புறப்படும் புதிய இசை: டிஜிட்டல் கண்ணம்மா!

By ம.சுசித்ரா

பிரம்மாண்டமான ரிக்கார்டிங் தியேட்டரில் நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்துப் பதிவு செய்தாக வேண்டிய கட்டாயம் இன்று இல்லை. வீட்டிலேயே பாடல்களை கம்போஸ் செய்யலாம். ‘ஹோம் ஸ்டூடியோ’ என்கிற வார்த்தை சமீபகாலமாகப் பிரபலம். ஒரு கணிப்பொறி அதிலும் மேக், விண்டோஸ் ஆப்ரேடிங் சிஸ்டம் இருந்தால் அதிவேகமாக வேலைபார்க்கலாம். இசைப் பதிவு செய்து, எடிட்டிங், மிக்சிங் செய்ய டாவ் (DAW) கருவி. பார்க்க டிஜிட்டல் கேமரா மாதிரி இருக்கிறது. சில பல வயர்கள். இருக்கவே இருக்கிறது மைக், ஹெட் ஃபோன்ஸ், ஸ்பீர்க்கஸ். மைக்குக்கு ஒரு எக்ஸ் எல் ஆர் கேபிள், ஸ்பீக்கருக்கு ரெண்டு. இசையமைக்க ஒரு கீபோர்டு அவ்வளவுதான்.

தன் வீட்டிலேயே இப்படியொரு ஹோம் ஸ்டோடியோ செட்டப்பில் கேஷுவலாக தான் இசையமைத்தப் பாடலை கீபோர்டில் வாசிக்கிறார் ஒரு இளைஞர். காந்தக் குரலில் ‘நெஞ்சுக்குள்ள உம்ம முடிச்சிருக்கேன்,’ ‘தாப பூவும் நான்தானே’ பாடல்களைப் பாடி நம்மை ஈர்த்த சக்திஸ்ரீ கோபாலன் ஒரே ஒரு மைக் முன்னால் கூல் கேர்ளாக ‘வாயா என் வீரா’ எனப் பாடுகிறார்.

அந்தப் பாடலை யூ டியூபில் பதிவேற்ற லட்சக்கணக்கானோரைச் சென்றடைகிறது. பாடலை ரசித்துக் கேட்டவர்களில் ஒருவரான நடிகரும் இயக்குநருமான லாரன்ஸ் உடனடியாக லியோன் ஜேம்ஸ் என்கிற அந்த இளைஞருக்கு ‘கஞ்சனா-2’ படத்தில் இசையமைக்க வாய்ப்புத் தருகிறார்.



விளையாட்டுப் பசங்க அல்ல

சினிமா வாய்ப்புக் கிடைப்பது அவ்வளவு எளிதா?

இன்று திரைப்பட இசையமைப்பாளர் ஆவதற்கு அசிஸ்டெண்ட்டாக யாரிடமாவது பல வருடம் ஆர்மோனியப்பெட்டியைத் துடைப்பதிலிருந்து அத்தனையும் செய்து வசிஷ்டர் வாயால் இசையமைப்பாளர் பட்டம் வாங்கக் காத்திருக்க வேண்டியதில்லை. சினிமா என்னும் கோட்டையின் இரும்புக் கதவு, இணையத்தின் டிஜிட்டல் கோட் மூலமாகத் திறக்கிறது. அதற்காக இசை மீதான இவர்களுடைய ஈடுபாட்டையும் திறமையையும் சாதாரணமாக எடைபோட்டுவிடக் கூடாது.

லியோனின் அப்பா நோயல் ஜேம்ஸ் ஏ.ஆர்.ரஹ்மானின் மேலாளர். ரஹ்மானிடம் கோரஸ் பாடியிருக்கிறார். லியோனும் 4 வயதிலேயே பியானோ வாசிக்கத் தொடங்கிவிட்டார். ரஹ்மானிடம் ‘வரலாறு’ படத்தில் ‘தொட்டாபுரம் டோய்’, ‘மங்கள் பாண்டே’வில் ஒரு பாடல் என குழந்தைகள் கோரஸ் போர்ஷன் பாடியிருக்கிறார்.

கிட்டத்தட்ட அனிருத் மாதிரியே தோற்றத்தில் இருக்கிறாரே எனப் பார்த்தால், பத்மசேஷாத்ரியில் இவருக்கு அனிருத் சீனியர். “நானும் அனிருத்தும் பள்ளிக் காலத்திலேயே சேர்ந்து பல இசை பேண்ட்களில் வாசித்திருக்கிறோம். சன் தொலைக்காட்சியில் 2009-ல் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய ‘ஊ ல ல லா’ இசைப் போட்டியில் நான், அனிருத், விவேக், கிஷோர், ஆனந்த் சேர்ந்து ‘சிங்க்ஸ்’ என்ற பேண்ட் முலாமாக எங்களுடைய சொந்த இசையமைப்பை மேடை ஏற்றினோம்” என்கிறார் லியோன். போட்டியில் அனிருத்தும் லியோனும் சிறந்த கீபோர்டிஸ்ட் விருது வென்றனர். அதன்பிறகு, லியோன் முழு நேர கீபோர்டிஸ்டாகப் பிரபல இசைக் கலைஞர்களுடன் மேடை நிகழ்ச்சிகளிலும், ரெக்கார்டிங்கிலும் வாசித்தார். சந்தோஷ் நாராயணனுக்கு ‘ஜிகர்தண்டா’ உட்பட 3 படங்களில் கீபோர்ட் வாசித்திருக்கிறார்.



ரெண்டு கண்ணம்மா

கீபோர்டிஸ்டைத் தாண்டி தனக்குள் இருக்கும் இசையமைப்பாளரை வெளிக்காட்டவே யூடியூபில் ‘வாயா என் வீரா’ பாடலை வெளியிட்டார். ‘காஞ்சனா-2’வில் அதே பாடலோடு, ‘சண்டி முனி’ என்ற பாடலும் இடம்பெற்றது.

‘காஞ்சனா–2’ வின் வெற்றி எல்ரெட் குமாரின் தயாரிப்பில் ‘கோ-2’ பெற்றுத் தந்தது. ‘கோ-2’ அரசியல் திரில்லர் என்பதால் லியோனுக்கு நிச்சயமாகச் சவாலான படம்தான். பின்னணி இசை, தீம் மியூசிக், பாடல்கள் எனப் பல விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

இந்தப் படத்தின் மிகப் பெரிய ஹிட் ‘கண்ணம்மா’ பாடல். இரண்டு விதமாக இந்தப் பாடல் கம்போஸ் செய்யப்பட்டிருக்கிறது. முதல் வெர்ஷன் முழுக்க முழுக்க ஹோம் ஸ்டூடியோதான். ஒரு சிறிய அறையில் கட்டிலில் உட்கார்ந்து மடியில் தலையணையைத் திணித்துக்கொண்டு லியோன் கீபோர்ட் வாசிக்க பக்கவாட்டில் இன்னொரு இளைஞர் டிரம்ஸ் மெஷினை வாசிக்க, இன்னோ கெங்கா, சின்மயி ஸ்டைலிஷாகப் பாட முதல் ‘கண்ணம்மா’ பாடலில் காதல் சூப் மணக்கிறது.

இன்னொன்று மெலடி வர்ஷன். இதை ‘சக்தே இந்தியா’, ‘ஃபேஷன்’ உள்ளிட்ட பிரபல பாலிவுட் படங்களுக்கு இசையமைத்த சலீம் மெர்ச்சண்ட் பாடியிருக்கிறார். “இந்தப் பாடலை தொழில்நுட்பம் ஏதுமின்றி நிஜக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்க ஆசைப்பட்டேன். மனதிலிருந்து ஆத்மார்த்தமாகப் பாடுபவர் சலீம். அவர் குரல் ஒன்றே போதும் வேறெந்த தொழில்நுட்பமும் தேவை இல்லை. அதேபோல உஸ்தாத் கான் ‘எஸ்ராஜ்’ வாசித்து பாடலுக்கு உயிரூட்டினார்” என்கிறார் லியோன். நிஜமாகவே ‘கண்ணம்மா’ என சலீம் உச்சஸ்தாயில் பாடுவது காதுகள் வழியாக நேரடியாக மனதுக்குள் பாய்கிறது. அதிலும் ‘எஸ்ராஜ்’ எனப்படும் சாரங்கி போன்ற அந்த இசைக் கருவியில் இருந்து எழும் நாதம் இதயத்தைக் கரைக்கிறது.

“இன்று சவுண்ட் குவாலிட்டிக்குத் தொழில்நுட்பம் மிகவும் அவசியம். அதே நேரத்தில் ஒரு அற்புதமான கலைஞர் நிஜமான கருவிகளை வாசித்து உண்டாகும் இசையை எந்தத் தொழில்நுட்பக் கருவியாலும் தந்துவிட முடியாது. என்னுடைய நோக்கமே நிஜக் கலைஞர்களை அதிகம் பயன்படுத்துவதுதான். ஆகவேதான் ‘கோ-2’ படத்தின் பின்னணி இசைக்கு பியானோ, 25 பீஸ் ஆர்கெஸ்ட்ரா, கிட்டார், பேஸ் கிட்டார், ஃபுலூட் என ரியல் ரீரெக்கார்டிங் செய்திருக்கிறேன்” என்கிறார். அடுத்து, ‘வீரா’ பட இசையமைப்பில் மூழ்கியிருக்கும் இந்த இளைஞர் தொழில்நுட்பத்தின் நுட்பங்களை உயிரோட்டமான இசையை உருவாக்கவே பிரயோகிப்பது ஆச்சரியமூட்டுகிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்