பொருள்தனைப் போற்று! 7 - செலவுகள் பலவிதம்!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘செலவு' என்ற ஒரு சொல்லில் நாம் அடக்கி விடுவதை, வெவ்வேறு பெயர்களில், வகைப்படுத்திப் பார்க்கிறது பொருளாதாரம். இந்தப் பெயர்கள் வேண்டுமானால் புதியதாக இருக்கலாம். ஆனால் இந்த ‘வகைகள்' எல்லாமே நமக்கு நன்கு பரிச்சயம் ஆனவைதான்.

அதோ அந்த மண்டபத்துல கல்யாணம் நடக்குது போல இருக்கே. வாங்க உள்ளே போய் வருவோம்.

‘எலேய். எதுக்குலே இவ்வளவு செலவு பண்ணி இத்தனை ஆர்ப்பாட்டமா கல்யாணம்? தேவையாலே? ஒறவுக்காரக வேண்டியவுக பத்து, இருவது பேரைக் கூப்பிட்டமா கல்யாணத்தை முடிச்சமான்னுட்டு இல்லாம எதுக்குலே இப்படி பணத்தை வீணா செலவழிக்கிறீக?'

‘என்ன நீங்க 'வீண்'னு சொல்லிப்புட்டீக? கல்யாணத்துக்குக் கூட எல்லாரையும் கூப்பிட்டு, ஒருவேளை விருந்து வைக்கலைன்னா எப்படி?'

‘அதெல்லாம் சரிதேன். இத்தனை ஆர்ப்பாட்டமும் பண்ணாத்தான் விருந்துக்கு வருவேன்னு யாராச்சும் சொன்னாங்களாலே?'

‘இந்தப் பணத்துக்கு, நகை பாத்திரம் பண்டம்னு வாங்கிக் குடுத்தாலும், நாளைக்கி சின்னஞ் சிறுசுகளுக்கு உதவியா இருக்குமால்ல?'

கவனித்தீர்களா? வேண்டிய வேண்டாத செலவு என்று வகைப்படுத்தவில்லை.

‘நாளைக்கு உதவும்'. என்ன அர்த்தம்? செலவு இன்று. ஆனால் அதன் பயன்பாடு, நாள்பட்டு இருக்கும்.

‘ஆமா. கார் வாங்கிக் குடுத்து இருக்கியே அதோட முடிஞ்சுடுச்சா? அதுக்கு பெட்ரோல் செலவு என்னாச்சு? அப்புறம், அதை வச்சி பராமரிக்கணுமே அதுக்கு?'

கார் வாங்குவது ஒரு செலவு. அதில் இருந்து பிறக்கிறது, பெட்ரோலுக்கான தொடர் செலவு (recurring expenditure).

உள்ளே. பந்தியில்...

‘அப்பப்பா! விதம் விதமா பலகாரங்க வைக்கறாகளே. நம்மாளு வஞ்சனை இல்லாம செலவு பண்ணி இருக்காம்பா!'

எங்கே போனாலும், சுற்றிச் சுற்றி, செலவைப் பற்றியே பேசுகிறார்களா? அப்படித்தான். ஏன்?

‘வாய்க்கு ருசியா, வயிறு நிறைய சாப்பிடக் கூட மாட்டேங்கறான்யா! பணம் இருந்தும் என்ன பிரயோசனம்?'

‘ஏங்க. நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு. அது ஆசைப்பட்டுக் கேட்கறதை வாங்கிக் குடுக்க வேண்டியதுதானே? அதுக்கு செலவு பண்ண மாட்டேன்னா, பணத்தை வச்சிக்கிட்டு என்னங்க பண்ணப் போறோம்?'

ஒருவர் செய்கிற செலவுதான் அவரின் பொருளாதார நிலையைக் காட்டுகிறது.

ஒருவர், தன் வருமானத்தில் பெரும் பகுதியை, 'சோற்றுக்கே' செலவு செய்கிறார் என்றால், அவர் ஏழையா செல்வந்தரா?

விடுதிகள், உல்லாசப் பயணம், சொகுசு வண்டிகள், பகட்டான ஆடைகள்...

இவற்றுக்காக ஒருவர் அதிகம் செலவிடுகிறார் என்றால் அவர்?

‘உன் நண்பன் யார் என்று சொல். நீ யார் என்று சொல்கிறேன்' எனச் சொல்வார்கள் அல்லவா? அதே போலத்தான். ஒருவர் எது எதற்கு எவ்வளவு செலவு செய்கிறார் பாருங்கள். அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்துவிடும்.

இப்படிச் சொல்லலாம். ஒருவர் எவ்வளவு செலவிடுகிறார்? அதுதான் அவரின் ‘செல்வாக்கு'.

ஏற்கெனவே பார்த்தோம். பணம்தான் பொருளாதாரத்தின் மையப் புள்ளி. அதே போல், செலவுதான் பணத்தின் பண்பும் பயனும்.

வரவு செலவுக் கணக்குன்னுதானே சொல்றோம்? என்ன அர்த்தம்? இரண்டே பக்கங்கள்தான் உண்டு. ஒன்று வரவு. மற்றது செலவு.

ஒருத்தர் ரெண்டு வழிகள்ல பயன் அடையலாம். வரவை அதிகப்படுத்தலாம். அல்லது செலவைக் குறைக்கலாம்.

இப்போ ஒரு கேள்வி வருது. எல்லாச் செலவுகளையுமே குறைக்க முடியுமா?

‘செலவைக் குறை, செலவைக் குறை'ன்னு திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்கீங்களே. நான் என்னங்க வேண்டாத செலவு பண்ணிட்டேன்? பசங்க போட்டுக்கறதுக்கு, நல்லதா துணிமணி வாங்கலாம்னு சொன்னா அது தப்பா?'

இதுதான் பிரச்சினையே. என்னதான் ‘வாயைக் கட்டி வயித்தைக் கட்டி' வாழ்வதாக இருந்தாலும், சில செலவுகளைச் சந்தித்தே ஆக வேண்டும். அதாவது, ‘அத்தியாவசியச் செலவுகள்'.

நூற்றுக்கு நூறு இதே பொருளில் இல்லை என்றாலும், கிட்டத்தட்ட இந்த அர்த்தத்தில்தான், பொருளாதாரம், ‘நேரடி' செலவுகள் என்கிறது.

பழக் கடை வச்சிருக்கோம். மொத்த விலையில பழம் வாங்கி வந்து விற்கிறோம். பழத்துக்கான விலை, அதைச் சந்தையில இருந்து நம்ம கடைக்குக் கொண்டு வந்து சேர்க்கிற வண்டி இதெல்லாம் ‘நேரடி' செலவு (direct expenditure).

இதுவே, கடைக்குக் கொடுக்கிற வாடகை, ‘நேரடி' இல்லை! ‘மறைமுக' செலவு (indirect expenditure).

என்ன காரணம்?

‘ரொம்ப முடியலியா? இன்னும் குறைஞ்ச வாடகைக்கு வேற இடம் போயி, இதே வியாபாரத்தைத் தொடரலாம். அதுவும் இல்லையா. ம‌ன்னிச்சுக்குங்க. ப்ளாட்ஃபார்ம்ல வச்சி, தலையில சுமந்து போய்க்கூட, விற்கலாம். ஆனால், பழத்துக்கான மொத்த விலை, வண்டிச் செலவு இதெல்லாம் கொடுத்துதானே ஆகணும்?'

நேரடிச் செலவுகளை நாம் குறைக்கவே முடியாது. மறைமுகச் செலவுகள் அப்படி அல்ல. முடிந்த வரையில் இவ்வகைச் செலவுகளைக் குறைக்க வேண்டும். இந்த இனச் செலவுக்கு, பொருளாதாரத்தில் தனிப் பெயர் உண்டு. ‘ஓவர்ஹெட்' செலவுகள் (overhead expenditure).

அழுத்தமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டிய பகுதி இது.

ஒரு பொருளின் உற்பத்தி அல்லது விற்பனையில் நேரடித் தொடர்பில் இல்லாத செலவு ‘ஓவர்ஹெட்'. இது எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ அந்த அளவுக்கு லாபம் கூடும்.

இன்னொரு விஷயம் கவனத்துக்கு வருதா? கொள்முதல் விலை, வண்டிச் செலவு, பொருளை ஏற்றி இறக்குவதற்கான கூலி... இதெல்லாம் அந்தந்த சமயத்துக்கு ஏத்த மாதிரி கூடவோ குறைச்சலோ இருக்கும். அதனால இது,

‘மாறக் கூடிய செலவுகள்'(variable expenditure).

வாடகை பத்திப் பேசினோம் இல்லை? அது அப்படி இல்லை. நாம பத்து கிலோ வாங்கி வந்து வித்தாலும், நூறு கிலோ வாங்கி வித்தாலும், அதே வாடகைதான்! இதெல்லாம், ‘நிலையான' செலவுகள் (fixed expenses).

காலேஜ்ல படிக்கிறோம். டியூஷன் ஃபீஸ் கட்டறோம். நிலையான செலவு.

போக்குவரத்துச் செலவு? அவசரம். ஒரு நாள் ஆட்டோவுல போகலாம்.

ரெயிலிலோ பேருந்திலோ ஏன்... சைக்கிளில்கூடப் போய் வரலாம். மாறக் கூடிய செலவு.

ஆமாம். எதுக்காக இத்தனை விஸ்தாரமா செலவு பத்திப் பேசறோம்? நாம் அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக மிக முக்கியமான புள்ளிக்கு வந்திருக்கிறோம்.

‘சரி சமப் புள்ளி'(break-even point)!

இந்தப் புள்ளி புரிந்துவிட்டதா? ஒரு செலவைச் செய்யலாமா கூடாதா?

எந்த அளவுக்குச் செய்யலாம்? ஒரு பொருளை நாம் எந்த விலைக்கு விற்கலாம்? அல்லது, வாங்கலாம்? ஒரு வியாபாரத்தைத் தொடர்ந்து நடத்தலாமா, வேண்டாமா?

இன்னைக்கி, நாம லாபத்துல இருக்கோமா? இல்லை நஷ்டத்துல ஓடிக்கிட்டு இருக்கோமா? நம்முடைய உண்மையான, சரியான நிலை என்ன?

இவை எல்லாவற்றையும் தீர்மானிப்பது இந்த‌ ‘ப்ரேக் ஈவன் பாயிண்ட்'தான்.

அது என்ன பாயிண்ட்?

(வளரும்)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்