மனித உணர்வுகளில் நட்பு மிகவும் அழகானது. குடும்பம் இல்லாத மனிதர்கள்கூட இருக்கலாம். ஆனால், நட்பு இல்லாத மனிதர் என்று ஒருவர் இருக்கவே முடியாது. உண்மையான நட்பு எதிர்பார்ப்பு அற்றது. நட்பில் ஒப்பனையும் இருப்பதில்லை. ஒளிவு மறைவும் இருப்பதில்லை. நம் மன ஆரோக்கியத்துக்கும் தனிப்பட்ட வாழ்க்கையின் மேன்மைக்கும் நட்பின் ஆரோக்கியம் மிகவும் அவசியம். அதைப் பேண உதவும் எளிய வழிகள்:
மதிப்பீடு செய்யாதீர்கள்
ஐந்து விரல்கள் ஒன்றுபோல் இல்லை. அதுபோல்தான் மனிதர்களும். முக்கியமாக நண்பர்கள். மனிதர்களின் விருப்பும் வெறுப்பும் இயல்பும் அவர்கள் வளர்ந்த விதம், குடும்பச் சூழல், இருக்குமிடத்தைப் பொறுத்து மாறுபடும். எனவே, எவ்வித மதிப்பீடுமின்றி நண்பர்களையும், அவர்களின் இயல்புகள், பழக்கவழக்கங்களை அணுகுவது நட்பை நிலைக்கச் செய்யும். உதாரணம், நீங்கள் சைவம் என்பதற்காக, அசைவம் சாப்பிடும் நண்பரைத் தவறாக எண்ணாமல் இருத்தல்.
தனிப்பட்ட சுதந்திர வெளி
என்னதான் ஆருயிர் நண்பராக இருந்தாலும், அவர் ஒரு தனிப்பட்ட நபர். அந்தப் புரிதல் இருந்தால், மற்றவருக்குத் தேவைப்படும் தனிப்பட்ட சுதந்திர வெளியை அளிக்க முடியும். எந்நேரமும் நமக்காக இருக்க வேண்டும், நேரத்தை நம்மிடம் செலவிட வேண்டும் என்று எண்ணுவது நட்பை மட்டுமல்ல: வாழ்க்கையையும் அயர்ச்சியில் ஆழ்த்திவிடும்.
மறப்போம் மன்னிப்போம்
தவறு இழைப்பதும், அதை உணர்ந்து திருத்திக் கொள்வதும் மனிதர்களின் அடிப்படை இயல்பு. எனவே, நண்பர்களின் தவறைப் பெருந்தன்மையோடு அணுகுவது நட்பு செழிக்க உதவும். தவறை ஒருபோதும் பூதக்கண்ணாடி கொண்டு அணுகாதீர்கள். நண்பர்கள் மன்னிப்புக் கேட்டால், அதைப் பெருந்தன்மையோடு மன்னித்துப் பழகுங்கள். உங்களுடைய மன்னிப்பு நட்பையும் உங்களையும் மேன்மைப்படுத்தும்.
மனம்விட்டுப் பேசுங்கள்
வாழ்க்கையில் எல்லாப் பொழுதுகளும் இனிமையாக இருப்பதில்லை. நட்புக்கு இது பொருந்தும். கருத்து வேறுபாடுகள் நட்பிலும் ஏற்படும். அதைக் கையாளும் விதம், நட்பையும் உங்களையும் பலப்படுத்தும். கருத்து வேறுபாடுகளை மனம் விட்டுப் பேசுங்கள். அதன் பின் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பது உங்களுக்குப் புரியும். அந்தப் புரிதலே கருத்து வேறுபாடுகளை அகற்றும். நட்பை வலுப்படுத்தும்.
காதுகொடுத்துக் கேளுங்கள்
மனத்தில் புதைந்திருக்கும் அழுக்குகளையும், மனத்தில் தோன்றும் ஆக்கப்பூர்வ எண்ணங்களையும், எவ்விதத் தயக்கமுமின்றி நண்பர்களிடம்தான் பகிர முடியும். மனம்விட்டுப் பேசுவது துக்கத்தை அகற்றும், கவலையைக் களையும், மகிழ்ச்சியைப் பெருக்கும். எனவே, நண்பர்கள் பேசுவதைச் செவிசாய்த்துக் கேட்க எப்போதும் தயாராக இருங்கள்.
தோள் கொடுங்கள்
ஒன்றைச் சார்ந்து ஒன்று வாழ்வதே இயற்கையின் நியதி. சாய்ந்துகொள்ள தோள் தேவைப்படும் சூழல் நட்பில் உருவாகலாம்.அந்தச் சூழலில், தோள் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருங்கள். பிரச்சினையில் உழலும் நண்பரின் மனத்தை அந்தப் பிரச்சினைகளிலிருந்து மடைமாற்ற நட்பால்தான் முடியும். உதாரணம், தனிமையாய் உணரும் நண்பரை, அவருக்குப் பிடித்த பொழுதுபோக்கில் அவருடன் சேர்ந்து ஈடுபடுதல்.
உறுதியளியுங்கள்
வாழ்க்கையில் நாம் சந்திக்கும் இழப்புகளும் பின்னடைவுகளும் நம்மைச் சோர்வடையச் செய்யும். அந்தச் சோர்வு அளிக்கும் மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்குப் பெரும் முயற்சிகள் தேவை. முயற்சிகளின் போதாமையால், சிலரின் வாழ்வு அச்சோர்விலேயே தேங்கிவிடும். ