தமிழில் காமிக்ஸ் என்றால் இரும்புக் கை மாயாவியைப் பற்றிப் பேசாமல் ஆரம்பிக்க முடியாது. இரும்புக் கை மாயாவியின் படத்தைப் பார்த்திராதவர்கள்கூட உச்சரிக்கும் மந்திரப் பெயராக அது புகழ்பெற்றிருக்கிறது.
இரும்புக் கை மாயாவி ஏன் இப்படி கொண்டாடப்படுகிறது? மூன்று விஷயங்களை மட்டும் பார்ப்போம்:
# தமிழகத்தில் இரும்புக்கை மாயாவியின் சகாப்தம் கடந்த நாற்பதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்துவருகிறது. இப்போதும்கூட அதன் மறுபதிப்பைத் தேடுபவர்கள் உண்டு. சினிமா இயக்குநர்கள் பிரபு சாலமன், மிஷ்கின், ஏ.ஆர். முருகதாஸ், சிம்புதேவன் உள்ளிட்டோர் தங்களுடைய சிறுவயது இன்ஸ்பிரேஷனாக மாயாவியையே குறிப்பிடுகின்றனர்.
# எழுபது, எண்பதுகளில் இரும்புக்கை மாயாவியைப் போலவே தங்கக் கை மாயாவி, இரும்பு விரல் மாயாவி, தங்க விரல் மாயாவி, உலோகக் கை மாயாவி, நெருப்பு விரல் சிஐடி என ஏகப்பட்ட 'போலச் செய்யும்' கதாபாத்திரங்கள் வந்ததில் இருந்தே, இரும்புக் கை மாயாவி எவ்வளவு பிரபலம் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
# தொடர்ந்து வந்த கதைகள் மாயாவியின் ஆளுமை, தமிழகத்தில் நிலைத்து நிற்க உதவின. 'தமிழ் காமிக்ஸ் உலகின் தலைமகன்' என்று கருதப்படும் இரும்புக் கை மாயாவி கதாபாத்திரம், அது உருவாக்கப்பட்ட இங்கிலாந்தில்கூட இவ்வளவு கொண்டாடப்பட்டதில்லை.
யார் இந்த மாயாவி?
விஞ்ஞானி பாரிங்கரின் உதவியாளரான லூயி கிராண்டேல், ஒரு விபத்தில் தனது வலக்கையை இழந்து, எஃகினால் செய்யப்பட்ட செயற்கைக் கரம் ஒன்றைப் பொருத்திக்கொள்கிறார். ஒரு பரிசோதனையின்போது பரிசோதனைக் கூடமே விபத்துக்குள்ளாக, அந்த விபத்தில் கிராண்டேல் மீது உயர் அழுத்த மின்சாரம் பாய்கிறது. அதில் யாருமே எதிர்பார்க்காத ஒரு புதிய விளைவு உண்டாகிறது. கிராண்டேலின் முழு உடலும் மாயமாக மறைந்து, அவருடைய உலோகக் கை மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. இந்த விபத்தால் மனக் குழப்பம் அடைந்த கிராண்டேல், தனக்குக் கிடைத்த சக்தியின் மதிப்பை உணராமல், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுகிறார். பின்னர் தெளிவுபெற்று பிரிட்டிஷ் உளவுத் துறையான நிழற்படையில் சேர்ந்து மிகச் சிறந்த உளவாளியாகிறார்.
பொக்கிஷம் காக்கும் மாயாவி
உலகின் அரிதான கலைப் பொக்கிஷங்கள் மர்மமான முறையில் கொள்ளையடிக்கப்பட, நிழற்படையின் தலைசிறந்த உளவாளியான மாயாவி அதைத் துப்பறிய வருகிறார். கலைப் பொருட்களை ஏலம் விடுமிடத்தில் மாயத்தன்மையுடன் காத்திருக்கும் மாயாவிக்குப் பேரதிர்ச்சியளிக்கும் வகையில், அந்த இடத்திலும் அவை கொள்ளையடிக்கப்படுகின்றன. வெளியே தெரியாமல் பின்தொடரும் மாயாவி எதிரிகளிடம் சிக்க, மரணக் கடிகாரத்துக்கு அவரை பலியாக விட்டுவிட்டு, புகழ்பெற்ற மோனலிசா ஓவியத்தை கொள்ளையடிக்க பாரிஸ் செல்கிறார் வில்லன் பால் பிரபு. மாயாவி எப்படி மரணத்திலிருந்து தப்பிக்கிறார்? மோனலிசா ஓவியம் காப்பாற்றப்பட்டதா? கடத்தல், கொலை, கலகக் கூட்டமைப்பின் சதியை மாயாவி எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் கதை.
எப்படி வந்தது?
ஹெச்.ஜி. வெல்ஸ் எழுதிய 'தி இன்விஸிபிள் மேன்' 1950-களில் காமிக்ஸ் வடிவில் வெளிவந்து சிறப்பாக விற்பனையானது. இங்கிலாந்தின் ஐ.பி.சி. என்கிற ப்ளீட்வே நிறுவனம் 1962-லிருந்து வேலியண்ட் என்ற காமிக்ஸை வெளியிட்டுவந்தது. அதனுடைய ஆசிரியர்கள் கென் மென்னல், ஜாக் லெக்ராண்ட் மற்றும் சிட் பிக்னெல் ஆகியோர், அந்த மாய மனிதனை காமிக்ஸ் வடிவில் கொண்டுவர வேண்டுமென நினைத்தார்கள்.
அப்போது அறிவியல் புனைவு, விஞ்ஞானக் கதைவரிசைகளில் மிகவும் பிரபலமாகத் திகழ்ந்த கென்னத் பால்மரிடம் மாய மனிதனை உருவாக்கும் பொறுப்பை அவர்கள் ஒப்படைத்தனர். முதல் கதைக்கு ஸ்பானியரான ஜீசஸ் ப்ளாஸ்கோ தனது அற்புதமான ஓவியங்களால் மெருகூட்ட, 06-10-1962 அன்று வெளியான 'வேலியண்ட்' இதழில் முதல் இரும்புக் கை மாயாவியின் சாகசம் 'The Steel Claw' என்ற பெயரில் வெளியானது.
அதே கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு இன்னும் அதிக நாவல்கள் எழுத வேண்டி கோரிக்கைகள் முன்வர, இரும்புக் கை மாயாவியின் முதல் மூன்று கதைகளை மட்டும் எழுதிய நிலையில் இந்தக் கதை வரிசையையும், காமிக்ஸ் உலகையும் விட்டு கென் பால்மர் விலகினார். அதற்கு அடுத்துவந்த கதைகளை டாம் டுல்லி எழுதி இரும்புக் கை மாயாவியின் சகாப்தத்தை நிலைநிறுத்தினார்.
தமிழகத்தைக் கலக்கிய கதை
அமர் சித்திரக் கதை, இந்திரஜால் காமிக்ஸ், ஃபால்கன் போன்று மொழிமாற்றம் செய்யப்பட்ட காமிக்ஸ் இதழ்கள் தமிழில் ஏற்கெனவே வெளிவந்திருந்தாலும், இரும்புக் கை மாயாவியின் வருகை தமிழ் காமிக்ஸ் துறையில் மிகப் பெரிய ஆர்வத்தைக் கிளறிவிட்டது.
அம்புலிமாமா நிறுவனத்தின் பிரிண்டிங் மெஷினை வாங்க, சென்னையில் தங்கிப் பயிற்சியெடுத்த சிவகாசியைச் சேர்ந்த முத்து காமிக்ஸ் நிறுவனர் சௌந்தரபாண்டியன், அங்கு வந்திருந்த சாம்பிள் காமிக்ஸ் கதையான இரும்புக் கை மாயாவியைப் படித்தார். பின்னர் லண்டன் சென்று, அதற்கு முறைப்படி அனுமதி பெற்றுத் திரும்பினார்.
மக்கள் குரல் பத்திரிகையின் துணை ஆசிரியர் காமராஜுலு ஆங்கிலத்திலிருந்து அந்தக் கதையை தமிழுக்கு மொழிபெயர்க்க, The Steel Claw என்ற கதாபாத்திரத்துக்கு 'இரும்புக் கை மாயாவி' என்று பெயர்சூட்டினார் சௌந்தரபாண்டியன்.
தமிழில் ஐந்து லட்சம் பிரதிகள் விற்ற காமிக்ஸ், தமிழிலிருந்து ஆறு மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்ட காமிக்ஸ், நடிகர் எம்.ஜி.ஆரை வைத்து காமிக்ஸ் உருவாக்கியவர் என்று பல்வேறு புதுமைகளைச் செய்த முல்லை தங்கராசன், காமராஜுலுவின் மொழிபெயர்ப்பைத் தனது அசாத்திய மொழி ஆளுமையால் செழுமைப்படுத்தினார்.
இரும்புக் கை மாயாவி கதையைப் பல நடிகர்கள் திரைப்படமாக எடுக்க விரும்பியுள்ளனர். முன்னணித் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று தமிழின் முதல் 3டி தொலைக்காட்சித் தொடரை ஆரம்பித்தபோது, இரும்புக் கை மாயாவியைத் தழுவிய கதையையே கொண்டிருந்தது.
நமது கலாசாரம் சார்ந்த கதைகளே பொதுவாகச் சொல்லப்பட்டுவந்த நிலையில் தமிழ் காமிக்ஸ் உலகின் போக்கையே மாற்றி, மொழிமாற்று காமிக்ஸ்களுக்கு முக்கிய இடம் கிடைக்கக் காரணமாக இருந்தது இரும்புக்கை மாயாவிதான்.
இரும்புக் கை மாயாவி
கதை: டாம் டுல்லி
ஓவியம்: கார்லோஸ் க்ரூஸ்
தமிழாக்கம்: காமராஜுலு
மொழிநடை மேம்பாடு: முல்லை தங்கராசன்
பதிப்பாளர்: சௌந்தரபாண்டியன்
பக்கங்கள்: கருப்பு வெள்ளையில் 122 பக்கங்கள்
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago