மழைக்காலம் வந்து விட்டாலே தெருவில் ஓடும் மழை நீரில் காகிதக் கப்பல்விட்ட அந்த நாள் ஞாபகம் வரும். பெரும்பாலானவர்கள் காகிதக் கப்பலை எளிதாகச் செய்துவிடுவார்கள். காகிதத்தைச் சதுரமாக மடித்து நாற்புறமும் பூவிதழை விரிப்பதுபோல விரித்தால் காகிதக் கப்பல் தயார். மழை நீரில் விட்டுவிடலாம். இந்தக் காகிதக் கப்பல் செய்யத் தெரியாதவர்களே இருக்க முடியாது. இவ்வாறாகப் பரவலாக நம் எல்லோரிடமும் காகிதக் கலையின் மீது அறியாத ஈர்ப்பு உண்டு. ஆனால் இந்த ஈர்ப்பு, நீரோட்டத்தைக் காணும்போது மட்டும் மழைக்கால காளான் போல வந்துவந்து போகிறது.
நாம் குழந்தை விளையாட்டாகக் காணும் இதை ஜப்பான் நாடு கலை நுட்பமாக மதிக்கிறது. காகிதத்தை மடித்து வெட்டிச் செய்யும் இந்தக் கலைக்குப் பெயர் ஆரிகமி (origami). ஜப்பானிய மொழியில் ஆரி என்றால் வெட்டுதல் என்றும், கமி என்றால் காகிதம் என்றும் பொருள். இந்தக் கலை ஜப்பானில் 17-ம் நூற்றாண்டு வாக்கில் தோன்றியது. இது நவீன கலை வடிவமாக மதிக்கப்படுகிறது. இதை அவர்கள் காகிதச் சிற்பம் என அழைக்கின்றனர். 19-ம் நூற்றாண்டு வாக்கில் இந்தக் கலை வெவ்வேறு நாடுகளுக்கும் பரவியது. பிறகு இந்தக் கலை ஜப்பானியத் திருமண விழாக்களை அலங்கரித்தது. வெவ்வேறு கலாச்சார விழாக்களும் ஆரிகமி கலை வடிவங்களைப் பயன்படுத்தினர்.
இந்த ஆரிகமி வடிவத்தில் இருந்து பிறந்ததுதான் கிரிகமி (Kirigami) வடிவம். கிரி என்றால் ஜப்பானிய மொழியில் வெட்டுதல் எனப் பொருள்.
ஜப்பானில் தோன்றிய இந்தக் கலையில் நம்மூரைச் சேர்ந்த ரமேஷ் விற்பன்னராக இருக்கிறார். ரமேஷுக்குச் சிறு வயதிலேயே காகிதக் கலையின் மீது ஈர்ப்பும் ஆர்வமும் வேரூன்றிவிட்டது, “எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இது ஒரு கலை வடிவம் என்று தெரியாமலேயே இதில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. என் முதல் காகித வடிவம் பூதான். வண்ணக் காகிதத்தில் அங்கங்கே வெட்டிப் பிரித்தால் பூப்பூவாய் வந்தது. இதனைப் பார்த்து பலரும் அதிசயிக்க, பூவைத் தவிர வேறு வடிவங்களும் செய்தலில் ஆர்வம் ஏற்பட்டது.
என் கத்திரி காகிதத்தில் விளையாட புதுப் புது வடிவங்கள் தோன்றின. அவற்றை இன்றைய கணக்கில் கொண்டால் எண்ணிக்கையில் நாலாயிரத்தைத் தாண்டிவிட்டது” என்கிறார்.
இப்படித் தெரியாமலேயே இந்தக் கலையில் காகிதச் சிற்பங்களை உருவாக்கி வந்தார் ரமேஷ். தொடக்கத்தில் இவர் நடத்திய ஒரு காகிதச் சிற்பக் கண்காட்சியைப் பார்வையிட வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர்தான் இக்கலைக்குப் பெயர் கிரிகமி என்றும் இது ஜப்பானின் புகழ்பெற்ற கலை என்றும் தெரிவித்தார்.
“இக்கலையை யாருடைய வழிகாட்டலும் இல்லாமல் நானே கற்று, கண்காட்சியும் வைத்த பின்தான் இக்கலையின் பெயரே எனக்குத் தெரிய வந்தது” எனச் சுவாரஸ்யமாகச் சொல்கிறார் ரமேஷ்.
இவர் உருவாக்கியதில் முக்கியமானவை சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனை வடிவமைத்ததுதான். சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே அமர்ந்து, பார்த்து பார்த்து ஒரு ஓவியன் போல, கவனமாக வெட்டி வெட்டி அச்சு அசலாக உருவாக்கியுள்ளார். மேலும் சென்னையின் பல நினைவிடங்களை காகிதத்தில் செதுக்கி இருக்கிறார். இவரின் இந்தத் திறமைக்குக் கெளரவம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டு பூம்புகார் கைத்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய கலையான இதற்கு இந்தியாவில் பெரிய கவனம் கிடைக்கவில்லை. பெரும்பாலும் யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இந்தக் கலையில் ரமேஷ் புதிய வடிவங்களை அமைத்து வருகிறார். அவற்றையெல்லாம் பத்துப் பன்னிரெண்டு சாக்கு மூட்டையில் கட்டி வைத்து இருக்கிறார். இந்தக் கலை வடிவங்களைச் சரியானபடி பாதுகாக்க அவரது வாடகைக் குடிசை வீட்டில் இடமில்லை என்பது துரதிர்ஷ்டமே.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
2 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
5 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago