‘உலகமயமாக்கல்’ (globalisation); ‘தாராளமயமாக்கல்’ (liberalisation) இவை இரண்டையும் பற்றி, பொருளாதாரம் தெரியாதவர்கள்கூட, காரசாரமாக விவாதிப்பதைப் பார்க்க முடிகிறது.
வரவேற்க வேண்டும். பொருளாதாரச் சிந்தனைகள், விவாதங்கள், பிரசாரங்கள், ஓர் ஆரோக்கியமான சமுதாயத்துக்கு வழிகோலும்.
‘உலகமயமாக்கல் ஒண்ணும் புதுசா நடக்கறது இல்லையே... நம்முடைய பழைய இலக்கியத்துல நிறைய சொல்லி இருக்காங்களே...’ இருப்பதுதானே...? கடல் கடந்து வாணிபம் செய்ததும், பிற நாட்டு வணிகர்கள் இங்கு வந்து, மலை போல் குவிந்து கிடந்த பொருட்களை நம்மிடமிருந்து வாங்கி கப்பல்களில் கொண்டுசென்றது பற்றிப் படித்து இருக்கிறோமே... அது மட்டுமல்ல. நம்முடன் வணிகம் செய்ய அவர்களுக்கு அவ்வளவு விருப்பம். என்ன காரணம்...?
கொடுப்பதையும் குறைவாகக் கொடுக்க மாட்டார்கள்; கேட்பதையும் அதிகமாகக் கேட்க மாட்டார்கள். “கொடுப்பதும் குறை கொடார்; கொள்வதும் மிகை கொளார்.” இது வேறு.
ஆக, அயல் நாட்டினருடன் வணிகம், பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதுதான்.
பிறகு ஏன் இத்தனை எதிர்ப்பு, கண்டனம்...? வேறுபாடு இருக்கிறது. இது, அது அல்ல.
அதுக்கும் மேல...
வாணிகம் என்றால், வாங்குவதும் விற்பதும் மட்டுமே அல்ல. யாருக்குச் சொந்தம்?
எங்கிருந்து யார் விளைவிக்கிறார்..? விற்கிறார்..? அதாவது, பொருட்களின் விளைச்சல், விற்பனையின் உரிமையாளர் யார்...? நம் மண்ணில் நம் ‘பொருட்களை’ யாரும் வந்து தகுந்த விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போகட்டும். ஆனால், ஒட்டுமொத்தமாக ஒரு தொழில், ஒரு வணிகத்தையே விலை கொடுத்து வாங்குவது எப்படிச் சரியாகும்? இதை அனுமதிக்கலாமா? தொழில் செய்ய, நிதி வேண்டும். நம்மிடம் அந்த அளவுக்கு ‘வசதி’ இல்லை. யாரிடம் இருக்கிறதோ, அவரிடம் இருந்து வாங்குவதில் என்ன தவறு?
உலகமயமாக்கல் / தாராளமயமாக்கல் வந்த பிறகு, தங்களிடம் உள்ள, ஏராளமான பணத்தைக் கொண்டு, இந்தியா போன்ற, நிதிக் குறைவு (Finance deficit) உள்ள நாடுகளில் முதலீடு செய்து, அந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவது.
ஆபத்தானதா, இல்லையா? இதைத்தான் எதிர்க்கிறார்கள். கொடுக்கல், வாங்கலை அல்ல. இப்பிரச்சினை குறித்து, ஆதரித்தும் எதிர்த்தும், பொருளாதாரக் கண்ணோட்டத்தில், கொள்கை சார்ந்து, மக்கள் நலனை முன்னிறுத்தி, ஏராளமான கட்டுரைகள், நூல்கள் வெளிவந்துள்ளன.
இரு சாராரின் கருத்துகளையும் ஆழமாகப் படித்து, தெளிவாகத் தமது சொந்தக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ளல், தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் உடனடியாகச் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி. இது, தேர்வுக்கு மட்டுமல்ல; தேசத்துக்கும் பயன்படும். விவாதங்களிலிருந்து நகர்வோமா..?
