நெருப்புடா... நெருங்குடா

இணையத்திலும், போன் ரிங்-டோனிலும் ‘நெருப்புடா’ என்ற பாடல்தான் ட்ரெண்ட். அப்பாடலை எழுதிப் பாடியவர் அருண்ராஜா காமராஜ். ஒருபக்கம் நடிகர், மறுபக்கம் பாடலாசிரியர் இரண்டுக்கும் நடுவில் பின்னணிப் பாடகர் என்று ஒரே நேரத்தில் கோலிவுட்டில் மூன்று முகம் காட்டுகிறார்.

‘கபாலி’யில் நீங்க எழுதிப் பாடியிருக்கும் ‘நெருப்புடா’ தான் ட்ரெண்ட் தெரியுமா?

டீஸரில் அந்த வரிகளை முன்வைத்து நிறைய பேர் பாராட்டி வருகிறார்கள். திடீரென்று ஒரு நாள் சந்தோஷ் அண்ணன் அழைத்தார். அவருடன் இருந்த இயக்குநர் ரஞ்சித் “உங்களுடைய முந்தைய பாடல்கள் என்ன” என்று கேட்டவுடன் சொன்னேன். அப்படியே பாடல்களுக்காகப் பேசினோம்.

அப்போது ‘நெருப்புடா… நெருங்குடா’ என ஒரு ஐடியாவாக இருக்கிறது என்று சொன்னேன். நல்லாயிருக்கு… இதைப் பண்ணலாம் என்றவுடன் முழுக்க எழுதி பண்ணினோம்.

யாரிடமும் சொல்லக் கூடாது என்பதால், நான் யாரிடமும் சொல்லவில்லை. நாம் எழுதி பாடிய பாடல் டீஸரில் வந்தவுடன்தான் எனக்கே தேர்வாகி இருக்கிறது எனத் தெரியும்.

இசையாக வெளியாகி இருந்தால் அதை அனைவரும் கேட்டுக் கருத்துச் சொல்லியிருப்பார்கள். ஆனால், டீஸரிலேயே வந்ததால்தான் எனக்கு இந்தளவுக்கு பேர் கிடைத்திருக்கிறது.

ரஜினி நடித்திருக்கும் ஒரு படத்தில் முதன்முறையாக வெளியாகி இருக்கும் டீஸரில் என் பாடல் வரிகள் இடம்பெற்றிருப்பதில் ரொம்ப சந்தோஷம்.

உங்கள் வரிகளுக்கு ரஜினி என்ன சொன்னார்?

இன்னும் ரஜினி சாரை நான் பார்க்கவில்லை. இசை வெளியீட்டு விழாவுக்காகக் காத்திருக்கிறேன். அவ்விழாவில் அவரிடம் பேசி என் பாடல்கள் குறித்து அவர் வாயால் கேட்க வேண்டும் என ஆசை.

நீங்கள் பாடலாசிரியர் ஆனது எப்படி?

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கல்லூரியில் என்னுடைய சீனியர். அவருடன் இணைந்து ஒரு ஆல்பம் பண்ணலாம் என்று முன்பு முடிவு செய்திருந்தேன். ஆனால் சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அந்த ஆல்பத்துக்காக நான் எழுதிய பாடல் சினிமாவுக்குப் பயன்பட்டது.

சந்தோஷ் நாராயணன் இசையில் ‘பீட்சா’ படத்தில் இடம்பெற்ற ‘ராத்திரியை ஆளும் அரசன்’, ‘எங்கோ ஓடுகின்றாய்’ ஆகியவைதான் முதலில் நான் சினிமாவுக்காக எழுதிய பாடல்கள்.

பாட்டு எழுதுவது மட்டுமின்றி சில பாடல்களைப் பாடியிருக்கிறேன். ‘ஜிகர்தண்டா’ படத்தில் ‘டிங் டாங்’ என்ற பாடலை எழுதி வினு சக்கரவர்த்தி சார் குரலில் பாடினேன்.

மிமிக்ரி கலைஞன் என்பதால் எனக்கு அது எளிதாக இருந்தது. அதே போல ‘டார்லிங்’ படத்தில் வரும் ‘வந்தா மலை’ பாடலின் இடையே வரும் ராப் நான் பாடியதுதான்.

பாடலாசிரியர், பாடகர், நடிப்பு எனப் பல தளங்களில் இயங்கிவரும் உங்களுடைய லட்சியம் என்ன?

படம் இயக்குவதுதான். இப்போது படத் தயாரிப்பு தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டுவருகிறேன். அனைத்தையும் கற்றுக்கொள்வதற்குக் காரணம் படம் இயக்கத்தான். அதற்குத்தான் திரையுலகுக்கு வந்தேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இயக்குநராக ஆவதற்கான வழியில் தான் போய்க்கொண்டிருந்தேன். இடையில் எனக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று பாடல் எழுத ஆரம்பித்தேன். அதுவே எனக்கு ஒரு பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது.

கல்லூரி நண்பர் சிவகார்த்திகேயன் உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்து என்ன சொல்கிறார்?

நானும் சிவகார்த்திகேயனும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தோம். முதலில் டிவியிலும், பிறகு சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டிய சிவகார்த்திகேயன், பிறகு என்னையும் கைதூக்கிவிட்டார்.

அவரது உதவியால் ‘ராஜா ராணி’, ‘மான் கராத்தே’ ஆகிய படங்களில் நடித்தேன். என்னுடைய வளர்ச்சி அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது என நம்புகிறேன். ரஜினி சாருக்கு நான் பாட்டு எழுதியதை ரொம்பப் பெருமையாக அவன் நினைத்தான்.

உங்களுடைய வளர்ச்சியைப் பார்த்துக் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள்?

அவர்களுக்கு இந்தத் திரையுலகைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்ஜினீயரிங் படிச்சுட்டு எம்புள்ள இப்படிச் சுத்துதே என்ற வருத்தம் இப்போது அவர்களுக்கு இருக்கிறது. தற்போது உங்க பையன் பாட்டு நல்லாயிருக்கு, நல்லா நடிச்சுருக்கான் என் குடும்பத்தினரிடம் சொல்லும்போது சந்தோஷப்படுகிறார்கள் என நினைக்கிறேன்.

ஏனென்றால் அவர்கள் திட்டினாலும், சந்தோஷப்பட்டாலும் நான் ஜாலியாக எடுத்துக் கொள்வேன். எனக்கு பெரிதாகக் கோபம் எல்லாம் வராது. அவர்களுக்கு நாம் எப்போதும் விளையாட்டாகச் சுத்துகிறேன் என்ற வருத்தமுண்டு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்