கலை மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்தும் சிறந்த ஆவணப்படம், சிறந்த இசையமைப்பு என்னும் இரண்டு பிரிவுகளில் தேசிய விருதை வென்றிருக்கிறது ஏ ஃபார் ஆஃப்டர்நூன் (A Far Afternoon). `வெகு நாட்களுக்கு முன் ஒரு மதிய வேளையில்..’ என்னும் தலைப்பில் விரிகிறது 90 வயதான ஓர் ஓவியரின் தூரிகைப் பயணம். பிரமல் ஆர்ட் ஃபவுண்டேஷனுக்காக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன்.
விளம்பரப் படங்கள், கே.பாலசந்தரின் சஹானா போன்ற தொலைக்காட்சி தொடரில் நடித்திருக்கும் ஸ்ருதி, நடிகை - இயக்குநர் ரேவதி, ‘யாவரும் நலம்’ படத்தின் இயக்குநர் விக்ரம் கே. குமார், விஷ்ணுவர்தன் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் இருந்திருக்கிறார்.
இந்தியாவின் ஓவியப் பெருமை கிருஷன் கன்னா. இவர் ஒரு நீண்ட ஓவிய முயற்சியில் இருக்கிறார். அதை எப்போது முடிப்பார் என்றும் தெரியவில்லை. அதைப் பதிவு செய்ய விருப்பமா என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். பாகிஸ்தானில் பிறந்து இங்கிலாந்தில் படித்து முடித்து, மும்பையில் ஓவியராகப் பிரபலமானவர் கிருஷன் கன்னா. இவரைப் பற்றிய ஆவணப்படத்தை எடுப்பதற்கு பிரமல் ஆர்ட் ஃபவுண்டேஷன் முன்வரவே உற்சாகமாகப் படப்பிடிப்பில் இறங்கினோம் என்கிறார் இயக்குநர் ஸ்ருதி.
ஏறக்குறைய 73 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தில், 5 கான்வாஸ்களில் (ஏறக்குறைய 20 அடி) பஞ்சாபிய சமூகத்தின் ஒரு திருமண ஊர்வலத்தை கிருஷன் கன்னா ஓவியமாக வரைகிறார், அவரைப் படம்பிடிக்கும் குழுவினர் சிலருடன் பேசுகிறார். மும்பையில் சில முக்கியமான ஓவியக் கண்காட்சிகளில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், பழைய சம்பவங்கள் என எல்லாவற்றையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். அவருடைய ஓவிய நண்பர் ஒருவரைச் சந்திக்கிறார். அந்தச் சந்திப்பில் சுவையான பல செய்திகள் கிடைக்கின்றன. கலவையான இந்தப் படம்பிடிக்கும் யுக்தி, ஆவணப்படத்துக்கே உரிய அலுப்பை விரட்டி அடிக்கிறது.
“ஓவியம் என்பதைத் தாண்டி மேற்கத்திய இசை, கர்னாடக இசை, ஆன்மிகம், கலாசாரம், பண்பாடு எனப் பல விஷயங்களில் இருந்த ஈடுபாட்டால், கிருஷன் கன்னாவால் பேச முடிந்தது. அதுதான் வழக்கமான ஆவணப்பட `டெம்பிளேட்’டிலிருந்து இதை வித்தியாசப்படுத்தியது. ஆனால் இவ்வளவு பேசும் அவர் வரையத் தொடங்கிவிட்டால், அதில் ஆழ்ந்துவிடுவார். அதுவரை கலகலப்பாக இருக்கும் அவரின் ஸ்டுடியோ, ஆலயம்போல் அமைதியாகிவிடுகிறது. தியானம் போல் அவரின் கையிலிருக்கும் பிரஷ், கான்வாஸில் இயங்குகிறது.
கிருஷன் கன்னா ஓவியம் தீட்டுவதில் ஏற்படும் அமைதியை, அதைப் பார்ப்பவர்களையும் உணரவைக்கும் முயற்சியே இந்த ஆவணப்படம்” என்ற ஸ்ருதி, “அவர் ஓவியம் வரையும்போது ஏற்படும் தியானம் போன்ற உணர்வை இசையின் மூலமாக வெளிப்படுத்துவதில் பெரும் சவால் இருந்தது” என்றார்.
சவாலான இந்த இசைப் பணியைச் செய்திருப்பவர்கள் அரவிந்த் ஷங்கர். மேற்கத்திய இசையிலும் கர்னாடக இசையிலும் ஈடுபாடுள்ளவர் கிருஷன் கன்னா என்பதால், அவர் ஓவியம் வரையும் அனுபவத்துக்குப் பொருத்தமாக, செல்லோ என்னும் மேற்கத்திய வாத்தியத்தில் சங்கராபரணம் ராகத்தை செல்லோ சேகரை (குன்னக்குடி வைத்தியநாதனின் மகன்) கொண்டு வாசிக்க வைத்தோம் என்கின்றனர் இசையமைப்பாளர்கள் அரவிந்தும் ஷங்கரும்.
அரவிந்த் ஷங்கர்
கிருஷன் கன்னாவுடன் ஸ்ருதி ஹரிஹர சுப்ரமணியன்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago