பொருள்தனைப் போற்று! 10 - இன்னும் ஒண்ணு எவ்வளவுங்க?

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘எத்தனையா?

ஒரு... இருநூறு அழைப்பிதழ் வேணும். எவ்வளவு ஆகும்?'

‘ஊம். ஆறாயிரம் ரூபா கிட்ட ஆகும்'.

‘என்னது? ஆறாயிரமா? ஒரு அழைப்பிதழ் முப்பது ரூபாயா? ரொம்ப அதிகமா இருக்கே'.

‘அப்படி இல்லை. இதுவே ஐநூறு வாங்குனீங்கன்னா, பத்தாயிரம்தான் ஆவும். ஆயிரம் அடிச்சா, இன்னும் குறையும்'.

பொதுவாக, தயாரிக்கப்படும் பொருளின் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக, விலை குறையும். ஏன் இப்படி?

மூலப் பொருளுக்கான விலை, தயாரிப்புச் செலவுகள் மட்டுமே கூடும். ஒரு ரூபாய் கூட ‘ஓவர்ஹெட்' செலவுகள் வகையில், கூடுதலாகச் சேராது. இந்தக் கோட்பாட்டின்படி, ஒரு பொருள் பிரம்மாண்ட எண்ணிக்கையில் தயாரிக்கப்படும்போது, அதன் விலை குறைவாய் இருக்கும். சாமான்யர்களுக்குச் சாதகமாக இருக்கும். இந்த எதிர்பார்ப்பிலும்தான் இத்தகைய தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இந்த வகைத் தயாரிப்பு, ஆங்கிலத்தில் ‘மாஸ் ப்ரொடக்க்ஷன்' (mass production) எனப்படுகிறது!

சரி. ஐநூறு அழைப்பிதழுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஆகிறது. இதுவே, ஐநூற்று ஒன்று, அதாவது கூடுதலாக ஒன்று, வாங்குகிறோம். இப்போது?

பத்தாயிரத்துப் பதினெட்டு ரூபாய் கேட்கிறார் என்று கொள்வோம்.

ஆக, ஒரு அழைப்பிதழ் கூடுதலாக அச்சடிக்க, பதினெட்டு ரூபாய் ஆகிறது.

இதைத்தான் ‘மார்ஜினல் காஸ்ட்' என்கிறோம். (பொதுவாக, ‘காஸ்ட்' என்பது, தயாரிப்பவர் கோணத்தில் இருந்தே சொல்லப்படுவது. புரிந்துகொள்ள எளிமையாக இருக்கும் என்பதற்காக, வாங்குபவராக இருந்து பார்க்கிறோம்).

ஆப்பரேட்டிங், மார்ஜினல்... வித்தியாசம்

இப்போ, ஒரு கேள்வி.

ஆப்பரேட்டிங் காஸ்ட், மார்ஜினல் காஸ்ட். என்ன வித்தியாசம்?

கூடுதல், குறைவு எல்லாம் இல்லை. பராமரிப்புக்கு என்று ஆகிற செலவு.

அதாவது, பேருந்தில் கால் வைத்தாலே, குறைந்தது இவ்வளவு என்று வசூலிக்கிறார்கள் அல்லவா. அது ஆப்பரேட்டிங் காஸ்ட். கூடுதலாக ஒரே ஓர் அலகு (யூனிட்) தயாரிக்க, கூடுதலாக எவ்வளவு செலவாகுமோ, அதுவே மார்ஜினல் காஸ்ட்.

ஆப்பரேட்டிங் காஸ்ட் + மார்ஜினல் காஸ்ட் = டோட்டல் காஸ்ட். (ஏறத்தாழ)

மார்ஜினல் காஸ்ட் குறையக் குறைய, தயாரிப்பவருக்கு நல்லது. வேறு ஒன்றும் இல்லை. விலை அனேகமாக அப்படியேதான் இருக்கப் போகிறது. ஆனால், தயாரிப்புச் செலவு குறைகிறது. இதனால், லாபம் நிறைய கிடைக்கும்.

‘கூடுதலாக ஒன்று' என்பதைத்தான் ‘மார்ஜினல்' என்கிறோம். ‘மார்ஜினல் யுடிலிடி' (marginal utility) என்றால்? ‘கூடுதல் பயன்பாடு'. அப்படியானால், ‘டிமினிஷிங் மார்ஜினல் யுடிலிடி'க்கு (diminishing marginal utility) என்ன அர்த்தம்?

நுண் பொருளாதாரத்தின் (மைக்ரோ எகனாமிக்ஸ்), அடுத்த முக்கியப் பகுதி இது. ‘குறைந்துகொண்டே செல்லும்' பயன்பாடு!

கரடுமுரடாக, கடினமாக இருக்கிறதா? அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்லை.

சோறு... சோறு...

அசுரப் பசி, அகோரப் பசி, கொலைப் பசி. கண்ணை இருட்டிக்கிட்டு வருது.

இலை முன் உட்காருகிறோம். சாப்பாடு பரிமாறுகிறார்கள். எப்படி உண்போம்?

எவ்வளவு நேரத்துக்கு அள்ளி அள்ளிச் சாப்பிடுவோம்? முதல் ஒருசில பிடிகள்தான். அப்புறம்? ‘வேகம்' குறைந்துவிடும்தானே? என்னதான் பசியாக இருந்தாலும், முதல் ஒரு பிடி சோறுதான் பசி ஆற்றுகிறது. அதன் பிறகு ருசிக்காக. பிறகு வயிறு நிறைவதற்காக. அதற்கும் மேல்? முடியாமல், வேண்டா வெறுப்பாகச் சாப்பிடுவோம்.

அதே இலை. அதே சாப்பாடு. அதே மனிதர். சாப்பாட்டின் பயன்பாடு மட்டும் மாறி விட்டது. ஐஸ்க்ரீம் சாப்பிடும் குழந்தையைப் பார்ப்போம். இன்னமும் எளிதாகப் புரியும்.

ஐஸ்க்ரீமைக் கையில் தந்தவுடன் ‘எனக்கு?' என்றால், ‘ஊஹூம்' என்று தலையை மட்டும் ஆட்டுகிறது குழந்தை. சிறிது நேரம் கழித்து, ‘போதும்' என்கிற அளவுக்குச் சுவைத்த பின்னர், தானாகவே, ஐஸ்க்ரீமைத் தன் தாயிடம் நீட்டுகிறது. என்ன செய்தி?

‘இப்போதைக்கு இதன் பயன்பாடு முடிந்துவிட்டது'.

முதல் ஒரு பிடி சோறு, ஐஸ்க்ரீமின் முதல் சுவை... இவை மதிப்பிட முடியாத அளவுக்குப் பயன்பாடு கொண்டவை. படிப்படியாக அதன் பயன்பாடு குறைந்துகொண்டே வருகிறது. இதைத்தான் பொருளாதாரம் அடையாளம் காட்டுகிறது. பொருளாதாரத்தில் இது, எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்?

‘வாழைக்காய் பொரியல், வாழைப்பூ மசியல், வாழைத்தண்டு குழம்பு. என்ன இது, எல்லாம் வாழை மயமா இருக்கு?'

‘வேற ஒண்ணும் இல்லை. மலையாட்டம் குவிச்சு வச்சிருந்தாங்க. விலை மலிவா இருந்தது. வாங்கியாந்துட்டேன்'.

ஒரு பொருளின் வரத்து (சப்ளை) அதிகமாக இருக்கும்போது அந்தப் பொருளுக்கான ‘டிமாண்ட்' குறைவதற்கும், அதன் விளைவாக விலை குறைவதற்கும் ‘குறைந்துகொண்டே போகும் பயன்பாடு' என்கிற கோட்பாடும் ஒரு வகையில் காரணம்.

மால்கம் மார்ஷல். பொருளாதாரப் பாடத்தின் பிதாமகர். ஒரு பெருத்த சந்தேகத்துக்கு விடை தெரியாமல் திக்குமுக்காடிப் போனார். ‘கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்கிற ரீதியிலான சந்தேகம் அல்ல. உருப்படியான சந்தேகம்.

காற்று, தண்ணீர்... இதெல்லாம் ஒரு மனுஷனுக்கு எவ்வளவு முக்கியம்?

விலை மதிப்பே இல்லை. ஆனால் ஒரு விலையும் இல்லை. தங்கம், வைரம் இதெல்லாம் அவசியமே இல்லை. ஆனாலும் என்ன விலை விக்குது! இது ஏன்?

மார்ஷலின் கேள்விக்கு விடை பகன்றது, ‘சப்ளை', ‘டிமாண்ட்' கோட்பாடும், அதற்கு அடிப்படையாக அமைந்த ‘குறைந்து கொண்டே செல்லும் பயன்பாடு' தத்துவமும்தான். விரிந்து விரிந்து செல்லும். வியப்புக்கு உள்ளாக்கும் இந்தப் பயன்பாட்டுக் கோட்பாடு.

கற்பனை இழப்பு

‘காஸ்ட்'களில், இன்னும் ஒண்ணு பார்த்துட்டா, இந்தப் பகுதி முடிந்து விடும். அது ‘ஆப்பர்சூனிடி காஸ்ட்' (opportunity cost).

கொஞ்சம் சிக்கலானது இது. ஏன்னா, இது உண்மையான ‘காஸ்ட்' இல்லை. இது ஒரு கற்பனை காஸ்ட். கற்பனைங்கறதுகூட சரி இல்லை. ஒரு கணிப்பு.

‘ஏன்மா. நீதான் ஏற்கெனவே டிகிரி முடிச்சிட்டுயே. அப்புறம் என்ன? முதல்ல இந்த வேலையில சேர்ந்துடு. அப்புறமா வேலையில இருந்தபடியே மேற்கொண்டு படியேன்'.

‘இல்லைப்பா. இதுல எனக்கு மாசம் பத்தாயிரம்தான் சம்பளம். இதுவே எம்.பி.ஏ. முடிச்சுட்டு, வேற நல்ல வேலைக்குப் போனா, ஆரம்பத்துலயே முப்பதாயிரம் கிடைக்கும் இல்லையா?'.

மகளின் விருப்பத்தை ஏற்று எம்.பி.ஏ. சேர்த்து விடுகிறார். கல்விக் கட்டணம் ஓர் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம். ஈராண்டுக்கு இரண்டு லட்சம். இதுதான் எம்.பி.ஏ.வுக்கு ஆன செலவா? அதுதான் இல்லை!

முன்னர் சொன்ன வேலைக்குப் போயிருந்தால், இந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் சம்பளம் வந்திருக்கும்தானே? அது இப்போது போய்விட்டதே. ஆக, இந்த இளைஞியைப் பொருத்த மட்டும், எம்.பி.ஏ.வுக்கு ஆன செலவு, நான்கு லட்சத்து நாற்பதாயிரம். புரிந்து விட்டதுதானே?

ஒன்றை வேண்டாம் என்று தள்ளி விட்டு வேறு ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது ஏற்படுகிற, கற்பனையான இழப்புதான் ‘ஆப்பர்சூனிட்டி காஸ்ட்'. இதையும் சேர்த்தால்தான் சரியான ‘காஸ்ட்' தெரிய வரும்.

இது எப்படி ஒரு பொருளின் விலையில் மாற்றத்தைக் கொண்டு வரும்?

நிதானமாக யோசித்துப் பார்த்தால் தானாகப் புரியும்.

இனி, மூலப் பொருட்கள், இயந்திரங் கள், பயன்பாடு, லாபம்/ நஷ்டம்.

தொழிற்சாலை என்றால், இவ்வளவுதானா? இவற்றைக் கையாள்கிற, இவற்றோடு உறவாடுகிற, இவற்றையே வாழ்வாகக் கொண்டிருக்கிற தொழிலாளர்கள்?

தயாரிப்பு/உற்பத்தியில் நான்கு பங்குதாரர்களை முன்வைக்கிறது பொருளாதாரம்.

1. நிலம் - மண், தரை மட்டுமே அல்ல. தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களும்.

2. தொழிலாளர்கள் - தம் உழைப்பை நல்குகிற அத்தனை பேரும்.

3. முதலீடு - நிதி ஆதாரம்.

4. நிர்வாகம் - கொள்கை முடிவுகளை எடுக்கிறவர்கள். அமலாக்குபவர்கள். இயக்குகிறவர்கள்.

மீண்டும் ஒருமுறை நான்கையும் நிதானமாகப் படித்துப் பார்ப்போம்.

என்ன தெரிகிறது? நான்கில் மூன்று, முதலாளிகளின் கட்டுப்பாட்டில்.

ஒன்று மட்டும் தனியே.

அவர்கள்... தொழிலாளர்கள்!

(வளரும்)

தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்