உங்களுக்கு ஜெஸ்ஸி ஓவென்ஸ் பற்றித் தெரிந்திருந்தால் நான் மிகவும் சந்தோஷம் அடைவேன். 2003-2004 காலகட்டத்தில் ஸ்டேட் போர்ட் சிலபஸ்ஸில் 'ப்ளஸ் டூ' படித்த மாணவர்களுக்கு அவரைப் பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். ஆங்கிலப் பாடத்தில் அவரைப் பற்றிப் படித்த கடைசித் தலைமுறை மாணவர்களில் நானும் ஒருவன்.
அந்த ஆங்கிலப் பாடப் புத்தகத்தின் முகப்பு அட்டையே ஜெஸ்ஸி ஓவென்ஸ் காற்றில் பறப்பது போன்ற ஒளிப்படத்தைத் தாங்கித்தான் வந்தது. ‘மை கிரேட்டஸ்ட் ஒலிம்பிக் ப்ரைஸ்' என்று ஜெஸ்ஸியே எழுதிய கட்டுரைதான் அப்போது பாடமாகவும் இருந்தது.
1936-ம் ஆண்டு ஜெர்மனியின் தலைநகரம் பெர்லின் நகரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன. அப்போது, தான் நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வெல்வதற்கு, ஜெர்மனி வீரர் லஸ் லாங் எப்படி உதவி செய்தார் என்பதைப் பற்றி ஓவென்ஸ் எழுதியிருந்த கட்டுரைதான், அந்தப் பாடம். ‘மை கிரேட்டஸ்ட் ஒலிம்பிக் ப்ரைஸ்' என்று ஓவென்ஸ் குறிப்பிடுவது, லஸ் லாங்கின் நட்பைத்தான்!
ஓவென்ஸ் வெற்றி பெறுவதற்கு, லஸ் லாங் உதவி செய்த சம்பவம் சிறந்த ‘ஸ்போர்ட்மேன்ஷிப்'புக்கு உதாரணம் என்றால், அவர் உதவி செய்ததைத் தன் எழுத்தின் மூலமாக வரலாற்றில் பதிவு செய்தாரே அதுதான் உண்மையான 'ஃப்ரெண்ட்ஷிப்'!
அன்றைய தினத்தில் வெறும் மதிப்பெண்களுக்காக மனப்பாடம் செய்து, பிறகு அந்த மனிதரை நாம் மறந்தும்விட்டிருப்போம். ஆனால் சமீபத்தில் வெளிவந்திருக்கும் ‘ரேஸ்' எனும் ஆங்கிலப் படம், அந்த மகத்தான மனிதரின் வாழ்க்கைப் பயணத்தை அவ்வளவு அழகாக எடுத்துக்காட்டி, அந்தக் கட்டுரையைத் தேடிப்பிடித்து மீண்டும் வாசிக்கச் செய்யத் தூண்டியது. அந்தப் படத்தைப் பார்த்த பிறகு அந்தக் கட்டுரையைப் படிக்கும்போது, ஜெஸ்ஸியும், லஸ் லாங்கும், ஜெஸ்ஸியின் பயிற்சியாளர் லேரி ஸ்னைடரும் நம் மனதுக்கு நெருக்கமானவர்களாக மாறிப் போகிறார்கள்.
ஜெஸ்ஸி ஓவென்ஸ் வாழ்க்கையில் 1934-1936 ஆகிய ஆண்டுகள் மிகவும் முக்கியமான காலகட்டம். காரணம், இந்த ஆண்டுகளில்தான் அமெரிக்கரான லேரி ஸ்னைடரிடம் பயிற்சி பெறுகிறார், ரூத் எனும் தனது காதலியைத் திருமணம் செய்துகொள்கிறார், ஒலிம்பிக்ஸ் போட்டியில் நான்கு தங்கப் பதக்கங்களை வெற்றி கொள்கிறார். இந்தக் காலகட்டத்தைத்தான் ‘ரேஸ்' படம் பேசுகிறது.
யூதர்களை நிர்மூலமாக்கும் பணியில் அப்போது ஹிட்லர் தலைமையிலான ஜெர்மனி ஈடுபட்டிருந்தது. ஒலிம்பிக் போட்டியைத் தனது நாட்டில் நடத்துவதன் மூலம், உலக அரங்கில் தனக்கான நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்ள நினைத்தது ஜெர்மனி. ஆனால் அந்தப் போட்டிகளில் யூதர்கள் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவித்தது. இதனால் கோபமடைந்த அமெரிக்கா, அந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலிருந்து வெளியேறிவிடுவோம் என்று பயம்காட்ட, ஜெர்மனி பணிந்தது. இது ஒரு ட்ராக்.
இன்னொரு ட்ராக்கில் ஜெஸ்ஸி ஓவென்ஸ் நிறவெறித் தாக்குதல்களுக்கு ஆளாகிறார். காரணம் அவர் ஒரு கருப்பர்.
வெள்ளையர்கள் நிறைந்திருக்கும் மைதானத்தில்தான் ஜெஸ்ஸி ஓவென்ஸ் பயிற்சி பெறுகிறார். அப்போது பல அவமானங்களுக்கு உள்ளாகிறார். அதையெல்லாம் தாண்டி அவரால் ஜெயிக்க முடிந்தது என்றால், அதற்குக் காரணமாக இருந்தவரும் ஒரு வெள்ளை அமெரிக்கர் தான். அவர் வேறு யாருமல்ல... லேரி ஸ்னைடர்.
ஜெஸ்ஸி ஓவென்ஸ் தனது திறமையால் தங்கப் பதக்கங்களை வென்றார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவரின் திறமையை மேலும் பட்டை தீட்டியவர் லேரி ஸ்னைடர். கருப்பருக்கு ஒரு வெள்ளையர் பயிற்சி அளிக்க முன்வந்தது அன்றைய காலத்தில் மிகவும் புரட்சிகரமான ஒன்று. ஜெஸ்ஸிக்குப் பயிற்சி அளித்தமைக்காக, ஸ்னைடர் தன் சக பயிற்சியாளர்கள் மத்தியில் கேலிக்கும் எதிர்ப்புக்கும் உள்ளானார் என்பது இந்தப் படத்தின் மூலம் தெரியவருகிறது.
அதேபோல, 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் ஜெஸ்ஸி தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். அந்தப் போட்டிகளுக்கான பயிற்சிகளையும் பெற்றிருக்கிறார். ஆனால் பலருக்கும் தெரியாத இன்னொரு விஷயம், அவர் பங்கேற்ற முதல் ‘ரிலே' (தொடர் ஓட்டம்) ரேஸ் போட்டியே ஒலிம்பிக்கில்தான். அதற்குக் காரணம், ஜெர்மனியின் அழுத்தத்தால் அமெரிக்காவின் ரிலே ரேஸ் டீமில் இருந்து இரண்டு யூத இன வீரர்கள் கழட்டி விடப்பட, அதுவரை, ‘ரிலே' ரேஸ் போட்டியில் பங்கேற்றிராத ஜெஸ்ஸி, டீமில் சேர்க்கப்படுகிறார். ஸ்னைடர் தந்த பயிற்சிதான் அங்கும் அவருக்குக் கைகொடுக்கிறது. நான்காவது தங்கப் பதக்கம், இந்த ரிலே ரேஸ் போட்டியின் மூலம் கிடைக்கிறது.
இந்த இருவருக்கும் இடையி லான உறவைச் சித்தரிக்கும் விஷயங்கள்தான் படத்தின் பெரும்பாலான காட்சிகளாக அமைந்தி ருக்கின்றன. ஜெஸ்ஸி ஓவென்ஸ் ஆக ஸ்டீபன் ஜேம்ஸ், லேரி ஸ்னைடர் ஆக ஜேஸன் சுடைக்கிஸ் மற்றும் லஸ் லாங் ஆக டேவிட் க்ராஸ் ஆகியோர் நிஜ வாழ்க்கை நபர்களைத் தங்களின் நடிப்பின் மூலம் திரையில் தத்ரூபமாகக் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் வெற்றியும் பெறுகிறார்கள். படத்தின் அருமையான ‘காஸ்டிங்'குக்காக இயக்குநர் ஸ்டீபன் ஹாப்கின்ஸைப் பாராட்டலாம். ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடக்கவிருக்கும் இந்த வருடத்தில் இந்தப் படம் வெளிவந்திருப்பது சிறப்பான ஒன்று.
ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற அமெரிக்க வீரர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறுவதுதான் படத்தின் இறுதிக்காட்சி. அதில் பயிற்சியாளர் ஸ்னைடருடன், ஜெஸ்ஸி ஓவென்ஸ் ‘பார்ட்டி'யில் கலந்துகொள்ள வருகிறார். அப்போது வாயிற்காப்பாளர் ‘இங்கு வெள்ளையர்களுக்கு மட்டும்தான் அனுமதி. கருப்பர்கள், பின் பக்கமாக வர வேண்டும்' என்று கூறுகிறார். அவமானத்தில் கூனிப் போகிற ஜெஸ்ஸி, தன் மனைவியுடன் பின் பக்கமாக வருகிறார். அந்தச் சமயத்தில் அங்கு எடுபிடி வேலை செய்யும் வெள்ளைக்கார அமெரிக்கச் சிறுவன், ‘நீங்கள்தானே ஓவென்ஸ்?' என்று கேட்டுவிட்டு, ஆட்டோகிராஃப் கேட்கிறான். அவ்வளவு சந்தோஷத்துடன் ஜெஸ்ஸியும் கையெழுத்துப் போடுகிறார்.
ஜெஸ்ஸி பெற்ற ஐந்தாவது பதக்கம் அது!
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
20 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
8 hours ago
சிறப்புப் பக்கம்
9 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
13 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
19 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago