மாத்தி யோசி 3: கொஞ்சம் புரோ ஆக்டிவ் ஆகுங்களேன்!

By கா.கார்த்திகேயன்

வாழ்க்கையில் பெரும்பாலான விஷயங்களில் இது அல்லது அது என்று தேர்ந்தெடுக்கும் விருப்பம் (option) இருக்கிறது. காலையில் கையிலெடுக்கிற பற்பசையிலிருந்து இரவு சாப்பிடுகிற ஊட்டச்சத்து பானம் வரைக்கும் விருப்பங்கள் கூடவே பயணிக்கின்றன. ஒரு செயலின் விளைவு என்னவாக இருக்கும் என்று இளைஞர்களிடம் கேட்டால், வெற்றி அல்லது தோல்வி என்றுதான் பதில் வரும். அடுத்து, தோல்விக்குக் காரணம் என்னவென்று கேட்டால் அதற்கும் ஒரு பட்டியல் தயாராக இருக்கும். இதில் விசித்திரம் என்னவென்றால் அந்தப் பட்டியலில் அவர்கள் பெயரே இருக்காது.

தாங்களே முதல் காரணம் என்று உணர மறுப்பது எதைக் காட்டுகிறது? தங்களைப் பற்றிய சரியான புரிதலின்மையும், மனப்பாங்கில் நேர்மறை எண்ணமும் இல்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. சரி, அடைய நினைக்கும் வெற்றிக்குத் தடையாய் முதலில் குறுக்கே நிற்பது எது? காரணத்தைத் தள்ளிப்போடாமல் சட்டெனச் சொன்னால் சோம்பேறித்தனம்தான். நாளைக்குப் பார்க்கலாம், அடுத்த வாரம் பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டே, பல விருப்ப பிளான்கள் எல்லாம் பிள்ளையார்சுழி இட்ட தாள்களோடு நின்றுவிடுகின்றன.

இன்னொரு பக்கம் ரொம்ப ஸ்மார்ட்டாகச் செயல்படும் இளைஞர் வட்டம் உண்டு. ஒரு சில காரியங்களை முன்கூட்டியே யோசித்து இவற்றையெல்லாம் இப்பவே முடித்துவிட்டால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று செயல்படுவது ஒருவகை. எதிர்காலத் தேவைகளாக என்னவெல்லாம் இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப தங்கள் செயல்களை வடிவமைத்துச் செயல்படுவதே சார்புச் செயல் (Pro active). சார்புச் செயலில் ஈடுபடும் இளைஞர்களை எப்படி அடையாளம் காண்பது?
நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வல்லுநராக இருப்பார்கள். அதில், நேரத்தைச் சேமிக்கும் வழிகளை அறிந்து வைத்திருப்பதோடு, அந்த நேரத்தை விரயம் செய்யும் சாதனங்களைக் கவனமாகத் தவிர்ப்பார்கள். இவர்களிடம்தாம் ஹெட்போன், புளூடூத் பயன்பாடுகள் குறித்த கேள்விக்குத் தெளிவான பதில் கிடைக்கும்.

‘ஹலோ சார், எப்படி இருக்கீங்க?’ என்று புன்னகைத்தபடியே பொது இடத்தில் யாரேனும் உங்களைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்? சிரித்தபடியே பதில் சொல்ல முற்படுவீர்கள் அல்லவா? ஒரு வேளை கேள்வி கேட்டவர் முறைத்தால் அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? இப்படி ஒரு பிரச்சினையை நான் எதிர்கொண்டேன். அண்மையில் பெங்களூரு சென்றபோது ஒரு ஹோட்டலில் காபி பருகிக்கொண்டிருந்தேன். ‘எப்படி இருக்கீங்க சார்?’ என்று கேட்டபடியே என் எதிரில் ஒருவர் அமர்ந்தார். நம் ஊர்க்காரராக இருப்பார் போல என்று நினைத்து, ‘நல்லாருக்கேன்’ என்று சொல்லியபடியே யாராக இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

ஆனால், பதிலுக்கு முறைத்த முகத்தைப் பரிசாகத் தந்துவிட்டு தனக்குதானே பேச ஆரம்பித்துவிட்டார். அப்போதுதான், அவர் காதில் ப்ளூடூத் இருப்பதைக் கண்டேன். நான் கொஞ்சம் அவமானமாக உணர்ந்ததால், அங்கிருந்து சட்டெனக் கிளம்பினேன். இன்று பலருக்கும் காதுகள் என்பது ஹெட் போனுக்கும் ப்ளூடூத்துக்கும் மட்டுமே பயன்படுபவை என்றாகிவிட்டது. பரபரப்பான சாலையில்கூட அவற்றைக் கழற்றத் தேவையில்லை என்று கருதுகிறார்கள். விளைவு? கவனச் சிதறல் ஏற்பட்டு விபத்துகளும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகமாகின்றன என்கின்றன புள்ளிவிவரங்கள். இந்தத் தகவலையும்கூடப் புத்தியில் ஏற்றிச் சுதாரிப்போடு செயல்படுவார்கள் சார்புச் செயல் நபர்கள்.

சார்புச் செயல் நபர்கள் கவனமாக இருக்கும் விஷயங்களில் இன்னும் ஒன்றைச் சொல்ல முடியுமா என்றால் இஎம்ஐ (EMI) செலுத்துவதைச் சொல்லலாம். நம்மில் பெரும்பாலானோர் பெற்றோர் அரவணைப்பிலேயே பள்ளி, கல்லூரிகளைக் கடந்து வந்திருப்போம். பெற்றோர் தரும் பாக்கெட் மணியை வரப்பிரசாதமாய்க் கொண்டாடித் தீர்த்திருப்போம். இந்தச் சூழலில் இருந்து மாறி வேலைக்குச் சென்று சுயமாக சம்பதிக்கத் தொடங்குவோம். மாதம் 50 ஆயிரம் சம்பளம் என்றவுடன் கனவு பைக், காஸ்ட்லியான செல்போன் என்று எடுத்த எடுப்பிலேயே பலரும் அகலக் கால் வைக்கத் தொடங்குவார்கள். கேட்டால் இஎம்ஐ-யில் செலுத்திக்கொள்வோம் என்று அசால்டாகப் பதில் வரும். தேவையைத் தாண்டி ஆசைகளுக்காக இஎம்ஐ 1, இஎம்ஐ 2 என்று போய்கொண்டே இருந்தால், அது புலி வாலைப் பிடித்த கதையாகச் சிக்கலில் மாட்டிவிடும்.

ஆனால், சார்புச் செயல் நபர்கள் இஎம்ஐ விஷயத்தில் ரொம்பவே தெளிவாக இருப்பார்கள். புதிய கம்பெனி, புதிய வேலையில் சேர்ந்தவுடன் எதற்குக் கடன், அடுத்த 6 மாதத்தில் கம்பெனி மாறுகிற சூழல் வந்தால் இன்னொரு வேலைக்குச் சேரும் வரை பணம் தேவைப்படும்; வீடு அட்வான்ஸ், வாடகை, இந்தச் சூழலில் இஎம்ஐ வட்டத்தில் சிக்காமல் நிதி நிலைமைக்கு முக்கியத்துவம் தருவோம் என்று நிதி மேலாண்மையைத் தெளிவாக திட்டமிடுவார்கள்.

வெற்றிக்கரமான வாழ்க்கைக்குச் சார்புச் செயலோடு இருக்கும் சூத்திரம் முக்கியமானது. இத்தகைய நபர்கள் எல்லாக் காலத்திலும் வெற்றியைப் பெறுகிறார்கள். இதற்குக் காரணம், மற்றவர்கள் எல்லாம் தங்கள் தவறுகளில் இருந்து மட்டுமே பாடம் கற்பார்கள். சார்புச் செயலாளர்கள் மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்களைக் கற்று, அதன்படி செயல்படுகிறார்கள். ஆக, நாமும் சார்பில் செயலாளர்களாக செயல்படுவோம்!

கட்டுரையாளர்: மேலாண்மை பேராசிரியர்

தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

11 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

12 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்