மறதிக்கு எதிராகக் கவிதை!

நாடாளுமன்றம், மக்கள் பிரதிநிதிகள், ஆங்கில ஊடகங்கள் என இந்தியா முழுவதும் பிரபலமாகிவிட்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி மாலையில் கலை இரவு ஒன்று நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் பெயர், ‘தி கன்ட்ரி வித்அவுட் எ போஸ்ட் ஆஃபீஸ்’. அப்சல் குரு மற்றும் மக்பூல் பட் ஆகியோரின் மரணதண்டனைக்கு எதிராகவும், சுயநிர்ணயத்துக்கான காஷ்மீர் மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் இந்தக் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் தலைப்பான ‘தி கன்ட்ரி வித்அவுட் எ போஸ்ட் ஆஃபீஸ்’ என்ற வரியும் தலைப்புச் செய்திகளின் ஒரு அங்கமானது. எழுத்தாளர் மிலன் குந்தேராவின் 'அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போராட்டம் என்பது மறதிக்கு எதிரான நினைவின் போராட்டமாகும்' என்ற வரியை கோஷமாக எழுப்பி இந்த நிகழ்வில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

‘தி கன்ட்ரி வித்அவுட் எ போஸ்ட் ஆஃபீஸ்’ என்னும் தலைப்பிலான கவிதை காஷ்மீரைச் சேர்ந்த கவிஞர் ஆகா ஷாகித் அலியினால் எழுதப்பட்டது. இந்திய ராணுவம் செய்ததாகக் கூறப்படும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக இளம் காஷ்மீர இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தேர்ந்தெடுத்த பின்னணியில் எழுதப்பட்ட கவிதை இது. ரத்த வெள்ளத்தில் சிக்கித் தவித்த காஷ்மீரில் அன்றாட வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்ததையே, தபால் அலுவலகம் இல்லாத ஒரு இடமாக இக்கவிதை சித்தரிக்கிறது.

1949-ல் புதுடெல்லியில் பிறந்து, அமெரிக்காவில் 2001-ல் காலமான ஆகா ஷாகித் அலியின் பிரபலமான இந்தக் கவிதை வேறுவேறு காலங்களில் காஷ்மீரில் எதிரொலித்துக் கொண்டேயிருக்கிறது. கடந்த 2013-ல் டெல்லி திஹார் சிறையில் நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ரகசியமான வகையில் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட செய்தியை இரண்டு நாட்கள் தாமதமாகவே திஹார் சிறை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்தது. அப்போதும் ஆகா ஷாகித் அலியின் கவிதையை வரிகளைச் சுவரொட்டிகள் வழியாக காஷ்மீர் நினைவுகூர்ந்தது.

1990-களில் ராணுவமும் காவல்துறையும் சேர்ந்து நிகழ்த்தியதாகச் சொல்லப்படும் ஒடுக்குமுறையால் காஷ்மீரில் நடந்த நூற்றுக்கணக்கான வன்கொலைகள், கூட்டு வன்புணர்வுகள், தீவைப்புகளின் பின்னணியில் ஏழு மாதங்கள் தபால் துறையும் ஸ்தம்பித்த பின்னணியில் எழுதப்பட்ட கவிதை இது. கவிஞர் ஷாகித் அலியின் தந்தையின் நண்பர் ஒருவர், தனது வீட்டுக்கு அருகில் இருந்த தபால் அலுவலகத்தில் மலைபோலக் குவிந்திருக்கும் கடிதங்களைப் பார்த்த செய்திதான் இந்தக் கவிதைக்கு அடிப்படை. புறக்கணிக்கப்பட்ட அந்தக் கடித மலையைக் கலைத்துப் பார்த்தபோது, ஷாகித்தின் தந்தை அவருக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றைக் கண்டெடுத்திருக்கிறார் அவர்.

ஏக்கம், ஆசை, விரக்தி, வலியைக் கிளப்பும் வகையில் திரும்பத் திரும்ப வரும் சொற்றொடர்கள் மற்றும் வார்த்தைகளால் தனது நிலத்தின் துயரத்தை வெளிப்படுத்தும் கவிதை இது.

சகல அதிகாரங்களுக்கும் எதிரான விடுதலைப் போராட்டங்களுக்கும் கவிதைகளுக்கும் எப்போதும் தொடர்பு உண்டு. ஒரு போராட்டத்தின் நியாயங்களையும் அதற்குக் காரணமான ஒடுக்குமுறைகளையும் வலிகளையும் ஒரு கவிஞன் தனது கவிதையின் வார்த்தைகளில் சுமக்கிறான்.

1983-ல் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக ஏவப்பட்ட கலவரம், ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு உத்வேகமானது. உயிருடன் தீயிட்டுக் கொளுத்தப்பட்டனர் தமிழர்கள். அந்த நினைவையொட்டி எழுதப்பட்ட ஈழக் கவிஞர் சேரனின் கவிதை வரிகள் தொடர்ந்து நினைவுகூரப்பட்டுக்கொண்டே இருப்பவை.

என்ன நிகழ்ந்தது

எனது நகரம் எரிக்கப்பட்டது

எனது மக்கள் முகங்களை இழந்தனர்

எனது நிலம் எனது காற்று

எல்லாவற்றிலும்

அந்நியப் பதிவு

... ... ...

... ... ...

முகில்கள் மீது நெருப்பு தன் சேதி எழுதியாயிற்று

சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து

எழுந்து வருக

அதைப் போன்றுதான் ஆகா ஷாகித் அலியும், போராட்டங்கள் மற்றும் ஒடுக்குமுறை நெருப்பெனக் கனன்றுகொண்டிருக்கும் ஜம்மு காஷ்மீரில் தன் கவிதை வழியாக மீண்டும் மீண்டும் நினைவுகூரப்படுகிறார்.

“எல்லாம் முடிந்துவிட்டது, ஒன்றும் மிஞ்சவில்லை”

திசைகாட்ட உதவும் அவர் குரல் காண

மௌனத்தை ஒரு கண்ணாடியாக்க வேண்டும் நான்.

அலைமேல் தீயின் ஓட்டம்.

அந்த நதியைக் கடக்க வேண்டுமா நான்?

இழுத்து மூடப்படுகின்றன தபால் நிலையங்கள் எல்லாம்.

கத்தரிக்கப்பட்ட தோல்பூக்களையும், சிறைகளுக்கு எனது செய்திகளையும் யார்தான் கொண்டுபோய்க் கொடுப்பார்கள்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

1 day ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

2 days ago

இணைப்பிதழ்கள்

4 days ago

இணைப்பிதழ்கள்

5 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

6 days ago

இணைப்பிதழ்கள்

8 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

இணைப்பிதழ்கள்

9 days ago

மேலும்