தொட்டுவிடும் தூரத்தில் எவரெஸ்ட்

By திவ்ய பிரபா திவாகரன்

கோடை விடுமுறை கிடைக்கும்போது ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர் என்ன செய்வார்? பொதுவாக இப்படி ஒரு கேள்வி கேட்டால் நமக்கு என்ன தோன்றும்? சினிமா பார்ப்பார்; கம்யூட்டரில் கேம் விளையாடுவார்; நண்பர்களுடன் ஜாலியாக ஊரைச் சுற்றுவார்; இல்லாவிட்டால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலை நகரத்துக்குப் போய் மனதுக்குப் புத்துணர்ச்சியூட்டிக்கொள்வார்.

கிடைத்த ஓய்வில் இமய மலையில் ஏறி எவரெஸ்டைத் தொட முயல்வாரா? கண்டிப்பாக மாட்டார். ஏனெனில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவது என்பது எட்டாம் நம்பர் பஸ்ஸில் ஏறுவது போல் அவ்வளவு எளிதானதல்ல. அதற்கான முன் தயாரிப்புகள், பயிற்சிகள் எனப் பல சிரமம் தரும் பணிகள் உள்ளன.

ஆனால் ஒரு கம்ப்யூட்டர் இன்ஜினீயர் இந்தக் கடினமான வேலையைச் செய்துள்ளார். அவரது ஓய்வின் போது எவரெஸ்டை நோக்கித் தன் பயணத்தைத் தொடங்கிவிட்டார். பல சிரமங்கள் அவருக்கு ஏற்பட்டன. அவற்றை எல்லாம் மீறி எப்படியும் எவரெஸ்டில் தன் காலடியைப் பதித்துவிடும் நோக்கத்தில் அவர் கடினமான தருணங்களைக் கடந்தார். அவர் தனியார் நிறுவனத்தில் சீனியர் புரொஜக்ட் மேனேஜராகப் பணிபுரியும் சிவ சங்கர முரளி.

சாதனைக் கனவுகள்

சிறு வயது முதலே வித்தியாசமான கனவுகள் அவருக்கு இருந்துள்ளன. அவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்ற ஆசையும் கூடவே முளைத்திருக்கிறது. பால்யம் கடந்து பருவம் வந்தபோது, அந்த முயற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அவரது பல கனவுகளில் ஒன்று மலையேற வேண்டும் என்பது.

அதுவும் உலகின் மிக உயர்ந்த பத்து சிகரங்களில் ஒன்பதைத் தன்னிடம் கொண்டிருக்கும் இமயமலைத் தொடர் மீது ஏறிவிட வேண்டும் என்பதே அவரது தீராக் கனவு. வெறும் கனவுடன் அவர் நின்றுவிடவில்லை. தன் கனவை நனவாக்க என்ன செய்ய வேண்டும் என்ற தீவிர தேடலில் ஈடுபட்டார். அது தொடர்பான அனைத்து விவரங்களையும் சேகரித்துக்கொண்டார்.

மலை ஏறுவதற்குத் தேவையான மன உறுதி அவரிடம் இருந்தது. ஆனால் அது மட்டும் போதாதே. உடல் உறுதியும் தேவைப்படுமே. அதற்கான பயிற்சிகளைப் பயிற்றுனரின் உதவியுடன் எடுத்துக்கொண்டார். முதலில் ஓட்டப் பயிற்சி, அது ‘ஸ்பிரிண்ட் மோட்’ மாரத்தான். ஒரு மாத காலம் ஓடி வேகத்தை அதிகரித்துக்கொண்டார். பின்னர் சைக்கிளிங். சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு, எங்கேயும் நிற்காமல் சென்றுவர வேண்டும்.

இடையில் ஒரு லிட்டர் தண்ணீருக்கு மேல் அருந்தக் கூடாது. இது எளிதல்ல. தொண்டை வரளும். ஆனால் எங்கேயோ இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனை படைக்க வேண்டுமே?

சைக்கிளிங் பயிற்சியால் நுரையீரலின் கொள்ளளவு அதிகரிக்கும் என்பதால் அதைப் பொறுத்துக்கொண்டார். இந்தப் பயிற்சிகளை எடுக்கும்போது அவருக்கு வயது 20. மலை ஏறுவதற்கு ஏழு வருடங்கள் பயிற்சி தேவை.

ஆனால் சிவ சங்கர முரளியால் இரண்டரை வருடங்கள் மட்டுமே பயிற்சி எடுத்துக்கொள்ள முடிந்தது. அதற்குள் ஆர்வம் பொங்கியதால் அப்போதே மலை ஏறிவிடத் துடித்திருக்கிறார். மலையேற்றத்துக்கான அனுமதியை 2015-ல் பெற்றிருக்கிறார். அந்த அனுமதி கிடைத்தாலும் வீட்டிலுள்ளோர் அனுமதியும் வேண்டுமே. அவர்களிடம் பேசி, புரியவைத்து ஒருவழியாக அவர்களும் பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

இமய மலைப் பயணம்

இமய மலை மீது இவரை எதிர்பார்த்தபடி காத்துக்கொண்டிருந்த எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்டுவிடும் பயணத்தை, தனது 23-ம் வயதில், கடந்த மார்ச் 30 அன்று தொடங்கியிருக்கிறார் சிவ சங்கர முரளி. பொதுவாக மலை ஏற்றத்துக்கான மாதங்கள் ஏப்ரல், மே, அக்டோபர், நவம்பர் ஆகியவை.

மலை ஏறுவதற்கான உடல் வலு இருக்கிறதா என்பதைப் பார்ப்பார்கள், அதற்கான தேர்வும் நடத்தப்படும். மலை ஏறுவதற்கு அவசியமான கயிறுகள், ஆக்ஸிஜன் மாஸ்க், பனியில் நடப்பதற்கான பூட்ஸ்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் போன்ற உபகரணங்கள் காத்மாண்டுவில் வாடகைக்கு எடுத்துக்கொண்டார்.

இதற்கெல்லாம் சுமார் 60 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் 40 லட்சம் ரூபாய்) பணம் அவருக்குச் செலவாகியிருக்கிறது. எவரெஸ்ட் கனவில் எல்லாவற்றையும் கடந்தார் முரளி.

முரளியுடன் வந்த ராணுவ வீரர்கள் ஏழு வருடப் பயிற்சி முடித்தவர்கள். எனவே அவர்களுக்கு இணையாக இரண்டரை வருடப் பயிற்சி மட்டுமே முடித்திருந்த முரளிக்கு மலையேறுவது சிரமமாகத்தானிருந்திருக்கிறது.

பேஸ் கேம்ப், அது தவிர்த்து நான்கு நிலைகள் எனப் பயணம் தொடர்ந்திருக்கிறது. பசியெடுக்கும் ஆனால் உணவு உண்டால் வாந்தி வந்துவிடும். அத்துடன் கை, கால்களில் பல காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மலை ஏறும்போது எதிர்ப்படும் பனிப்பாறை சரிவுகளும், பலமான காற்றும் அச்சுறுத்தும். சிறு பிழை நேர்ந்தால்கூட எவரெஸ்டைத் தொட முடியாது எமனைத்தான் சந்திக்க வேண்டியதிருக்கும். வெளியில் குளிர் காற்றும் உள்ளே மரண பயமும் சிலிர்க்கச் செய்யும். உயரத்தில் ஏற ஏற ஆக்ஸிஜன் அளவு குறையும்.

எனவே ஆக்ஸிஜன் சிலிண்டர் தான் உயிர் காக்கும். இப்படியான அச்சுறுத்தல் அனைத்தையும் அசாதாரணமாகக் கடந்திருக்கிறார். ஆனாலும் தனது பள்ளி அலுமினி குழுவினரான ஜேவிபிபியால் கிடைத்த உத்வேகத்தில் தொடங்கிய தனது எவரெஸ்ட் பயணத்தை அவரால் முழுமையாக முடிக்க முடியவில்லை.

இன்னும் ஒரு கிலோ மீட்டர் ஏறினால் 8,848 மீட்டர் உயரம் கொண்ட எவரெஸ்டைத் தொட்டுவிடலாம் என்னும் நிலையில் அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை. சூழல் அவரைத் தடுத்துவிட்டது. ஆகவே பயணத்தை முடித்துக்கொண்டு மே 1 அன்று சென்னை திரும்பிவிட்டார். எவரெஸ்டைத் தொடாவிட்டாலும் கூட இயமமலைப் பயணம் அவரது சாதனைகளின் ஒன்றாக நிலைத்துவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

2 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்