கணினி தேவையில்லை... படைப்பாற்றல் போதும்!- கிராபிக்ஸ் கலைஞர் ஸ்ரீனிவாஸ் மோகன் சிறப்பு பேட்டி

By கா.இசக்கி முத்து

‘மேஜிக் மேஜிக்', ‘சிவாஜி', ‘எந்திரன்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து ‘பாகுபலி' படத்துக்காகச் சிறந்த கிராபிக்ஸ் கலைஞருக்கான‌ தேசிய விருது வென்றிருக்கிறார் ஸ்ரீனிவாஸ் மோகன். தற்போது ஷங்கர் இயக்கிவரும் '2.0' படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசியபோது...

கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்துக்காக‌ 4வது முறையாக தேசிய விருது. எப்படி உணர்கிறீர்கள்?

கிராஃபிக்ஸ் காட்சிகளுக்கு தேசிய விருது கிடைத்ததை விடச் சிற‌ந்த படத்திற்கான தேசிய விருது கிடைத்ததுதான் ரொம்ப சந்தோஷம். தயாரிப்பாளரில் இருந்து அனைவருமே இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்திருப்பது இந்த விருதின் மூலமாக உறுதியாகி இருக்கிறது. 63 ஆண்டுகளில் சிறந்த படத்திற்காக ஒரு தெலுங்கு படம் விருது வாங்குவது இதுவே முதல் முறை. தெலுங்கு திரையுலகுக்கு முதல் சிறந்த படம் விருது கிடைத்திருக்கும் படத்தில் நானும் இருக்கிறேன் என்பது ரொம்ப சந்தோஷமான விஷயம்.

இந்தியத் திரையுலகில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

இந்தியாவில் பெரிய படங்களுக்கு கிராஃபிக்ஸ் மேலாளராகப் பணியாற்ற 6 முதல் 7 பேர்தான் இருக்கிறார்கள். நிறையப் படங்களுக்கு கிராஃபிக்ஸ் மேலாளராகப் பணியாற்ற ஆட்கள் தேவைப்படுகின்றனர். ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்பது போல தற்போது கிராஃபிக்ஸ் என்பதும் படத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. கிராஃபிக்ஸ் இல்லாமல் படங்களே இல்லை.

நிறைய புதிய இயக்குநர்களோடு பேசும் போது அவர்களுக்குப் புதுமையான சிந்தனைகள் இருப்பதை உணர முடிகிறது. அவர்களுக்குச் சரியான தயாரிப்பாளர், மேற்பார்வையாளர் மற்றும் வழிகாட்டுதல் இருந்தால் ஆங்கிலம் மற்றும் இந்திப் படங்களை விடச் சிறந்த‌ படங்கள் பண்ணுவார்கள். அவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் அற்புதமாக இருக்கின்றன‌. அவர்களைச் சரியான வழியில் கொண்டு போய்விட வேண்டும் என்ற களப்பணியில்தான் தற்போது இருக்கிறேன்.

புது இயக்குநர்கள் என்னைத் தொடர்பு கொண்டு கதை சொன்னார்கள் என்றால், என்னால் படம் பண்ண முடியவில்லை என்றாலும்கூட ஒரு நாள் அல்லது சில மணி நேரங்கள் செலவழித்து எப்படிப் பண்ண வேண்டும் என்று வழிகாட்டுதலைக் கூறுவேன்.

தற்போது புதுமுக இயக்குநர்களின் முதல் முயற்சிக்குப் பெரிய முதலீடு செய்யத் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லையே?

இங்கு பல தயாரிப்பாளர்கள் முதலீட்டாளர்கள்தான். அவர்கள் தயாரிப்பு மேற்பார்வையாளரிடம் பணம் கொடுத்துவிட்டுப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிடுவார்கள். அவர்கள் எல்லாம் தயாரிப்பாளர்கள் அல்ல. முழுமையான தயாரிப்பாளர்கள் என்பவர்கள் ரொம்பக் கம்மிதான்.

ஹாலிவுட்டில் எல்லாம் தயாரிப்பாளர்கள்தான் முதலில் இருப்பார்கள். இயக்குநர்கள் யார் என்பதை அவர்கள் முடிவு பண்ணுவார்கள். கதை, திரைக்கதையை தயாரிப்பாளர் முடிவு செய்து அதற்குப் பிறகு தயாரிப்பு வடிவமைப்பாளரை வரவழைத்து அனைத்துப் பணிகளையும் முடிப்பார். அதற்குப் பிறகுதான் இக்கதைக்கு இயக்குநர் என்று தேடுவார்கள். படப்பிடிப்பு முதல் எடிட்டிங், கிராஃபிக்ஸில் என எல்லாப் பணிகளிலும் தயாரிப்பாளரின் பங்கு இருக்கும்.

ஆனால், இங்கு அப்படியே தலைகீழாக நடக்கிறது. இங்கு அனைத்தையுமே ஒரு இயக்குநர்தான் முடிவு செய்கிறார். தயாரிப்பாளர் என்பவர் பணம் கொடுப்பார் மற்றும் சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று ப்ரஷர் கொடுப்பார். ஒரு நாள் படப்பிடிப்பு நடக்கவில்லை என்றால் இயக்குநரைத்தான் முதலில் கேட்பார்கள். ஹாலிவுட்டில் 'ஸ்டார்ட், கேமரா' கூட இயக்குநர்கள் சொல்ல மாட்டார்கள். அவர்கள் நடிப்பு மட்டும்தான் பார்ப்பார்கள். அதனால்தான் இயக்குநர் என்பவர் நூறு சதவீதம் தன்னுடைய பணியைச் சிறப்பாகச் செய்வார்.

ஆனால், பல தயாரிப்பாளர்கள் இன்று அப்படியில்லை. ஒரு பிரச்சினை வந்தால் அவர்களுக்குப் புரிய வைப்பதற்கே நிறைய நேரமாகிவிடும். தயாரிப்பாளர் என்பவர் கதையைத்தான் முக்கியமாகப் பார்க்க வேண்டும். இளம் இயக்குநர்கள் அனைவருமே அந்த மாதிரியான தயாரிப்பாளர்களைப் பார்த்துக் கதையைச் சொல்ல வேண்டும். கதை பிடித்துவிட்டால் அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணக் கூடிய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அது வெளிநாட்டில் நடக்கிறது, இந்தியாவில் தற்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

கிராஃபிக்ஸ் காட்சிகளை ஹாலிவுட்டை விட இங்கு கம்மியான செலவில் பண்ணுகிறார்களாமே. உண்மையா?

'பாகுபலி' படத்தில் பார்க்கும் கிராஃபிக்ஸ் காட்சிகள் ஹாலிவுட்டில் தயாராகும் பொருட்செலவில் சுமார் இருபது சதவீதம் மட்டுமே செலவழித்துக் கொண்டு வந்தோம். நூறு சதவீதம் அவர்களுடையது போலவே இல்லையென்றாலும்கூட ஓரளவுக்கு நெருங்கி இருக்கிறோம். இதனால் தற்போது வெளிநாட்டில் இருக்கும் கிராஃபிக்ஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் பலர் இந்தியாவில் நிறுவனங்கள் தொடங்கியிருக்கிறார்கள். நிறைய ஹாலிவுட் படங்களின் பணிகள் இந்தியாவில் போய்க் கொண்டிருக்கின்றன‌.

கடந்த 2 ஆண்டுகளில் FICCI கணக்கின் படி கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் இந்தியாவில் இரட்டிப்பாக வளர்ந்திருக்கிறது. நம்மிடம் இருக்கும் திறமையாளர்களால் மட்டுமே இது சாத்தியமாகி இருக்கிறது.

கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இதில் நுழைந்துவிட வேண்டும் என்று பல இளைஞர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உங்களுடைய ஆலோசனை என்ன?

8 வருடங்களுக்கு முன்பு கிராஃபிக்ஸ் படிக்க வேண்டும் என்று உள்ளே நுழைந்து படங்களின் சண்டைக் காட்சிகளில் இருக்கும் கயிற்றை அழிக்கக்கூடிய பணியைப் படித்துப் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அதுதான் கிராஃபிக்ஸ் என்று நினைத்துக் கொண்டார்கள்.

அவர்களுக்கெல்லம் ‘இது கிராஃபிக்ஸ் அல்ல!' என்று புரிய வைத்தோம். நீங்கள் பார்த்த ‘லைஃப் ஆஃப் பை' படத்தில் முக்கியமான பணிகள் நாற்பது சதவீதம் இந்தியாவில் நடந்தவைதான்.

கிராஃபிக்ஸ் கலைஞராக வர விரும்புகிறவர்கள், கிரியேட்டிவாக சிந்திக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கம்ப்யூட்டர் கற்றுக்கொள்வது, ஒரே ஒரு தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொள்வது போன்றவற்றால் தற்போதெல்லாம் நிலைக்க முடியாது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

17 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

15 hours ago

சிறப்புப் பக்கம்

16 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்