‘லஞ்சம் வாங்க மாட்டேன்!- இப்படிக்கு, முத்துமாரி வி.ஏ.ஓ.

By எஸ்.கோபு

‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்று சகாயம் ஐ.ஏ.எஸ். சொன்ன வார்த்தைகளின் கீழ் ‘லஞ்சம் வாங்க மாட்டேன்' என்று ‘போல்ட்' ஆக எழுதப்பட்டிருக்கின்றன. அதற்குக் கீழ் ஒரு இளம்பெண் கம்பீரமாக அமர்ந்திருக்கும் ஒளிப்படம் அண்மைக் காலமாக ‘வாட்ஸ் அப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘வைரல்' ஆகிவருகிறது.

‘யார் அது' என்று புலனாய்வில் இறங்கினால், அவர் ஒரு வில்லேஜ் ஐ.ஏ.எஸ். என்று தெரியவந்தது. பின்னே, வி.ஏ.ஓ.க்கள் எல்லாம் கிராம அளவில் ஒரு ‘சின்ன' கலக்டர்தானே!

‘என்ன மாப்ளே, காலையிலேயே கவர்மெண்டு ஆபீசு பக்கம்? தக்காளி, காட்டுக்குத் தண்ணி பாய்க்க போகலயாக்கு?' என்ற கேள்விக்கு, ‘அடிக்கிற வெய்யில கிணத்துல தவளை நீந்தக்கூட தண்ணியக் காணோம். இருந்தாலும் உங்களுக்குக் குசும்பு அதிகம்’ என்ற கிராமத்து மனிதர்களின் ரசனையான பேச்சுகளுக்கிடையே, அரசு அலுவலகத்துக்குரிய எந்தப் பரபரப்புமின்றி அமைதியாக இயங்கிக்கொண்டிருக்கிறது காளியாபுரம் கிராம நிர்வாக அலுவலகம்.

முதியோர் உதவித்தொகை விண்ணப்பம், இறப்புச் சான்று, பட்டா மாறுதல், நில அளவை எனப் பல்வேறு சான்றுகளுக்காக, நீண்ட நேரமாக அமைதியாக வரிசையில் காத்திருந்தனர். வந்த வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்ற அவசரமோ அல்லது அதற்கான குறுக்கு வழியைத் தேடும் மனிதரையோ அங்கு காண முடியவில்லை. வரிசையில் காத்திருக்கும் ஒழுங்குமுறை நமக்கு ஆச்சரியமாகப் பட, ‘இது எப்படி சாத்தியமானது' என்ற கேள்வியுடன் அவர்களை அணுகினால், எல்லோரும் முத்துமாரியைக் கைகாட்டுகிறார்கள். கும்பிடுகிறார்கள்.

‘மூச்சு வாங்க மறந்தாலும் லஞ்சம் வாங்க மறக்க மாட்டேன்' எனக் கொள்கைப் பிடிப்புடன் இருக்கும் சில அரசு அலுவலர்கள் மத்தியில் தன்னுடைய அலுவலகத்தில் ‘லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற வாக்கியத்துடன் தன்னுடைய கைபேசி எண்ணையும் எழுதி வைத்துள்ளார் பொள்ளாச்சியை அடுத்த காளியபுரம் கிராம நிர்வாக அலுவலர் ரா.முத்துமாரி. 29 வயதில் அவ்வளவு துணிச்சல்!

இவரைப் பற்றி இந்தக் கிராம மக்களிடையே விசாரித்தபோது, ‘தற்போது உள்ள வி.ஏ.ஓ. லஞ்சம் வாங்குவதில்லை. அதனால் மக்களைத் தேவையின்றிக் காக்க வைப்பதில்லை, எங்களைப் போன்ற வெளியுலக அனுபவ‌மில்லாதவர்கள் சான்றிதழ் பெறச் சென்றாலும், ஒரு சான்றிதழ் பெற எவையெல்லாம் இணைக்கப்பட வேண்டும். அவற்றை யாரிடம் பெற வேண்டும். அதற்கு எந்த மாதிரியான ஆதாரங்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை விளக்கிக் கூறுவதால், இடைத்தரகர்களை அணுக வேண்டிய அவசியம் தற்போது எங்களுக்கு இல்லை' என்று புகழ்ந்து தள்ளினர்.

ஆனால் எந்தப் புகழ்ச்சியையும் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் அமைதியாகப் புன்னகைத்து வரவேற்கிறார் முத்துமாரி.

"மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா, சின்னபூலான்பட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன். மதுரை மீனாட்சி கல்லூரியில் பி.எஸ்.சி. பிசிக்ஸ் முடித்தேன். பிறகு, அரசு வேலையில் சேர்ந்து மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கில் 2012-ல் ஆயக்குடி மரத்தடி இலவசப் பயிற்சி மையத்தில் வி.ஏ.ஓ. தேர்வுக்காக என்னைத் தயார்படுத்திக்கிட்டேன். அந்த வருடமே தேர்வில் வெற்றி பெற்று, ஆனைமலையில் வி.ஏ.ஓ.வாகப் பணியில் சேர்ந்தேன். அப்புறம், காளியபுரத்துக்கு டிரான்ஸ்ஃபர்!” என்று தன் ‘ப்ரொஃபைலை' கூறியவர், இடையிடையே நாம் எழுப்பிய கேள்விகளுக்கு எந்தத் தயக்கமும் இல்லாமல் பதில் சொல்கிறார்.

லஞ்சம் வாங்க மாட்டேன்'னு போர்டு மாட்டி சேவை செய்றீங்களே...

நான் மிடில் கிளாஸ். எனக்குக் கீழ்த்தட்டு மக்களுடைய கஷ்டம் நல்லாவே தெரியும். கஷ்டப்பட்டுப் படிச்சு நேர்மையா எக்ஸாம் எழுதி ஜெயிச்சு வேலைக்குச் சேர்ந்திருக்கேன். வேலைக்குச் சேர்ந்த நாள்லயே, நான் கண்டிப்பாக‌ லஞ்சம் வாங்க மாட்டேன்’ என உறுதியெடுத்துக்கிட்டேன்.

நான் லஞ்சம் வாங்காமல் இருந்தா மட்டும் போதுமா? அது மக்களுக்கும் தெரியணும் இல்லையா?. அப்போதான் லஞ்சம் கொடுக்க முன்வர மாட்டாங்க‌. சிலர் உரிய ஆவணங்களின்றி சான்றிதழ்கள் வேண்டி வெளிப்படையாக என்னிடம் பணத்தைக் கொடுத்து காரியத்தைச் சாதிச்சுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. அவர்களுக்கு, எவ்வளவு எடுத்துக் கூறியும் புரிய வைக்க முடியலை. அதனால்தான் நான் ‘லஞ்சம் வாங்க மாட்டேன்'னு போர்டு எழுதி வெச்சிருக்கேன். அதுக்கப்புறம் நல்ல‌ மாற்றம் ஏற்பட்டது. முதலில் மாற்றத்தை நம்மிலிருந்து ஆரம்பிக்கணும்.

ஆனா அரசியல் ரீதியாகவும், மேலதிகாரிங்க மூலமாகவும் ‘ப்ரஷர்' இருக்குமே...

வேலையில‌ சேர்ந்தவுடனேயே ‘லஞ்சம் வாங்க மாட்டேன்' என்ற என்னுடைய நிலைப்பாட்டை மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்திட்டேன். அதனால‌ பிரச்சனை இல்லை. தவிர, மக்களிடம் என்னுடைய அணுகுமுறை நேரடியாக இருக்கிறதால‌ என்னோட நிலையைப் புரிஞ்சிக்கிட்டு ஒத்துழைப்பு கொடுக்கிறாங்க‌.

சரி, நீங்க லஞ்சம் வாங்கலைங்கிறதால இங்க என்ன மாற்றங்கள் நடந்திருக்கு...?

இருக்கிறவங்க‌ கொடுத்துட்டுப் போவாங்க. இல்லாதவங்க என்ன செய்வாங்க பாவம்? அதனால ஏழையோ, பணக்காரனோ... யார்கிட்டயும் லஞ்சம் வாங்க மாட்டேன்'ன்னு ஒரு கொள்கையை எடுத்துக்கிட்டேன். அதைவிட ‘லஞ்சம் கொடுக்க மாட்டோம்'ங்கிற கொள்கையை இந்த கிராம மக்கள் எடுத்திருக்காங்க. அதை விட வேறு பெரிய மாற்றம் என்ன வேணும் சொல்லுங்க?

நான் இந்தக் கிராமத்தில‌ இருந்து டிரான்ஸ்ஃபராகிப் போலாம். ஆனா இந்த இடத்திற்கு வரும் வேறொரு அதிகாரியால‌ லஞ்சம் வாங்க முடியாது. இந்த மாற்றம் தொடர் அலையா தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்னு நினைக்கிறேன். நடக்குமான்னு பார்ப்போம்!

அப்படியே நடக்கும் ராசாத்தி!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்