பொருள்தனைப் போற்று! 11 - ஒருவர் பெற்ற மக்களே!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘இன்னும் எவ்வளவு தேவை?'

‘ஆயிரம் ரூபாயாவது இருந்தாத்தான் சமாளிக்க முடியும்'

‘என்னைக்குள்ள கட்டணும்?'

‘அதெல்லாம் முடிஞ்சு போச்சு. கூடப் படிக்கிற பசங்க எல்லாரும் கட்டிட்டாங்களாம். கண்டிப்பா ஒரு வாரத்துக்குள்ள கட்டிடுங்கன்னு சொல்லிட்டாங்க'

‘கட்டிடலாம்'

‘எப்படிங்க? யார் கிட்டயாவது கேட்டிருக்கீங்களா?'

‘யார் கிட்ட போய் கேட்கறது? யார் இருக்காங்க?'

‘அப்புறம் எப்பிடிதாங்க பணம் வரும்?'

‘வேற என்ன? ஓவர்டைம்தான். நாளையில இருந்து கொடுக்கறதா சொல்லி இருக்காங்க. ஒரு நாளைக்கு இருநூறு ரூபான்னா, அஞ்சு நாள்ல வந்துடும்'

‘என்னங்க இது? ஏற்கெனவே, காலையில போனீங்கன்னா, ராத்திரி பத்து மணிக்குதான் வர்றீங்க. இதுல ஓவர்டைம் வேறன்னா?'

‘அதுக்கு என்ன செய்யறது? ஓவர்டைம்னா, அன்னன்னைக்கிக் கைமேல கூலி கொடுத்துடுவாங்க. சம்பள நாள் வரைக்கும் காத்துக்கிட்டு இருக்க வேணாம். முக்கியமா யார் கிட்டேயும் போய் கெஞ்சிக்கிட்டிருக்க வேணாம் பாரு'.

கூடுதலாகப் பணம் தேவைப் படுகிறதா? ஒரே வழி, கூடுதலாக உழைக்க வேண்டும். இதுதான் தொழிலாளர்களின் நிலை. உலகமெங்கும்.

இதில் உள்ள இன்னொரு சமன்பாடு புரிகிறதா? உழைப்பு முதலில். ஊதியம் பிறகு. காலம் காலமாக ஓடாய் உழைத் தாலும், ‘முதலில் உழைப்பைத் தா. பிறகு கூலியைக் கேள்' என்பதுதான் விதி.

வர்க்க பேதம்

கவனித்தீர்களா? ‘யார் இருக்காங்க?'

இக்கேள்வி, மாதம் ஒருமுறையேனும் எழும். இதுவே நாள்தோறும் காதில் விழுமானால்? நிலைமை ரொம்ப மோசம். யாருமே இல்லையா? இருக்கிறார்கள். பணம் தந்து உதவத்தான் யாரும் இல்லை. தெரிந்தவர்கள் அனைவருமே விளிம்பு நிலையில் இருப்பவர்கள். என்ன செய்ய முடியும்?

ஒரு ஏழைக்கு நண்பன் மட்டுமல்ல. பகைவன்கூட ஏழையாகவே இருக்கிறான். யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். ஒரு பிச்சைக்காரன், இன்னொரு பிச்சைக்காரனைப் பார்த்துத்தான் பொறாமைப்படுகிறான்!

ஏழைகளுக்கும் செல்வந்தருக்கும் இடையே இணைக்கப்படாத தூரம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதுதான் வர்க்க பேதம். சரி, எதற்கு இந்த விவரம் இப்போது?

வர்க்க பேதத்துக்கான தீர்வைப் பொருளாதாரம் மட்டுமே வழங்க முடியும். பொருளாதாரப் பாடத்தின் பங்களிப்பு இங்குதான் மிக அதிகமாக இருக்க வேண்டும். இருக்கிறதா? நாட்டுக்கு நாடு காலத்துக்குக் காலம் மாறுபடும்.

உழைப்பே மூலம்

ஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படைக் காரணியாக, உற்பத்தியில் மூலப் பொருளுக்கு இணையாக முக்கிய இடம் வகிப்பது தொழிலாளர்களின் உழைப்பு.

ஏற்றுக்கொள்ளத்தக்க பணி நேரம், ஆரோக்கியமான பணிச் சூழல், குறைந்தபட்சக் கூலி நிர்ணயம், ஊக்கத் தொகை, போனஸ், வைப்பு நிதி, காப்பீடு, கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு வேலை, பணி ஓய்வுத் தொகை, லாபத்தில் பங்கு, நிர்வாகத்தில் உரிய அதிகாரம் என இவை ஒவ்வொன்றையும் பொருளாதாரப் பாடம் வலுவாக ஆதரிக்கிறது.

ஆற்றல் மிக்க, இணக்கமான தொழிலாளர்களால், உற்பத்தித் திறன் வெகுவாக அதிகரிக்கும். பதிலுக்கு, நிர்வாகம் என்ன செய்ய வேண்டும்? குறைந்தபட்ச நியாயமான கூலியாவது தர வேண்டும்.

உற்பத்தியில் ஏற்படும் நேரடி விளைவு, லாபத்தில் உருவாகும் ஏற்றம் அல்லது சரிவு, சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் எனப் பல்வேறு கோணங்களில் அணுக வேண்டிய பிரச்சினை இது.

வீட்டு வேலைக்கு வருகிற பணிப்பெண் இப்படிச் சொல்லக் கேட்டிருக்கிறோம்: “கட்டுப்படி ஆவாதும்மா. ஆயிரம் ரூபா கொடுங்க. ஒரு மணி நேரம்தான் இருப்பேன். அதுக் குள்ள என்ன வேலை வேணும்னாலும் வாங்கிக்குங்க. இங்கே முடிச்சுட்டு நான் வேற வேலைக்குப் போணும்".

இந்த அளவுக்குக் கறாராக எப்போது பேச முடியும்? ஆமாம். ‘டிமாண்ட்' அதிகம். ‘சப்ளை' குறைவு.

‘நீங்க சும்மா இருங்க. உங்களுக்கு என்ன தெரியும்? ஆள் கிடைக்கிறதே எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? கமலா மாமி சொல்லித்தான் வந்துருக்கா. ரொம்ப கண்டிஷன் எல்லாம் போட்டா, வேணாம்னுட்டு போயிட்டே இருப்பா'.

இருமுனை ‘தேவை'

தேவை, சப்ளை இரண்டும்தான் கூலியை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. சப்ளை குறைவைப் பார்த்தோம். தேவை?

இதற்கு இரண்டு முனைகள் உள்ளன. எஜமானரின் தேவை. தொழிலாளரின் தேவை. எங்கே தேவை அதிகம் இருந்து, போதுமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இல்லையோ, அங்கே மிக நிச்சயமாகக் கூலி மிக அதிகமாகவே இருக்கும். நிலைமை இதற்கு எதிர்மாறாக இருந்தால்? கூலி மிகக் குறைவாக இருக்கும்.

ஏழ்மை, வறுமை சூழ்ந்த சமுதாயத்தில்? கையில் பணமின்றி வாடுகிற தொழிலாளர்கள் நிரம்பி இருந்தால்? அநியாயத்துக்குக் கூலி குறைவாக இருக்கும். மனித உறவுகள், இதில் முக்கியம்.

‘நீங்க சொல்றது சரிதான்மா. கமலா மாமி வீட்டுல ஐநூறு ரூபாய்க்குத்தான் செய்யறேன். அவங்களைப் பொறுத்த வரைக்கும், நான் வேலைக்காரி இல்லை. அவங்களும் எஜமானி இல்ல. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டோம். சண்டை எல்லாம் கூட போட்டுக்குவோம். ஆனாலும் அவங்களும் என்னை விட மாட்டாங்க. நானும் அவங்களை விட மாட்டேன்.

எங்க வீட்டுல என்ன நல்லது கெட்டது நடந்தாலும் அவங்க இருப்பாங்க. பணமாம்மா பெருசு? பணம் இன்னைக்கி வரும், நாளைக்குப் போவும். நல்ல மனுஷங்க கிடைப்பாங்களா?'

பார்த்தீர்களா? பணத்தைப் பற்றி, கூலித் தொழிலாளர்களின் மதிப்பீடு இது.

ஆனால் ஏனோ, பணத்திலேயே புரள்பவர்களிடம் இத்தகைய சிந்தனை, அதிகம் வருவதில்லை.

கூலி கோட்பாடு

சரி. இந்தக் கூலி / ஊதியம் பற்றிய பொருளாதாரக் கோட்பாடுகள் என்னதான் சொல்கின்றன? ஆளாளுக்கு ஒன்று என கணக்கின்றிக் கிடக்கின்றன. முக்கியமான சில இவை:

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘நவீனப் பொருளாதாரத்தின் தந்தை' என்றழைக்கப்படும் ஆடம் ஸ்மித், ‘தொழிலாளர்களுக்கான கூலி என்கிற வகையில் ஒரு நிதி தனியே எடுத்து வைக்கப்படுகிறது. இந்தத் தொகை வலுவாக இருந்தால், கூலியும் வலுவாக இருக்கும். இது மெலிந்திருந்தால் கூலியும், மெலிந்தே இருக்கும்' என்கிறார்.

நாமேகூட வீடு மாற்றுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். பேக்கிங், வண்டி வாடகை, பொருட்களை ஏற்றி இறக்க என்று, எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு தொகையை நிர்ணயித்திருப்போம்தானே? அதன் அடிப்படையில், கூலி வழங்குகிறோம். ஒருவர், தாராளமான‌ கூலி பெறுவதும், இன்னொருவர் தகராறு செய்து நியாயமான கூலி பெறுவதும் எதனால்?

‘இது இதுக்கு இவ்வளவு'ன்னு ஒதுக்கி வைத்துச் செலவு செய்கிறோம். அதன்படி, தொழிலாளர்களுக்கான கூலி என்கிற கணக்கில், இவ்வளவு என்று தனியே எடுத்து வைத்துவிடுகிறோம். இந்த அளவு வரை தரலாம். த‌ருகிறோம். ஆக, ஆடம் ஸ்மித்தின் கோட்பாடு, அனேகமாக சரியாகவே படுகிறது.

‘உயிர் வாழத் தேவையான அளவுக்குக் குறைந்தபட்ச பணம் மட்டுமே கூலியாகத் தரப்படுகிறது' என்கிறார் இன்னொரு பொருளாதார நிபுணர் டேவிட் ரிகார்டோ.

‘தான் பெறுகிற கூலியின் மதிப்பை விட, மிக அதிகமாகவே தனது உழைப்பை நல்குகிறார் தொழிலாளி. இந்தக் கூடுதல் உழைப்பின் மூலம் கிட்டும் லாபம் மொத்தமும் முதலாளிக்குப் போய்ச் சேர்கிறது' என்கிறார் இன்னொருவர்.

அவர், கார்ல் மார்க்ஸ்.

இன்னும் எத்தனையோ கோட்பாடுகள் உள்ளன. ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் இருந்தாலும், பலப்பல கோட்பாடுகளை முன் வைக்கிறது பொருளாதாரப் பாடம். ஆனாலும், ஒரு செய்தியை மிக ஆழமாகப் பதிவு செய்கிறது.

‘உற்பத்தியில் தொழிலாளர்களின் உழைப்பு, பங்களிப்பு மிக முக்கியமானது.

ஆகவே, இவர்களின் மன நிறைவு, மகிழ்ச்சியே உற்பத்தித் திறனை மேம் படுத்தும்' என்பதுதான் அந்தச் செய்தி.

ஆம். இயந்திரங்களால் அல்ல. இயந்திரங்களை இயக்கும் தொழிலாளர்களால்தான், ஒரு நாட்டின் பொருளாதாரம் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

தொழிலாளர்கள், அவர்களின் உழைப்பு ஒரு பக்கம். இனி, மறு பக்கத்துக்குப் போவோமா?

(வளரும்)

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்