‘பொதுவா ஐந்து நிமிடம் பேசினால், பிரச்சினை தீர்ந்துவிடும்’ என்று சொல்வார்கள். ஆனால், பலருக்கும் பேச்சில்தான் பிரச்சினையே வருகிறது. அதைப் பற்றி பேசலாமா?
கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அலுவலகத்தில் அடியெடுத்து வைக்கிற இளைஞர்கள் கொஞ்சம் கூடுதலாகவே நினைவில் வைக்க வேண்டிய விஷயம் இது. ஏனெனில், முழுமையாக மாணவ மனநிலையில் இருந்து மாறாத காலகட்டம் என்பதால் கவனம் தேவை.
உங்களுடைய கல்லூரி காலம் என்பது வேறு. அங்கே பேராசிரியர் உள்பட எல்லோரையும் கலாய்த்துத் தள்ளியிருப்பீர்கள். உடல்மொழியில் பிறரை நகல் எடுத்து நக்கல் செய்திருப்பீர்கள், சம்பந்தப்பட்டவர்கள் இதையெல்லாம் கண்டும் காணாதது போலக் கடந்து போயிருப்பார்கள். ஆனால், அலுவலகம் அப்படி அல்ல. அங்கு நிலவும் உள் அரசியலும் அப்படி அல்ல.
கல்லூரியிலிருந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் போகும்போது எப்போதும் ஜாலியாகப் பேசலாம், எப்படியும் பேசலாம் என்கிற எண்ணம் இருந்தால், அதைத் தயவுசெய்து மறந்துவிடுங்கள். நான் வெளிப்படையனானவன், மனதில் பட்டதைப் பேசிவிடுவேன் என்று தனக்குத் தானே சான்றிதழ் கொடுத்துக்கொண்டு அலுவலகத்தில் எல்லோரிடமும் பேசும் ஓவர் பேச்சுகள், எளிதில் வம்பை விலை கொடுத்து வாங்கும் ரகமாகிவிடும். சக ஊழியர்கள், மேலதிகாரிகள் ஆகியோரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற புரிதல் அவசியம். அதை விட்டுட்டு நம் துறை, நம் சீனியர் என்று யதார்த்தமாகப் பேசுவதாக உளறிக்கொட்டினால், அது எங்கே கொண்டுபோய்விடும் என்று யாராலும் ஊகிக்க முடியாது.
இப்படித்தான் மிஸ்டர் யதார்த்தம், வேலைக்குச் சேர்ந்த இரண்டாம் நாளிலே வீட்டுக்குக் கிளம்பும்போது அவருடைய சீனியர், “நான் வீட்டில் விடுகிறேன் வாங்க” என்று அழைத்துச்சென்று அப்படியே வாயைக் கிளறினார். “எப்படி இருக்கு ஆபீஸ்?” என்று கேட்டதற்கு, “எல்லாம் ஓ.கே.தான் சார். நம்ம பாஸ் எப்படி சிடுமூஞ்சியோ?” என்று எதிர்க்கேள்வி கேட்டார் மிஸ்டர் யதார்த்தம். அதற்கு அந்த சீனியர், “போகப் போக உங்களுக்கே தெரியும்” என்று சொல்லிவிட்டு அத்தோடு பேச்சைக் கத்தரித்துக் கொண்டார்.
மறுநாள் மிஸ்டர் யதார்த்தம் அலுவலகத்தில் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தபோது, பாஸ் அழைத்து டோஸ் விட்ட பிறகுதான் மிஸ்டர் யதார்த்தத்துக்கு யாரும் எதுவும் சொல்லாமலேயே விஷயம் புரிந்தது.
படிக்கிற காலத்தில், பேசுகிற பேச்சு நேரில் தாண்டி செல்போனில் மணிக்கணக்காய் நீள்வது இயல்பானது என்று கருதும் காலமாக மாறிவிட்டது. அதுவும் போர்வையை மூடிக்கொண்டு பேசுவது, தனியாக அடிக்குரலில் கிசுகிசுவென பேசுவது, குறிப்பாகப் பேசும்போது பெற்றோரைத் தவிர்ப்பது எல்லாம் தங்களுடைய பிறப்புரிமை என்று கொடிபிடிப்பது போன்றவை இன்று எல்லா இல்லங்களும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் யாரிடம் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள் என்று சந்தேக வட்டத்தில் தவிப்பார்கள்.
