பொருள்தனைப் போற்று! 15- வழிகாட்டும் வங்கி!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘உங்களுக்கு நான் ஆயிரம் ரூபா தரணும் இல்லை? மறந்துட்டேன். இப்போ கையில இல்லை. நாளைக்குக் கொடுத்துடறேன்'.

‘பரவாயில்லை சார். என் கைக்கு வந்தா செலவுதான் ஆகும். உங்ககிட்ட இருந்தா ரிசர்வ் பேங்க்ல இருக்கற மாதிரி சார்'.

இந்தியாவில் மிக அதிகம் ‘பயன்படுத்தப்படுகிற' வங்கி என்றால் அது

‘ரிசர்வ் பேங்க்'தான்.

‘எத்தனையோ வங்கிகள், அரசுடமை ஆக்கப்பட்ட வங்கிகள் இருக்கு.

அதை எல்லாம் விட்டுட்டு, அது என்ன 'ரிசர்வ் பேங்க்'கை மட்டும் சொல்றீங்க?'

‘என்ன சார்? தெரியாத மாதிரி கேட்கறீங்க? ரிசர்வ் வங்கிதானே ‘நோட்டு' அடிக்குது? அதனால பணம் இல்லைங்குற பிரச்சினையே வராதுல்ல?'

ஆம். நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்துக்கு விடுவது, ரிசர்வ் வங்கியின் பணிகளில் ஒன்று.

கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் வங்கிகளின் சேவையும் அதற்கேற்ப அவற்றின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்கின்றன. ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள், அட்டவணைப்படுத்தப்பட்ட (ஷெட்யூல்ட்) வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் (கோ-ஆபரேடிவ் பேங்க்), த‌னியார் வங்கிகள் மற்றும் அயல் நாட்டு வங்கிகள்... அப்ப‌ப்பா! எத்தனை வங்கிகள்!

பொதுவாக எல்லாருமே, இந்தியப் பொருளாதாரத்தை ‘வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம்' என்று குறிப்பிடுகிறார்களே, எதை வைத்துச் சொல்கிறார்கள்? என்ன அளவுகோல்?

‘தனிநபர் வருமானம்', ‘மொத்த உள்நாட்டு உற்பத்தி' என்று புரியாத வார்த்தைகள் எல்லாம் இருக்கட்டும். எப்படியும் இவை குறித்துப் பார்க்கத்தான் போகிறோம்.

இவற்றையெல்லாம் விட, பளிச்சென்று நம் கண் எதிரில் தெரிகிற, நம்மால் உணர முடிகிற ஒரு விஷயம், வங்கிச் செயல்பாடுகளின் விரிவாக்கம்.

அரசின் வங்கி

எந்த நாட்டில் வங்கிகள் மேலும் மேலும் கிளைகள் விட்டுப் பரவுகின்றனவோ, எந்த நாட்டை நோக்கி அயல் நாட்டு வங்கிகள் படை எடுக்கின்றனவோ, அந்த நாட்டுப் பொருளாதாரம் வளர்ந்துவருவதாகச் சொல்லலாம்.

வங்கிகளின் வெவ்வேறு பணிகள், அதனால் நமக்குக் கிட்டும் பயன்கள் ஆகியவை விவரமாக அறிந்துகொள்ள வேண்டிய, ‘மேக்ரோ' பொருளாதாரத்தின் முக்கியப் பகுதி.

வங்கிகளைப் பற்றி, எங்கிருந்து தொடங்கினால் சரியாக இருக்கும்? ஆமாம். ‘ரிசர்வ் வங்கி'தான் தொடக்கப் புள்ளி.

ஒவ்வொரு நாட்டுக்கும் மத்திய வங்கி என்பதாக ஒன்று இருக்கும். சில நாடுகளில் இதனை ‘ஃபெடரல் வங்கி' என்றும் சொல்வது உண்டு. நம் நாட்டின் மத்திய வங்கி, ‘இந்திய ரிசர்வ் வங்கி'.

அரசின் வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்ள, நாட்டின் நிதி நிலையைக் கண்காணிக்க, நிதிக் கொள்கைகளை வடிவமைக்க, பொருளாதாரம் தொடர்பான ஆலோசனைகளை வழங்க ஓர் அமைப்பு, ஒரு வங்கி தேவை. இல்லையா? அதாவது, அரசின் வங்கி. நன்றாகக் கவனியுங்கள். அரசு வங்கி அல்ல. அரசின் வங்கி. அதுதான் ரிசர்வ் வங்கி.

நாட்டுக்கு நாடு பெயர் மாறலாம். ஆனால், பணிகள் பொதுவானவை.

நாட்டின் ஒட்டுமொத்த நிதிப் புழக்கத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அவ்வப்போது, தேவையான விதிமுறைகள், வழிமுறைகளை அமல்படுத்தும் அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த முழு அதிகாரம் இருக்க வேண்டும். முக்கியமாக, நாட்டின் ‘கரன்சி' அதாவது பணத்தை அச்சிட்டு வெளியிடும் அதிகாரம் இருக்க வேண்டும்.

‘பணிகள், கடமைகள் என்னன்னு கேட்டா, என்னென்ன அதிகாரங்கள் இருக்குன்னு பட்டியல் இடறீங்களே?'

அப்படித்தான். காரணம், ரிசர்வ் வங்கிக்கு என்று என்னென்ன சிறப்பு அதிகாரங்கள் இருக்கின்றனவோ அவையேதான் இதன் கடமைகள் மற்றும் பணிகளும் ஆகும்.

ரிசர்வ் வங்கியின் அதிகாரங்களும் அதன் பணிகளும் பிரிக்க முடியாதவை. ஒன்றிலிருந்து எழுகிறது மற்றொன்று. என்ன பொருள்?

தன்னிடம் உள்ள சிறப்பு அதிகாரங்களை முறையாக, முழுமையாகப் பயன்படுத்து வதில்தான் ரிசர்வ் வங்கியின் செயல்பாடு, வெற்றி அடங்கியுள்ளது.

ரிசர்வ் வங்கி வரலாறு

நமது ரிசர்வ் வங்கியின் வரலாறு, நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல் ‘இந்திய ரூபாய் - பிரச்சினைகள், தீர்வுகள்'. இப்புத்தகம், அரிய பல ஆலோசனைகளை முன் வைத்தது.

இப்புத்தகத்தில் இடம்பெற்ற பரிந்துரைகளை, இந்திய கரன்சி மற்றும் நிதிக்கான ராயல் குழுவுக்கு 1925-ல் டாக்டர் அம்பேத்கர் சமர்ப்பித்தார். இதனை ஆராய்ந்த குழு அத்தனை பரிந்துரைகளையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது. அதன் அடிப்படையில் அமைந்ததுதான் ‘ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934'.

இதனைத் தொடர்ந்து, 1935 ஏப்ரல் 1 அன்று ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது.

சுதந்திரத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1949-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது.

நமது ரிசர்வ் வங்கி, இந்தியாவுக்கு மட்டுமல்ல. மேலும் இரண்டு நாடுகளுக்கும் கூட மத்திய வங்கியாகச் சில காலம் பணி புரிந்திருக்கிறது!

1937-ல் பர்மா, தனி நாடு ஆன போதிலும், 1947 ஏப்ரல் வரை, நம்முடைய ரிசர்வ் வங்கிதான் அவர்களுக்கும் மத்திய வங்கி. (இடையில் 1942 முதல் 1945 வரை மூன்று ஆண்டுகள் நீங்கலாக. அச்சமயம் பர்மா, ஜப்பானின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது).

1947 ஆகஸ்ட் 14-ல் உதயமான பாகிஸ்தானுக்கு 1948 ஜூன் மாதம் ‘பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி' உருவான வரை, இந்திய ரிசர்வ் வங்கிதான் மத்திய வங்கியாக விளங்கியது.

சரி. ரிசர்வ் வங்கியை நிர்வகிப்பவர் யார்? ஒரு ஆளுநர், 4 துணை ஆளுந‌ர்கள், நிதி அமைச்சகப் பிரதிநிதிகள் இருவர், அரசால் நியமிக்கப்படும் இயக்குந‌ர்கள் 10 பேர் மற்றும் நான்கு மண்டலங்களின் மூலம் 4 பேர்.

ஆக மொத்தம் 21 இயக்குந‌ர்கள் கொண்ட மத்திய வாரியம்தான் ரிசர்வ் வங்கியை இயக்குகிறது. இயக்குந‌ர்களின் பதவிக் காலம் நான்கு ஆண்டுகள்.

ரிசர்வ் வங்கி எப்படிப் பணப் பற்றாக்குறை, பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது?

‘பணம்' காய்க்கும் வங்கியா?

‘இது என்ன பிரமாதம்? பணப் பற்றாக்குறை ஏற்பட்டால், எவ்வளவு தேவையோ அந்த அளவுக்குப் புதிய நோட்டுகளை அச்சடித்துக் கொள்ள வேண்டியதுதானே?'

அப்படிச் செய்து விட முடியாது. அது, விபரீத விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

இப்படிச் செய்யப் போய்த்தான் முதல் உலகப் போர் முடிவுற்ற சில ஆண்டுகளில், வெளியில் வர முடியாமல் வசமாக மாட்டிக்கொண்டது ஜெர்மனி.

உக்கிரமான பண வீக்கம், என்ன செய்து விடும்? சாமான்யர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவார்கள்?

‘பணம்தான் வேண்டிய அளவுக்குக் கொள்ளை கொள்ளையாகக் கொட்டிக் கிடக்கிறதே. அப்புறம் என்ன? மகிழ்ச்சியாக இருக்க வேண்டியதுதானே?' கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நிஜ‌த்தில்?

ஜெர்மனி நமக்குத் தரும் சுவாரஸ்யமான சோகமான செய்திகளை அறிந்துகொள்ள, காலச் சக்கரத்தைப் பின்னுக்குச் சுழற்றுவோம்.

1923!

(வளரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்