‘ரியோ’ மாரி

By வி.சீனிவாசன்

சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அருகே பெரியவடகம்பட்டி என்ற சிற்றூரில் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாரியப்பன், தன்னம்பிக்கையைக் காலில் சுமந்தபடி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகருக்குச் சென்றார். தன்னிடமுள்ள குறைபாட்டை மனதிலிருந்து நீக்கி, தான் அடைந்த வேதனைகளை உரமாக்கி, பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்று சாதனை படைத்தவரை ஒட்டுமொத்த நாடும் கொண்டாடி வருகிறது.

.... என்ற செய்தியை நீங்கள் நாளிதழ்களில் படித்துக் கொண்டிருக்கும்போது, 'தங்கமகன்' மாரியப்பன் தன் சொந்த ஊரில் ஏதேனும் கூலித் தொழில் செய்துகொண்டிருப்பார். விளையாட்டில் மிளிரும் பெரும்பாலான இந்திய வீரர்களுக்கு எழுதி வைக்கப்பட்ட விதி இது!

விரல்களைப் பறித்த விபத்து

தங்கவேல்-சரோஜா தம்பதியருக்கு சுதா என்ற மகளும் மாரியப்பன், குமார், கோபி ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் மாரியப்பன், ஐந்து வயது குழந்தையாய் வீட்டருகே கோயில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு வந்த அரசு பஸ் சக்கரம் பச்சிளம் குழந்தையாய் இருந்த மாரியப்பனின் காலில் ஏறியதில், கட்டை விரல் தவிர்த்து மற்ற விரல்கள் அனைத்தும் சிதைந்து போயின. அதனால் அவர் மாற்றுத் திறனாளியானார். வீட்டருகே உள்ள பெரியவடகம்பட்டியில் ஆரம்பப் பள்ளியில் சேர்ந்த மாரியப்பன், சக குழந்தைகளுடன் ஓடி விளையாட முடியாமல் தனது பொழுதை மைதானத்தில் வேடிக்கை பார்த்தே கழித்துவந்தார்.

ஊன்றி ஊன்றி நடந்த கட்டை விரலில் உரமெறி பலமானதில், எகிறிக் குதித்து விளையாட ஆரம்பித்தார். பள்ளி, கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் வழிகாட்டுதலில் மாவட்ட, மண்டல, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வாங்கிக் குவித்தார். பெங்களூரைச் சேர்ந்த பயிற்சியாளர் சத்யநாராயணனின் கடும் பயிற்சியும், ஊக்கமும், மாரியப்பன் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் பெற்று, இமாலய வெற்றியடைந்தார்.

ஒரே தாவலில் புகழ்

இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, புகழின் உச்சியைத் தொட்ட தங்க மகனைப் பெற்றெடுத்த தாய் சரோஜாவிடம் பேசினோம்.

“நான் பெத்த பிள்ளை உலகப் புகழ் அடைஞ்சிட்டான்னு ரொம்பப் பெருமையா இருக்கு. இவங்க அப்பா குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி எந்த வேலைக்கும் போகாம இருந்தார். அதனால‌ நாலு பிள்ளைகளையும் நானே பாடுபட்டு வளர்த்தேன். சாப்பாட்டுக்கே வழி இல்லாத பொழப்புங்க. நான் கூலி வேலைக்குப் போனாதான் வீட்டுல அடுப்பு எரியும். செய்யாத வேலை இல்லை. பாக்காத சோகமில்லை. காட்டு வேலைக்கு, செங்கல் சூளைக்கு, கொத்து வேலைக்குன்னு, கிடைக்கிற வேலையெல்லாம் செஞ்சு குழந்தைகளை வளர்த்தேன். மாரியப்பன் தோளுக்கு வளர்ந்ததும் அவனும் கொத்து வேலைக்குப் போய், தினம் 200 ரூவா கூலியா கொண்டு வந்து கொடுப்பான்.

நொய்யரிசி வாங்கிக் கஞ்சி காச்சி நாலு மக்காவையும் உக்கார வெச்சி, ஆளுக்கு ரவயா குடிப்போம். கால் வயிறு, அரை வயிறு கஞ்சி குடிச்சே, மாரியப்பன் உயரம் தாண்ட போவான். உடம்புல வலுவில்லாமலேயே பதக்கத்த வாங்கி வந்து வீடு பூரா ரொப்பி வெச்சிருக்கான். அதோட அருமை பெருமையெல்லாம் இப்பதான் புரியுது.

வீட்டு வாடகை கட்டறது, அக்கா தம்பிங்களுக்கு சம்பாதிச்சு போடுறதுன்னு தினமும் கண்ணீரோடுதான் அவனோட வாழ்க்கையும் போயிட்டிருந்தது. செங்கல் சூளைக்குப் போயி, நெஞ்சு வலி எடுத்து ஆஸ்பத்திரியில என்னை அனுமதிச்சாங்க. அப்ப டாக்டர் மாரியப்பனைக் கூப்பிட்டு, ‘டேய்... உங்கம்மாவ சாகடிச்சிடாதீங்கடா’ன்னு சொன்னதைக் கேட்டு, மாரியப்பன் தவிச்சுட்டான்.

அவன் மனசு உடைஞ்சி, நீ வேலைக்குப் போவாதன்னுட்டான். கடனுக்கு மேல கடன் கட்ட முடியாம நாங்க பட்ட பாடு, ஆண்டவனுக்கே வெளிச்சம்.

அப்புறம் மாரியப்பன் எனக்கு மூன்று சக்கர வண்டி வாங்கிக் கொடுத்து, காய்கறி வித்துக்கோம்மான்னு சொன்னான். அதைவெச்சு ஊர் ஊரா போயி, காய்கறி வியாபாரம் செஞ்சு பொழப்பு நடத்தி வந்தேன். இப்ப‌ மாரியப்பன் எகிறி குதிச்சதுல எங்க வறுமை ஒழிஞ்சத விட, நாட்டுக்குப் பெருமை கிடைச்சிருக்கு. அதுதான்யா எங்களுக்கு மொத்த‌ சந்தோஷத்தையும் கொடுத்திருக்கு.

பிரதமர் அய்யா, தமிழக முதல்வர் அம்மா, இன்னும் நிறைய பெரியவங்க பரிசு கொடுத்து உதவி செஞ்சிருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நன்றிங்க... எங்க வாழ் நாள் முழுசும் மறக்க மாட்டோம். மாரியப்பன் இன்னும் நிறையப் போட்டிக்குப் போய், தங்கம் வாங்கி நாட்டுக்குப் பெருமை சேர்ப்பான்னு நிச்சயம் நம்புறோம்” எனக் கண்ணீரும் விசும்பலுமாய்க் கூறினார்.

உத்வேகம் தந்த உயரம்

பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனிடம் பேசியபோது அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும் நம்மை மெய்சிலிர்க்க வைத்தன.

“நம் நாட்டுக்குத் தங்கம் வாங்கிக் கொடுத்தது ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தங்கப் பதக்கம் வெல்ல அனைத்து வகையிலும் உதவிகரமாக இருந்தவர்களும், ஆர்வம் அளித்தவர்களுக்கும், பரிசு வழங்கிப் பாராட்டிய பிரதமர், முதல்வர் உள்ளிட்டவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

என் வெற்றிக்கு முழுக்க முழுக்கப் பயிற்சியாளர் சத்யநாராயணன் சார்தான் காரணம். அவர் அளித்த ஊக்கமும், உற்சாகமும்தான் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் அளவிலான பாராலிம்பிக் போட்டியில் நான் தங்கம் வென்றதற்குக் காரணம். அவருக்குத் தனிப்பட்ட முறையில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

பெங்களூருவில் தினமும் காலை இரண்டரை மணி நேரம், மாலை ஒன்றரை மணி நேரம் என ஒரு வருடமாகப் பயிற்சியில் இருந்தேன். அப்போது, திடீரெனக் காலில் அடிபட்டுப் பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டது. புதிய இடம், புதிய மனிதர்கள் என்ப‌தால் கல்லூரிப் பயிற்சியாளரை அலைபேசியில் தொடர்புகொண்டு, ஊர் திரும்பிவிடுவதாகக் கூட அழுதேன். அப்போது, சத்யநாராயணன் சார் தான், உன்னால் முடியும் என்ற நம்பிக்கை கொடுத்து, போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

இந்தப் பதக்கம் வெல்வதற்கு முன்னால் எனது உயரம்தான் பெரும் சவாலாக இருந்தது. நான் உயரம் குறைவு (163 செ.மீ.) என்று குறைபட்டுக் கொண்டேன். பயிற்சியாளர் சத்யநாராயணன், உயரம் தாண்ட உத்வேகம்தான் முக்கியம் எனக் கூறி என்னை உற்சாகப்படுத்திக் கொண்டேயிருந்தார். அவரின் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதில், நான் மகிழ்ச்சி அடைந்ததைக் காட்டிலும், எனது நண்பர்களும், மக்களும் அடையும் சந்தோஷத்தைக் கண்டு மெய்சிலிர்க்கிறேன்.

திறமை இருந்தும் வாய்ப்பில்லாத ஏழை கிராமப்புற இளைஞர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளையும், உயரம் தாண்டுதலில் உள்ள நுணுக்கங்களையும், பயிற்சியையும் அளிக்கத் தயாராகவே உள்ளேன். அடுத்து வரும் பாராலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு, மீண்டும், மீண்டும் தங்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதே எனது இலக்கு” என்றார்.

எல்லோருக்குள்ளும் ஒரு மாரியப்பன்

‘‘கடந்த 2001-ம் ஆண்டு லண்டனில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் எட்டப்பட்ட உயரமே (174 செ.மீ.) சாதனையாக இருந்தது. மாரியப்பன் தேசிய அளவிலான போட்டியில் 174 செ.மீ., உயரம் தாண்டினான். எனவே, மாரியப்பனால் பாராலிம்பிக் போட்டியில் நிச்சயம் தங்கப் பதக்கம் வெல்ல முடியும் என்பதால், அவருக்குத் தொடர்ந்து பயிற்சி அளித்தேன். போட்டிக்கு அவரை அழைத்துச் செல்லும் முன்பே, தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்புவோம் என்று கூறிச் சென்றேன். அது இப்போது உண்மையாகிவிட்டது என்கிறார் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணன்.

- சத்யநாராயணன்

மாரியப்பனைப் போலப் பல திறமைகளுடன் ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அடிமட்ட அளவிலிருந்து மேலே வருவது என்பதுதான் மிகப்பெரிய கடினம் என்று கூறும் சத்யாநாராயணன், திறமையை வெளிகாட்டிக் கொண்டேயிருந்தால் வாய்ப்புகள் வந்து சேரும் என்கிறார்.” உங்களிடம் இல்லாதத் திறமைகளைப் பற்றி ஆராய்வதைக் காட்டிலும், இருக்கும் திறமையை வளர்த்து கொண்டு, அதில் சாதிப்பதுதான் சிறப்பு. மாரியப்பனின் சாதனையால் பத்மஸ்ரீ, கேல் ரத்னா விருதுகள் பெற அவருக்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. தனி நபர் விளையாட்டில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன‌. பல விளையாட்டுக்களில் பங்கேற்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரே ஒரு போட்டியில் பங்கேற்று, அதில் தனித்திறமையை வெளிப்படுத்துவதன் மூலம் ஒவ்வொருவரும் மாரியப்பன் தான்” என்று தன்னம்பிக்கை மந்திரத்தைச் சொல்கிறார் சத்யநாராயணா.

மாரியப்பனின் உலகில் இனி, சாதனை மும்மாரி பொழியட்டும்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

18 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்