நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உலக கிரிக்கெட்டை வேகப் பந்து வீச்சாளர்கள்தான் ஆண்டு கொண்டிருந்தனர். இந்தியத் துணைக் கண்டத்துக்கு அப்பால் உள்ள கிரிக்கெட் அணிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் பகுதிநேரப் பந்து வீச்சாளர்களைப் போலத்தான் அணியில் இடம்பிடித்துக்கொண்டிருந்தனர். அதுவும் லெக் ஸ்பின்னர்களைப் பார்ப்பதே அரிதாக இருந்த காலத்தில், சரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்ன் காலடி எடுத்து வைத்தார்.
1992-ம் ஆண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடியது. இதில் சிட்னியில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில்தான் 22 வயதான ஷேன் வார்ன் அறிமுகமானார். இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் முன்பு ஷேன் வார்ன் வெறும் 7 முதல் தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். ஏராளமான முதல் தரப் போட்டிகளில் விளையாடியும் சர்வதேச வாய்ப்பு கிடைக்காமல் ஓய்வு பெறுவோர் கிரிக்கெட்டில் அதிகம். ஆனால், ஒற்றை இலக்கப் போட்டிகளில் மட்டுமே விளையாடி சர்வதேச அணியில் இடம்பெறும் அளவுக்குத் தன் மீது அழுத்தமாகப் பார்வையைப் பதிய வைத்தார் வார்ன்.
இந்தியாவுக்கு எதிரான முதல் சர்வதேச டெஸ்ட் போட்டி ஷேன் வார்னுக்குச் சொல்லிக்கொள்ளும் வகையில் அமையவில்லை. 159 ரன்களை விட்டுக்கொடுத்து ஒரே ஒரு விக்கெட்டைத்தான் வார்ன் வீழ்த்தினர். அந்த விக்கெட், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடையது (இப்போட்டியில் இவர் 206 ரன்களைக் குவித்தார்). முதல் டெஸ்ட் போட்டியில் தடுமாறிய வார்ன், அடுத்த ஆண்டிலேயே நூற்றாண்டின் சிறந்த பந்தை வீசி அழியாப் புகழைத் தேடிகொண்டார். இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங்கை போல்ட் ஆக்கிய ஷேன் வார்னின் அந்தப் பந்து, எங்கே பிட்ச் ஆகி எப்படி ஸ்டம்பை வீழ்த்தியது என்று தெரியாத அளவுக்கு கேட்டிங் ஒரு கணம் குழம்பிப் போய் நிற்கும் காட்சி யூடியூப் அலைவரிசையில் மிகப் பிரபலம்.
அப்போது தொடங்கி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் வரை சுழல் ராஜாவாகவே வலம் வந்தார் வார்ன். எதிரணியின் பேட்டர்களுக்கு சிம்மசொப்பனமாக இருந்த வார்னின் பந்து வீச்சு, இந்திய அணியிடம் மட்டும் பெரிய அளவில் சோபிக்காமல் போனது ஆச்சரியமான நிகழ்வு. இந்தியாவோடு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43 விக்கெட்டுகளை மட்டுமே அவரால் வீழ்த்த முடிந்தது. இதில் 5 விக்கெட்டுகளை ஒருமுறை மட்டுமே அவரால் எடுக்க முடிந்தது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் எடுக்கும் மெஷின் போல அவர் விளையாடிய வேளையில் ஒரு நாள் போட்டிகளிலும் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது நிரூபணம் ஆனதால், ஷேன் வார்ன் 2003 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில் பங்கேற்க ஓராண்டு தடை விதிக்கப்பட்டது. அதிலிருந்து வார்ன் மீண்டு வருவாரா என்கிற கேள்வி எழுந்தபோது, மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குள் அடியெடுத்து வைத்தார். ஆனால், ஒரு நாள் போட்டியிலிருந்து விலகி, டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். தடைக்குப் பிறகு 3 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வார்ன், 2007-ல் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய சிட்னி மைதானத்திலேயே கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி ஓய்வு பெற்றார்.
உலகில் அதிக டெஸ்ட் விக்கெட் வீழ்த்தியவர்களில் முதல் இரு இடங்களில் இருக்கும் இலங்கையின் முத்தையா முரளிதரனுக்கும் ஷேன் வார்னுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவருமே 1992-ல்தான்சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினர். விக்கெட் வீழ்த்துவதில் இருவருக்குமே கடும் போட்டியிருந்தது. ஒரு கட்டத்தில் இருவருமே அடுத்தடுத்து முன்னிலையில் இருந்திருக்கிறார்கள். டெஸ்ட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் வார்ன்தான். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளைச் சேர்த்து ஒட்டுமொத்தமாகச் சர்வதேச அளவில் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் இருவர் மட்டுமே. முரளிதரன் 1347, ஷேன் வார்ன் 1001. இதில் ஆயிரம் விக்கெட்டுகளை இரண்டாவதாக வீழ்த்தியவர் ஷேன் வார்ன். இப்படித் தொடக்கம் முதலே போட்டி போட்ட ஷேன் வார்ன், மரணத்திலும் முந்திக்கொண்டதுதான் சோகம்!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
3 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago
சிறப்புப் பக்கம்
4 days ago