இதயத்திலிருந்து எழுதுகிறேன்!

“சார்... நான் உங்ககிட்ட பேட்டிக்காக மட்டும் வரலை. கொஞ்சம் லவ் டிப்ஸும் கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்!” என்று சொன்னால், “அய்யய்யோ... நான் லவ் குருவெல்லாம் இல்லைங்க!” என்று பதறிச் சிரிக்கிறார் ரவீந்தர் சிங். சுருக்கமாக ரவீன்.

இன்றைய தேதியில், ஆங்கிலத்தில் இவர் எழுதும் ‘ரொமான்ஸ்’ நாவல்களால் இந்தியாவின் பெரும்பான்மை இளைஞர் கூட்டம் கட்டுண்டு கிடக்கிறது. கூடைப்பந்து வீரரோ என்று சந்தேகிக்கும் அளவுக்கான உயரம். ஃபிட்னஸ் ஃப்ரீக். கொஞ்சம் விட்டால் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் நாயகனாக அறிமுகமாவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு!

தனது போனை சைலன்ட் மோடுக்கு மாற்றிவிட்டு “ம்... யா டெல் மீ!” என்று நம் முன்னே அமர்கிறார். தன்னுடைய லேட்டஸ்ட் புத்தகமான‌ ‘திஸ் லவ் தட் ஃபீல்ஸ் ரைட்’ எனும் நாவலை வெளியிடுவதற்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்தோம்.

ரவீந்தர் சிங், ஒரு ‘ஆக்ஸிடென்ட்டல் ரைட்டர்’. ஆம், அவர் உயிருக்கு உயிராகக் காதலித்த பெண், திருமணத்துக்குச் சில வாரங்களுக்கு முன் அலுவலகப் பணி முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது விபத்தொன்றில் இறந்துபோனார்.

“அந்த ஆக்ஸிடென்ட் மட்டும் நடக்கலைன்னா, இந்நேரம் ரைட்டர் ரவீந்தர் இல்லை. ஒரு நல்ல தம்பதியரா வாழ்ந்திருப்போம். ஆனா எல்லாமே கனவா போயிடுச்சு. அந்தத் துயரத்திலிருந்து நான் வெளிய வர்றதுக்கு எழுத்து மட்டுமே சரியான வழியா இருந்தது. அதனால, எழுத ஆரம்பிச்சேன். ஃபேஸ்புக்குல, ப்ளாக்லன்னு எழுத ஆரம்பிச்சேன். அதைப் படிச்ச என்னோட நண்பர்கள் சில பேர், ‘இதை புத்தகமா எழுது’ன்னு சொன்னாங்க. அது என் காதலிக்குச் செய்கிற ஒரு நல்ல ‘ட்ரிப்யூட்’ ஆகவும் இருக்கும்னு நினைச்சேன்!” என்றார்.

அப்படி வந்ததுதான் ‘ஐ டூ ஹேட் எ லவ் ஸ்டோரி’ எனும் நாவல். அதை நாவல் என்று சொல்வதை விடவும், சுயசரிதை என்பது பொருத்தமாகவே இருக்கும். அந்தப் புத்தகத்தை அவ‌ர் எழுதிக்கொண்டிருந்த போது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணியிலிருந்தார் ரவீந்தர். ‘இப்படி ஒரு புத்தகத்தை வெளியிடப்போகிறேன். அதற்கு அனுமதி வேண்டும்’ என்று அந்த நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியிடம் கேட்கப் போக, அவரே அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுச் சின்ன முன்னுரை எழுதிக் கொடுத்தது ஸ்வீட் சர்ப்ரைஸ்!

2008-ம் ஆண்டு சிருஷ்டி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகம், அடுத்த வந்த சில ஆண்டுகளுக்கு ‘பெஸ்ட் செல்லர்’. அப்போது ஆரம்பித்த பயணம் இன்று 7 புத்தகங்கள் இவரின் ‘க்ரெடிட்டில்’. அதில் நான்கு நாவல்கள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் ஒரு நாஸ்டால்ஜியா.

- ரவீந்தர் சிங்

கவிதையான தலைப்பு, அடிக்கடி அகராதியைப் புரட்டிப் பார்க்க வைக்காத ஆங்கிலம், முதலிரண்டு அத்தியாயங்களிலேயே கதைக்குள் நம்மை இழுத்துவிடும் மொழிநடை, அங்கங்கே கொஞ்சம் சூடேற்றும் காட்சிகள், சுமார் 200 பக்கங்களுக்குள் முடிந்துவிடக் கூடிய கதைக்களம், 150 முதல் 200 ரூபாய் வரையிலான விலை என இவரின் புத்தகங்கள் நல்ல கதையாக, அதே நேரத்தில் இன்னொரு பக்கம் செமத்தியான பிஸினஸ் மாடல்!

“உங்க இரண்டாவது நாவலான ‘கேன் லவ் ஹேப்பன் ட்வைஸ்’ புத்தகத்துல உங்களுக்கு இரண்டாவதா ஒரு காதல் ஏற்படுற மாதிரியான கதைக் களத்தை வெச்சிருந்தீங்க. அந்தக் காதலாவது சக்ஸஸ் ஆச்சா?”

“ம்ம்... அது முழுக்க முழுக்க என்னோட கதைன்னு மட்டும் சொல்லிட முடியாது. முதல் புத்தகம் வந்த பிறகு நிறைய பேர் அதைப் படிச்சிட்டுத் தங்களோட காதல் கதைகளை என்கிட்ட பகிர்ந்துக்கிட்டாங்க. அதிலிருந்து சில விஷயங்களை எடுத்துத்தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன். அதுல எது கற்பனை, எது உண்மைங்கிறது எனக்கு மட்டும்தான் தெரியும்!”

இவரின் முதல் நாவலைப் படித்துவிட்டு, இவருடன் பேசிய ஒரு வாசகிதான் பின்னாளில் இவரின் மனைவியாகவும் ஆனார். எனவே, அந்தக் காதல் எப்படி மலர்ந்தது என்பதைப் பற்றி அடுத்தடுத்த நாவல்களில் சொல்வார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்!

“அந்தப் புத்தகத்துக்குப் பிறகு இன்னொரு ‘ஸீக்வெல்’ வரும்னு நினைச்சோம். அதாவது உங்க மனைவி குஷ்பு சவுகானுடனான காதல் பற்றி...”

“ம்... ஒவ்வொரு முறை அந்தப் புத்தகத்தை எழுதிடணும்னு நினைக்கும்போது, வேற ஒரு விஷயம் வந்து என் மனசை ஆக்கிரமிச்சுடுது. ஆனா, நான் எழுதப்போகும் அந்த ஸீக்வெல், என்னோட நிஜ வாழ்க்கையைப் பத்தி இருக்கும்னு எதிர்பார்க்காதீங்க”.

கடைசியாக இவர் எழுதிய இரண்டு நாவல்கள், ‘யுவர் ட்ரீம்ஸ் ஆர் மைன் நவ்’, ‘திஸ் லவ் தட் ஃபீல்ஸ் ரைட்’ ஆகிய இரண்டுமே சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்றன. முன்னது, டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதை அடிப்படையாகக் கொண்டது. பின்னது, ‘திருமண உறவுக்கு வெளியே ஏற்படும் காதல்’ குறித்துப் பேசுகிறது.

“முதல் புத்தகம் எழுதினப்போ, நான் அவ்வளவா பக்குவப்படலை. ஆனா இப்போ முழுநேர எழுத்தாளரா ஆனதற்குப் பிறகு எனக்குக் கொஞ்சம் பொறுப்புகள் வந்திருக்கிறதா நினைக்கிறேன். என் எழுத்துகள் மூலமா சில பேரையாவது ‘இன்ஃப்ளூயன்ஸ்’ பண்ண முடியும்னு நம்புறேன். அதனால சில நல்ல விஷயங்களைச் சொல்லணும்னு நினைக்கி றேன். அதான் இப்படி!”

“ஆனா, அப்படி எழுதினாலும், உங்கமேல ‘ரொமான்ஸ் கிங்’னு ஒரு முத்திரை இருக்கே. அதை எப்படி எடுத்துக்கிறீங்க?”

“அது எனக்கு ரொம்பச் சந்தோஷமா இருக்கு. சில சமூகப் பிரச்சினைகளை ‘ரொமான்ஸ்’ சர்க்கரை தடவி வாசகர்கள்கிட்ட கொண்டு போகணும்னு தோணுது. அதனால அந்த முத்திரையெல்லாம் என்னை ஒண்ணும் பண்ணலை”.

“உங்க நாவல்கள்ல நிறைய இடங்கள்ல ‘இன்டிமேட் சீன்ஸ்’ இருக்கே. ஒரு புத்தகத்தோட வெற்றிக்கு இதெல்லாம் முக்கியம்னு நினைக்கிறீங்களா. அதுவும் சமூகம் இப்போ இருக்கிற நிலையில?”

“அதாவது, இதுமாதிரியான காட்சிகள் யாரையாவது ‘ப்ரொவோக்’ பண்ணும்னு நினைக்கிறீங்களா? அப்படி நினைச்சா ஐயாம் ஸாரி. எந்த ஒரு கலைப்படைப்பும் யாரையும் எப்போதும் தவறான சிந்தனையைத் தூண்டாது. அப்படி யாராவது தூண்டப்பட்டால், அவரிடம் ஏதோ சிக்கல் உள்ளது என்று அர்த்தம்!”

இப்படி இவரின் பாதையைப் பின்பற்றி, ஆங்கிலத்தில் காதல் கதைகள் எழுத வருபவர்கள் ஏராளம். அவர்களுக்காக ஒரு போட்டி வைத்து, அதில் வெற்றி பெறும் 25 பேரின் கதைகளைத் தேர்வு செய்து அவரே தொகுத்து புத்தகமாக வெளியிடுகிறார். அப்படி இவர் கொண்டு வந்த புத்தகங்கள்தான் ‘லவ் ஸ்டோரீஸ் தட் டச்ட் மை ஹார்ட்’ மற்றும் ‘டெல் மீ எ ஸ்டோரி’ எனும் தொகுப்புகள்.

நாவலாகட்டும், சிறுகதைத் தொகுப்புகள் ஆகட்டும்... இவரின் பெயர் அட்டையில் இடம்பெற்றால், அவை அத்தனையும் விற்பனையில் சாதனை படைக்கின்றன.

“என்ன ரவீன் உங்க சக்ஸஸ் சீக்ரெட்?” என்று கேட்டால், “நான் இதயத்திலிருந்து எழுதுகிறேன். அதனால்கூட இருக்கலாம்” என்று புன்னகைக்கிறார்.

“உங்களுடைய புத்தகங்களைப் படிச்ச இளைஞர்கள் பெரும்பாலும், உங்களை ‘லவ் குரு’ நிலையில வெச்சிருக்காங்க. காதலில் வெற்றி பெறுவதற்கு அவங்களுக்கு சில டிப்ஸ் கொடுங்க...”

“இல்லை. அது சரிவராது. உங்களுடைய காதலுக்கு அறிவுரை சொல்ல நான் யார்? உங்களுடைய வாழ்க்கையைத் தீர்மானிக்க எனக்கு என்ன தகுதி உண்டு? என்னுடைய புத்தகங்களை நீங்கள் வாங்குங்கள். வாசியுங்கள். விமர்சியுங்கள். ஆனால், என்னை உங்களின் வழிகாட்டி என்ற நிலைக்கு ஏற்றி வைக்காதீர்கள். உங்கள் காதலும், உங்கள் வாழ்க்கையும் உங்கள் கையில்தான். அவற்றை வேறொருவரின் கையில் ஒப்படைக்காதீர்கள்!” என்று கொஞ்சம் சீரியஸ் ஆகிறார்.

கூல்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

இணைப்பிதழ்கள்

14 hours ago

இணைப்பிதழ்கள்

16 hours ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

3 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

இணைப்பிதழ்கள்

7 days ago

மேலும்