இதைப் புரிந்துகொண்டு, ‘நான் எனது நண்பன்/நண்பியோடுதான் பேசுகிறேன்; அவர்கள் பெயர் இதுதான்’ என்று சொல்லிவிட்டு, எல்லோரும் வீட்டில் அமர்ந்திருக்கும் ஹாலில் பேசினால் அங்கே சந்தேகம் ஏன் வரப்போகிறது?
ஆனால், இதே பழக்கம் அலுவலகத்திலும் தொடரும்போது வரும் விளைவுகளோ வேதனை தரும். இந்த ஓவர் பேச்சு சிக்கலில் இளம்பெண்களும் பாதிக்கப்படுகிறார்கள். ‘ஏய் எனக்கு பெஸ்டி இருக்கான்பா, பிரேக் அப் ஆகிருச்சுப்பா’ என்று மூன்று வருட கதைகளை வேலைக்குச் சேர்ந்த மூன்றாம் நாளிலேயே சக பணியாளர்களிடம் உளறிக் கொட்டினால் அதுவே அலுவலகத்தில் விவாதப் பொருளாக மாறி மேடையேறிவிடும் அபாயம் உண்டு. இந்த மாதிரியான சிக்கலில் மாட்டிக்கொள்ளக் கூடாது என்றால், அலுவலகத்தில் தேவையானதை மட்டும் பேச வேண்டும்.
நட்பு என்பது படிக்கிற, வசிக்கிற இடத்தில் தானாக வளர்வது. ஆனால், அலுவலகத்தில் அறிமுகமாகிற மனிதர்கள் எல்லாருமே நண்பர்களாக முடியாது. நல்ல நட்புக்கு நம்பகத்தன்மை வேண்டுமே தவிர புன்னகையும் போன் நம்பரும் அல்ல.
அண்மையில் சமூக வளைத்தளத்தில் ஒரு காணொளி வலம்வந்ததை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும். பார்வைக் குறைபாடு கொண்ட 17 வயதுப் பெண் ஒருவர் கூடைப்பந்து விளையாடுகிறார். வலையில் பந்தைத் தூக்கி சரியாக எறிவதற்கு அவருடைய பயிற்சியாளர் ஒரு தடியால் அந்தக் கூடைப்பந்து வலை அருகே சப்தம் கொடுத்து உதவுகிறார். கடைசி 24 மணித்துளிகளில் அந்த இளம் பெண் சரியாகப் பந்தை வலையில் எறிகிறார். அரங்கமே ஆர்ப்பரிக்கிறது. பார்வையில் சவால் நிறைந்த பெண் தனக்கு முன் நிற்கும் இடையூறுகளைத் தாண்டி வெற்றியை அடைகிறார். இவரைப்போல நம்முடைய கவனச் சிதறல்களைத் தவிர்த்து எண்ணமும் செயலும் ஒருசேர ஒரே இலக்கில் வைத்துப் பாருங்கள். உங்களுடைய வளர்ச்சிக்கான எண்ணங்கள் எளிதாக உங்கள் கைவசம் வந்து சேரும்.
நண்பர்களே, அலுவலகச் சூழலில் பேசுவது ஒன்றும் தண்டனைக்குரிய குற்றம் அல்ல. ஆனால், அது பேசுபொருளைப் பொறுத்தே இருக்கிறது. அதைத் தீர்மானிப்பதும் நம் கையில்தான் இருக்கிறது. ஏனெனில் நாம் யார் என்கிற அடையாளத்தை நம் அலுவலகம் தீர்மானிப்பதில், முதலில் முன்னிற்பதும் நம் பேச்சுதான்.
இப்போது தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
(இன்னும் யோசிப்போம்)
கட்டுரையாளர் : மேலாண்மை பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com
‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago