ஒளிரும் மச்சம்!

By ஜி.ஆர்.சுரேந்திரநாத்

கடவுள் எப்போதும் மிகுந்த ரசனைக்காரர். அழகிகளைப் படைத்த அடுத்த நொடியே, கடவுள் அவர்களின் முகத்தில் திருஷ்டிப்பொட்டு போல‌ ஒரு சிறிய மச்சத்தைச் செதுக்குகிறார். அந்த மச்சம் அவர்கள் முகத்தில் அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, அது அவர்களுக்கு ஒரு தனி அழகைத் தருகிறது. இந்த மச்சம் சிலரை ஓவியனாக்குகிறது. பலரை கவிதை எழுத வைக்கிறது. என்னை இந்தக் கட்டுரையை எழுத வைக்கிறது.

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரஜினி முருகன்' திரைப்படம் பார்த்தேன். அப்படத்தில் ‘செல்லக் குட்டி உன்னைக் காண…' பாடலுக்கு முன்பு வானம் இருண்டிருக்கும். சிவகார்த்திகேயன் தெருவிலிருந்து கீர்த்தி சுரேஷின் வீட்டைப் பார்ப்பார். அப்போது வீட்டின் இரண்டு கதவுகளும் திறந்து, நீல நிற உடையில் கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார். இருண்டு கிடந்த வானத்தைப் பார்த்துவிட்டு கீர்த்தி வெளியே வருகிறார். பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

அந்த ஒன்றரை நிமிடப் பாடலில் பரபரப்புடன் துணிகளை எடுக்கும் கீர்த்தி… மழையில் நனைந்தபடி சந்தோஷமாக வானத்தைப் பார்க்கும் கீர்த்தி… காதில் ஜிமிக்கிகள் அசைந்தாடப் புன்னகைக்கும் கீர்த்தி… என்று ஏராளமான கீர்த்திகளைப் பார்க்க முடிந்தது. பாடல் முடிந்து ஜன்னலருகில் நின்றபடி கீர்த்தி, சிவகார்த்திகேயனுக்கு ‘ஹாய்…' என்பது போல் லைட்டாக டாட்டா காட்ட… பதிலுக்கு அத்தனை தமிழ் ரசிகர்களும் கீர்த்திக்கு மனதிற்குள் ‘ஹாய்…' சொன்னார்கள்.

கீர்த்திக்குக் கொஞ்சம் புஸ், புஸ் கன்னங்கள்… ஜில் ஜில் சிரிப்பு…. பொதுவாக இம்மாதிரியான ‘பப்ளி'யான முகங்களை ஆண்களுக்குப் பிடிக்கும். மேலும் கீர்த்தி சுரேஷ் நமக்குத் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் அளவுக்கு அதிரடி அழகாக இல்லாமல், ஒரு எளிமையான அழகுடன் இருக்கிறார். அதற்காக, அவர் ‘பேருந்து பக்கத்து சீட் பயணி போல் இருக்கிறார்' என்று ஃபேஸ்புக்கில் எழுதுவதை எல்லாம் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். எந்த பக்கத்து சீட் பெண் அப்படி இருக்கிறார் என்று சொல்லுங்கள். நான் வாழ்நாள் முழுவதும் அந்தப் பேருந்தில் பயணிக்கத் தயாராக இருக்கிறேன்.

அடுத்தடுத்த காட்சிகளில் கீர்த்தியின் முகத்தைப் பார்த்தபோது அந்த மச்சத்தைக் கவனித்தேன். அது கீர்த்தியின் வலது கன்னத்திற்கு கீழ் கீ………ழே கன்னத்திலும் இல்லாமல், கழுத்திலும் இல்லாமல், ஒரு ரெண்டும் கெட்டான் இடத்தில் இருக்கிறது. அவ்வாறு இருப்பதால், கீர்த்தி அண்ணாந்து பார்க்கும்போதும், அதிகமாக சிரிக்கும்போதும், முகச் சதைக்கு அதிக வேலை வைக்கும் பாவனைகள் செய்யும்போதும் அந்த மச்சம் கன்னத்திற்கும், கழுத்திற்கும் மாறி மாறி நகர்ந்து செல்வதைப் பார்த்து நான் அசந்துபோனேன். என் வாழ்வில் முதன் முதலாக ஒரு நகரும் மச்சத்தைக் கண்ட ஆச்சர்யத்திலிருந்து இன்னும் நான் விடுபடவே இல்லை.

கீர்த்தியின் மச்சம் இன்னும் சில மச்சங்களை நினைவுபடுத்தியது. கீர்த்தியின் அம்மா நடிகை மேனகாவிற்கு மூக்கருகில் ஒரு மச்சம் இருப்பது நினைவிற்கு வந்தது (மேனகாவின் சமீபத்திய ஒளிப்படங்களைப் பார்க்கும்போது அந்த மச்சம் தற்போது ஒரு மருவாக மாறியிருக்கிறது). தொடர்ந்து நான் மச்சங்களைப் பற்றி யோசிக்க… யோசிக்க… மனித குல வரலாற்றின் மகத்தான இந்த ஆராய்ச்சிக்(?) கட்டுரையை எழுதியே தீருவது என்ற முடிவுக்கு வந்தேன்.

கீர்த்தி சுரேஷின் மச்சம் நகரும் மச்சம் என்றால், மலையாள நடிகை காவ்யா மாதவனின் முகத்தில் காணப்படும் மச்சத்தை, மூக்கு மறைவு மச்சம் என்று என் சக ஆய்வாளர்கள்(?) கூறுகின்றனர். காவ்யாவின் முகத்தை நேராகப் பார்த்தால் அந்த மச்சம் தெரியாது. அவரது முகத்தின் இடது பக்கத்தை க்ளோஸ் அப்பில் காண்பிக்கும்போது கன்னமும் மூக்கும் கைகுலுக்கிக்கொள்ளும் இடத்தில் அந்த மச்சம் இருக்கிறது.

தொடர்ந்து நடிகைகளின் முக மச்சங்கள் குறித்த தேடலில் இறங்கியபோது, நமது பெரும்பாலான கனவுக்கன்னிகள் முகத்தில் மச்சத்துடன் இருக்கும் விஷயத்தைக் கவனித்து எனக்குப் புல்லரித்துவிட்டது. நடிகை வைஜெயந்திமாலாவிற்கு இடது கண்ணிற்கு கீழே கன்னத்தில் உள்ளது. சரோஜாதேவிக்கும் அதே ‘ப்ளேஸ்மென்ட்'தான். ஆனால் அது வலது கன்னத்தில். நடிகை சிநேகாவின் மச்சம், கீழுதட்டிடம் கோபித்துக்கொண்டு சற்றுத் தள்ளி கீழே இருக்கிறது.

முகத்தில் இருக்கும் மச்சங்களில், இந்த மேலுதட்டு மச்சத்தை மச்சங்களின் ராணி என்று கூறலாம். அதன் வசீகரமே தனி. இந்தி நடிகை ரேகா, ஜெயப்ரதா, சிம்ரன் போன்றோரின் மேலுதட்டில் இந்த ராணி மச்சத்தைக் காணலாம். இந்த மேலுதட்டு மச்சங்களிலேயே மிக மிக தனித்துவமானது, நயன்தாராவின் மேலுதட்டு மச்சம். அது சரியாக நடு மூக்கிற்கு கீழே, மேலுதட்டின் நட்ட நடு சென்டரில் உள்ள குழிவான பகுதியில், தங்கக் குளத்தில் மிதக்கும் கறுப்புப் பூ போல் அட்டகாசமாக வீற்றிருக்கிறது. அதைப் பார்த்த பிறகு கீர்த்தி சுரேஷின் நகரும் மச்சம் சிறந்ததா, நயன்தாராவின் நிற்கும் மச்சம் சிறந்ததா என்ற குழப்பத்தில் இரவு முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை.

சரி… எதற்கு இப்போது இந்த மச்சப் புராணம்?

பெண்களின் முக மச்சம் என்பது, சமைத்த உணவுப் பொருளின் மேல் சிறிது பச்சை இலைகளைத் தூவி அழகு செய்வது போன்றதாகும். இவ்வாறு அழகுக்கு ஒரு காரணமாக இருக்கும் மச்சத்தை, நவீன கால இளம் பெண்கள் பலர் ஏனோ ஒரு குறையாகக் கருதுகின்றனர். மாசு, மருவற்ற முகம்தான் அழகு என்ற கோணத்தில் சிந்திப்பதன் விளைவு அது. அதற்காக ‘ஸ்கால்பல் ஸ்கல்ப்டிங்', ‘எல்லிப்டிகல் எக்ஸிஷன்', ‘க்ளோஷர்' என்பது போன்ற நவீன சிகிச்சைகள் மூலமாக அந்த மச்சத்தை அகற்றுகிறார்கள் என்ற விவரத்தை அறிந்தேன். தலையில் அடித்துக்கொள்ளலாம்போல இருந்தது!

அதேபோல் இக்கட்டுரைக்காக நடிகைகளின் ஒளிப்படங்களை இணையத்தில் தேடியபோது பலரும் தங்கள் மச்சத்தை மேக்கப்பில் மறைத்திருப்பதைக் காண முடிகிறது. சில படங்களில் மட்டுமே மச்சத்தைக் காண முடிகிறது. பெண்கள் மச்சத்தை மறைக்கவேண்டியதில்லை.

மச்சமும் அழகின் ஒரு அம்சம்தான். இவ்வாறு அழகின் ஒரு பகுதியாக இருக்கும் மச்சத்தைப் பற்றி கேம்பிரிட்ஜ் அகராதியில் கொஞ்சம் கூட ரசனையே இன்றி, ‘ஒரு நபரின் தோலில் காணப்படும் சிறிய, கருப்பான பகுதி' என்று போட்டிருக்கிறார்கள். அது ஒரு சிறிய, கருப்பான பகுதியா என்ன? அது அழகின் ஒரு துளி!

- தொடர்புக்கு: grsnath71@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்