மாத்தி யோசி -7: எனக்கு எல்லாம் பயமயம்!

By கா.கார்த்திகேயன்

'அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்' என்கிற பழமொழி இன்றளவும் கிராமப்புறங்களில் பிரபலம். பயம் என்ற மூன்றெழுத்துதான் எத்தனை பேருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் பிரதான சிக்கல்களில் ஒன்று, பயம். பயப்பட வேண்டிய விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பதும், பயப்படத் தேவையில்லாதவற்றுக்கு எல்லாம் பயப்படுவதும் ஒரு சிக்கலாகவே தொடர்கிறது.

நம்முடைய சிறு வயதில் சொல்லிக்கொடுக்கப்பட்டிருக்கிற விஷயங்களில் இதுவும் ஒன்று. “டேய் பள்ளிக்கு போனோமா, படிச்சோமான்னு அமைதியா இருக்கணும். வாத்தியார் சொல்றத அப்படியே கேட்டுக்கோனும்.” இப்படி எல்லாம் சொல்லி சந்தோஷமாகக் கற்றுக்கொள்கிற பாடத்தைச் சங்கடமாக மாற்றிவிடுவார்கள். ஆசிரியர் - மாணவர் என்கிற உறவில் அறிவுப் பகிர்வு என்பது விலகிப் போய், ‘சொன்னால் கேட்டுக்கொள்வோம். நாம் ஏதும் உளறிக் கொட்டி மாட்டிக்கொள்ள வேணாம்’ என்கிற மைண்ட் செட்டில் பல மாணவர்கள் விழுவதற்குக் காரணமே பயம்தான்.



சிறு வயதில் இருந்தே நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்தப் பயம் நம் மீது திணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 15 வயதில், “அப்பா, எனக்கு ஒரு சைக்கிள் வேணும்” என்று கேட்டால், “வாங்கித் தரேண்டா செல்லம்” என்று கூறி விலை உயர்ந்த சைக்கிளை வாங்கி தந்துவிடுவார்கள். ஆனால், ஒரு நிபந்தனை. “இந்த காம்பவுண்ட்டுக்குள்ளேதான் ஓட்டணும். ரோட்டுக்கு எடுத்துட்டு போனா விபத்து நடந்திரும்” என்று சைக்கிளோடு பயமுறுத்தலையும் சேர்த்து பெற்றோர் பரிசளிப்பார்கள். இங்கே முறையான வழிகாட்டுதலும் பயிற்சியும்தான் அவசியமே தவிர, பயத்தைத் திணிப்பதால் ஒரு பலனும் தராது.

சரி, கல்லூரிக்கு செல்லும்போதாவது தன்னம்பிக்கையோடு செயல்படுவது போல இருக்கிறதா என்று பார்த்தால், அதுவும் வேறு திசையில்தான் இருக்கும். “உன்னால இந்தக் கல்லூரியில் பிரகாசிக்க முடியாது. நான் சொல்றதை தேர்ந்தெடுத்து படி” போன்ற கட்டளைகள் பிள்ளைகள் தங்கள் மீது நம்பிக்கை இழப்பதோடு மட்டுமல்லாமல் பயத்தையும் கூட்டி விடுகிறது.

பெற்றோரை இரு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று, மீன் வலையை வாங்கி கொடுத்து மீன்களை பிடிக்க கற்று கொடுப்பது. இன்னொன்று, மீன்களையே வாங்கி கொடுப்பது. இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த பெற்றோர்களால் அடுத்தத் தலைமுறைகளின் அறிவாற்றலும் செயலும் முடங்கிப் போய்விடும். நீண்டகால நோக்கில் பயன்பாடு என்றால், நாம் முதல் ரகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அவசியமான பயம், அர்த்தமற்ற பயம் இவற்றுக்கு இடையே வித்தியாசம் தெரியாத பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பயம் தொற்றி புரிதல்கள் இல்லாமல் குழம்பித் தவிக்கிறார்கள்.

கல்லூரியில், பொதுவெளியில் எதிர் பாலினத்தவரை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத ஒன்று. பேசினால் பிரச்சினை வரும் என்று எதிர்பாலர் எதிரே வந்தால்கூட மவுன விரதத்தை வலுக்கட்டாயமாக வரவழைத்துக் கொண்டால் அது அர்த்தமற்ற பயம். சரியான வரையறைக்குள் பழக வேண்டும் என்ற அவதானிப்பு ஆரோக்கியமான உறவுகளுக்கு அஸ்திவாரம் அமைக்கும். இதை விட்டுவிட்டு படிக்கிற காலத்தில், “இது என் ஆளு..” என்று வீண் பெருமை கொள்ள மெனக்கெடும் செயல்கள் மோசமான அனுபவத்திற்கு மட்டுமே உத்தரவாதம் தரும்.

பள்ளி, கல்லூரிகளில் ஒரு விஷயத்தை விளக்கிச் சொல்ல வேண்டும் என்று வருகிறபோது அங்கு பயம் தேவையில்லை. தவறு செய்தால் திருத்திக்கொள்வும் கற்றுக்கொள்ளவும் அருமையான வாய்ப்பும் அனுபவமும் உருவாவது அங்குதான். கிண்டல் செய்வார்களோ, குறைவாக மதிப்பிடுவார்களோ என்று அந்த வாய்ப்பை தவறவிட்டால் அங்கு வருவது அர்த்தமற்ற பயம் .
பொதுவெளியில் சரியாகப் பேச வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு அவசியமான பயம்தான். ஆனால், அதற்காக வீண் வம்பும் மனக்கசப்பும் வந்து சேரும் என்று நன்றாக தெரிந்த விஷயங்களைக்கூட தெரியாததுபோல காட்டிக்கொள்ளும் தருணங்களில் வருவது அர்த்தமற்ற பயம்.

பணியில், தொழிலில் திட்டமிட்டு சவால்களை எதிர்கொள்கிறபோது மட்டும்தான் வளர்ச்சியைக் காண முடியும். சவால்கள் என்றாலே சிக்கல் என்று குழப்பிக் கொண்டால் அங்கே வருவது அர்த்தமற்ற பயம். பதின்பருவத்தில் சாலையின் தன்மையையும் போக்குவரத்து விதிகளையும் புறந்தள்ளி அதிவேக இஞ்ஜின் வண்டியில் பயணிக்கும்போது வரவேண்டியது அவசியமான பயம். ஆனால், இந்த அவசியமான பயம் பெற்றவர்களுக்கும் சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் வருகிறதே தவிர, வேகமாகப் பயணிக்கும் இளம் பிள்ளைகளுக்கு வருவதில்லை என்பது வேதனையான நிஜம்.

உடல் நலத்தை பேணுகிற வகையில் உடற்பயிற்சியைச் சிறுவயதிலிருந்தே கவனத்தில் எடுத்துக்கொள்வதும் உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பதும் அவசியமான பயம். இதைப் புறந்தள்ளி, “பயமா எனக்கா, இந்த வயதில் இல்லாம எந்த வயதில்..” என்றெல்லாம் வீண் வசனம் பேசினால் மோசமான விளைவை கைதட்டி அழைப்பதற்கு சமம்.

‘அஞ்சுவது அஞ்சாமை பேதமை’ என்று சொன்ன திருவள்ளுவர்தான், ‘எண்ணித் துணிக கருமம் (செயல்)’ என்றும் சொல்கிறார். இரண்டுக்கும் உள்ள அர்த்தத்தை உள்வாங்கிக் கொண்டால் பயம் பற்றிய தெளிவு பிறக்கும். இனி பயம் என்று சொல்லும்போது நமது பயம் வெற்றிக்கு உயர்த்துகிறதா அல்லது தோல்விக்கு இழுக்கிறதா என்பதையும் சேர்த்தே சிந்திப்போம்.

(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர்: தனியார் கல்லூரி மேலாண்மை துறைத் தலைவர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com


‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்