அந்நிய நேரடி முதலீடு
அநேகமாக எல்லா நாளிதழ்களுமே, ‘பொருளாதாரம், வர்த்தகம்’ என்று தனிப் பகுதி கொண்டுவரத்தான் செய்கின்றன. எத்தனை பேர் இப்பகுதியை விரிவாகப் படிக்கிறோம்? பரவாயில்லை. ஆனாலும் சில சொற்கள், கண்களில் பட்டுக்கொண்டே, காதுகளில் விழுந்து கொண்டேதான் இருக்கின்றன. ‘அந்நியச் செலாவணி’, ‘அந்நிய முதலீடு’, ‘அந்நிய வர்த்தகம்’, ‘அந்நியப் பொருளாதாரம்’.
இதற்கு இதுதான் சரியான பொருள் என்று தெரியாவிட்டாலும் ஏறத்தாழ இதுவாகத்தான் இருக்கும் என்று நாமாக ஊகித்து வைத்திருக்கிறோம்.
‘அந்நியன்’ யார்..? ‘அந்நிய’ என்றாலே, ‘அயல் நாட்டுடன் தொடர்பு’ என்றுதான் பொருள். ‘அந்நிய முதலீடு’ என்றால், அயல் நாடுகளில் இருந்து வரும் முதலீடு.
‘அந்நிய நேரடி முதலீடு' பற்றி, (FDI - Foreign Direct Investment) போட்டித் தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்படுகிறது. அது என்ன - ‘நேரடி’? தொழில் தொடங்க, தொழில் நடத்த, தொழிலை விரிவுபடுத்த நிதி தேவைப்படுகிறது. உள் நாட்டிலிருந்து, வேண்டிய அளவு நிதி வரவில்லை; என்ன செய்யலாம்...? வெளி நாடுகளிலிருந்து முதலீடு கிடைக்குமா என்று பார்க்கலாம். கிடைக்கிறது என்று கொள்வோம். பணம் தருகிறவர் என்ன எதிர்பார்க்கிறார்?
என்னதான் அவருடைய நிபந்தனைகள்?
‘போட்ட பணத்துக்கு வட்டி வந்தா போதும்’ என்றா சொல்லுவார்கள்? ஊஹூம். பிறகு? ‘நிர்வாகத்தில் பங்கு’ கேட்பார்களா இல்லையா? புரியலியா? ‘வியாபாரம், என் பேர்ல இருக்கணும்’.
அதாவது, நிறுவனத்தின் உரிமையாளர் என்கிற அந்தஸ்து (ownership) கேட்கலாம் அல்லவா? இவ்வாறு, தன் பெயரில் ஒரு நிறுவனம்; அதன் மூலம் தொழில் செய்ய ஓர் அயல் நாட்டுக்காரர் முதலீடு செய்கிறார் என்றால் அது, ‘நேரடி முதலீடு’. முழு உரிமையாளராக இருக்க வேண்டியது இல்லை. இயக்குநர்களில் ஒருவராய், நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற அளவுக்கு, கணிசமான பங்கு (substantial share) வாங்கிவைக்கலாம்.
பிற முதலீடுகள்
வேறொரு விதமாகவும் இருக்கலாம். ‘வணிகக் கூட்டு முயற்சி’ (business collaboration) அதாவது இணைந்த முதலீடு; இணைந்த செயல்பாடு. இதுவே, ஒரு தனி நபராக இல்லாமல், ஓர் அந்நிய நாட்டு ‘நிறுவனம்’, இந்நாட்டில் முதலீடு செய்தால், அது - நிறுவன முதலீடு. (Institutional Investment) அரசின் பல்வேறு பணிகள், திட்டங்களில் (plans and projects) அயல் நாட்டு அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளும் இதில் அடக்கம்..
வேறொரு விதமாகவும் இருக்கலாம். ‘வணிகக் கூட்டு முயற்சி’ (business collaboration) அதாவது இணைந்த முதலீடு; இணைந்த செயல்பாடு. இதுவே, ஒரு தனி நபராக இல்லாமல், ஓர் அந்நிய நாட்டு ‘நிறுவனம்’, இந்நாட்டில் முதலீடு செய்தால், அது - நிறுவன முதலீடு. (Institutional Investment) அரசின் பல்வேறு பணிகள், திட்டங்களில் (plans and projects) அயல் நாட்டு அரசுகள், தன்னார்வ நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளும் இதில் அடக்கம்..
அந்நிய முதலீடு பற்றி, இந்த அளவுக்குத் தெரிந்து வைத்திருந்தால் போதும்.
அடுத்து, ‘அந்நியச் செலாவணி’ (Foreign Exchange). இது என்ன..? ஏற்றுமதி மூலம் ஈட்டுகிற அயல் நாட்டு கரன்ஸி. ‘ஒரு நாடு, தன் பொருளாதார நடவடிக்கைகளின் மூலம் ஈட்டும் அயல்நாட்டுப் பணம்’. (நன்றி - ‘க்ரியா’) இந்த அந்நியச் செலாவணி எந்த அளவுக்கு மிகுதியாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அந்த நாடு, உலக வர்த்தகத்தில் மதிக்கப்படுகிறது.
சரி, தற்போது நம் நாட்டில் உள்ள ‘அந்நியச் செலாவணி கையிருப்பு’ (Foreign Exchange Reserve) எவ்வளவு? உண்மையாக, துல்லியமாக இவ்வளவுதான் என்று அறிந்துகொள்ள வேண்டும். சாத்தியமா? நிச்சயமாக முடியும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் ரிசர்வ் வங்கி ஓர் அறிக்கை வெளியிடுகிறது. ‘Reserve Bank of India - Weekly Statistical Supplement’. இணையத்தில் சென்று யாரும் பார்க்கலாம்.
2016 மே மாதம் 6-ம் தேதியிட்ட அறிக்கையின் படி, நம் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 36,199.47 கோடி அமெரிக்க டாலர்கள்.
அந்நிய கரன்ஸி (‘டாலர்’) - 33799.6 கோடி டாலர்;
தங்கம் கையிருப்பு (மதிப்பு) - 2004.3 கோடி டாலர்கள்.
அதிக அந்நியச் செலாவணி கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளில், உலகில் ஏழாவது இடத்தில் நாம் இருக்கிறோம். அந்நியப் பணமாக மாற்றுதல் விஷயத்தில், கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம்: மாற்று விகிதம் (exchange rate).
இது கூடுகிறது என்றால், நம் கரன்ஸியின் மதிப்பு குறைகிறது. உதாரணத்துக்கு, ஓர் அமெரிக்க டாலர், ரூபாய் 65-லிருந்து, 66 என்று உயர்கிறது. என்ன பொருள்? முன்னர் நாம், ஒரு டாலருக்கு 65 ரூபாய் தந்தோம். இனி, 66 ரூபாய் தர வேண்டும். ஒரு வகையில், விலைவாசி ஏற்றம் போல்தான்.
‘நம் கரன்ஸியின் மதிப்பு கூட வேண்டும்’. என்ன செய்தால் இது நடக்கும்? எல்லாரும் சொல்வதுதான். உள் நாட்டு உற்பத்தி பெருக வேண்டும். அதன் மூலம், ஏற்றுமதி கூட வேண்டும்.
இன்னும் ஒன்றை மட்டும் பார்த்துவிடுவோம்.
‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறை’ (CAD - Current Account Deficit). ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஏற்றுமதி - இறக்குமதிக்குமான இடைவெளி. ஏற்றுமதி அதிகமாக இருந்தால், ‘நடப்புக் கணக்கு உபரி’. இறக்குமதிதான் அதிகமா...? ‘நடப்புக் கணக்குப் பற்றாக்குறை’.
அந்நிய வர்த்தகம், முதலீடு, உடன்படிக்கை என்றெல்லாம் பேசினாலே, ஓர் அமைப்பு, சட்டென்று நினைவுக்கு வருகிறது. ‘இவரு.. நல்லவரா... இல்லை கெட்டவரா..?’ ‘இப்படித்தான்’ என்று யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாத ‘இவர்’ உண்மையில், வில்லனா, கதாநாயகனா..? பார்ப்போம்.
யார் இவர்? ‘உலக வங்கி’!
(வளரும்)
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
23 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago