அக்டோபர் வந்தாலே அறிவியல் ஆராய்ச்சி சமூகத்திற்கு பரபரப்பு தொற்றிக் கொள்வது வழக்கம். நோபல் அமைப்பு அந்த வருடத்திற்கான விருது பெற்றவர்கள் யார் என்பதை முதல் இரண்டு வாரங்களில் அறிவிப்பதை வழக்கமாக வைத்திருப்பதால் வரும் பரபரப்பு அது.
வேதியியல் பொறியாளராகவும், தொழில்முனைவருமாக இருந்த ஆல்ப்ஃரட் நோபல் 1896ல் இறப்பதற்கு முன்னால் எழுதி வைத்த உயிலில், வாழ்நாள் முழுக்க தான் சேர்த்த சொத்துக்களை வைத்து குறிப்பிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றவர்களுக்கு வருடந்தோறும் கொடுக்கப்பட வேண்டும் என எழுதிவைத்துவிட்டுப் போக நோபல் அமைப்பு தொடங்கப்பட்டது. வெடிகுண்டுகளில் பயன்படுத்தப்படும் டெனமைட்டை கண்டறிந்தவர் நோபல் என்பது கிளைச் செய்தி. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து ஆறு துறைகளில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
இயற்பியல், வேதியியல், மருத்துவம் என மூன்று அறிவியல் துறைகளுக்கும், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி என மற்ற துறைகளுக்குமாக பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வருடமும் அதிக பட்சம் மூன்று பேர் ஒரு துறைக்கான விருதை பகிர்ந்துகொள்ளலாம். 975 பேர் இதுவரை நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள் என்றாலும் அதில் 58 பேர் மட்டுமே பெண்கள் என்பது கவனத்துடன் உற்று நோக்க வேண்டிய புள்ளியியல் தகவல். இது அறிவியல் தொடர் என்பதால், அறிவியல் துறைகளுக்கான இந்த வருட பரிசு வெற்றியாளர்களின் ஆராய்ச்சி பணிகளைப் பார்த்துவிடலாம்.
இயற்பியல்
இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த மூவர் இந்த வருட பரிசை பகிர்ந்து கொள்கிறார்கள். மூவருமே கோட்பாடு இயற்பியலாளர்கள் (Theoretical physicists). அதென்ன கோட்பாடு இயற்பியல் என்ற கேள்வி எழலாம். நம்மைச் சுற்றியிருக்கும் நிகழ்வுகளை விளக்குவதுதான் இயற்பியலின் அடிப்படை நோக்கம். குளிப்பதற்காக தொட்டியில் அமர்ந்த ஆர்கிமிடீஸ் தன் எடைக்கேற்ற தண்ணீர் வெளியேறியதைப் பார்த்து, அதிலிருந்து மிதவை (Buoyancy) என்பதைக் கணித வழியாக செய்த வரையறை மூலமாகத்தான் கப்பல் போக்குவரத்து என்பது தொடங்கியது. ஆப்பிள் மரத்தில் கீழ் அமர்ந்திருக்கையில் தலையில் ஆப்பிள் விழுந்ததில் இருந்து தொடங்கிய சிந்தனைதான், நியூட்டனின் புவியீர்ப்பு விசை பற்றிய கணித வடிவாக மாறியது. ஆர்கிமிடீஸ், நியூட்டன் போன்றவர்கள் நேரடி இயற்பியலாளர்கள்.
ஆனால், அறிவியல் ஆராய்ச்சிகளில் இப்படி நேரடியாகவே பணி புரிவது கடினம். இதைத் தீர்க்க, பெறப்படும் தகவல்களைக் கொண்டு மாதிரிகளை (Model) உருவாக்கி, அந்த மாதிரிகள் மாற்றங்களுக்கு எப்படி உட்படும் என்பதை கணித வடிவில் கொண்டுவரும் முறைமையை கோட்பாடு இயற்பியல் என சொல்லலாம். இந்த வருடம் நோபல் பரிசு வென்ற - க்ளாஸ் ஹேசல்மன், ஜியார்ஜியோ பரீசி மற்றும் சியக்கூரோ மனாபி - ஆகிய மூவரின் ஆராய்ச்சி முயற்சிகள் இன்றைய காலத்திற்கு ஏற்ற சூழலியலின் அடிப்படை அறிவியல் சம்பந்தப்பட்டது. கடலுக்கு கீழ் இருக்கும் பனிப்பாறைகள் உருகும் தன்மை முதல் பறவைகள் ஒன்றாக பறப்பதன் பின்னிருக்கும் காரணிகள் வரை ஆழமாகச் செல்கின்றன இவர்களது ஆராய்ச்சிகள். இந்த வருட இயற்பியல் வெற்றியாளர்கள் பற்றிய நோபல் அமைப்பின் அறிக்கை - https://www.nobelprize.org/prizes/physics/2021/press-release/
வேதியியல்
பெஞ்சமின் லிஸ்ட் மற்றும் டேவிட் மேக்மில்லன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் வேதியியலுக்கான பரிசை சரிசமமாகப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்கும் நேரடியான அறிமுகம் இல்லை என்றாலும், தனித்தனியாக மேற்கொண்ட இவர்களது ஆராய்ச்சிகளில் இருந்து பெறப்பட்ட புதுமையான கண்டுபிடிப்பிற்குத்தான் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது. வினையூக்கம் (Catalysis) என்பது நம் உடலில் தொடங்கி நம்மைச் சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளின் அடிப்படை. உதாரணத்திற்கு, நாம் உண்ணும் உணவை நம் உடல் நொதிகள் (Enzymes) மூலம் வேதிமாற்றம் செய்து சத்துக்களை எடுத்துக்கொள்கிறது. நீங்கள் கையில் வைத்திருக்கும் அலைபேசியின் உள்ளிருக்கும் பேட்டரி உலோகத்தால் ஆன மூலக்கூறுகளால் கட்டப்பட்டது.
அடிப்படையில் இது வரை, நொதிகள் மற்றும் உலோகம் என்ற இரண்டு மட்டுமே வினையூக்கம் செய்ய பயன்படும் என்றுதான் வேதியியல் ஆராய்ச்சி உலகம் நினைத்திருந்தது.
மேற்கண்ட இரண்டு ஆராய்ச்சியாளர்களும் இதற்கு மாற்றாக இயங்கும் வினையூக்கியை கண்டறிந்திருக்கிறார்கள். கரிம வினையூக்கம் (Organocatalysis) எனப்படும் இந்த முறைமை கரிம அணுக்களை (Carbon atoms) பயன்படுத்துகிறது. ஆக்சிஜன், நைட்ரஜன் என பலவற்றுடன் கரிமம் எப்போதும் இணைய விரும்பும் கரிமத்தின் தன்மை இதற்கு அடிப்படை. இந்த கண்டுபிடிப்பு புதிய மருந்து ஆராய்ச்சிகளுக்கு வெகுவாக பயன்படுவதோடு, மாசு உண்டாக்காத விதத்தில் வினையூக்கத்தை பயன்படுத்தலாம் என்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இவர்களது ஆராய்ச்சிகளைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள, நோபல் வெளியிட்டிருக்கும் அறிக்கைக்கு செல்லுங்கள் - https://www.nobelprize.org/prizes/chemistry/2021/press-release/
மருத்துவம்
வேதியியல் போலவே மருத்துவத்திற்கான நோபல் பரிசை இருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவரும் அமெரிக்கர்கள். நரம்பியல் ஆராய்ச்சியாளரான ஆர்டம் பாட்டபூடியன், உடல்கூறு நிபணரான டேவிட் ஜூலியஸ் இருவரது ஆராய்ச்சிகளும் தொடுதலின் அறிவியல் சார்ந்தவை. சூடாக இருக்கும் தட்டின் மீது கையை வைத்தால், தோல் சென்சாராக மாறி, மூளையில் இருக்கும் நியூரான்களுக்கு தகவல் அனுப்பி கையை இழுத்துக் கொள்வதற்கு இடையில் நடக்கும் தகவல் பரிமாற்றம் படித்தறிய பிரமிப்பூட்டுவது. நாம் அறிந்து நடக்கும் இந்த நிகழ்வுகளைத் தாண்டி அனிச்சையாக உடலுக்குள் இப்படி பல்லாயிரம் நிகழ்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இதை முழுக்க புரிந்து கொள்வதன் மூலம், நோய் காரணிகளை மட்டுமல்லாமல், சிறந்த வகையில் வலி மேலாண்மை செய்வதற்கும் இவர்களின் ஆராய்ச்சிகள் உதவிகரமாக இருக்கும் என்பதால் இந்த பரிசு. நோபல் அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கை இதோ - https://www.nobelprize.org/prizes/medicine/2021/prize-announcement/
சுஜாதா எண்பதுகளில் எழுதிய அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு “அடுத்த நூற்றாண்டு" என்ற பெயரில் 1990ம் வருடத்தில் வெளிவந்திருக்கிறது. அதன் சில கட்டுரைகளை சமீபத்தில் படித்தேன். “இருபதாம் நூற்றாண்டு இயற்பியலின் தளராத பல கோட்டைகள் இடிந்து விழுந்த நூற்றாண்டு. பல நம்பிக்கைகள் கழன்று போய், பதிலாக பற்பல விந்தைக் கேள்விகள் எழுந்த நூற்றாண்டு” என இருபதாம் நூற்றாண்டை அதன் கடைசி பகுதியில் விவரிக்கிறார். அணு பற்றிய சூட்சமங்களை முழுக்க புரிந்து அதன் அறிவியலை பல்வேறு தொழில்நுட்பங்களாக்கியது இருபதாம் நூற்றாண்டின் சிறப்பு என்றால், இந்த நூற்றாண்டு உயிரியலின் நூற்றாண்டு என்று உறுதிபட சொல்வேன். அதன் காரணங்களை வரும் வாரங்களில் கதைக்கலாம்.
இத்தொடருக்கான பிரத்தியேக முகநூல் பக்கம் https://www.facebook.com/LetsTalkSTEM. அதில், தொடர் பற்றிய பின்னூட்டங்களையும், எதைப் பற்றி அலசலாம் என்பதையும் சொல்லுங்கள். 1 (628) 240-4194 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் அனுப்பலாம்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
14 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
15 hours ago
சிறப்புப் பக்கம்
11 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago