ஜெயிப்பதற்குப் போதும் ஒரு ‘ஐடியா! - எழுத்தாளர் ரஷ்மி பன்சால் பேட்டி

By ந.வினோத் குமார்

‘‘நான் நிறைய காலேஜஸ்க்கு விசிட் பண்றேன். அங்க இருக்கிற ஸ்டூடன்ட்ஸ் கிட்ட பேசுனா, எல்லோருமே ஏதோ ஒரு வேலைக்குப் போற ஐடியாவுலதான் இருக்காங்க. சொந்தமா தொழில் பண்ணலாம்ங்கிற எண்ணம் யாருக்குமே இல்லை. அவங்களைச் சொல்லியும் தப்பில்லை. அவங்களுக்கு என்ன தேவைங்கிறது அவங்களுக்கே தெரியலை. அவங்களுக்குத் தேவையானதை கத்துக்கவும் இல்லை. எல்லாருமே அவங்க பெற்றோர் மற்றும் சொசைட்டியால ‘பிரைன்வாஷ்' பண்ணப்பட்டிருக்காங்க. தமிழ்நாட்டுல 90 சதவீதம் இளைஞர்கள் இன்ஜினீயரிங்தான் படிக்கிறாங்க. ஆனா எல்லோருக்குமே அந்தத் திறமை இருக்கா என்ன?"

‘மேடம் ஒரு பேட்டி!' என்று சொல்லி நாம் கேள்விகளைத் தயாரித்துக்கொண்டு போனால், ஒரு மைக்ரோ ‘லெக்சர்' கொடுத்துவிட்டு நம்மையே கேள்வி கேட்கிறார் ரஷ்மி பன்சால். ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்' என‌ ஒரு புத்தகம் எழுதினாரே... அதே ரஷ்மி பன்சால்தான்!

‘இளைஞனே! நீ எழுந்தால் எரிமலையும் குனியும்' என்கிற ரீதியில் ஆங்கிலத்தில் வறட்டுத்தனமான சுயஉதவிப் புத்தகங்கள் வந்துகொண்டிருந்த நேரத்தில், சொந்தமாகத் தொழில் செய்து முன்னேறிய தொழில்முனைவோர் குறித்து ரஷ்மி எழுத ஆரம்பித்தார். அவரின் முதல் புத்தகம்தான் ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்'!

‘ஆன்த்ரப்ரனர்ஷிப்' (தொழில்முனைவு) எனும் களம் அதுவரை யாருமே தொடாதது. அந்த ‘ஜானரில்' வந்த அந்த முதல் புத்தகம் பல்லாயிரக்கணக்கில் விற்றுத் தீர்ந்தது. பிறகு ரஷ்மியின் ‘கிராஃப்' கிடுகிடுவென ஏறியது. ‘கனெக்ட் தி டாட்ஸ்', ‘ஐ ஹேவ் எ ட்ரீம்', ‘புவர் லிட்டில், ரிச் ஸ்லம்', ‘ஃபாலோ எவ்ரி ரெயின்போ', ‘டேக் மீ ஹோம்' மற்றும் ‘அரைஸ், அவேக்' என அடுத்தடுத்து 6 புத்தகங்கள். அத்தனையும் ‘பெஸ்ட் செல்லர்'. இந்தப் புத்தகங்கள் சென்னையைச் சேர்ந்த ‘வெஸ்ட்லேண்ட்' பதிப்பகத்தால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகக் கடந்த வாரம் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து...

எத்தனையோ ‘ஆன்த்ரப்ரனர்ஸ்' பத்தி நீங்க எழுதியிருக்கீங்க. உங்க பயணம் எப்படி அமைஞ்சுது?

என்னோட அப்பா ஒரு சயின்டிஸ்ட். அதனால என்னோட படிப்புல அவர் ரொம்பவும் அக்கறை எடுத்துக்கிட்டார். என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே மெடிக்கல், இன்ஜினியரிங்னு ட்ரை பண்ணிட்டிருந்தாங்க. ஆனா எனக்கு அதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லை. ஸ்கூல் முடிச்சதுக்கு அப்புறம், ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தேன். அப்பப்ப ஃப்ரீலான்ஸ் ரைட்டராகவும் சில பத்திரிகைகளுக்கு வேலை பார்த்தேன். காலேஜ் முடிச்ச பிறகு, அகமதாபாத்ல இருக்கிற ஐ.ஐ.எம்.ல சீட் கிடைச்சது. 1995-ம் ஆண்டு. எம்.பி.ஏ. முடிச்ச கையோடு ‘JAM' (Just Another Magazine) அப்படிங்கிற இளைஞர்களுக்கான பத்திரிகையை ஆரம்பிச்சேன். அப்படித்தான் எழுத்துலகுக்குள் நான் முழுமையா வந்தேன்.

முதல் புத்தகம்?

அது ஐ.ஐ.எம்.ல ஒரு புரொஜெக்ட்! அங்க, ‘சென்டர் ஃபார் இன்னொவேஷன், இன்குபேஷன் அண்ட் ஆன்த்ரப்ரனர்ஷிப்'னு ஒரு அமைப்பு இருக்கு. ஐ.ஐ.எம்.ல படிச்சிட்டு, சொந்தமா தொழில் செய்யறவங்களைப் பத்தி ஒரு டாக்குமென்ட் பண்ணலாம்னு நினைச்சாங்க. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அதுக்கான ஃபண்டிங் ‘நேஷனல் ஆன்த்ரப்ரனர்ஷிப் நெட்வர்க்'குங்கிற அமைப்புல இருந்து வந்துது. பல தொழில்முனைவோர்களைச் சந்திச்சு அந்த அனுபவங்களை எழுதினேன். ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்' இப்படித்தான் உருவாச்சு. 2008-ம் ஆண்டு வெளிவந்துச்சு. அடுத்த 10 மாசத்துல ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கு!

அதுக்கு அப்புறம் அந்த தொழில்முனைவோர்களைச் சந்திச்சீங்களா? அவங்க நிலைமை என்ன?

ம்! எல்லோருமே ஓரளவு நல்லாயிருக்காங்க. சிலர் எங்க போனாங்கன்னே தெரியலை. அப்பப்ப ஏற்ற இறக்கம் இருக்கத்தான் செய்யுது. காலத்துக்கு ஏத்த மாதிரி தங்களை மாத்திக்கிட்டவங்க ‘மார்க்கெட்ல சர்வைவ்' ஆகுறாங்க. அப்படி தங்களை மாத்திக்க முடியாதவங்க, காணாமப் போயிடுறாங்க.

‘ஒவ்வொரு வருஷ ஆரம்பத்துலயும் 800 ‘ஸ்டார்ட் அப்ஸ்' இந்தியாவுல உருவாகுது. ஆனா வருஷக் கடைசியில அதுல 150 நிறுவனங்கள் மட்டுமே ஜெயிக்குதுன்னு ஒரு கணிப்பு இருக்கு. இதுக்கு என்ன காரணமா இருக்கும்னு நினைக்கிறீங்க?

ரொம்ப சிம்பிள்! தெளிவான ‘ஐடியா' இல்லாததுதான். உங்ககிட்ட ‘ஐடியா' மாதிரி ஏதோ ஒண்ணு இருக்கலாம். அதை அப்படியே விட்டுறக் கூடாது. அதை ‘ஐடியா'வா ஆக்குவதற்கு நீங்க நிறைய வொர்க் பண்ணனும். அந்த ‘ஐடியா'வை செயல்படுத்தும்போது தோல்விகள் வரலாம். அதை எல்லாத்தையுமே ‘லேர்னிங் கர்வ்' ஆகத்தான் பார்க்கணும். ஆக, வெற்றிக்கு வழி அந்த ‘ஐடியா'தான்!

‘ஸ்டார்ட் அப் இந்தியா'ன்னு மத்திய அரசு புதுசா ஒரு விஷயத்தைக் கொண்டு வந்திருக்கு. 2016 - 2017-ம் நிதியாண்டுல இந்தத் திட்டத்துக்கான முதலீடு 5 மடங்காக உயர்த்தப்படும்'னு பட்ஜெட்ல சொல்லியிருக்காங்க. இதை எல்லாத்தையும் ஒரு தொழில்முனைவோரா நீங்க எப்படிப் பார்க்குறீங்க?

கேட்கறதுக்கு நல்ல திட்டம்தான். ஆனா எத்தனை பேர் பயனடைவாங்கன்னு பார்த்தா, அது ஒரு பெரிய கேள்விதான். நிறைய திட்டங்கள் இருக்கு. ஆனா, அது சரியானவங்களைப் போய்ச் சேர தடைகளும் நிறைய இருக்கு. ‘டிஸ்ட்ரிப்யூஷன்' சரியா இல்லை. பேங்க்ல போய் வியாபாரம் பண்ண, 10 லட்சம் ரூபாய் கடன் கேட்டா, அதை வாங்குறது பெரும்பாடா இருக்கு. 5 மடங்கு முதலீடு, நிதி... இதெல்லாம் தேவையே இல்லை. இவற்றைவிடவும், நல்ல கொள்கைகள்தான் முக்கியம்!

அப்படியே இது நல்ல திட்டமா இருந்தாலும், லஞ்சம், ஊழல் நிறைந்திருக்கிற இந்த நாட்டுல இளைஞர்கள் நல்லபடியா வியாபாரம் பண்ண முடியும்னு நினைக்கறீங்களுளா?

நான் அப்படியான சம்பவங்கள் எதையும் கடந்து வரலை. ஆனா, நீங்க சொல்றது உண்மை. அதுக்காக தொழில் தொடங்குற எண்ணத்தையெல்லாம் கிடப்பில் போட்டுட முடியாது. அரசு தலையிடாத, தலையிட முடியாத எத்தனையோ ‘நியூ ஏஜ்' பிஸினஸ் வாய்ப்புகள் நிறைய இருக்கு. அதுல கவனம் செலுத்தலாமே!

கிராமங்களைவிட நகரங்கள்லதான் அதிகளவில் தொழில்முனைவோர்கள் இருக்காங்க?

ஸோ வாட்? அவங்கவங்க படிப்பு, திறமைக்கு ஏத்த மாதிரி தொழில் தொடங்குறாங்க. கிராமங்களைவிட நகரங்கள்ல சில கூடுதல் வசதிகள் இருக்கிறதால, அங்க நிறைய பிஸினஸ் ஸ்டார்ட் ஆகுறது இயற்கைதானே? ஆனாலும், கிராமத்துல ஒரு மொபைல் போன் ரிப்பேர் பண்ணுற கடை வெச்சாலும், அதுவும்கூட தொழில்முனைவுதான்னு நான் சொல்வேன்.

பதிப்பகம் எல்லாம் நடத்துறீங்க...

ஆமாம்! ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ‘ப்ளடி குட் புக்'னு ஒரு பதிப்பகம் ஆரம்பிச்சோம். எங்களோட வெப்சைட்ல இப்போவரை 8 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்காங்க. 140 புத்தகங்களுக்கான ‘ஐடியாஸ்' வந்திருக்கு. இதுவரை 2 புத்தகங்கள் பதிப்பிச்சிருக்கோம். உண்மையான, நல்ல ‘கன்டென்ட்' இருந்தா போதும். நாங்க பதிப்பிக்கத் தயார்!

தொடர்ந்து தொழில்முனைவோர்கள் பத்தியே எழுதுறீங்க. வேற 'ஜானர்'ல ட்ரை பண்ணலையா?

இதையேதான் எல்லோரும் கேட்கிறாங்க. முதன்முதல்ல தொழில்முனைவோர்கள் பத்தி எழுதுனப்போ, ‘நீங்கதான் முதல் தடவையா எழுதறீங்க'ன்னு சொன்னாங்க. இப்ப பார்த்தா, ‘ஏன் அதையே எழுதறீங்க'ன்னு கேட்கிறாங்க. எனக்கு இது பிடிச்சிருக்கு. நான் ஏன் இதிலிருந்து வெளிய வரணும்?

ஓ.கே. தொழில்முனைவோர் ஆக விரும்புற‌ இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

சரியான நேரம்னு எந்த நேரமும் கிடையாது. தொழில் ஆரம்பிக் கணும்னு நினைச்சீங்கன்னா, அதை உடனடியா ஸ்டார்ட் பண்ணிடுங்க. காலேஜ் முடிக்கணும்னு எல்லாம் கட்டாயம் இல்லை. படிக்கும் போதேகூட ஆரம்பிக்கலாம். அட்லீஸ்ட், உங்க பாக்கெட் மணியையாவது நீங்களே சம்பாதிக்கிற பெருமை கிடைக்குமே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

21 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

20 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

13 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

மேலும்