தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இந்தியர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். சென்ற வாரத்தின் லேட்டஸ்ட் செய்தி, ட்விட்டர் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரும், அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தவருமான ஜேக் டார்சி பதவி விலகியதும், அந்த இடத்துக்கு பராக் அகர்வால் வந்திருப்பதும். இதன் பின்னணியில் உள்ள சங்கதிகளை கதைக்கலாம்.
நிறுவனர்களால் நடத்தப்படும் தொழில் முனைவுகள், அவர்களைத் தாண்டியும் வளர வேண்டியது அவசியம் - இப்படிச் சொல்லி தனது பதவி விலகல் கடிதத்தை ட்வீட்டாக கொடுத்திருந்தார் டார்சி.
ஆனால், அது மட்டுமே காரணம் இல்லை என்பது தொழில்நுட்ப உலகை கூர்ந்து நோக்கும் என் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். ட்விட்டரை தொடங்கிய நிறுவனர்களில் ஒருவர் டார்சி என்றாலும், அதை நேரடியாக நடத்தியது கடந்த சில ஆண்டுகளாகத்தான். ட்விட்டர் தொடங்கிய சில ஆண்டுகளில் டார்சி ஸ்கொயர் என்ற கட்டண செயலாக்க (Payment Processing) நிறுவனத்தையும் தொடங்கினார் டார்சி. பல தொழில்நுட்ப நிறுவனங்கள் போலவே இவருடைய நிறுவனங்கள் இரண்டுமே தொழில்முறை முதலீட்டாளர்களிடமிருந்து நிதி பெற்று தொடங்கப்பட்டு, வளர்க்கப்பட்டது. பின்னர் பங்குச்சந்தையில் நுழைந்தன.
பொதுவாக, நிறுவனங்களைத் தொடங்குபவர்கள் வெளி முதலீடுகளைப் பெற்றுக் கொள்ளும்போது, அந்நிறுவனத்தில் அவர்களுக்கு இருக்கும் பங்குகளின் அளவு நீர்த்துக் கொண்டே வரும். ட்விட்டரில் டார்சிக்கு இப்போது இருப்பது 2 சதவீத பங்குகள் மட்டுமே. ட்விட்டருக்கு பின்னர் தொடங்கிய ஸ்கொயர் நிறுவனத்தில் டார்சிக்கு 25 சதவீத பங்குகள் இருக்கிறது. டார்சியின் மொத்த மதிப்பீட்டில் அதிக அளவு ஸ்கொயர் என்பது ட்விட்டர் முதலீட்டாளர்களைக் கவலையடையச் செய்தது. டார்சி பதவி விலக வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் எழுந்த குரலை ஒருவழியாகச் சரிசெய்து தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தார் டார்சி.
ஆனால், இரட்டை சவாரி கடினம் என்பதும், கட்டணச் செயலாக்கத்தில் கிரிப்டோ கரன்சியைக் கொண்டுவர எடுத்த முயற்சியும், ட்விட்டர் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்து இருப்பது சாத்தியமில்லை என்ற முடிவிற்கு டார்சியை தள்ளியது. இதனால், தன்னுடன் பல ஆண்டுகளாக தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்த அகர்வாலை கைகாட்டிவிட்டு டார்சி விலகிவிட்டார். விலகிய அடுத்த நாளே ஸ்கொயரின் பெயர், ‘ப்ளாக்’ என மாற்றப்பட்டிருப்பது தற்செயல் அல்ல. காரணம், கிரிப்டோ என அறியப்படும் மின் பணத்தின் தொழில்நுட்ப அடிப்படை தொடர் சங்கிலி என மொழி பெயர்க்கப்படுகிறது ப்ளாக் செயின்.
சரி, இருக்கட்டும்! இந்தியாவில் பிறந்து, வளர்ந்து ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்திற்கு வந்த அகர்வால் 37 வயதாவனவர். தன்னைப் பற்றி அதிகம் தெரியவிடாமல் இதுவரை பார்த்துக் கொண்டவர். இனி அப்படியே இருக்க வாய்ப்பில்லை. தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியர்கள் தொடர்ந்து தலைமையிடத்திற்கு வருவது பற்றி பலரும் சிலாகிக்கிறார்கள். அகர்வாலின் ஆராய்ச்சிகள் தகவல்தள தொழில்நுட்பங்களைச் சார்ந்ததாகவே இருப்பது தெரிய வருகிறது. (https://www.researchgate.net/scientific-contributions/Parag-Agrawal-70724201 ).
தகவல்தள தொழில்நுட்பம் வெகுவாக மாறியும், வளர்ந்தும் வருகிறது. தகவல் தொழில்நுட்பம் மெயின்ஃபிரேம் எனப்படும் பெருங்கணினிகளைச் சார்ந்து இருந்தபோது துளையிடப்பட்ட அட்டைகளில் சேகரிக்கப்பட்ட தகவல், அலசப்பட்டு, அச்சுவடிவத்தில் வெளியிடப்பட்டது. கணினிகள் வீட்டிற்கு ஒன்று, மடி மீது அமர்ந்து கொள்ள ஒன்று என ஆன பின்னர் தகவல்தள தொழில்நுட்பம் மாறத் தொடங்கியது. ‘18 மாதங்களுக்கு ஒருமுறை கணினிய திறன் இரட்டிப்பாகிக் கொண்டே போகும்’ - இண்டெல் நிறுவனத்தின் நிறுவனர்களின் ஒருவரான மூர் 60-களில் எழுதி வைத்த இந்தக் கணினிய கணிப்பு விதி இன்றும் தொடர்கிறது.
தகவல்தள தொழில்நுட்பம் இந்த விதியை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது என சொல்லலாம். dBase, Access எனப் பயனீட்டாளர்களின் கணினிகளில் பிரபலமாகிய தகவல் தள தொழில்நுட்பம், Oracle, SQL Server எனப் பெருங்கணினிகளில் நிறுவப்பட்டது. இந்தத் தொழில்நுட்பங்களை உருவாக்கிய நிறுவனங்கள் பெரும் வணிக வெற்றி அடைந்ததை டெக் உலக வரலாறு எழுதிவைத்திருக்கிறது.
மேற்படி தகவல்தள தொழில்நுட்பங்கள் அனைத்துமே தகவல் என்பதை சீரான கட்டமைப்பு (Structured) கொண்டதாகவே கருதி அவற்றை வரிசையாகச் சேமித்து, அலச உதவுவதில் மும்முரம் காட்டின. அதென்ன சீரான கட்டமைப்பு? அதற்கு உதாரணம், வாக்காளர் பட்டியல். பெயர், பாலினம், வயது, விலாசம் மற்றும் புகைப்படம் என்ற தகவல் புள்ளிகள் மட்டுமே கொண்ட சீரான தகவல் கொண்டது வாக்காளர் பட்டியல். இதைச் சேமிப்பதில் அதிக சிக்கல் இல்லை.
2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சமூக வலைதள தொழில்நுட்பங்கள் பரவலான பிறகு, இந்தச் சீரான தகவல் சேமிப்பும், அலசலும் போதுமானதாக இல்லை என்பது தெரிய ஆரம்பித்தது. உதாரணம், முகநூல். அதில் நீங்கள் வீடியோ மற்றும் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை எழுதுகிறீர்கள்.
அதை நான்கு பேர் ‘லைக்’ செய்கிறார்கள். மூன்று பேர் பகிர்கிறார்கள். அந்தப் பகிர்வு ஒன்றில் பத்து பேர் தங்கள் கருத்துக்களை எழுதி வைக்கிறார்கள். அதில் ஒருவர் புகைப்படங்களை இணைக்கிறார். இந்தத் தகவலை எப்படி சீராக சேமிக்கமுடியும்? இந்தச் சிக்கலைத் தீர்க்க தகவல்தள தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டு சீரற்ற (Unstructured) தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை வந்தது. MongoDB, DynamoDB போன்றவை சீரற்ற தகவல்தள தொழில்நுட்பத்தில் பிரபலமானவை.
இணையத்தில் இணைக்கப்பட்ட IoT (Internet of Things) தொழில்நுட்பம் நம்மைச் சுற்றியிருக்கும் மின்னணு தடத்தை விசாலப்படுத்தியபடி இருக்கிறது. ப்ளூடூத்தில் இணைக்கப்பட சென்சார்களும் , ஃவைபையில் இணைக்கப்பட்ட கேமராக்களும் என சிறு தகவல் துளிகள் தொடர்ந்து பெரு வெள்ளமாக இணையத்தில் சேகரமாகிவருகின்றன. பெருகி வரும் இந்த தகவல் சுனாமியை சேமிக்க காலக்கிரய (Time Series) தகவல்தள தொழில்நுட்பங்கள் பிரபலமாகிவருகின்றன.
அகர்வாலின் ஆராய்ச்சிகள் தகவல்தள தொழில்நுட்பங்களை வேகமாக்க மற்றும் பயனீட்டை அதிகரிக்க எடுக்கும் பயனுள்ள முயற்சிகளாகத் தெரிகிறது. தகவல் தொழில்நுட்பத்தில் எந்தப் பிரிவில் சிறப்பு கவனம் எடுத்து வல்லுநராகலாம் என்ற எண்ணம் இருந்தால், தயக்கமில்லாமல் தகவல்தள தொழில்நுட்பத்தை தேர்ந்தெடுங்கள். இணையத்தின் வலுவால் தகவல் அமுதசுரபி போல தொடர்ந்து வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.
அதைச் சரியாக சேமித்து, பயனுள்ள முடிவுகளை எடுக்க உதவும் தொழில்நுட்பங்கள் தொடர்ந்து தேவைப்படும். இத்தொடருக்கான பிரத்யேக முகநூல் பக்கம் - https://www.facebook.com/LetsTalkSTEM . அதில் இணைந்து, தொடர் பற்றிய பின்னூட்டங்களையும் எந்த டாப்பிக்குகளை அலச வேண்டும் என்பதையும் கமெண்ட் பகுதியில் தெரிவியுங்கள். +1 (628) 240-4194 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
10 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago