புறப்படும் புதிய இசை- 8: ரஹ்மான் பள்ளியில் இசை கற்றவர்

By ம.சுசித்ரா

உன்னதமான காதல் உணர்வும் அசட்டுத்தனமும் நிரம்பிவழியும் ‘ஷூட் த குருவி’ பாடல் சில மாதங்களுக்கு முன்பு இளைஞர்களை ஆட்டிப்படைத்தது, வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்தது. “இது வெறும் அபத்தம்” எனச் சிலர் திட்ட, “செம்ம பாட்டு மச்சான்…யாரு டா இந்தப் புது இசையமைப்பாளர்” எனப் பலர் அந்தப் பாடலைக் கேட்டு துள்ளிக் குதித்தனர்.

“பத்து வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவுக்குள் இருந்தும் கவனிக்கப்படாமல்போன விரக்தியில் இருந்தேன். எப்படியாவது என்னுடைய இசை எல்லாக் காதுகளையும் எட்ட வேண்டும் என்கிற தவிப்பு தலைதூக்கியது.

குறைந்தபட்சம் ‘யாருடா இது?’ என்றாவது கேட்க வைக்க வேண்டுமென இந்தப் பாடலைக் காதலும் அபத்தமும் கலந்து இசையமைத்தேன்” என்கிறார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர்.

2002-லேயே தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினாலும் அவரது இசையில் ஒரு படம் வெளியானது 2013-ல்தான்.

இலங்கைப் போரின் கடைசி கட்டத்தில் வீடு, உடைமை, உறவுகளைப் பறிகொடுத்து தமிழர் பகுதியில் ஆதரவற்றவர்களின் இல்லத்தில் வாழ்ந்தவர்களைப் பற்றிய பதிவான சந்தோஷ் சிவனின் ‘இனம்’ படத்துக்கு இசையமைத்தவர் விஷால் சந்திர சேகர்தான். உணர்வுபூர்வ படத்துக்குப் பாடல்களும் பின்னணி இசையும் தந்த இந்த இளைஞருக்குள் இசையின் வெவ்வேறு வண்ணங்கள் ஒளிர்கின்றன.

திருட்டுத்தனமாக வாசிக்க…

அம்மாவுக்குத் திருவையாறு, அப்பாவுக்குக் கும்பகோணம் என்றாலும் விஷால் சந்திரசேகர் துள்ளித் திரிந்து விளையாடியது மேற்கு வங்கத்தின் கரக்பூரில்.

ஒரு நாள் மாமாவின் பிரியமான இசை வாத்தியமான புல்புல்தாராவை அவருக்குத் தெரியாமல் எடுத்துத் தானாக வாசிக்க முயன்றார் ஆறு வயது விஷால். 8-ம் வகுப்பு படிக்கும்போது குடும்பத்தோடு சென்னை வந்த காலகட்டத்தில் கீபோர்டு வாசிக்கும் திறனும் மெருகேறியிருந்தது. அடுத்து, நண்பர்களோடு சேர்ந்து ‘5.1’ ஃப்யூஷன் இசை பேண்டை ஆரம்பித்தார்.

2002-ல் அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியாவில் சேர்ந்ததும் சக மாணவர்களும் நண்பர்களும் எடுத்த குறும்படங்களுக்கு இசையமைத்தார்.

சில மாதங்களிலேயே முதல் திரைப்பட வாய்ப்பும் தேடி வந்தது. 2006-க்குள் ஐந்து திரைப்படங்களுக்கு உற்சாகமாக இசையமைத்திருந்தார். ஆனால் ஒரு படம்கூட ரிலீஸாகவில்லை. “இதனால் மனமுடைந்து ஒரு வருஷம் இசையே வேண்டாம், படிச்ச படிப்புக்கு அனிமேஷன் வேலைக்குப் போய்விடலாம் என ஒதுங்கியிருந்தேன். அப்போதுதான் விளம்பரப் படத்துக்கு ஜிங்கில்ஸ் போடும் வாய்ப்பு வந்தது” என்கிறார் விஷால்.

சந்தோஷும் சித்தார்த்தும்

ஏற்கெனவே 400-க்கும் மேற்பட்ட குறும்படங்களுக்கும் பல விளம்பரப் படங்களுக்கும் சில திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தாலும், 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியில் படித்தபோதுதான் நிஜமான இசை கைவரப் பெற்றதாகச் சொல்கிறார் விஷால்.

“உலக நாடுகளிலிருந்து இசை மேதைகள் எங்களுக்குப் பாடம் எடுத்தார்கள். அதிலும் ரஹ்மான் மிக எளிமையாக தோழமையோடு பழகுவார்” எனப் பூரிக்கிறார் விஷால்.

நாட்கள் நகர, நண்பர் மூலமாக சந்தோஷ் சிவனின் அறிமுகம் கிடைத்தது. “ஒரு நாள் காரில் சந்தோஷுடன் பயணித்தபோது, அவர் ‘இனம்’ திரைக்கதையை 15 நிமிடங்களில் விவரித்தார். ஒவ்வொரு வரியிலும் பல அர்த்தங்கள் நிறைந்திருந்தது.

காட்சிபூர்வமாக மட்டுமல்லாமல் எங்கு எந்த வகை இசை, ஒலி தேவை என்பதையும் துல்லியமாக விவரித்தார். பின்னர் பின்னணி இசையமைக்கும்போது எக்கச்சக்கமாகச் சொதப்பி, திட்டு வாங்கி, பல விஷயங்களை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்” எனச் சிரிக்கிறார் விஷால்.

ஒரு புறம் சந்தோஷ் சிவனுடன் பணியாற்றியது பெரிய அனுபவப் பாடமாக இருந்தது என்றால் மறுபுறம் நடிகர் சித்தார்த்தும் தன் இசைக்கு அர்த்தம் சேர்த்திருக்கிறார் என்கிறார் விஷால். “இசையில் சோதனை முயற்சிகள் செய்யலாம்.

ஆனால் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாகச் செய்ய வேண்டும் என்பதுதான் சவால். அந்த வகையில் ‘ஜில் ஜங் ஜக்’ படத்தின்போது சித்தார்த் என்னுடன் இசை தொடர்பாகப் பகிர்ந்துகொண்ட விஷயங்கள் இசையை வேறு விதமாக யோசிக்கத் தூண்டின” என்கிறார்.

ஏன் எலக்ட்ரானிக்?

நிஜ இசைக் கலைஞர்களைக் கொண்டு லைவ் ரெகார்டிங் செய்யும் விருப்பம் இன்றைய இசையமைப்பாளர்களுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

ஆனாலும் இவர்கள் எலக்ட்ரானிக் இசையைத் தேர்ந்தெடுக்கப் பல காரணங்கள் உள்ளன. ஒரு புறம் புதிய ஒலிகளைக் கொண்டுவர டிஜிட்டல் இசை கைகொடுக்கிறது என்றாலும் தான் நிஜக் கலைஞர்களோடு பணியாற்றுவதை மிகவும் ஆத்மார்த்தமாக நினைப்பதாகச் சொல்கிறார் விஷால்.

ஆனால், “புதிதாக இசையமைக்க வாய்ப்பு தரும்போது பணம் கொடுக்க மாட்டார்கள். என்னுடைய ஆரம்பகால படங்களில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் முதற்கொண்டு ரெக்கார்டிங் வரை நானே செலவு செய்தேன்.

ஆனால் படங்கள் வெளிவராததால் சம்பளம் கொடுக்கப்படவில்லை. அந்த நிலையில் மீண்டும் அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைக்க நான் விளம்பரப் படங்களிலும், தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் இசை ப்ரோகிராமிங் செய்து வாங்கிய பணத்தை முதலீடு செய்தேன்.

அந்தச் சூழலில் அதிக அளவில் நிஜ கலைஞர்களுக்கு செலவு செய்து இசையை உருவாக்க முடியவில்லை. சொல்லப்போனால் என் படங்களில் பியானோ, கித்தார். டிரம்ஸ், சித்தார், புல்லாங்குழல், மேண்டலின், ஹார்மோனியம் எனப் பல இசைக் கருவிகளை நானே இசைப்பதற்கு இதுவும் காரணம்” என்கிறார்.

‘ஜில் ஜங் ஜக்’ பாடல்கள் ஹிட் ஆன பிறகு இந்த நிலைமை ஓரளவு மாறியிருக்கிறது என்பது விஷாலின் தனிப்பட்ட அனுபவம். சமீபத்தில் வெளியான ‘சவாரி’ படத்துக்கு இசையமைத்தது விஷாலைப் பற்றிப் பேச வைத்திருக்கிறது.

தற்போது இயக்குநர்கள் அட்லி, அறிவழகன் என அடுத்தடுத்து பரபரப்பாக இசையமைத்துவருகிறார். எத்தனை எலக்ட்ரானிக் கருவிகளில் இசை ஜாலங்கள் செய்தாலும், 6 வயதில் விஷாலின் விரல்கள் மீட்டிய அந்த புல்புல்தாராவை மீண்டும் மீட்டி கேட்க புல்புல்தாராவோடு நாமும் காத்திருப்போம்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்