண்ட்ரா ழான் இதை ஜப்பானியச் சித்திரக் கதை பாணியான ‘மாங்கா’ (Manga) போல வரைந்திருக்கிறார். ஆகவே இந்தப் புத்தகம் ஒரு ‘OEL Manga’ வகையைச் சேர்ந்ததாகும் (Original English Language Manga என்பது அமெரிக்கா / பிரிட்டனில் உருவாகும் ஜப்பானியப் பாணிச் சித்திரக் கதைகள்). மொத்தம் 240 பக்கங்கள் கொண்ட இந்தப் புத்தகம் முழுக்க முழுக்க நேர்த்தியான ஓவியங்களுடன் இருப்பது, கதையின் சிறப்புக்குக் கூடுதல் மதிப்பு சேர்க்கிறது.
இந்தக் கதையில் சமகாலத்தில் நிகழும் காட்சிகள் அனைத்துமே தடித்த, மேலோட்டமான கோடுகளுடன் கருப்பு வெள்ளையில் வரையப்பட்டுள்ளன. ஃபிளாஷ்பேக் காட்சிகளோ மிகவும் அழகாக வாட்டர் கலர் + பேஸ்டலில் வரையப்பட்டிருக்கின்றன.
இதையும் ஒரு குறியீடாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தப் புதிய பாணியும், ஒளிப்படங்களைக் கொண்டு கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் கதை சொல்லும் உத்தியும் நமக்கு மிகவும் புதியவை. ஒவ்வொரு ஒளிப்படமும் கதையின் முக்கியமான கட்டத்துடன் அழகாகப் பொருத்தப்பட்டிருப்பது, கதாசிரியரின் திறமையைப் பறைசாற்றுகிறது. இந்த இடத்தில் ஒளிப்படங்கள் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றனவா, அல்லது இல்லை, கதைக்கேற்ற ஒளிப்படங்களை ரான்சம் ரிக்ஸ் தேர்ந்தெடுத்தாரா என்ற கேள்வி எழாமல் இல்லை.
கதை என்ன?
தனது தாத்தா சொல்வதை நம்ப மறுத்து, அவரது அசாதாரண மரணத்துக்குப் பிறகு, உண்மையைக் கண்டறிவதற்காக அவருடைய பேரன் மர்மத் தீவு ஒன்றுக்குச் செல்கிறான். அந்தத் தீவில் இருக்கும் மர்ம மாளிகை, 60 ஆண்டுகளுக்கு மேலாகக் காலத்தை நிறுத்தி, ஒரே நாளைத் திரும்பத் திரும்ப வாழ வைக்கும் ஒரு வல்லூறு, அதன் பாதுகாப்பில் இருக்கும் அசாத்திய, வேறுபட்ட திறன் கொண்ட இளைஞர்கள், அவர்களை வேட்டையாட வரும் ஒரு அரக்கர் குழு என்று கதை ஜெட் வேகத்தில் பாய்கிறது. இவர்களுக்கும் அந்த இளைஞனுக்கும் என்ன தொடர்பு? அவனுடைய தாத்தா சொல்ல வந்தது என்ன? அந்த அரக்கர்களை அவனால் தடுக்க முடிகிறதா என்பதை வெள்ளித்திரையிலும் பார்க்கலாம், காமிக்ஸில் வாசிக்கலாம்.
கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்.
தொடர்புக்கு: TamilComicsUlagam@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago