நண்பர்கள்தான் பக்கபலம்!

By கா.இசக்கி முத்து, ப.ஸ்வாதி

திரைப்படங்களில் பாடல் உள்ளிட்ட சில காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். திரைக்கதை, கேமரா எனப் பல விஷயங்கள் இருந்தாலும் அக்காட்சிக்குப் பெரிதும் பக்கபலமாக இருப்பவர் ஆடை வடிவமைப்பாளர். ஒவ்வொரு காட்சிக்கும், தனித்தனியே ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆடைகள் தேர்வு செய்வது மிகவும் சிரமமான‌ பணி.

நாகர்கோவிலில் இருந்து வந்து அந்தப் பணிக்கான கல்வியைக் கற்று தற்போது கோலிவுட்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட மருத்துவர் ஜாய் கிரிசில்டா. அவரிடம் உரையாடிய‌திலிருந்து...

எப்படி இந்த ஃபீல்டுக்குள்ள‌ வந்தீங்க‌?

நாகர்கோவில்ல‌ இருந்து சென்னை வந்து விஸ்காம் படிச்சேன். ஒரு டி.வி. சேனல்ல புரோகிராம் புரொடியூசரா வேலை செய்யும் போதுதான் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சுது. எனக்கு சினிமாவுல டைரக்டராகணும்னு கனவு. ஆனா என் கூட இருந்த நண்பர்கள் ‘பொண்ணுங்களுக்கு டைரக்ஷன் செட் ஆகாது'னு சொன்னாங்க. டைரக்ஷனை விட்டா எனக்கு ஃபேஷன் டிசைனிங் மேல ரொம்ப‌ ஆர்வம். உடனே பெங்களூருக்குப் போய் அதுக்கான படிப்பைப் படிச்சிட்டு வந்தேன். இப்போ நம்ம லைஃப் ரொம்ப கூலா போயிட்டிருக்கு.

முதல் வாய்ப்பு கிடைக்க ரொம்ப கஷ்டப்பட்டிருப்பீங்க...

அப்படியா நினைக்கறீங்க? எனக்கு சினிமா பேக்ரவுண்ட் எல்லாம் இல்லை. நான் சினிமாவில் வேலை செய்யறேன்னு சொன்னப்பவும் யாரும் விரும்பலை. ஆனா எனக்கு அதில்தான் இன்ட்ரஸ்ட். யாரிடமும் போய் 'எனக்கு வாய்ப்பு கொடுங்க'ன்னு கேட்டதே இல்லை. யார்கிட்டயும் போய் உதவியாளரா இருந்ததும் இல்லை. நமக்கு எப்பவுமே நண்பர்கள்தான் பக்கபலம். அவங்க உதவியால்தான் முதல் படமான 'ராஜதந்திரம்' வாய்ப்பு. மத்தவங்களைப் போல என் முதல் வாய்ப்புக்கு நான் கஷ்டப்படலை.

எத்தனை படங்கள் பண்ணியிருக்கீங்க. படத்தோட முழுக்கதையையும் முதல்லயே உங்களிடம் சொல்லிடுவாங்களா?

‘ராஜதந்திரம்', ‘டார்லிங்', ‘ப்ரூஸ் லீ', ‘எனக்கு இன்னொரு பெயர் இருக்கு', ‘மிருதன்', ‘கணிதன்', ‘வீர தீர சூரன்' இப்படி நிறையப் படங்கள் பண்ணியிருக்கேன். ‘ராஜதந்திரம்' படத்தில் வேலை செஞ்சுட்டு அப்படம் வெளிவர காத்திருந்தேன். வெளியாகி பாராட்டுக்கள் கிடைச்ச‌வுடன் சோகம் எல்லாம் பறந்துவிட்டது. எல்லோரும் பாராட்டியது என்னுடைய ‘டார்லிங்' வொர்க் தான். அந்தப் படத்துக்கு அப்புறம் நிறைய வாய்ப்புகள் கிடைச்சுது.

எனக்குப் படத்தோட காட்சிகள் எல்லாம் சொல்லிடுவாங்க. அப்படின்னா தானே எனக்கு ஃபேஷன் டிசைனிங் சுலபமா இருக்கும். நடிகர், நடிகைகளுடைய கலர், அவங்களுடைய லுக் எல்லாத்தையும் வைச்சுதான் அவங்களுடைய டிரெஸ் கலர் என்ன என்று முடிவெடுப்பேன்.

உங்க ஃபேஷன் டிசைனிங்குக்குக் கிடைச்ச‌ மறக்க முடியாத பாராட்டு?

விஜய் சாரோட பாராட்டுதான். ‘ஜில்லா' படத்தின் க்ளைமாக்ஸில் வரும் 20 நிமிடத்துக்கு மட்டும் நான்தான் விஜய் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணினேன். அவருக்கு நான் பண்ணியது ரொம்பப் பிடிச்சிருந்தது. உடனே கூப்பிட்டுப் பாராட்டினார். அப்புறமா, அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்குத் தனியா காஸ்ட்யூம் டிசைன் பண்ணிக் கொடுக்கிறேன். அப்பப்ப‌ கூப்பிட்டு ‘சூப்பர் ஜாய்'னு விஜய் சாரிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். ‘டார்லிங்' படத்திலிருந்து ஜி.வி. சாருக்கு பெர்சனல் காஸ்ட்யூம் டிசைனரா இருக்கேன். எந்தப் படத்தோட‌ போஸ்டரில் என்னுடைய பெயரைப் பார்த்தாலும் டைரக்டர் முருகதாஸ் உடனே போன் பண்ணுவார். ‘காஸ்டியூம்ஸ் சூப்பரா இருந்துச்சு ஜாய்'ம்பார். அப்புறம் சிவகார்த்திகேயன் சார்னு ‘நான் நல்ல வரணும்னு நினைக்கிற நல்ல உள்ளங்கள் நிறைய பேர் இருக்காங்க.

இப்போ டைரக்டிங் சான்ஸ் கிடைச்சா செய்வீங்களா?

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா பார்க்கலாம். அதுக்கான படிப்பு படிச்சிருக்கேன். சினிமா படப்பிடிப்பில் எப்படி இயக்குநர்கள் இயக்குறாங்கன்னு பார்த்துருக்கேன். இப்படி நிறைய கத்துக்கிட்டே வர்றேன். ஆனால், எனக்கு இயக்கம் என்பதைத் தாண்டி ஃபேஷன் டிசைனிங் ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த வேலையைக் காதலிக்கிறேன்.

ஃபேஷன் டிசைனிங் துறையில‌ பாதுகாப்பா உணர்றீங்களா?

சினிமாவில் வேலையும் செய்யும் பெண்கள்னு இல்லை. பெண்கள்னா எங்குமே பாதுகாப்பு கிடையாது. அதான் நிதர்சனம். மத்தவங்ககிட்ட பெண்கள் பழகும் விதத்தைப் பொறுத்துத்தான் அவங்களோட‌ பாதுகாப்பும் அமையும்.

எந்த இயக்குநரோட‌ படத்துல ஃபேஷன் டிசைனரா வொர்க் பண்ண‌ ஆசை? ஏன்?

ஷங்கர், கெளதம் மேனன், மணிரத்னம். இவங்க மூணு பேர் படத்துல‌ வேலை செய்ய ஆசை. ஷங்கர் சார் படத்தில் அவ்வளவு கலர்ஃபுல்லா பாடல்களை எடுத்திருப்பார். அதற்கு நான் வொர்க் பண்ணா எப்படியிருக்கும்னு நினைச்சுக்கிட்டே இருப்பேன். அதே மாதிரி ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்துல டிரஸ் எல்லாம் ரொம்ப சிம்பிளாவும் சூப்பராவும் இருக்கும். அந்த சிம்ப்ளிஸிட்டிதான் கெளதம் சார். மணி சார் படம் எல்லா விதமாவும் ஸ்பெஷலா இருக்கும். இவங்க மூணு பேர் எப்போ கூப்பிடுவாங்கன்னு என் போனை அப்பப்போ பார்த்துட்டிருக்கேன்.

ஃபேஷன் டிசைனரா உங்க லட்சியம் என்ன?

இப்போ கிடைச்சிருக்கிற‌ இடத்தைத் தக்க வைச்சுக்கணும். அதற்கு இன்னும் உழைக்கணும். என் லட்சியம்னா டாப் ஃபேஷன் டிசைனர் பட்டியல்ல‌ என் பேர் வரணும். அவ்வளவுதான். அது வரை நோ ஸ்லீப்பிங்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்