‘சுட்டும் விரல் சுடர்’ நாகஜோதி!

சென்னை வியாசர்பாடியின் புழுதி பறக்கும் தெருக்களிலிருந்து ஏராளமான அக்னிக் குஞ்சுகள் பிறக்கின்றன. நாக ஜோதி அப்படியொரு இளம் புயல்தான். கடந்த ஆகஸ்ட் மாதம் மாலத் தீவில் நடைபெற்ற சர்வதேச கேரம் போர்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றிக் கோப்பையை வென்றிருக்கிறார் நாக ஜோதி. நாக ஜோதியோடு திண்டுக்கல்லைச் சேர்ந்த சத்யா, திருவாரூரைச் சேர்ந்த காயத்ரி, மதுரையைச் சேர்ந்த ஹம்ஸ வர்தினி ஆகிய இளைஞர்களும், இந்த ‘கேரம் டெஸ்ட் சீரிஸ்’ போட்டியில் இதர நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான வீரர்களோடு போட்டியிட்டனர். 19 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் இவர்கள் கலந்துகொண்டனர்.

மற்றவர்களெல்லாம் ஒரு சில போட்டிகளை மட்டும் வெல்ல நாக ஜோதி 5-0 என்ற கணக்கில் அத்தனை போட்டிகளிலும் தூள் கிளப்பி… இல்லை… கேரம் போர்டு பவுடர் கிளப்பி இந்தியாவுக்கு வெற்றி மட்டுமல்லாமல் ‘பிளேயர் ஆஃப் தி சீரிஸ்’ பட்டத்தையும் வென்றிருக்கிறார். 2009-லிருந்து கேரம் விளையாடிக்கொண்டிருக்கும் இவர் இதுவரை தேசிய அளவில் 11 தங்கப் பதக்கங்களும் மாநில அளவில் 16 தங்கப் பதக்கங்களும் வென்றிருக்கிறார். இன்னும் ஏராளமான கேரம் டோர்னமெண்ட்டுகளில் எக்கச்சக்கமான வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் கோப்பைகளும் ஷீல்டுகளும் குவித்து வைத்திருக்கிறார்.

அடி தூள்!

சென்னை டி.ஜி. வைஷ்ணக் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறார் நாக ஜோதி. இவருடைய அப்பா காத்தவராயன் வியாசர்பாடியில் ஷாமியானா பந்தல் கடை ஒன்றில் வேலைபார்க்கிறார். அதே நேரத்தில் இந்த ஏரியாவிலேயே அவரை கேரம் போர்டில் அடித்துக்கொள்ள ஆளில்லை. இவர்களுடைய எளிமையான வீட்டில் மூன்று கேரம் போர்டுகள் உள்ளன.

இவர்களுடைய தெருவைச் சேர்ந்த குட்டிப் பசங்களெல்லாம் எப்போதுமே இவர் வீட்டில்தான் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிலிருக்கும் போதெல்லாம் எல்லோருக்கும் கேரம் விளையாடச் சொல்லித் தருகிறார் காத்தவராயன். நாக ஜோதிக்கும் இவர்தான் முதல் கேரம் போர்ட் குரு. ஆனால் ஆரம்பக் காலத்தில் எந்தப் பயிற்சியும் இன்றி எல்லோரையும் போலச் சும்மா ஒரு விளையாட்டாக்கத்தான் காயின்களை சுண்டிக்கொண்டிருந்தார் நாக ஜோதி.

“பத்து வயசு வரைக்கும் என்னுடைய அண்ணாவோடும் பக்கத்து வீட்டுப் பசங்களோடும் சும்மா விளையாட்டுத்தனமாதான் கேரம் ஆடிக்கிட்டிருந்தேன். ஒரு நாள் அப்பாவோட வழக்கம்போல கேரம் விளையாடிகிட்டிருந்தப்ப கேரம் போர்ட் கோச் பாக்யராஜ் வீட்டுக்கு வந்திருந்தாரு. நான் விளையாடுற ஸ்டைல பார்த்துட்டு ‘வா நான் உன்னை வேற லெவலுக்கு கூட்டிப்போறேன்’னார்” என்கிறார் நாக ஜோதி.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய ஜூனியர் சிங்கிள்ஸ் போட்டியில் 10 வயது பிரிவில் 2009-ல் முதன்முதலில் கலந்துகொண்டார் நாக ஜோதி. மாநில அளவில் நடைபெற்ற அன்றைய போட்டியில் 5 ஆட்டங்களிலும் விட்டுவெளாசி அடுத்த நாள் நடந்த மாநில அளவு போட்டியிலும் நேரடியாகப் போட்டியிட்டார். முதல் போட்டியிலேயே தங்கப் பதக்கம் வென்றார். அன்று ஜாலியாகத் தொடங்கியது நாக ஜோதியின் கேரம் போர்ட் பயணம். முறையான பயிற்சி எடுக்காமலேயே அடுத்தடுத்துப் பல டோர்னமெண்ட்டுகளில் பல பதக்கங்கள் அள்ளினார்.

