கிராஃபிக் நாவல்: ‘பாலிவுட் பாட்ஷாவாக ஒரு குரங்கு மாறினால்?

By கிங் விஸ்வா

இராம. நாராயணன் படங்களை இன்றைக்குப் பார்த்தால் விழுந்து விழுந்து சிரிக்கத்தான் தோன்றும். ஆனால், ஒரு காலத்தில் மக்களை ஈர்ப்பதிலும் வசூலிலும் அப்படங்களுக்குப் பெரும் பங்கு இருந்திருப்பது உண்மைதான்.

அது போன்று விலங்குகளை வைத்து எடுக்கப்பட்ட திரைப்பட அலை நாடெங்கும் பரவலாக இருந்த 60-களில் குரங்கு, ஆடு, நாய், யானை, குதிரை, கிளி, பாம்பு என்று பல உயிரினங்கள் வெள்ளித்திரையில் வெற்றித்தடம் பதித்திருக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு உயிரினம்/ நட்சத்திரத்துக்கு ஒரு பின்புலக் கதை இருந்து, அந்தக் கதையை கிண்டலாகவும் பகடியாகவும் சொன்னால், சிரிக்காமல் இருக்க முடியுமா?

ஆனால், பிளாக் ஹியூமர் வகையில் சொல்லப்பட்ட சுதர்சன் என்ற சிம்பான்சி குரங்கின் கதை, எவ்வளவுக்கெவ்வளவு நம்மைச் சிரிக்க வைக்கிறதோ, அவ்வளவுக்கு நம்மைச் சோகத்திலும் ஆழ்த்திவிடுகிறது. இந்தியாவில் வெளியான கிராஃபிக் நாவல்களில் ஒரிஜினாலிட்டியுன் கூடிய கதைகளில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குவது இந்த சுதர்சன் (சிம்பான்சி).

சினிமா டு காமிக்ஸ்

கௌபாய் படங்களைப் பகடி செய்யும்விதமாக வெளியான ‘குயிக் கன் முருகன்' திரைப்படத்தின் கதாசிரியர் ராஜேஷ் தேவராஜ்தான், சுதர்சன் சிம்பான்சியை உருவாக்கியவர். ஏற்கெனவே சில பிரபல குறும்படங்களுக்கும் வால்ட் டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான அர்ஜுனுக்கும் கதை, திரைக்கதை எழுதியவர் இவர். அவரும் ஓவியர் மெரேன் இம்சேனும் இணைந்து 2005-ம் ஆண்டு ஒரு ஆறு பக்க காமிக்ஸ் சிறுகதையை உருவாக்கினார்கள்.

2007-ம் ஆண்டு தேசிய திரைப்பட விருதைப் பெற்ற அனிமேஷன் படத்தை இயக்கிய ஓவியர் மெரேன் லேசுப்பட்ட ஆளல்ல. அந்தச் சிறுகதையை முழுவடிவ கிராஃபிக் நாவலாக மாற்ற 2009-ம் ஆண்டு பதிப்பகத்திடமிருந்து உத்தரவுவர, தங்களது தனிப்பட்ட வேலைகளுக்கு இடையில் மெதுவாக இந்த கிராஃபிக் நாவலுக்கும் இருவரும் வடிவம் கொடுத்தனர். இப்படியாக இந்த கிராஃபிக் நாவல் மூன்று ஆண்டுகள் கழித்து 2012-ம் ஆண்டு மும்பை ‘காமிக் கானி'ல் (காமிக்ஸ் திருவிழா) வெளியிடப்பட்டது.

கதை உருவான கதை

ராஜேஷ் அதற்கு முன்பாக ‘The Art of Bollywood' என்ற புத்தகத்தை எழுதியபோது, பழைய பாலிவுட் படங்களின் போஸ்டர்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்தார். அதற்கு முன்பாக அவர் ‘சேனல் வி'யில் பாலிவுட்டின் இரண்டாம் நிலை திரைப்படங்களை (B Grade Films) பற்றிய ஒரு நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக இருந்தார். இப்படியாக பாலிவுட் படங்களின் பின்புலத்தைப் பற்றி ஏகப்பட்ட தகவல்கள் திரட்டியதால், அவற்றைப் பின்னணியாகக்கொண்டு இந்தக் கதையை எழுதியிருக்கிறார்.

காமிக்ஸே ஒரு சினிமா

படைப்பாளிகள் இருவருமே திரைப்படங்களில் பணிபுரிந்ததாலோ என்னவோ, இந்த கிராஃபிக் நாவல் முழுவதுமே ஒரு திரைப்படத்துக்கான வடிவிலேயே அமைக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் தன்னுடைய ஃபிளாஷ்பேக்கில் கதை சொல்வதுபோல ஆரம்பிக்கப்பட்டு, திரைக்கதை பாணியிலேயே கதை நகர்கிறது. ஓவியங்களுமேகூட க்ளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்று காட்சிக்கேற்ப மாறுகின்றன. குறிப்பிட்ட ஒரு உணர்ச்சியை வாசகருக்குக் கடத்த வேண்டி, கதை முழுவதும் கறுப்பு வெள்ளையிலேயே வரையப்பட்டுள்ளது. வசனங்கள் வேகமாக நகரும் கதைக்கு உறுதுணையாக இருப்பது மட்டுமில்லாமல், கதையை ஒருபடி மேலே உயர்த்தி, திரையரங்கில் இருப்பது போன்ற சூழலை உருவாக்கிவிடுகின்றன.

இந்தக் கதையின் சிறப்பம்சம் என்னவென்றால் இக்கதையில் வரும் உயிரினங்கள், உயிரினங்களாகவே சித்தரிக்கப்பட்டிருப்பதுதான். ஒரு வாலில்லாக் குரங்கு, வாலில்லாக் குரங்காகவே வருகிறதே தவிர, அது மனிதர்களைப் போல நடந்துகொள்வதில்லை. ஆனால், ஒரே வித்தியாசம் இந்த உயிரினங்கள் மனிதனைப்போல பேசும், நடக்கும் என்பதை இந்தக் கதை தனக்கான சுதந்திரமாக எடுத்துக்கொண்டிருக்கிறது.

பாலிவுட் ஹீரோ

சார்மினார் சிகரெட்டைப் புகைத்துக்கொண்டே, ஒரு டீக்கடையில் அமர்ந்தவாறு தனது பழைய நினைவுகளை அசைபோடுகிறது ஒரு சிம்பன்சி குரங்கு. படிப்பு சரியாக ஏறாததால், சர்க்கஸில் வேலைக்குச் சேர்கிறார் நமது சுதர்சன். அங்கே அடிமையாக நடத்தப்படுவது பிடிக்காமல் மும்பைக்கு வந்து, பல சிக்கல்களைச் சந்தித்து, பின்னர் சினிமா ஸ்டுடியோவில் எடுபிடியாகச் சேர்கிறார். பிரபல இயக்குநர் ஷாவின் பார்வையில் பட, திடீரென்று ஒருநாள் சுதர்ஷனை ஹீரோவின் நண்பனாக்குகிறார் ஷா.

பின்னர் தனி ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக சுதர்சன் உருவெடுக்கிறார். அதன் பின்னர் ஒவ்வொரு படமும் வெற்றிப்படி கட்ட, சுதர்சன் பாலிவுட்டின் அசைக்க முடியாத சக்தியாகிறார். அனைத்தும் இருந்தும் தனது வாழ்க்கையில் ஒரு வெறுமை இருப்பதை உணரும் சுதர்சனுக்கு, ஒரு தென்னிந்திய நடிகையின் மீது காதல் உருவாக, அவரது சரிவு ஆரம்பமாகிறது. இப்படியாக காதல், நட்பு, துரோகம், பரிவு, ஏமாற்றம், பழி வாங்கும் எண்ணம், விமோசனம் என்று ஒரு அக்மார்க் சினிமாவுக்கான கதையைக் கொண்டுள்ளது இந்த கிராஃபிக் நாவல்.

முடிவு

திரைக்கதையின் வழியாக இந்த கிராஃபிக் நாவலை உச்சத்துக்குக்கொண்டு சென்ற படைப்பாளிகள், அவர்கள் பின்னிய வலையிலேயே சிக்கியதைப் போல, கதையின் முடிவை சினிமாத்தனமாக அமைக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதை உணர முடிகிறது. இந்த கிராஃபிக் நாவலின் ஓவிய பாணி கதைக்கு உதவுகிறது என்றாலும், வாசகரைச் சற்றே தடுமாற்றவும் செய்கிறது.

என்ன சொல்கிறது சுதர்சன் சிம்பான்சி?

# சினிமா உலகை எந்த அளவுக்குப் பகடி செய்ய முடியுமோ அந்த அளவுக்குப் பகடி செய்திருந்தாலும்கூட, கதையில் ஒரு நம்பகத்தன்மை தொடர்வதே இந்த கிராஃபிக் நாவலின் சிறப்பு.

# தென்னிந்தியாவின் உயிரினங்களை வைத்துப் படமெடுத்துப் புகழ்பெற்ற சாண்டோ சின்னப்பா தேவர் முதல் பிரபல இந்தி இயக்குநர் ராஜ் கபூர் வரை கதையில் வருகிறார்கள்.

# இந்தியாவின் பிரபல கார்பரேட் சாமியாரை மிகவும் திறமையாகக் கதைக்குள் கொண்டுவந்து, அவருடைய சுயரூபத்தை வெளிப்படுத்தினாலும், அவரால் நாயகன் உண்மையை உணர்வதாக ஒரு திரைக்கதை ட்விஸ்ட்டை வைத்திருக்கிறார்கள்.

# நடிகைகள் நடத்தப்படும் விதம், மார்கெட் இழந்த பிறகு நடிகர்களின் நிலைமை, திரைப்பட உலகின் சம்பிரதாயங்கள் என்று பல விஷயங்களையும் கதையினூடே கொண்டு வந்தது, கதையோட்டத்தைச் சிறப்பாக்கி இருக்கிறது.

# ஒரே நாளில் உச்சத்துக்குச் செல்வது, திரையுலகின் முக்கியப் புள்ளியைப் பகைத்துக்கொண்டதால், ஒரே நாளில் கட்டம் கட்டப்படுவது என்று திரையுலகின் நிழலான சக்தி மையங்களைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

# எப்படி ஒருவரது மரணம், ஃபிளாப் ஆன ஒரு திரைப்படத்தை மாபெரும் வெற்றிப்படமாக மாற்றுகிறது என்பன உள்ளிட்ட‌ பல திரையுலக அவலங்களையும் சொல்கிறது.



டைட்டில்: சுதர்சன் சிம்பான்சி
கதை: ராஜேஷ் தேவராஜ்
ஓவியம்: மெரேன் இம்சேன்
பதிப்பகம்: ஹஷெட் இந்தியா
பக்கங்கள்: பெரிய அளவில் 124 பக்கங்கள்
வெளியீடு: டிசம்பர் 2012.

கட்டுரையாளர், காமிக்ஸ் ஆர்வலர்
- தொடர்புக்கு: prince.viswa@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்