பொருள்தனைப் போற்று! 6 - ஸ்கூட்டர் இல்லைன்னா ஆட்டோ!

By பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

‘விவசாயம், பொருளாதாரத்துக்குள்ள வராதா?'

பெரும்பாலான பொருளாதார விவாதங்கள் புதிதாகத் தொழில் தொடங்குவது பற்றியே இருப்பதால் விவசாயம் புறக்கணிக்கப்படுகிறதோ என்கிற எண்ணம் உண்டாவது இயற்கைதான்.

விவசாயத்தை ஒதுக்கிவிட்டு, இந்தியப் பொருளாதாரம் நிற்கவே முடியாது. விவசாய உற்பத்தி சரியும் போதெல்லாம் நமது பொருளாதாரம் தள்ளாட ஆரம்பித்து விடுகிறது. வேளாண் உற்பத்தி வலுவாக இருக்கும்போதுதான், பிற திசைகளில் நமது பார்வையைத் திருப்பவே முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நம் நாடு முழுக்க முழுக்க விவசாயத்தை மட்டுமே நம்பி இருந்தது. அதனால்தான், இந்தியப் பொருளாதாரம் என்பதே அடிப்படையில் ‘கிராமப் பொருளாதாரம்' என்று பெருமையாய்ச் சொல்லப்பட்டது.

தொழில்கள் பெருகப் பெருக, சேவைத் துறை விரிவடைய விரிவடைய, நாம் சிறிது சிறிதாக ‘நகர்ப்புறப் பொருளாதாரம்' என்று உருமாறிவருகிறோம்.

இதனால்தான் சிற்றூர்களை விட்டு நகரங்கள், மாநகரங்களுக்குக் குடிபெயர்தல் மிகப் பெரிய அளவில் அரங்கேறிக்கொண்டு இருக்கிறது. நகரமயமாதல் பிரச்சினையின் ஆரம்பப் புள்ளி இதுதான்.

விவசாயம் பற்றி விரிவாக, பிறகு பார்க்கத்தான் போகிறோம். இப்போது தொழிற்சாலைக்குப் போவோமா?

அலுவலகம், தொழிற்சாலை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? நிர்வாகம் செய்கிற இடம் அலுவலகம். உற்பத்தி நடக்கிற இடம் தொழிற்சாலை.

முதலாளிகள், இயக்குந‌ர்கள், மேலாளர்கள், ஊழியர்கள் அலுவலகத்தில் இருப்பார்கள். தொழிலாளர்கள், பொறியாளர்கள், மேஸ்திரி, மேற்பார்வையாளர் ஆகியோர் தொழிற்சாலையில் இருப்பார்கள்.

கணக்குப் புத்தகங்களும் காசும் பணமும் அலுவலகத்திலும், இயந்திரங்களும் மூலப் பொருட்கள் உள்ளிட்டவையும் தொழிற்சாலைகளிலும் இருக்கும்.

மேலோட்டமா தெரிஞ்சிக்கிட்டாப் போதும். சரி. உற்பத்தின்னு சொல்றாங்களே. அப்படின்னா என்ன? அதுக்கு என்ன பொருள்? ‘தயாரித்தல்'னாலும் ‘உற்பத்தி'ன்னாலும் ஒண்ணுதானா, வெவ்வேறயா?

கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, பல செய்முறைகளைத் தாண்டி வந்தா, ‘உற்பத்தி'(manufacturing). குறைந்தபட்ச இயந்திரங்களை வெச்சு அல்லது இயந்திரங்களே இல்லாம, தனியாவோ நாலஞ்சு பேராவோ உருவாக்குனா அது ‘தயாரிப்பு'(making).

தீப்பெட்டிகளைத் ‘தயாரிக்கிறோம்'. மோட்டார் சைக்கிள், கார்... இவற்றை ‘உற்பத்தி' செய்யறோம். ஆனாலும் இரண்டுமே தொழிற்சாலைகள்தான். தீப்பெட்டித் தொழிற்சாலை. கார் தொழிற்சாலை!

நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று... முதலீட்டின் அளவை வைத்து, ‘தயாரிப்பு', ‘உற்பத்தி' என்று பிரிப்பதில்லை. ஒரே ஒரு ‘லேத்' மட்டும் வைத்துக் கொண்டு, ‘உற்பத்தி' செய்யலாம். கோடிக்கணக்கில் முதல் போட்டு, ஆயத்த ஆடைகள் ‘தயாரிக்கலாம்'.

யாரும் கோபித்துக்கொள்ள வேண்டாம். ‘ஒரே ஒரு கேம‌ரா இருந்தா போதும். யார் வேணும்னா படம் எடுத்துடலாம்'. அதனால்தான், திரைப்படம் ‘தயாரிப்பு' ஆகிறது. ‘உற்பத்தி' செய்யப்படுவது இல்லை. ஆனால், திரைப்படச் சுருள், (இப்போதெல்லாம் பயன்படுத்தப்படுவது இல்லை) கேம‌ராக்கள் உற்பத்தி ஆகின்றன. இதிலிருந்து வரும் சினிமா தயாரிக்கப்படுகிறது.

தயாரிப்புக்கும் உற்பத்திக்குமான நுண்ணிய வித்தியாசத்தை இளைஞர்கள், நன்கு மனதில் பதித்துக் கொள்ளவும். பொதுவாக, பாடப் புத்தகங்களில் காணக் கிடைக்காத ஒன்று இது.

சரி. உற்பத்தி செய்யணும்னா என்னவெல்லாம் தேவை? அடிப்படைத் தேவை, மூலப் பொருள்.

‘இது கோதுமைல செஞ்சதா? மைதாவுல செஞ்சுதா?' - கணவன்.

‘அய்யே, ரெண்டுமே இல்லை. அரிசி மாவு' - மனைவி.

‘இதை எதுல இருந்து தயாரிக்கறாங்க'ன்னு கேட்கறோம் இல்லை? அந்த ‘எது'தான், மூலப் பொருள்.

ஒரு பொருளுக்கு ஒரேயொரு மூலப் பொருள்தான் இருக்க வேண்டும் என்பது இல்லை. மேலே சொன்ன இனிப்பு தயாரிக்க, கோதுமை, மைதா, அரிசி மாவு மட்டுமே போதுமா? சர்க்கரை, வெல்லம் தேவைதானே? அதுவும் ஒரு மூலப் பொருள்தான். நெய், டால்டா இவையெல்லாம் கூடுதல் அல்லது உப மூலப் பொருட்கள்.

இவை அல்லாமல், தயாரிப்புப் பொருளின், வாசம், சுவை, நிறம், மெருகு, தோற்றம் ஆகியவற்றைக் கூட்டுவதற்காக, சில ‘சேர்க்கைகள்' இடம் பெறும். இவை எதுவும், மூலப் பொருட்களில் சேராது. ஆனாலும் பொருளின் தனித்தன்மை இதை வைத்தே அமைவதால், இதுவும் மிக முக்கியமாகிறது.

இப்போ, ஒரு எளிமையான கேள்வி. இட்லி, தோசைக்கு மூலப் பொருட்கள் என்ன?

அரிசி, உளுந்து என்பது வரை சரி. அப்புறம்? உப்பு? இதெல்லாம் கொஞ்சம் ஓவர். வேற? தண்ணீர்? அது ஒரு மூலப் பொருளா இல்லையா? எது இல்லாமல், ஒன்றைத் தயாரிக்க முடியாதோ, அது நிச்சயமாக மூலப் பொருள்தான்.

பல தொழில்களுக்கு, தண்ணீர் ஒரு அடிப்படையான மூலப் பொருள் ஆகும்.

இளைஞர்கள் மிகக் குறிப்பாகக் கவனிக்க வேண்டியது இது.

ஆற்று நீரை உறிஞ்சி எடுத்துக் குடி நீராக மாற்றி விற்றால்? சத்தியமாக அதுவும் மூலப் பொருள்தான்.

உற்பத்தியாளர், தான் பயன்படுத்தும் தண்ணீருக்குக் கட்டணம் செலுத்தத்தான் வேண்டும். அனுமதி? சும்மா ஆத்துல போற தண்ணிதானே என்கிற சங்கதி எல்லாம் இல்லை. அனுமதி பெற்றே ஆக வேண்டும்.

மூலப் பொருள் ஒண்ணே ஒண்ணுதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அதுக்கு மேலேயும் இருக்கலாம்னு சொன்னோம். அதே போலத்தான், தயாரிப்புப் பொருளும் ஒன்றுக்கும் மேலே இருக்கலாம்.

சர்க்கரை ஆலையில கரும்புச் சக்கை கிடைக்கிறதே அது என்ன? ‘பை ப்ராடக்ட்' என்று சொல்லப்படும் உபரிப் பொருள் அல்லது துணைத் தயாரிப்பு.

இதுவே, அதே மூலப் பொருள், அதே தொழில் நுட்பம். வேறு ஒரு பொருளைத் தயாரித்தால், அதுவும் இவ்வகைதான்.

ஒரு தொழிற்சாலையில் ஸ்கூட்டர் தயாரிக்கிறார்கள். கூடவே, ஆட்டோவும் செய்தால்? தோலால் காலணிகள் தயாரிக்கும் மையத்தில், தோல் பைகள் தயாரித்தால்? இவை, கூடுதல் தயாரிப்புகள். எதற்காக இப்படிச் செய்கிறார்கள்?

ஒன்றில் இழப்பு ஏற்பட்டாலும் மற்றதில் ஈடு கட்டலாம் என்கிற எதிர்பார்ப்புதான். சமயங்களில் இந்தக் கூடுதல் தயாரிப்புகள்தான், பிரதானத் தொழிலையே தூக்கி நிறுத்தவும் செய்யலாம். நன்கு தெரிந்த ஒரு உதாரணத்தையே பார்ப்போமே.

நம்ம ஊர்ப் பக்கம், சைக்கிள்களில் சேலை வியாபாரம் செய்யறவங்களைப் பார்க்கலாம். பல நாட்களில் இவர்களுக்கு, புடவையை விடவும் ரவிக்கைத் துணி விற்று வருகிற வருமானத்தால்தான் வண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. ‘பை-ப்ராடக்ட்ஸ்' பற்றிய இந்தச் செய்தி, அறிந்து கொள்ள வேண்டிய செய்தி.

அடுத்து, ரொம்ப எளிமையான இன்னோரு கேள்வி. மூலப் பொருள் இருக்கு. வேற என்ன வேணும்? தோசை மாவு இருந்தா போதுமா? அடுப்புக்கு எங்கே போறது? ஆம். எரிபொருள். இன்றியமையாத தேவை ஆயிடுச்சு.

‘இயந்திர வாழ்க்கை'ங்கறது உண்மைதான். நாம் அதை வேற ஒரு அர்த்ததுல சொல்றோம். ஆனா, பொருளாதாரக் கோணத்துல இதுக்கு வேற பொருள் இருக்கு.

முன்னால நாம கையால செஞ்சுக்கிட்டு இருந்த வேலையெல்லாம் இப்போ இயந்திரங்கள் அல்லது சாதனங்கள் செஞ்சிக்கிட்டு இருக்கு. முன்னேற்றம்தான். வரவேற்கலாம். இந்த இயந்திரங்களை இயக்கறதுக்கு, சக்தி தேவைப்படுது. என்ன பிரச்சினைன்னா, இயந்திரங்கள் பெருகுன அளவுக்கு, சக்தி கூடலை.

நம்ம வீடுகள்ல மட்டும் இல்லை. தொழிற்சாலைகள்லேயும் இதே நிலைமைதான். அதனாலதான், ‘மின் சப்ளை போதுமானதாக இல்லை. உற்பத்தி பாதிப்பு'ன்னு படிக்கறோம்.

இது வரைக்கும் சொன்னதைத் திரும்பப் பார்த்தா ஒரு விஷயம் பளிச்சுனு தெரியுமே. ‘தடை இல்லாத் தண்ணீர், மின்சாரம் கொடு' என்று, மிகப் பெரிய நிறுவனங்கள் விதிக்கும் நிபந்தனைகளின் சூட்சுமம் புரிகிறதா?

அதிலும், சலுகை விலையில் தண்ணீரும் மின்சாரமும் பெறத் துடிக்கிறார்களே. ஏன்? காரணம், எரிபொருள் செலவு, உற்பத்தியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தச் செலவை ‘நேரடி' செலவு என்கிறது பொருளாதாரம்.

அது என்ன ‘நேரடி'? பொருளாதாரத்தின் மையப் புள்ளிக்கு வந்து விட்டோம்.

கொஞ்சம் விளக்கமாவே பார்த்துடுவோமே!

அதோ... ஏதோ கல்யாணம் நடந்துக்கிட்டு இருக்கு போலத் தெரியுதே. அங்கே போலாமா?

(வளரும்)
தொடர்புக்கு: bbhaaskaran@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

19 hours ago

சிறப்புப் பக்கம்

14 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்