வெறும் விளையாட்டல்ல

ஆனால் 2011-ல் குஜராத்தில் நடைபெற்ற சப்ஜூனியர் தேசிய அளவிலான போட்டியில் அடைந்த தோல்வி நாக ஜோதியைச் சீரியஸ் பிளேயராக்கியது. “ஏரியா பசங்களோட விளையாடும்போது ரெட் காயின் போட்டுட்டா, ‘ஏ’ன்னு கத்தி போர்ட் பாக்கெட்டிலிருந்து காயினைக் கையில எடுத்து ஆட்டம்போட்டுட்டு அப்புறம் ஃபாலோ காயின் போடுவோம். ஆனால் டோர்னமென்ட்டில் அம்பயர்தான் ரெட் காயினை எடுத்துத் தருவார். நாமத் தொடக்கூடாது. அதே போல ஒரு காயினை ஸ்ட்ரைக் பண்ணும்போது வேறு காயின்களில் விரல்கூடப் படக் கூடாது.

இதெல்லாம் தெரியாம அன்னைக்குக் கேம்ல் ரெட் காயினைப் போட்டதும் பேக்கட்டில் கைவிட்டு எடுத்துப் பெனாலிட்டி வாங்கித் தோத்துட்டேன்” என்கிறார் நாக ஜோதி. அதன் பிறகு தீவிரமான முறையான பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். தினமும் அதிகாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை கடுமையான பயிற்சி எடுக்கிறார்.

இப்போது நாளுக்கு ஏழு மணி நேரம் தொடர்ந்து விளையாடுகிறார். தன்னை மெருகேற்றியவர்களில் தமிழ்நாடு கேரம் அசோசியேஷனின் முன்னாள் செயலாளர் எஸ். ஆனந்தன், பயிற்சியாளர் பங்காருபாபு, தமிழ்நாடு கேரம் தெற்கு மண்டலச் செயலாளர் ஜி.விஜயராஜ், அர்ஜுனா விருது வென்ற தற்போதைய கேரம் அசோசியேஷன் மாநிலச் செயலாளர் மரிய இருதயம் ஆகியோர் மிகவும் முக்கியமானவர்கள் என்கிறார் நாக ஜோதி.

இவர்களுடைய வழிகாட்டலால் தன்னுடைய வயது வரம்பில் மட்டுமின்றி 12 வயதிலேயே 14 வயதுக்கு உட்பட்டவர் போட்டிகளில், 14 வயதிலேயே 16 மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர் போட்டிகளில் அடி தூள் கிளப்பியிருக்கிறார்.

கனவு நினைவாகுமா?

நாக ஜோதியின் அண்ணன் தணிகைவேலும் கேரம் போர்டில் தேசியச் சாம்பியன்தான். ஆனால் குடும்பச் சூழல் காரணமாகத் தற்போது அவர் அவ்வளவாக விளையாடுவதில்லை. மற்ற விளையாட்டுகளைப் போலவே கேரம் போர்டிலும் ஆண்கள்-பெண்கள் எனத் தனித்தனிப் பிரிவு இருக்கிறது. “ஆனால் கேரம் விளையாட்டுக்கு ரொம்ப முக்கியம் நல்ல பயிற்சியும் கான்சன்ட்ரேஷனும்தான். நான் பலதடவை என் அண்ணன் உட்பட என்னோடு விளையாடிய பல ஆண் போட்டியாளர்களை வென்றிருக்கிறேன்.

அது பெரிய விஷயமே இல்ல” எனச் சிரிக்கிறார். வசதி வாய்ப்புகள் அற்ற வாழ்க்கைச் சூழலிலிருந்து வந்திருந்தாலும் நாக ஜோதி படித்த பள்ளிக்கூடம், தற்போது படித்துக்கொண்டிருக்கும் கல்லூரி, பெற்றோர் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஊக்கமும் ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது என மகிழ்கிறார். அடுத்து நாக ஜோதியின் கனவெல்லாம் உலக சாம்பியன் ஆவதுதான். ஆனால் அதற்கு முதலில் கேரம் போர்ட் விளையாட்டைப் பல்கலைக்கழக அளவில் தேசிய விளையாட்டு ஆணையம் அறிமுகப்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் ‘கேரம் கேர்ள்’ வைக்கும் ஒரே கோரிக்கை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்