பிரிய நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம்!

By செய்திப்பிரிவு

யுவராஜ் சிங் நல்ல கிரிக்கெட்டர் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த போது அவர் அபாரமான தன்னம்பிக்கை கொண்டவர் என்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த வருடம் 'அன்னையர் தின'த்தன்று, 'தி இந்து'வில் அவர் எழுதிய 'எ மாமோகிராம் ஃபார் மதர்ஸ் டே' எனும் கட்டுரையின் வாயிலாக 'நம் அம்மாக்களைப் புற்றுநோய்ப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அவர் ஒரு நல்ல மகனாகவும், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாகவும் தன்னை உயர்த்திக் கொண்டிருக்கிறார்.

அந்தக் கட்டுரையின் தமிழ் வடிவம் இங்கே...

அன்னையரைக் காப்போம்

அன்னையர் தினமான இன்று, நமது வாழ்வின் அதிமுக்கியமான பங்குவகிக்கும் பெண்களைக் கொண்டாடிவருகிறோம். இந்த உலகத்திற்கு நம்மைக் கொண்டுவந்து வளர்த்து, நோயிலும் ஆரோக்கியத்திலும் நம்மைக் கவனிப்பவர்கள் அவர்கள். எனது வாழ்க்கை முழுவதும் எனக்குப் புற்றுநோய் சிகிச்சை நடந்தபோதும் ஒவ்வொரு நிலையிலும் என்னை ஆதரித்தவர் எனது அம்மா.

சர்வ நிச்சயமாக நமது வாழ்க்கைக்காக நாம் நமது தாய்மார்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். அந்த இடத்தில் வைத்து அவர்களை நாம் மதிக்கும் நிலையில், நாம் சற்று நிதானித்து, “ஒரு நபராக, ஒரு சமூகமாக, ஒரு நாடாக, நமது தாய்மார்களைப் பாதுகாப்பதற்கும் அவர்களது வாழ்க்கையை மேம்படுத்தவும் நம்மால் மேலும் கூடுதலாக என்ன செய்ய முடியும்?” என்ற வினாவை நாம் நமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறேன்.

பெண்களை பாதிக்கிற‌ புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நமது முயற்சிகளை உடனடியாக அதிகப்படுத்த நம்மால் முடியும். அதிகப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. புற்றுநோயிலிருந்து மீண்டவனாக எனது அறக்கட்டளையான‌, ‘யுவீகேன்’ சார்பாகப் புற்றுநோய்த் தடுப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறேன். அந்தப் பணியின் வாயிலாக மார்பக மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோய்கள் பற்றி அறிந்துகொண்டேன். இந்த இரண்டு புற்றுநோய்களாலும் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பெண்கள் இந்தியாவில் மரணமடைகின்றனர். நான்கு நிமிடங்களுக்கு ஒரு பெண்ணைப் புற்றுநோய் பலிகொள்கிறது.

உடனடியாகச் செயல்படுங்கள்

என்னைப் பொறுத்தவரை, இந்தப் புள்ளிவிவரங்கள் ஆழமான விரக்தியைத் தருவதாக உள்ளன‌. ஏனெனில் இந்த மரணங்களைத் தடுக்கும் வழிகள் உள்ளன. இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் பெண்களில் அதிகம்பேர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறியப்பட்டால் மார்பகப் புற்றுநோய் குணப்படுத்தக் கூடியதே. மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் தெரிந்து அது பரவ ஆரம்பிப்பதற்கு முன்பே மாமோகிராம் சோதனை செய்வதன் மூலம் மார்பகப் புற்றுநோயைத் தெரிந்துகொள்ள முடியும்.

கருப்பைவாய்ப் புற்றுநோயை ஆரம்பக் கட்டத்திலேயே குணப்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றிய தகவல்களை அனைவரிடமும் பகிர்ந்துகொள்வதும் அவசியம். ஆனால் இத்தனை நம்பிக்கையான தகவல்கள் இருந்தும் புற்றுநோயால் தொடர்ந்து பலியாகிற‌வர்களின் எண்ணிக்கை அதிர்ச்சியையே தருவதாக உள்ளது. எளிமையாகத் தடுக்கக் கூடிய நோயிலிருந்து பெண்களைப் பாதுகாக்கப் போதுமான விருப்பத்தை நாம் காட்டவில்லை என்ற உண்மை என்னை அதிர்ச்சியூட்டியது.

தடுப்பூசியிடுவதன் வழியாக மட்டுமே 70 சதவீத கருப்பைவாய்ப் புற்றுநோய்களை முற்றிலும் வராமல் செய்ய முடியும்! அதைவிட, சாதாரணப் பரிசோதனைகள் வாயிலாகவே ஆரம்ப கட்டத்திலேயே எளிமையாகக் குணப்படுத்தும் நிலையில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் பெரும்பாலான பெண்கள் முறையாகப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதேயில்லை. தடுப்பூசி மருந்துகளோ தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கக் கூடிய நிலையிலும் விலை அதிகமான‌தாகவும் உள்ளது.

எனது ‘யுவீகேன்' அமைப்பில், புற்றுநோய் தொடர்பாக உருவாக்கப்பட்டிருக்கும் அசூயையைப் புறந்தள்ளி விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்துவருகிறோம். அத்துடன் பரிசோதனைகள் எளிமையாகக் கிடைக்கும் வண்ணம் செய்துவருகிறோம். அப்போதுதான் புற்றுநோய்க்கு எதிரான நடவடிக்கைகளைச் சரியாகத் திரட்ட முடியும்.

ஆரம்பக் கட்டத்திலேயே புற்றுநோய் கண்டறியப்பட்டால், பாதி வெற்றி கிடைத்தது போல. நான் எனது புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைப் புறக்கணித்தேன். வலுவான ஆதரவும் அதிர்ஷ்டமும் இருந்ததாலேயே நான் முழுக்கக் குணமடைய முடிந்தது. மற்றவர்களும் அதிர்ஷ்டத்தை நம்பியிருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. இந்த நோய்கள் தொடர்பாக நமக்குப் போதுமான அறிவைப் பெறுவது அவசியம்.

புற்றுநோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகள், நோயைத் தடுக்கும் முறைகள், நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைகள் கிடைக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம். அத்துடன் நாம் அவற்றைச் செய்யும்போது சௌகரியமாகவும் உணர வேண்டும்.

விழிப்புணர்வை உருவாக்குவது

கருப்பைவாய்ப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை உருவாக்குவது இன்று முக்கியமான சவாலாக உள்ளது. மக்களில் பெரும்பாலானவர்கள் கருப்பைவாய்ப் புற்றுநோய் பற்றி எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். அது ஒரு பிரச்சினை, அதை எப்படித் தடுப்பது என்பதைத் தெரிந்தவர்கள் இன்னும் குறைவானவர்கள்.

இனப்பெருக்க உறுப்பு நலன் தொடர்பான எந்தப் பிரச்சினையைப் பற்றிப் பேசுவதற்கும் நம்மிடையே குறிப்பிடத்தக்க மனத்தடை உள்ளது. அதனாலேயே அதை வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறோம். ஆனால் அந்த மனத்தடை தேவையற்றது. அது எந்தப் பெண்ணையும் பாதிக்கக்கூடிய ஒரு நோய் அவ்வளவுதான். அதனால் அத்தனை பெண்களும் அந்த நோயிலிருந்து தம்மைத் தடுத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இதைப் போன்ற நோயைத் தடுப்பதற்கான செயல்முறைகள் நம்மிடையே இருக்கும்நிலையில், வெறுமனே விழிப்புணர்வு இல்லாமல் ஒருவர் இறந்துபோகும் சூழ்நிலை ஏற்படுவதை அனுமதிக்கவே கூடாது.

அத்துடன் புற்றுநோய் சிகிச்சை சேவைகளும் கிடைப்பது இன்னொரு முக்கியமான அம்சமாக உள்ளது. சிறந்த சிகிச்சையைப் பெறுவதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இருந்தது. அத்தகைய சிகிச்சையைப் பெறுவது எத்தனை லட்சம் மக்களுக்குச் சாத்தியம்? அதனால்தான் புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகள் அனைத்தும் நாட்டிலுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைப்பதற்கு அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு தேசமாக அதைச் செய்வது நமது பொறுப்பாகும். புற்றுநோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகளைப் பெண்களுக்கு மறுப்பதென்பது வாழ்வதற்கான அடிப்படை உரிமை மற்றும் நல்ல ஆரோக்கியத்துக்கான அடிப்படை உரிமையை அவர்களுக்கு மறுப்பதாகும்.

அதனால் இந்த அன்னையர் தினத்தில், தனிப்பட்ட நபர்களாக, சமூகமாக, ஒரு நாடாக, இப்போதைய சூழ்நிலையை மாற்றுவதற்கு உறுதியேற்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் மாற்றத்தை உருவாக்க முடியும். நமது குடும்பத்திலுள்ள பெண்கள் அனைவரும் மார்பகம் மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும். புற்றுநோயை எதிர்கொண்டவர்கள் தாங்கள் வென்ற கதைகளைச் சுற்றியுள்ளவர்களிடம் பகிர்ந்துகொண்டால்தான் புற்றுநோய் தொடர்பான சந்தேகங்களையும் அது தொடர்பான சிகிச்சைகளையும் சுதந்திரமாகக் கேட்டுப்பெறும் சூழலை உருவாக்க முடியும். அடுத்தமுறை மருத்துவரைப் பார்க்கப் போகும்போது, உங்களுக்கோ உங்கள் உறவினருக்கோ புற்றுநோய்ப் பரிசோதனை செய்துகொள்வதற்கான ஆலோசனைகளைக் கேளுங்கள்.

இன்றைக்கு உருவாகியிருக்கும் விஞ்ஞான அறிவின் மூலமும் கருவிகள் மூலமும், நாம் இதுபோன்ற நோய்களை எளிதில் தடுத்து எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்ற முடியும். கருப்பைவாய்ப் புற்று மற்றும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு நமது தொடர்ந்த ஆதரவும் கவனக்குவிப்பும் தேவை.

அதனால்தான், இந்த அன்னையர் தினத்தில் நமது நாட்டில் வாழும் அனைத்துப் பெண்களின் நல்வாழ்வுக்காக, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணைய உங்களிடம் கோருகிறேன். நமது தேசத்தின் பெண்கள், வருமுன் தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து விடுபட்டு வாழ்வதற்கான உரிமையுள்ளவர்கள்.

இந்த அன்னையர் தினத்தில் தனிப்பட்ட நபர்களாக, சமூகமாக, ஒரு நாடாக, இப்போதைய சூழ்நிலையை மாற்றுவதற்கு உறுதியேற்க வேண்டும். நம்மில் ஒவ்வொருவரும் மாற்றத்தை உருவாக்க முடியும். நமது குடும்பத்திலுள்ள பெண்கள் அனைவரும் மார்பகம் மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோய்ப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

தி இந்து (ஆங்கிலம்) தமிழில்: ஷங்கர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்