தனக்கென ஒரு தனிப் பாணியை ஏற்படுத்திக் கொண்டு அதே பாதையில் இசையமைப்பவர்கள் ஒரு வகை. இயக்குநரின் இசையமைப்பாளராக இருப்பவர்கள் இன்னொரு வகை. வறண்ட சிறிய கிராமத்தில் செங்கல் சூளை வேலையை மட்டுமே நம்பி வாழும் மக்கள்.
அந்தக் கந்தகப் பூமியில் சில காலம் ஆசிரியராக வேலை செய்தால் அரசாங்க வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் வரும் இளைஞர். அங்கு டீக்கடை நடத்தும் துடுக்கான இளம் பெண் அந்த ஆசிரியர் மீது காதல் கொள்கிறார். “சர சர சாரக்காத்து வீசும்போது” எனப் பாடத் தொடங்கும் அந்தப் பெண், “ட்டீ போல நீ என்னை ஏன் ஆத்துற” என தன் கதாபாத்திரத்திலிருந்து நழுவாமல் குறும்பாகவும் தன் தொழிலை ஒட்டியும் காதலை வெளிப்படுத்துகிறார். பாடலைப் பாடிய சின்மயியின் குரலிலும், உச்சரிப்பிலும், தாள அமைப்பிலும் கிராமத்து வாசம் வீசுகிறது. அவர் குரலுக்கு இனிமை சேர்க்கும் கித்தாரில் மேற்கத்திய சாயல் படர்ந்தாலும் படத்துக்குப் பொருந்திப்போகிறது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் போலீஸ் அதிகாரியான கதாநாயகனிடம் பல கோடி மதிப்புள்ள போதை பொருள் சிக்குகிறது. அவருடைய மகன் எதிராளிகளிடம் சிக்குகிறான்.
கடத்தல், போலீஸின் அதிரடித் தேடுதல் வேட்டை, இரவு நேர பார்ட்டி கொண்டாட்டம், அதை ஒட்டிய சிக்கல்கள் என விறுவிறுப்பான நவீனமயமான திரைக்கதை. படம் முடியும்போது ஒரே ஒரு டைட்டில் பாடல். கமல்ஹாசனின் கரகரப்பு கலந்த கம்பீரக் குரலில் மெட்டல் இசை பாணியில் துப்பாக்கித் தோட்டா போல “நீயே உனக்கு ராஜா” பாடல் பாய்கிறது.
காதுகள் வழியாக மனதில் விறுவிறுவென விஷம்போல் பாயும் ஆக்ரோஷமானப் பாடல் இது.
முற்றிலும் வித்தியாசமான கதைக் கோணங்களைக் கொண்ட இந்த இரண்டு படங்களுக்குமே இசையமைத்தவர் ஜிப்ரான். திரைக்கதையை ஒட்டியே திரையிசைப் பாடல்களை உருவாக்குவது, அவருடைய தனிச்சிறப்பு. அவர் வாழ்க்கையும் அவ்வாறே இசையோடே பல ஏற்ற இறக்கங்களோடு பயணித்திருக்கிறது.
இசையைத் தேடி
கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஜிப்ரான் 10-ம் வகுப்பு முடித்த காலகட்டத்தில் அப்பா வியாபாரத்தில் நஷ்டம் அடைய நெருக்கடியால் சென்னைக்கு எல்லோரும் இடம்பெயர்ந்தார்கள். இதனால் ஜிப்ரானின் படிப்பு தடைபட்டுப்போனது. குடும்பத்தைக் காப்பாற்ற வெவ்வேறு வேலைகளுக்குப் போக வேண்டிய சூழ்நிலை அந்த வயதிலேயே ஏற்பட்டது. ஏற்கெனவே பள்ளி நாட்களில் இசைப் போட்டிகளில் பங்கேற்றுச் சின்னச் சின்னப் பரிசுகள் வாங்கியதால் மனதோரம், இசை ஒலித்துக்கொண்டே இருந்தது.
உலக இசை ஜாம்பவான் யானி, தாஜ்மஹாலுக்கு முன்னால் நடத்திய பிரம்மாண்டமான இசைக் கச்சேரியை டிவியில் பார்த்ததும் உள்ளுக்குள் இருந்த ஆசை முட்டிமோதி வெளியே வந்தது. இசைக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் வேலை பளுவால் இசை கல்லூரிக்கும் முழுக்குப்போட வேண்டிவந்தது. முழுநேரம் இசை படிக்க முடியாவிட்டாலும், சிறந்த பியானோ கலைஞரான பால் அகஸ்டைனிடம் பியானோ வகுப்பில் சேர்ந்தார்.
மளமளவென இசை கற்று பியானோவில் 8-ம் கிரேட் முடித்து ஒரு அனிமேஷன் ஸ்டூடியோவில் இசையமைக்கும் வேலையில் சேர்ந்தார். இரண்டாண்டு வேலை அனுபவம் 2000-ல் சொந்த ஸ்டூடியோவை உருவாக்கும் அனுபவத்தையும் நம்பிக்கையும் தந்தது. அடுத்த ஆறு ஆண்டுகளில் 700-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு ஜிங்கில்ஸ் கம்போஸ் செய்தார். 2002-ல் ‘ரிவெர்பரேஷன்ஸ் 1’, 2005-ல் அதே ஆல்பத்தின் அடுத்த வெர்ஷனையும் வெளியிட்டார்.
மீண்டு வந்து மீட்டீனார்
இதையும் தாண்டி இசையை ஆழமாகக் கற்றுக்கொள்ளும் வேட்கை மனதில் படர அதுவரை உழைத்துச் சேர்த்த பணத்தைக் கொண்டு, சிங்கப்பூரில் உள்ள லசால் கல்லூரியில் மேற்கத்திய சாஸ்திரிய இசையை ஆழ்ந்து படித்தார். அங்கேயே ‘சிங்கப்பூர் வுட்ஸ் அண்ட் பெர்குஷன் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆர்கஸ்ட்ரா’ வில் இசைக் கலைஞராக இணைந்தார். இந்த வேலை ஆத்மதிருப்தி அளித்தாலும் கிடைத்த பணம் கைக்கும் வாய்க்குமே போதாததால் மீண்டும் சென்னை வந்தார். ஆனால் விளம்பரத் துறையிலிருந்து விலகிப் போனதால் மீண்டும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன.
மனமுடைந்த நிலையில் பழைய நண்பர்களான இயக்குநர் சற்குணம், நடிகர் விமல், தயாரிப்பாளர் முருகானந்தம் ஆகியோரைச் சந்தித்தார். ‘வாகை சூட வா’ படம் கிடைத்தது.
அப்படத்தில், அழுத்தமான தமிழ் குரலில் ‘செங்கல் சூளைக்காரா’, அதிகாரத் தொனியில் பெண்ணின் காதல் கொப்பளிக்கும் ‘போறானே போறானே’ பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. அதேநேரத்தில் சிங்கப்பூரில் சர்வதேசக் கலைஞர்களுடன் ஜிப்ரான் பணியாற்றிய அனுபவம் இப்படத்தில் சிறுவர்கள் கோரஸாகப் பாடும் ‘ஆனா ஆவன்னா’ பாடலில் வெளிப்பட்டது.
சிம்ஃபனி ஆர்கஸ்ட்ரா இசைக்கலைஞர்கள் 80 பேரைக் கொண்டு உருவாக்கப்பட்ட பாடல் இது. 2013-ல் ‘வத்திக்குச்சி’, ‘குட்டிப் புலி’, ‘நையாண்டி’ என அடுத்தடுத்து வெவ்வேறு விதமான படங்களுக்கு இசையமைத்தார்.
அடுத்து 2014-ல் ‘திருமணம் என்னும் நிக்காஹ்’வில் முகாரியையும் அமிர்கல்யாணி ராகங்களையும் அற்புதக் கலவையாகக் கலந்து ‘கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்’ எனத் தந்தார். இந்த காலகட்டத்திலும் பக்தி ரசம் சொட்டும் ஒரு அழகிய காதல் பாடலை உருவாக்கிய துணிச்சலுக்கே ஜிப்ரானைப் பாராட்டலாம். அதே படத்தில் ‘சில்லென்ற சில்லென்ற காற்றிலே’ எனச் சூஃபி இசையை மழையாகப் பொழிந்தார். ‘அமரகாவியம்’ படம் வெற்றிபெறாததால் அதன் பாடல்கள் கவனிக்கப்படாமல் போயின. அதில் இடம்பெற்ற ‘தேவ தேவதை’ பாடலில் வரும் வயலின் ஜாலத்தை இசைப்பிரியர்கள் கேட்கத் தவறக் கூடாது.
2015-ல் ‘உத்தம வில்லன்’-ல் ஜிப்ரானின் இசைக்கரம் பிடித்தார் கமல்ஹாசன். ‘காதலாம் கடவுள் முன்’, ‘இரணியன் நாடகம்’ ஆகிய இரண்டு பாடல்களும் பல சர்வதேச விருதுகளை வென்றன. பின்னணி இசைக்காகவும் விருதுகள் வந்து குவிந்தன. அடுத்து, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’, ‘விஸ்வரூபம்-2’ எனப் புதிய கதைக்களங்களோடு பாய்கிறது ஜிப்ரானின் இசை நதி. அந்த நதி பிரவாகம் கொள்ளக் காத்திருப்போம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago