வணக்கத்திற்குரிய காதலியே
நீ பூ
நான் நார்
நாம் பூமாலை...
எனக்கு விபரம் தெரிந்து, நான் முதன் முதலில் படித்த சுவர்க்கவிதை இதுதான். எனது கல்லூரிக் காலத்தில் அரியலூர், அரசு மருத்துவமனையில், உடல்நிலை சரியில்லாமல் வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். அப்போது சுவரில் கிறுக்கப்பட்டிருந்த மேற்கூறிய கவிதையைப் படித்துவிட்டு எனது உடல்நிலை மேலும் மோசமானது. அக்கவிதையின்(?) பாதிப்பில் சிறிது காலம் என் மனதில், 'நான் பால்… நீ டிகாஷன்… நாம் காபி', 'நான் தயிர்… நீ நீர்… நாம் மோர்', 'நீ பொட்டுக்கடலை… நான் தேங்காய்… நாம் சட்னி…' என்று ஐந்து வினாடிகளுக்கொரு முறை கவிதை தோன்றிக்கொண்டே இருந்தது. எவ்வளவு முயன்றும், எனக்குள் பெருகி ஓடிக்கொண்டிருந்த அந்தக் கவிதை ஊற்றை என்னால் அடைக்கவே முடியவில்லை.
எந்தப் பொருளைப் பார்த்தாலும், வெயிலில் வியர்ப்பது போல், தானாகவே கவிதை கன்னாபின்னாவென்று வந்தது. கடிகாரத்தைப் பார்த்தால், 'நீ பெரிய முள்… நான் சின்ன முள்… நாம் கடிகாரம்' என்று தோன்றியது. ஒரு சுவரைப் பார்த்துவிட்டு, 'நீ சிமென்ட்… நான் செங்கல்… நாம் சுவர்…' என்று நண்பர்களிடம் கவிதை சொல்ல… அவர்கள் என்னைத் திகிலுடன் பார்த்தார்கள். பிறகு அவர்கள், 'நீ…' என்று நான் பேச ஆரம்பித்தாலே, கவிதைதான் சொல்கிறேன் என்று நினைத்துக்கொண்டு தெறித்து ஓடினார்கள்.
இவ்வாறு எனது சிறுவயது முதல், நான் சென்ற அனைத்து ஊர்களிலும், இது போன்ற ஏராளமான சுவர்க் காதல் கவிதைகளைப் பார்த்து வருகிறேன். தொடர்ந்து இவற்றைப் பார்த்தபோது, இது போன்ற சுவர்க்கவிதைகளுக்கென்று, யாரும் சொல்லித் தராமலே, ஒரு பிரத்யேக வடிவம் உருவாகிவிட்டதைக் கவனிக்கமுடிந்தது. இந்த சுவர்க் காதல் கவிதைகளைப் பொதுவாக காதலுக்கு முன்பு, காதலிக்கும்போது, காதலித்த பிறகு என மூன்று சுச்சுவேஷன்களில் எழுதுகிறார்கள்.
அனைத்து சுவர்க் கவிஞர்களும் பேசி வைத்துக்கொண்டது போல, பின்வரும் வார்த்தைகளைத்தான் பரவலாக உபயோகிக்கிறார்கள்: நீ, நான், வானம், நிலா, நட்சத்திரம், உயிர், நினைவு, தீ, கொலுசுச்சத்தம், வளையல், பூ, ஜிமிக்கி, இரவு, இதயம், வானவில், விழிகள், பார்வை ஆகிய வார்த்தைகளை… மை காட்… மழையை விட்டுவிட்டேன் பாருங்கள். இந்த 18 வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு இறுதியாக, 'நீ இல்லையென்றால் உயிர் உறைந்துவிடும்… இதயம் எரிந்துவிடும்… கல்லீரல் கரைந்துவிடும்' என்று பயங்கர டெர்ரராக முடிக்கிறார்கள். ஒரு சட்டம் போட்டு, இந்த 18 வார்த்தைகளையும் தமிழிலிருந்து தூக்கிவிட்டால், நமது சுவர்கள் எல்லாம் சுத்தமாகிவிடும்.
இதில் அதிகம் பயன்படுத்தப்பட்டு, மரண அடி வாங்கியிருக்கும் சொல் இதயம். சாதாரணச் சொற்களுக்கு முன்னால் இதயத்தைப் போட்டால், அது கவிதைச் சொல்லாகிவிடுகிறது. உதாரணங்கள்: இதயநிலா, இதயமழை, இதயச்சுடர், இதயகீதம், இதயதீபம், இதயவானம்… சில அபாரமான சுவர்க்கவிஞர்கள், ஒரே இதயத்தில்… சை… ஒரே கவிதையில் இரண்டு இதயம், மூன்று இதயத்தை எல்லாம் பயன்படுத்துகிறார்கள். அடுத்து பயங்கர அடி வாங்கியிருக்கும் சொல்… பார்வை. ஏறத்தாழ அனைத்து சுவர்க் காதல் கவிஞர்களும் பார்வை மழையில் நனைகிறார்கள். பார்வைத் தீயில் கருகுகிறார்கள். பார்வை நிழலில் இளைப்பாறுகிறார்கள். பார்வைக் கடலில் குளிக்கிறார்கள். பார்வை மேகத்தில் மிதக்கிறார்கள்… பார்வைக் குளத்தில் மீன் பிடிக்கிறார்கள். பார்வைப் போர்வைக்குள் தூங்குகிறார்கள். பார்வை வானில் பறக்கிறார்கள்.
இந்தச் சுவர்க்கவிதைகளின் பிரத்யேக அம்சம்… அடுக்குமொழி. டி.ராஜேந்தரே வெலவெலக்கும் அளவுக்கு நம் ஆட்கள் அடுக்கு மொழியில் புகுந்து விளையாடுகிறார்கள். அதில் ஒன்று:
என் இதயம் திருடிய கள்ளி
நாம் படித்ததோ ஒரே பள்ளி
அப்புறம் ஏன் போகிறாய் தள்ளி?
என்று எங்கள் கல்லூரி சுவரில் படித்த ஒரு கவிதை, அதன் கவிதை நயத்திற்காக, எங்கள் கல்லூரியில் நீண்ட நாட்கள் பேசப்பட்டது.
உலகம் முழுவதும், இது போன்று பொதுச் சுவர்களில் எழுதும் மற்றும் படங்கள் வரையும் பழக்கம் உள்ளது. ஆதி மனிதன் குகைச் சுவர்களில் ஓவியங்கள் மற்றும் எழுத்துகளைச் செதுக்கிய காலத்திலேருந்தே, நம்மாட்களுக்கு இந்தப் பழக்கம் ஆரம்பித்துவிட்டது. ஆனால் நம் நாட்டில் இது காதல் கவிதைகள் எழுதுதல், ஆபாசப் படங்கள் வரைதல்… என்று தேங்கிவிட்டது. ஆனால் மேலை நாடுகளில், இது மேம்படுத்தப்பட்ட ஒரு கலை வடிவமாக உள்ளது. இதை 'கிராஃபிட்டி' என்கின்றனர்.
பலரும் சமூக அக்கறையுடன், தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு இதைப் பயன்படுத்தியதோடு, அரசியல் மற்றும் சமூகப் போராட்டங்களுக்கான களமாகவும் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் எழுதுவதை விட, ஓவியங்கள் வரைவதிலேயே அதிக கவனம் செலுத்துகிறார்கள். பல்வேறு விஷயங்களில் தங்கள் கருத்துகளை எழுத்து மற்றும் ஓவியங்கள் மூலமாக வெளிப்படுத்தும் இவர்கள், கிராஃபிட்டி கலைஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இதில் மிகவும் புகழ்பெற்றவர், இங்கிலாந்தைச் சேர்ந்த பான்ஸ்கி. இவருடைய அரசியல் மற்றும் போர் எதிர்ப்புச் சுவர் ஸ்டென்சில்கள் பரபரப்பாகப் பேசப்பட்டவை. இவரது படைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸ் சுவரிலிருந்து, பாலஸ்தீனச் சுவர்கள் வரை காணலாம். ஆனால் இவரது கருத்துகள் அரசுக்கு எதிராக இருப்பதால், கைதைத் தவிர்ப்பதற்காக தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளாமலே இருந்து வருகிறார். மேலும் லீ, டோன்டி போன்றவர்களும் மிகவும் பேசப்படும் கிராஃபிட்டி கலைஞர்கள்.
இவ்வாறு அவர்கள் பொதுச் சுவர்களை நாகரிகமான முறையில் பயன்படுத்தினாலும் கூட, பொதுச் சொத்துகளைச் சீரழிக்க இயலாது என்ற அடிப்படையில், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் நமது சுவர்களில், அரசியல் சார்ந்த சுவர் கோஷங்கள் தவிர(அது கூட இப்போதெல்லாம் குறைந்துவிட்டது), பெரும்பாலும் நம் இளைஞர்கள் காதல் கவிதைகளைத்தான் கிறுக்கி வருகின்றனர். எதற்காக இம்மாதிரி செய்கிறார்கள்? இதற்குப் பின்னால் உள்ள உளவியல் என்ன?
எழுத்தாளர் சுஜாதா ஒரு கட்டுரையில், 'இந்த உலகில் எல்லோருக்கும், சில நிமிடங்களாவது பிரபலமாக இருக்கவேண்டும் என்ற இச்சை உள்ளது. அதனால்தான் கதை எழுதுகிறார்கள். கவிதை எழுதுகிறார்கள். கோயில் ட்யூப்லைட்டில் 'உபயம்' என்று தன் பேரை எழுதுகிறார்கள். காரைக் கயிறு கட்டி இழுக்கிறார்கள்…' என்று எழுதியிருக்கிறார். சுருக்கமாகச் சொல்வதென்றால், தன் மீது பிறரது கவனத்தை ஈர்ப்பதாகும்.
சுவரில் காதல் கவிதைகள் எழுதுவதையும், இந்த 'அட்டென்ஷன் ஸீக்கிங் பிஹேவியரி'ல்தான் சேர்க்கவேண்டும். தன்னிடம் உள்ளதாக அவர்கள் கருதும் திறமையை, அவர்களுடைய கண்ணுக்குத் தெரியாத பார்வையாளர்களிடம் கொண்டு செல்கிறார்கள். தன் எழுத்தைப் பலரும் படிப்பார்கள் என்பதே, அவர்களுக்கு மிகவும் கிளர்ச்சியூட்டும் விஷயமாக உள்ளது. அதனால்தான் இது போன்ற கவிதைகளை எங்கோ மூலையில் இருக்கும் சுவர்களை விட, பார்வையாளர்கள் அதிகமாக வரும் சுற்றுலாத் தலங்களில்தான் ஏராளமாக எழுதுகிறார்கள்.
இந்தச் சமூக வலைதள காலத்தில், மனிதர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கு, எவ்வளவோ வழிகள் உள்ளன. அதை விட்டுவிட்டு, பொதுச்சுவர்களிலும், ரூபாய் நோட்டுகளிலும், சுற்றுலாத் தலங்களான கோட்டைகள், சிற்பங்கள் போன்றவற்றிலும், ‘நீ ஃபேஸ்…. நான் புக்… நாம் ஃபேஸ்புக்' என்பது போன்று கிறுக்குவது, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரியம் அல்ல.
கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: grsnath71@gmail.com
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago