இரவுக் காதலனுக்கு விடை கொடுக்கும் அவசரத்தில் இருந்தாள் பகல் காதலி. கோல்ட் கோட்டிங்கில் மின்னியது எலியட்ஸ் கடற்கரை. நிஜமாகவே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் குழந்தைகள், கயிறு இழுக்கும் போட்டி, சைக்கிள் ஓட்டும் போட்டிகளில் தங்களின் குழந்தைமையை வெளிப்படுத்தும் பெரியவர்கள், பாட்டியோடு செஸ் ஆடும் குழந்தை இத்தனையும் நாம் பார்த்தது பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ‘கார்கள் இல்லா ஞாயிறு’ விழாவில்.
‘தி இந்து’ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த சில வாரங்களாக ‘கார்கள் இல்லா ஞாயிறு’ விழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் நடந்த விழாவிலிருந்து சில துளிகள்.
ஓட்டமும் ஆட்டமும்
“டீன்ட்ரன்ஸ் சென்னை எக்ஸ்பிரஸ் ஓட்டப் பந்தயம் நடந்தது. 5 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்காக 400 பேர் பங்கேற்றனர். இதில் ஆண்களுக்கான இரண்டு போட்டிகளும், பெண்கள், பிரபலமானவர்கள் என நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில் லூர்த் போஸ்கோ பயிற்சியளித்த ‘லயோலா ரன்னர்’ குழுவிலிருந்து ஆர். அசோக்குமார், புவனேஸ்வரி ஆகியோர் ஆண், பெண் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தனர். ஜி.ரஞ்சிவ் ஆண்கள் பிரிவில் ஐந்தாவது இடத்தையும், பிரபலமானவர் களுக்கான பிரிவில் ‘லூர்த் போஸ்கோ’ இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். “மிகவும் குறைந்த நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்ததில் எங்களின் குழு முதல் இடத்தைப் பிடித்தது” என்றார் அசோக்குமார். ஓட்டப் பந்தயத்துக்குப் பின், மேடையில் பங்கேற்ற வீரர்களின் ஆட்டப் பந்தயமும் நடந்தது!
கா..கா..கா…
இந்தியாவில் பல நீராதாரங்களைச் சுத்திகரிக்கும் சேவையில் ஈடுபட்டிருக்கும் EFI அமைப்பை நிறுவிய அருண் கிருஷ்ணமூர்த்தி குழுவினர் நீராதாரங்கள் மாசுபடுவதற்கு பிளாஸ்டிக் கழிவுகள் எப்படிப் பெரும் பங்காற்றுகின்றன என்பதை எளிய வசனங்களின் மூலமாகவும், திரைப் பாடல்களின் மெட்டில் அமைந்த கேலியான பாடல்களின் மூலமாகவும் வெளிப் படுத்தினர்.
“விழாக்கள், சடங்குகள், பிறப்பு, இறப்பு என எந்தக் காரணமாக இருந்தாலும் பட்டாசு வெடிப்பது ஒரு பொது வழக்கமாகவே ஆகிவிட்டது. ஆனால் இதனால் பறவைகளும் விலங்குகளும் எந்தளவுக்குப் பாதிக்கப்படுகின்றன தெரியுமா? நமக்குக் கேட்கும் சத்தத்தைவிட அதிகமாகப் பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் பட்டாசு வெடிக்கும் ஒலி கேட்கும். இந்த ஒலிக்குப் பயந்தே பறவைகளும் விலங்குகளும் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவிக்கின்றன. அதனால்தான் கா..கா… கா… என்று கூப்பிட்டாலும் அவை வருவதில்லை” என்றார் அருண் கிருஷ்ணமூர்த்தி.
‘யாதும் ஊரே’ அமைப்பின் சார்பாக மாற்று ஊடக மையம் குழுவினர் பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையில் வீதி நாடகம், தப்பாட்டம், சாட்டக்குச்சி ஆட்டம், மான்கொம்பு ஆட்டம், கரகாட்டம் போன்ற பல நிகழ்வுகளை நடத்தினார்கள். நமது பாரம்பரிய உணவுகளையும், அன்றாடப் பழக்கவழக்கங்களையும் நுகர்வுக் கலாச்சாரம் எப்படிப் புரட்டிப் போட்டிருக்கிறது என்பதைச் சாட்டையடி வசனங்கள், பாடல்களின் மூலமாக வெளிப்படுத்திய விதத்துக்கு எல்லாத் தரப்பு மக்களிடமிருந்தும் பெருத்த வரவேற்பு கிடைத்தது.
“ ‘உங்க டூத் பேஸ்டுல உப்பு இருக்கா, கசப்பு இருக்கா, கரி இருக்கா’ன்னு இப்ப கேட்கிறாங்க. காலம்காலமா கிராமத்துல வாழ்ந்த நம்மோட தாத்தா, பாட்டிங்க எல்லாம் உப்பையும், வேப்ப மரக் குச்சியையும் கொண்டுதான் பல் விளக்கினாங்க. அவங்களுக்கெல்லாம் பல் கடைசி வரைக்கும் நல்லாத்தான் இருந்துச்சு. நமக்குத்தான் சின்ன வயசுலயே ஆட்டம் கண்டுபோச்சு” என்ற காளீஸ்வரன் பேச்சை கை தட்டி ஆமோதித்தனர் சுற்றியிருந்த இளவட்டங்கள்.
கரகத்துக்கும் விவசாயத்துக்கும் உள்ள தொடர்பு
“கரகம் என்பதே கவனத்தை மையப்படுத்திய ஒரு ஆட்டக் கலை. தொடக்கக் காலத்தில் நீர் மொண்டு வருவதற்குப் பானையைத் தலையில் சுமந்து செல்வார்கள். இது தோண்டிக் கரகம். பின்னாளில் விவசாயம் சார்ந்தும் இந்தக் கலை இயங்குகிறது. நாற்றுகளை ஆணும் பெண்ணும் தலையில் சுமந்த காலத்தில் நாற்றுக் கரகம் என ஆனது. அதன் பின், விளைந்த கதிர்களை பெண்கள் தலையில் சுமந்து செல்வார்கள்.
கதிர்களைக் குழந்தைகளுக்கு ஒப்பாக மதிப்பார்கள். இப்படிக் கதிர்களைத் தலையில் சுமந்து வரும்போது கதிர்களை அந்துப்பூச்சிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக, நெல் இருக்கும் மரக்காலில் வேப்பிலைக் கொத்தைச் சொருகி எடுத்துவருவார்கள். இதுவே மரக்கால் கரகம் அல்லது அம்மன் கரகம் என ஆனது. கோயில் திருவிழாக்களில் பூசாரி பூக்களால் ஜோடித்து எடுத்து வரும் கரகத்தைப் பூங்கரகம் என்பார்கள். கரகத்தில் கிளி பொம்மை பொருத்தப்பட்டு ஆண், பெண் கலைஞர்களால் ஆடப்படுவதுதான் கிளி கரகம் அல்லது கேளிக்கைக் கரகம்” என்றார் பேராசிரியர் காளீஸ்வரன்.
பெட்ரோல் வாசம் கலக்காத காற்று, மிதமான விளையாட்டுகளின் மூலம் வெளியேறும் வியர்வை, அடடே அப்படியா… என வியப்படைய வைக்கும் தகவல்கள் என அறிவுக்கும் ஆரோக்கியத்துக்கும் உத்தரவாதமளித்தது அன்றைய தினத்தின் காலைப் பொழுது!
படங்கள்: திரு
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
6 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago