மாத்தி யோசி - 1 காக்கா பிடிப்பேன்... காரியத்தை முடிப்பேன்!

By கா.கார்த்திகேயன்

இந்த உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. நம்மில் பலர் அந்த வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறோம். இதில் சிலரோட நினைப்பு மட்டும் என்னவென்றால், ‘படித்து முடிக்கிறோம். ஒரு நிறுவனத்தில் வேலைக்குப் போறோம். அடுத்த ஆண்டே பெரிய மேலாளராகி வசதியா வாழ்கிறோம்’ என்பதுதான். இந்த எதிர்பார்ப்பு எப்படி இருக்கிறது என்றால், திரைப்படத்தில் கதாநாயகன் ஒரே பாடலில் பெரிய ஆளாக மாறும் மாயாஜாலம் போல, தங்கள் வாழ்க்கையிலும் நடந்து விடாதா என்பதைப் போலத்தான் இருக்கிறது. இதற்கு அவர்கள் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உத்திக்கு ‘கடின வேலை (Hard work), ஸ்மார்ட் வேலை (Smart work)’ என்று தங்கள் அகராதியில் பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

கடின வேலை, ஸ்மார்ட் வேலை

ஒரு பக்கம் கடின வேலை என்கிற பெயரில் கொடுத்த வேலையை மட்டும் செய்வது. முக்கியமாக அதை அலுவலக நேரத்தில் மட்டும் செய்வது. இன்றைக்கு அரை மணிநேரம் கூடுதலாக இருந்து வேலையை முடிக்கச் சொன்னால், ‘காலையில் இருந்து பார்த்த வேலைக்கே மூளை சூடாகிவிட்டது. இதில் கூடுதல் நேரத்துக்கு வாய்ப்பே இல்லை’ என்று டாட்டா காட்டவும் தயங்கமாட்டார்கள்.

இன்னொரு பக்கம் நிறுவனத்தில் மேலாளரோ உயரதிகாரிகளோ பார்க்கும்போது வேலை செய்வது, பார்க்கும்படி வேலை செய்வது, மற்றவர்கள் வேலையையும் தானே இழுத்துப்போட்டுச் செய்வதுபோல் நடிப்பது என அவர்களுடைய மனத்தில் இடம் பிடிக்க எல்லாமும் செய்யவேண்டியது. இதற்குப் பெயர்தான் ஸ்மார்ட் வேலையாம்.

‘ஐயா சாமி, இதற்குப் பெயர்தானே காக்கா பிடிப்பது’ என்று எதிர்க் கேள்வி கேட்டால், அதற்குப் பதிலாக, ‘பிழைக்கத் தெரியாத ஆளா இருக்கீங்களே. வேலை செய்வது முக்கியம் இல்லை. வேலை செய்வதுபோல நடிப்பதுதான் முக்கியம். தவிர ஷார்ட் கட் (short cut) என்கிற விஷயம் எதில்தான் இல்லை. என்னுடைய ஸ்மார்ட்டான இந்த வேலை அதிகாரிகளைத் திரும்பி பார்க்க வைக்கிறது. அதில் எனக்கு வளர்ச்சி இருக்கிறது என்றால், என்ன தவறு? நான் என்ன சட்டத்துக்குப் புறம்பாக வேலை செய்கிறேனா அல்லது லஞ்சம்தான் வாங்குகிறேனா’ என்று கொள்கை விளக்கம் சரளமாக வரும்

ஸ்மார்ட் இளைஞர்களே கவனியுங்கள்

உண்மையில் ஒரு நிறுவனத்துக்கு லஞ்சம் வாங்குகிறவர்களால் வருகிற பாதிப்பைவிட இம்மாதிரி மனிதர்களால் வரும் பாதிப்பே அதிகம். தாங்கள் விரும்பும் பதவிக்காக, செல்வாக்கிற்காகப் பிறரின் அறிவை, திறமையைத் திரையிட்டு மறைக்கவும் ஏன் அவர்களைப் பலியிடவும் தயாராக இருக்கும் இவர்கள்தான் மிகவும் ஆபத்தானவர்கள்.

ஆனால், இதில் மொத்த பழியையும் இதுபோன்றவர்கள் மீது ஒரு நிறுவனம் போட்டுவிட்டு ஒதுங்கிக்கொள்ளவும் முடியாது. இதில் பெரும்பாலான தவறு, தகுதி குறைவான தலைமைப் பண்பு கொண்ட அதிகாரிகளுடையதுதான். ‘உண்மையாக வேலை செய்பவர்கள் யார், வளர்ச்சிக்குப் பாதை அமைப்பவர்கள் யார்’ என்று அடையாளம் காணத் தெரியாவிட்டால் பிறகு தலைமை என்ன, பண்பென்ன என்கிற கேள்வியே பணியாளர்களிடம் எழும்.

இதில் இந்தக் காலத்து ஸ்மார்ட்டான இளைஞர்கள் தெளிவாக்கிக் கொள்ளவேண்டிய விஷயம் ஒன்றுதான். போலித்தனமான ஸ்மார்ட் வேலையைக் கொண்டாடும் நிறுவனங்கள் வெகு விரைவிலேயே இறங்கு முகத்தைச் சந்திக்க நேரிடும். அதே சமயம் ஒரு நிறுவனத்தின் போக்கு உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அதைச் சரிசெய்ய நீங்கள் முயற்சி செய்யலாம். பலன் இல்லை என்றால் எந்த நிறுவனம் உங்களை அங்கீகரிக்கிறதோ அங்கே உங்களை இணைத்துக்கொள்ளலாம். இதை விட்டுவிட்டு பிடிக்காத நிர்வாகத்திடம் சம்பளமும் வாங்கிக்கொண்டு குறையும் கூறிக்கொண்டிருந்தால் திறமைசாலிகளான நீங்களே உங்கள் வளர்ச்சியை கெடுத்துக்கொள்வதற்குக் காரணமாகிவிடுவீர்கள்.

கைகோருங்கள்

யதார்த்த சூழல் என்னவென்றால், திறமையைக் கொண்டாடும் நிறுவனங்கள் எல்லாக் காலங்களிலும் உண்டு. இன்று ஆட்டோ பைலட் கார் தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க், தன்னுடைய அபரிமிதமான வளர்ச்சிக்குக் காரணம் என்று குறிப்பிட்டது தமிழகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரைத்தான். அவர் பெயர், அசோக் எல்லுசாமி. ஒரே இரவில் இந்த அங்கீகாரத்தை அவர் அடையவில்லை. அவருக்குத் துணை நின்றது ஏழு வருட துறை சார்ந்த அறிவு, உண்மையான அர்ப்பணிப்பு, பணி சார்ந்த தொடர் கற்றல், செயலாக்கம் போன்றவைதானே தவிர காக்கவோ ஜால்ராவோ இல்லை.

இளைஞர்கள் குறிப்பாக மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒன்றுதான். திறமைசாலிகள் நல்ல நிறுவனத்தைத் தேடிக்கொண்டே இருப்பது போல ஒவ்வொரு நல்ல நிறுவனமும் திறமைசாலிகளோடு கைகோத்துக் கொள்ளத் தயாராகவே இருக்கிறது. சரியான தலைமைப் பண்பு கொண்ட நிறுவனங்களின் அடையாளம் எப்படி இருக்கும்? அவற்றின் கவனம் ஒருபோதும் லாப - நஷ்ட கணக்கோடு மட்டும் நின்று விடுவதில்லை. தொழில்நுட்ப வசதிகளைவிட மனித வளம் அவசியமானது என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும். நிறுவனத்தின் நீண்ட கால வளர்சிக்கு வித்திடும் பணியாளர்களை லாபமாகப் பார்க்கும் மனப்பாங்கை கொண்டிருக்கும்.

இத்தகைய நிறுவனங்களோடு இளைஞர்களாகிய நீங்கள் கைகோத்து உண்மையான உழைப்பு, சமயோசித புத்தி, நேர்மறை அணுகுமுறையோடு பங்களிப்பை வழங்கிப் பாருங்கள். மாற்றமும் நிச்சயம், வளர்ச்சியும் உறுதி.

கட்டுரையாளர்: மேலாண்மை துறை பேராசிரியர்
தொடர்புக்கு: karthikk_77@yahoo.com

‘இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க': https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE