ஒமைக்ரானுக்கு முன்புவரை, கரோனாவின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, சுவை மற்றும் முகரும் திறன் இழப்பு. பெரும்பாலும் மூக்கு வழியாக உடலுக்குள் அழையா விருந்தாளியாக வன்நுழைவு செய்யும் வைரஸ் என்பதால், கரோனா முகர்வுத்திறனை பாதித்தது எதிர்பார்த்த ஒன்றுதான். ஐம்புலன்களில் ஒன்றான முகர்வையும், அது சார்ந்த அறிவியல், தொழில்நுட்பங்களை கதைப்போம்.
முதலில் முகர்வின் அடிப்படை அறிவியல். பிரபஞ்சத்தின் அனைத்து உயிரிகளுக்கும் முகர்வுத் திறன் என்பது உண்டு. மனிதன் உட்பட நமக்கு பரிட்சயமான விலங்குகள் அனைத்துக்கும் மூக்கு என்ற உறுப்பின் மூலம் முகர்வு சாத்தியமாகிறது. ஆக்டோபஸ் போன்ற விலங்குகளுக்கு மூக்கு என்ற உறுப்பு நேரடியாக இல்லை என்றாலும், அதன் செயல்திறனைக் கொண்ட சமமான உறுப்புகள் உண்டு. இவ்வளவு ஏன், ஒரு செல் உயிரியான பாக்டீரியாவுக்குக்கூட நுகரும் திறன் உள்ளது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அப்படியானால், வைரஸுக்கு முகரும் திறன் உண்டா? இல்லை என்பதே பதில்.
காரணம், வைரஸ் என்பது உயிரி அல்ல. அது வாழ்ந்து பெருகப் புரவலவனாக உயிருள்ள செல் தேவை. உயிரிகளின் முகர்வுத்திறனை ஆல்ஃபேக்டரி (Olfactory) என அழைக்கிறார்கள். அதைப் புரிந்து கொள்ள மனித மூக்கை அடிப்படையாக எடுத்துக் கொள்ளலாம். 2.5 சென்டி மீட்டர் அளவே நீளமான பகுதியில் 5 கோடி அளவில் ஏற்பி செல்களைக் (Receptor Cells) கொண்டதாக அமைந்திருக்கும் இப்பகுதியின் பணி ஓர் உயர் தொழில்நுட்ப தொழிற்சாலையைப் போன்றது. சுவாசிக்கப்படும் காற்றில் இருக்கும் துகள்கள் படர்ந்திருக்கும் சளிப்படத்தில் கரைந்து முகர்வு நியூரான்களால் கிரகிக்கப்படும். அது என்ன வாசனை என்பதை மூளையில் உள்ள ஆல்ஃபேக்டரி பல்ப் என்ற பகுதிக்கு மின் சமிக்ஞைகளாகக் கொண்டு செல்ல, மூளை அதை பகுத்தறிந்து நல்லதா, கெட்டதா என்பதை ஆராய்ந்து அதற்குத் தகுந்த விதத்தில் உடலின் மற்ற பாகங்களுக்கு விபரங்களை அனுப்பிவைக்கும்.
உயிரினங்களுக்குக் கிடைத்திருக்கும் பாதுகாப்பு அரண்களில் முகர்வுத்திறன் முதன்மையானது. இதனால்தான், உணவு பரிமாறப்படும் இடம் நமக்கு மகிழ்ச்சியையும், தேங்கி நிற்கும் கழிவுநீர் அருவருப்பையும் உண்டாக்குகிறது. மனித முகர்வுத்திறன் மூலம் 10 ஆயிரத்துக்கும் சற்று அதிகமான வாசனைகளை உணர முடியும் என்றுதான் நீண்ட காலமாக நம்பப்பட்டது. ஆனால், 2014-இல் வெளியான ஆராய்ச்சி முடிவு ஒன்று, மனித முகர்வால் ஒரு லட்சம் கோடி வரை வாசனைகளை வித்தியாசப்படுத்தி பதிந்து கொள்ள முடியும் என்பதை நிரூபித்தது. அவ்வளவு திறனா என மூக்கின் மீது விரல் வைக்க வேண்டாம். காரணம், மனிதனின் உற்ற நண்பனான நாயின் ஆல்ஃபேக்டரியில் 30 கோடி ஏற்பி செல்கள் உண்டு என்பதால், நம்மைவிட ஆறு மடங்கு அதிகமாக நுகர்வுத் திறன் கொண்டவை நாய்கள்.
மனித உடலில் இருந்து வரும் துர்வாசனைக்குக் காரணம் வியர்வை அல்ல. வியர்வை எந்த மணமும் அற்றது. அதற்குக் காரணமாக இருப்பது பாக்டீரியாக்கள். குறிப்பாக, ஸ்டாபிலோகஸ் (Staphylococcus) என்ற பாக்டீரியாவில் இருக்கும் ‘சி-டி லையாஸ்’ (C-T lyase) என அழைக்கப்படும் நொதி. வியர்வையில் இருக்கும் வேதிப்பொருள்களுடன் கலந்து தியோல்கஹால் என்ற கெட்ட நாற்ற கலவையை உருவாக்கிறது. தூங்கி எழுந்து காலையில் எழுகையில் வாயில் இருக்கும் அதிகப்படி பாக்டீரியாக்கள்தான் நம்மை உடனடியாக பல் துலக்க உந்தித் தள்ளுகின்றன. இரவு தூக்கத்தில் நம் உடல் உறுப்புகள் ஓய்வெடுப்பதால், அவற்றின் செயல்திறன்களும் குறைந்துவிடுகின்றன. நாள் முழுக்க வாயில் உமிழ்ந்து கொண்டேயிருக்கும் எச்சில் பாக்டீரியாவின் அளவைக் கட்டுப்படித்தியபடி இருக்கும். இரவில் உமிழ்நீர் தயாரிப்பு குறைந்துபோவதால், பாக்டீரியாக்களின் அளவு காலையில் அதிகமாகி, காலை நேர வாய் துர்நாற்றத்துக்குக் காரணமாகிறது.
ஒவ்வொரு சவாலும் ஒரு வாய்ப்பு (Every challenge is an opportunity) என்ற சொலவடையைக் கேள்விப்பட்டிருக்கலாம். நுகர்வுத்திறனை மையமாக வைத்து பல்வேறு தொழில்முனைவு வாய்ப்புகள் தொடர்ந்து கண்டறியப்பட்டு, வணிக வடிவில் வந்த வண்ணம் இருக்கின்றன. பாக்டீரியாவில் இருக்கும் நொதியால் துர்நாற்றம் உடலில் இருந்து அணிந்திருக்கும் உடைகளுக்கும் சென்றுவிடுகிறது. உடைகளை சலவை செய்யும் சோப்பு, இயந்திரங்கள் எனக் காலங்காலமாக பல தொழில்முனைவுகள் இருந்தாலும், சமீபத்திய ஆராய்ச்சிகள் மற்றொரு கோணத்தில் இந்தச் சவாலை மேற்கொள்ள முயல்கின்றன. துர்வாசனை எதிர்ப்பு தொழில்நுட்பம் (Anti-odor technology) என்ற பிரிவில் நடத்தப்படும் இந்த முனைவுகளில் குறிப்பிடத்தகுந்தது நுண்ணியிர் எதிர்ப்பு துணிவகைகள் (Antimicrobial fabrics).
வியர்வை ஒட்டாமல் இருக்கும் விளையாட்டு வீரர்கள் அணியும் பளபளப்பான துணிவகைகளுடன் இதைக் குழப்பிக் கொள்ளவேண்டாம். பாக்டீரியாக்களைக் கொன்றுவிடும் வேதிப்பொருட்களான ட்ரைக்லோசன் (Triclosan) போன்றவற்றைத் துணிகளை நெய்கையில் இணைத்து தயாரித்துவிட, அவற்றில் இருந்து செய்யப்படும் ஆடைகள் நுண்ணுயிர்க் கொல்லிகளாக அமைந்து, துவைத்து எடுத்த அதே வாசனையுடன் ஆடைகள் இருக்க உதவுகின்றன. வெள்ளி இயல்பில் ஒரு நுண்ணுயிர்க் கொல்லி. வெள்ளி ஆக்சிஜனுடன் இணையும்போது கிடைக்கும் வெள்ளி அயனிகள், பாக்டீரியாவுக்குப் பரம எதிரிகள் என்பதால் இன்னொரு ஆராய்ச்சி வெள்ளி உலோகத்தைத் துணி நெய்யும்போது இணைத்துக் கொள்ளும் முயற்சியில் நடக்கிறது.
பல முறை துவைத்தாலும் இந்த வேதிப்பொருள்கள் துணியில் இருக்க வேண்டும் என்ற கடைசி கட்ட முயற்சி நடப்பது அறிவியல் சஞ்சிகைகளில் வெளியாகும் ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளில் இருந்து தெரிய வருவதால், விரைவில் பாக்டீரியாக்கு எதிர்ப்பு சொல்லும் துணிவகைகளின் ஆடிக் கழிவு விற்பனைகளை விரைவில் காணலாம்.
அது இருக்கட்டும், மனித புலன்களில் பார்வை மங்கிப்போனால், அதைச் சரி செய்துகொள்ள கண்ணாடி போட்டுக் கொள்ளலாம். காது கேட்கும் திறன் குறைந்தால், ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளலாம். ஆனால், முகர்வுத் திறனை மேம்படுத்திக் கொள்ள அப்படி எந்தத் தொழில்நுட்பமும் இல்லையா என உங்களைப் போல எனக்கும் கேள்வி எழுந்தது. அதற்கும் பதில் தொழில்நுட்ப வடிவில் வந்துவிட்டது. ஷக் மெக்கின்லி என்ற பொறியாளர் / கண்டுபிடிப்பாளரின் முயற்சியில் உருவாகியிருக்கும் முகர்வு ரேஞ்சர் (Nasal Ranger) நம் மூக்குக்கான பைனாகுலர் எனச் சொல்லலாம்.
பார்ப்பதற்கு பைனாகுலர் போலவே இருக்கும் இந்த உபகரணம் நம்மைச் சுற்றியிருக்கும் வாசனை வடிவத்தை மேம்படுத்தி ஆல்ஃபேக்டரிக்கு அனுப்புவதன் மூலம் மெல்லிய வாசனைகளையும் கண்டறிந்து சேமித்துக் கொள்ளப் பயன்படுகிறது. உணவுப் பொருள் உற்பத்தி, வாசனைத்திரவிய உருவாக்கம், சுவாசிக்கும் காற்றின் தரம் போன்ற பல பிரிவுகளில் மேற்படி உபகரணம் உதவியாக இருக்கும். நம்மிடம் இருந்தால், காலையில் பார்க்கும் நண்பரின் முகத்திற்கு நேராக வைத்து “உன் காலை உணவு பொங்கல், மெதுவடைதானே?” என சொல்லி அதிர வைக்கலாம்.
https://www.facebook.com/LetsTalkSTEM என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர் பற்றியும் எதை அலசலாம் என்பதையும் பதிவிடலாம். 1 (628) 240-4194 என்கிற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
4 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
16 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
18 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
22 hours ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago