மே 6: அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட் நினைவு தினம்
ஆங்கில இலக்கிய மேதை ஷேக்ஸ்பியர் மறைந்த 400-வது ஆண்டு இது. அதனையொட்டி உலகம் முழுக்க அவரைப் போற்றும் விதத்தில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அறிவியல் துறையில் ஒரு ஷேக்ஸ்பியர் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
அவர் வேறு யாருமல்ல. அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட்! அவர் மறைந்த 157-வது ஆண்டு இது!
அன்றைய ப்ருஷ்ய ராஜ்ஜியத்தில் (இன்று அது ஜெர்மனி மற்றும் போலாந்து உள்ளிட்ட நாடுகளின் ஒரு பகுதி) 1769-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி பிறந்த அவர், 1859-ம் ஆண்டு மே 6-ம் தேதி மறைந்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர் செய்த சாதனைகள்தான், இன்று நாம் இயற்கை, அறிவியல், பயணம் உள்ளிட்டவற்றை எப்படிப் பார்க்கிறோம் என்கிற புரிதலை உருவாக்கியவை.
‘அப்படி என்ன செய்துவிட்டார் அவர்?' என்ற கேள்விக்குப் பதிலாக 'அவர் என்ன செய்யவில்லை?' என்ற கேள்வி மிகவும் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், அவர் வாழ்ந்த காலத்தில் அவரின் கைபடாத துறைகளே இல்லை எனலாம். வானியல், புவியியல், சூழலியல், விலங்கியல், தாவரவியல், நீரியல், சுரங்க ஆய்வுகள் என அவர் ஆராயாத துறைகளே இல்லை. அவரின் ஆய்வுகள் சர்வதேச அளவில் புகழடையச் செய்தன.
அவர் செய்த ஆய்வுகளைப் பாராட்டி உலகில் பல விஷயங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டுள்ளது. மெக்சிகோவில் உள்ள சியர்ரா ஹும்போல்ட் மற்றும் வெனிசுவேலாவில் உள்ள பிகோ ஹும்போல்ட் ஆகிய பூங்காக்கள், அர்ஜென்டினாவில் உள்ள ஒரு நகரம், பிரேஸில் நாட்டில் உள்ள ஒரு நதி, கிரீன்லாந்து, சீனா, தென்னாப்பிரிக்கா, நியூஸிலாந்து மற்றும் அண்டார்டிகா ஆகிய பகுதிகளில் உள்ள மலைத் தொடர்கள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட தாவரங்கள், 100-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆகியவை அவரின் பெயர் தாங்கியுள்ளன.
இந்தக் காரணங்களால் ‘மாவீரன் நெப்போலியனுக்கு அடுத்து உலகில் மிகவும் பிரபலமான மனிதர்' என்று தான் வாழ்ந்த காலத்திலேயே புகழ்பெற்றவர் வான் ஹும்போல்ட்.
அவரின் நினைவு தினமான இன்று, அவரைப் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள
‘தி இன்வென்ஷன் ஆஃப் நேச்சர்' எனும் வாழ்க்கைச் சரிதப் புத்தகத்தை நாம் அறிந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். சமீபத்தில் வெளியான இந்தப் புத்தகத்தை எழுதியவர் ஆண்ட்ரியா வுல்ஃப். இதனை ஹாஷெட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இன்றைக்கு உள்ளதுபோல போக்குவரத்து வசதிகளோ, அறிவியல் வசதிகளோ, தொலைத்தொடர்பு சாதனங்களோ அன்றைக்கு இல்லாத நிலையில் கப்பல் மூலமாக லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் சென்று பல ஆய்வுகளை மேற்கொண்டு அவற்றை இதர நாடுகளில் உள்ள விஞ்ஞானிகளிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 28!
சுமார் 5 ஆண்டுகளாக மேற்கொண்ட பயணத்தின் பலனாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் அவர் பெற்ற அனுபவங்களை 'வாயேஜ் டு தி ஈக்விநாக்டிக்கல் ரீஜியன்ஸ் ஆஃப் தி நியு கான்டினென்ட்' எனும் தலைப்பில் 34 தொகுப்புகளாகவும், ‘பெர்சனல் நரேட்டிவ்' எனும் தலைப்பில் 7 தொகுதிகளாகவும் வெளியிட்டார்.
வான் ஹும்போல்ட் தன் அறிவியல் கட்டுரைகளுக்காகவும், கண்டுபிடிப்புகளுக்காகவும் எவ்வளவு தூரம் பாராட்டப்பட்டாரோ, அதே அளவுக்கு காலனியாதிக்கத்தின் கொடுமைகள், அடிமைத்தனம், ஒற்றைப் பணப் பயிர் விவசாயம் ஆகியவற்றை எதிர்த்ததற்காகவும் அவர் போற்றப்பட்டார். ‘காலம் ஆக, ஆக முதலீட்டை அதிகரிக்கும் பொருட்கள் விவசாயத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன' என்று உலகுக்குப் புரிய வைத்தார்.
‘இந்த உலகத்தில் ஒவ்வொரு உயிரினமும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கின்றன' என்று எழுதிய அவர் கொலம்பஸைப்போல, புதிய கண்டத்தையோ அல்லது நியூட்டனைப் போல புதிய அறிவியல் விதியையோ கண்டுபிடிக்கவில்லைதான். ஆனால் அவர்கள் செய்த சாதனைகளுக்குச் சமமாக, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் செய்த சாதனைகளைவிட ஒரு படி மேலே சென்று ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். அது வேறொன்றுமல்ல இந்த உலகத்தையும், இயற்கையையும் நாம் எப்படிப் பார்க்க வேண்டும் என்று நமக்குச் சொல்லிச் சென்ற பாடம்தான்!
‘மனிதனின் ஆன்மாவுக்குப் பழக்கமான ஒரு குரலுடன், இயற்கை ஒவ்வொருவரிடத்திலும் பேசுகிறது' என்று அவர் சொன்னது உண்மை என்பது நீங்கள் இயற்கையை உற்றுப் பார்க்கும்போது புரியும். அதன் முதல்படி, இந்தப் புத்தகத்தை வாசிப்பது!
அலெக்சாண்டர் வான் ஹும்போல்ட்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago