இவ்வளவுதான் சினிமா!

By ரோஹின்

இப்பவெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாம ஆபீஸுக்குக்கூடப் போயிரலாம், ஆனா தியேட்டருக்குப் போக முடியாது. ஏன்னா, படம் போரடிச்சா கேண்டி க்ரஷ், ஆங்க்ரி பேர்டு போன்ற கேம் விளையாடலாம்; படம் சகிக்கலன்னு ட்விட்டரில் பதிவிடலாம்; ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ்ங்கிற பேரில் படத்தைப் பத்தி கன்னாபின்னான்னு ஏதாவது கிறுக்கலாம். இவையெல்லாம் நமக்குப் படத்தைவிடப் படுசுவாரசியமாக இருக்கும்.

வருஷ‌க்கணக்கா யோசிச்சு ஒரு டைரக்டர் உருவாக்கும் ஒரு படம் பத்துப் பதினைஞ்சு நிமிஷத்தில் ரசிகர்களுக்கு அலுப்பைத் தந்துவிடுகிறது. பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சு என்பதாலேயே தியேட்டரில் முழு நேரமும் இருந்துவிட்டு வருகிறார்கள். அதுல தியேட்டரில் விக்கிற அதிகப்படியான விலையுள்ள பப்ஸ், பாப்கார்ன் என்று த‌ண்டச் செலவு வேற. அதனாலயே தியேட்டருக்கு வரும் ஜோடிகளைத் தவிர பலர் சோர்வுற்றுவிடுகிறார்கள்.

ஆனால் ட்ரெயினில், பஸ்ஸில் போகும்போது பொழுதைப் போக்கத் தங்கள் மொபைல் போனில் டோரண்ட் புண்ணியத்தில் கிடைத்த படத்தைச் சிரித்து சிரித்துப் பார்க்கிறார்கள். தியேட்டருக்கு நூத்தம்பது ரூபா கொடுத்து டிக்கெட் எடுத்து அதுவும் சில படங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபா கொடுத்து டிக்கெட் எடுத்துப் போனாலும் அது ஒரு பத்து நிமிஷம்கூட திருப்தி தராட்டி ரசிகர்களும் என்னதான் செய்வாங்க?

ரெண்டு மணி நேரம் ஓடுற நம்ம படம் எப்படி இருக்கு? தன்னோட காதலிமேல போறபோக்குல ஒருத்தன் லேசா உரசிட்டான்னா போச்சு, ஒல்லியான நாயகன் டன் கணக்கில பஞ்ச் வசனம் பேசுவான், எதிரிகளைப் பஞ்சு பஞ்சா உதிர்த்துப்போட்டுருவான். அந்தச் சண்டை ஒரு ஏழெட்டு நிமிஷம் போகும். அதுக்குள்ள ஒரு கேமின் ஒரு லெவலை முடித்துவிடலாம்.

இதற்கு அடுத்து தன்னை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிய காதலனைக் காதலி கொஞ்ச ஆரம்பிச்சிருவா. கொஞ்சினா வசனம் பேச முடியாதே. அதுக்குத்தான் இருக்கே ஒரு டூயட். அது ஒரு அஞ்சு நிமிஷம் போகும். இப்படிப் போகும் படம் முடியிரதுக்குள்ள அடப் போங்கடான்னு ஆயிரும். இல்லாட்டி ஒரே அழுகாச்சி காவியமா படத்தை எடுத்து தள்றாங்க. அதையெல்லாம் ரெண்டு மணி நேரம் பார்க்கிறதுக்கு மனதில் உறுதி வேண்டும். சரி, ஒரு படம் ரெண்டு மணி நேரம் இல்லாம பத்துப் பதினைஞ்சு நிமிஷம் மட்டும் இருந்தா எப்படியிருக்கும்? யோசிச்சுப் பாருங்க.

இந்தப் பிரச்சினைக்கெல்லாம் தீர்வு காண ஒருவழியைக் கண்டுபிடிச்சிருக்கு ஒரு யூடியூப் சேனல். அதன் பெயர் ‘15 மின் மூவிஸ்'. இங்க மின் என்பது மினிட்டின் சுருக்கம். அதாவது 15 நிமிடப் படங்கள். நீங்க ரொம்ப அவஸ்தைப்படாம அழகா ஒரு படத்தைப் பார்த்துரலாம். எல்லாமே 15லயிருந்து 19 நிமிஷத்துக்குள்ள முடிஞ்சிரும். ஒரு டிரெயிலர் பார்க்கிற மாதிரி படபடன்னு முழுப் படத்தையும் பார்த்து முடிச்சிரலாம்.

ஷெமாரோ எண்டெர்டெயின்மென்ட்ங்கிற நிறுவனம் பல சினிமாக்களோட உரிமையை வாங்கியிருக்காங்க. அந்தப் படங்களைத்தான் இவங்க பத்துப் பதினைஞ்சு நிமிஷப் படங்களா எடிட் பண்ணி யூடியூப்ல போடுறாங்க. இந்தச் சின்னப் படங்களைப் பார்த்த பின்னர் நீங்க முழுப் படத்தைப் பார்க்கப் பிரியப்பட்டா அதன் இணைப்பையும் கொடுத்திருக்காங்க. ஆனால் பெரும்பாலும் இவங்களோட எடிட் செய்யப்பட்ட படத்தைப் பார்த்த பிறகு யாருக்குமே முழுப் படத்தையும் பார்க்கும் தைரியம் வராது என்கிறார்கள் இந்த சேனலின் பார்வையாளர்கள். அந்த அளவுக்கு எடிட் பண்ணி படத்தைப் பதிவேற்றி வருகிறார்களாம்.

ஒரு படத்தின் அடிப்படையான கதையை ஃபாலோ பண்ணி அதைத் தெளிவாகச் சொல்லும் வகையில் இந்த எடிட்டிங் இருக்கிறதாம். ஆகவே முழுப் படத்தையும் பார்த்த திருப்தி இதில் ஏற்பட்டுவிடுகிறது என்கிறார்கள். இந்த சேனலில் எல்லா வகையான படங்களையும் பார்க்கலாம். ஷ்யாம் பெனகல் இயக்கிய ஆங்கூர், நிஷாந்த், மாண்டி போன்ற படங்களையும், காஞ்சிவரம் மாதிரியான ஆர்ட் ஹவுஸ் படங்களையும் இங்கே பார்க்கலாம். அதே நேரத்தில் லேடீஸ் டெய்லர், லவ்வர்ஸ், நாட்டி அட் 40 போன்ற ‘ஜில்பான்ஸ்' படங்களையும் பார்க்கலாம். ராம்கோபால் வர்மாவின் ஃபூங்க், ஆக்யாத், பூட் ரிடர்ன்ஸ் போன்ற ஹாரர் படங்களையும் குறைந்த நேரத்தில் பார்த்து ரசித்து முடித்துவிடலாம். காமெடிப் படங்களான ஹவுஸ்ஃபுல், கோல்மால், மஸ்தி போன்றவற்றையும் பார்த்துவிடலாம். ஆனால் வரலாற்றுப் படங்களும், இசைப் படங்களும் மட்டும் இந்த வகையில் அடங்க மறுக்குதாம்.

முழுக்க முழுக்க மொபைலில், யூடியூபில் படம் பார்ப்பவர்களை மனதில்வைத்தே இந்த சேனலை உருவாக்கியிருக்கிறார்கள். அவசர அவசரமாக எல்லாமே நடந்துமுடிந்துவிட வேண்டும் என ஆசைப்படும் அவசரத்துக்குப் பொறந்தவர்கள்தான் இவர்களின் டார்கெட் ஆடியன்ஸ். இந்த சேனல் ஆரம்பிச்சு ஆறேழு வருஷம் ஆயிருச்சு. சரியாச் சொல்லணும்னா 2009-ல் தொடங்கியிருக்காங்க.

கேக்கவே ஜாலியாத்தான் இருக்குது. என்ன ஒண்ணு இந்த சேனலில் இந்திப் படங்கள் மட்டும்தான் இருக்கு. இதே மாதிரி தமிழ்ப் படங்களையும் எடிட் பண்ணி போட்டுட்டாங்கன்னா பல தமிழ்ப் படங்களை ரெண்டு மணிநேரம் பார்க்கும் கொடுமையிலிருந்து தப்பித்துவிடலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

20 mins ago

சிறப்புப் பக்கம்

1 hour ago

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

3 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்