புறப்படும் புதிய இசை - 4: உசுரு நரம்புல நீ இசைக்கிறாய்!

By ம.சுசித்ரா

புழுதியும் மீன் வாசமும் நிறைந்த குப்பத்தைச் சேர்ந்த இளம் பெண் காதல் வசப்படுகிறார். ‘ஏ சண்டக்காரா’ எனக் காதலில் துள்ளிக் குதித்துப் பாடுகிறார். பாடகி தீ-யின் (தீக்ஷிதா) குரல் கச்சாவாக அதே நேரம் கச்சிதமாக ஒலிக்கிறது. கூடவே சிம்பனி ஸ்டைலில் வயலின் இசை கைகோக்கிறது. பிரதானத் தாள வாத்தியம் வாய்தான். இடையே புல்லாங்குழலும் ஹார்மோனியமும் கித்தாரும் புதிய கதாபாத்திரங்கள் ஆகின்றன. யதார்த்தமும் எலக்ட்ரானிக்கும் ஜோடி சேரும் மாயை அங்கு நிகழ்கிறது.

அதே பெண் காதலில் நொறுங்கிப் போகிறாள். ‘உசுரு நரம்புல நீ ஏன் ஊசி ஏத்துற’ என இம்முறை தீ-யின் குரல் நம்மை ஆட்கொள்கிறது. பியானோ அவர் குரலோடு இழைகிறது. வயலின் உருகி மருகுகிறது. கனமான மன அழுத்தத்தை வெளிப்படுத்தப் பாடலின் பல இடங்களில் மவுனம் நிலவுகிறது. ஒரு இடத்தில் குரல் தேய்கிறது. பாடகராக அவர் மூச்சிழுத்து அடுத்த சங்கதியைப் பாடச் சிரமப்பட்டிருக்கலாம். ஆனால் பாடலின் உணர்வை அது மேலெழச் செய்வதால் அதை அப்படியே இடம்பெறச் செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.

பொதுவாகப் பல்லவி, சில நேரங்களில் அனுபல்லவி, சரணம் 1, மீண்டும் பல்லவி, சரணம் 2, மீண்டும் பல்லவி என்றுதான் பாடல் வடிவமைக்கப்படும். ஆனால் இதில் ‘உன் நினைப்பில் மனசு கதறிக் கிடக்கு என்னைக் கொஞ்சம் சேர்த்துக்க’ என்கிற அனுபல்லவியின் இறுதி வரியோடு பாடல் சட்டென்று முடிகிறது. திரையிசையின் மரபு அங்கே நொறுங்கி விழுகிறது. அடுத்து என்னவாகும் எனத் தெரியாமல் காதல் தவிப்பில் இருக்கும் பெண்ணின் உயிர் நாடியை அது அச்சு அசலாகப் பிரதிபலிக்கிறது.

பிளூஸ் கானா

அமெரிக்காவின் புளூஸும் ஜாஸும் வட சென்னை கானாவோடு காதல் கொள்ள முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். திருச்சியில் பிறந்து, வளர்ந்து பொறியியல் பட்டதாரி ஆனவுடன் ஏ.ஆர்.ரஹ்மானிடம் சவுண்ட் இன்ஜினியராகச் சேர்ந்தார். அதே வேளையில் நண்பர்களோடு இணைந்து ‘லா பொங்கல்’ உட்படப் பல இசை பேண்ட்களில் புதிய இசையை வார்த்தார். 2011-ல் ‘அத்வைதம்’ எனும் தெலுங்கு குறும்படத்தில் இசையமைத்தார். அந்த ஆண்டின் சிறந்த கல்விக்கான படம் எனத் தேசிய விருதைப் பெறவே படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷை சினிமா கவனித்தது.

2012-ல் பா.இரஞ்சித் இயக்கத்தில் கானா இசைக்குப் புதிய முகம் தந்து ‘அட்டை கத்தி’ மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் சந்தோஷ். ‘ஆடி போனா ஆவணி’, ‘நடுக்கடலுல கப்பல’ ஆகிய‌ பாடல்கள் அதுவரை மரண கானா மட்டுமே பாடி வந்தவ‌ரைக் கானா பாலாவாக ஒளிரச் செய்தன‌. அடுத்து கார்த்திக் சுப்புராஜின் ‘பீட்சா’ இசையிலும் திரைக்கதையிலும் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. விஜய் சேதுபதி, டார்ச் லைட், சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை இவை மூன்றும்தான் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள் என்றே சொல்லலாம்! இதில் ஆஸ்திரேலியாவில் புகழ்பெற்ற ‘சிட்னி சிம்பனி ஆர்கெஸ்ட்ரா’ எனும் பிரமிக்கவைக்கும் மேற்கத்திய இசையைக் கொடுத்தார் சந்தோஷ்.

நலன் குமாரசாமியோடு ‘சூது கவ்வும்’ படம் மூலம் வேறொரு கோணத்தைக் காட்டினார். ‘காசு பணம் துட்டு’, ‘கம் நா கம் கம்நாட்டி கோ’ உள்ளிட்ட பாடல்கள் இளைஞர்களை ஆட்டம்போட வைத்தன. இப்பாடல்கள் கொச்சையாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால் உதிரிகளின் வாழ்க்கையை அவை பிரதிபலித்தன. அதிலும் ‘மெட்ராஸ்’ படத்தின் ‘எங்க ஊரு மெட்ராஸு’ பாடலில் வட சென்னையின் லோக்கல் ‘ஃபிளேவர்’ கமகமத்தது.

கித்தார் காதலன்

‘குக்கூ’வில் நிஜக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இதமான இசை கொடுத்தவர் ‘மியூசிக்கல் கேங்க்ஸ்டர் ஸ்டோரி’ என்ற அடைமொழியோடு ‘ஜிகர்தண்டா’வுக்கு கேங்க்ஸ்டர் ராப் (Gangster Rap), எலக்ட்ரோ (Electro) எனப் பல விதமான இசை அம்சங்களைப் பின்னணியில் கொடுத்து மிரட்டினார். ‘கண்ணமா… கண்ணம்மா’ பாடல் குழந்தைகள் அனைவரையும் கவர்ந்து தொடக்கத்தில் வரும் ‘பா….பப்பப்பா…’ என்னும் விளையாட்டுக் குரலால்தான்.

சந்தோஷ் நிச்சயம் கித்தார் காதலனாக இருக்க வேண்டும். ஸ்லைட் கித்தார், கவுபாய் படங்களில் பார்க்கக் கூடிய குட்டி கித்தாரான உக்குலேலே கித்தார், பாஸ் கித்தார், அக்கொஸ்டிக் கித்தார், எலக்ட்ரிக் கித்தார் என அவருடைய இசை உலகை ஆட்சி செய்பவை எக்கச்சக்கமான கித்தார்கள்.

எந்தப் பரபரப்பும் இல்லாமல் நிதானமாக ஒரு கித்தார் அல்லது பியானோ மட்டும் இசைக்க ஒரு அழுத்தமான குரலில் பாடலை வடிப்பது அவருடையத் தனித்துவம். பாடல்களுக்கான குரல்களைத் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு குரலையும் வெவ்வேறு பாணியில் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் அவர் கச்சிதமாகத் தீர்மானிக்கிறார். குறிப்பாக அவருடைய பால்ய நண்பரும் பாடகருமான பிரதீப் குமாரின் குரலை மீள்தேடல் செய்துகொண்டே இருக்கிறார். ‘குக்கூ’வில் ‘ஆகாசத்த நான் பார்க்குறேன், ‘மெட்ராஸி’ல் ‘ஆகாயம் தீ பிடிச்சா’, ‘இறுதிச் சுற்றி’ல் ‘தோழா தோழா’, சமீபத்தில் இசை ஆல்பம் வெளியான ‘மனிதன்’ படத்தின் ‘அவள்’ பாடல்களில் பிரதீப் உச்சஸ்தாயியில் பாடும்போது கிராமிய மணம் வீசும். அதே பிரதீப் ‘எனக்குள் ஒருவனி’ல் ‘பூ அவிழும்பொழுதில்’, ‘பீட்சா’வில் ‘மோகத்திரை’ போன்ற பாடல்களில் மேற்கத்திய மெல்லிய இசையை ஆழ்மனதின் குரல்போல வெளிப்படுத்தும்போது நம்மை அறியாமல் கனவுலகில் சஞ்சரிப்போம்.

இந்திய இசைக்கு மகுடம் சூட்டினார் இளையராஜா. மேற்கத்திய இசையை அதிநவீனத் தொழில்நுட்பத்தோடு தமிழ்க் காதுகளுக்கு அறிமுகப்படுத்தினார் ரஹ்மான். இதைத் தாண்டி தமிழ் சினிமாவில் வேறு என்ன புதுமை நிகழ்ந்துவிடப் போகிறது எனச் சொல்பவர்கள் ஏராளம். ஆனால் அடுத்த தலைமுறை இசை நிச்சயமாகப் புறப்பட்டுவிட்டது. ‘இறைவி’யாகவும், ‘கபாலி’யாகவும் அது நம்மை ஆச்சரியப்படுத்தத் தயாராக இருக்கிறது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

23 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

சிறப்புப் பக்கம்

3 days ago

மேலும்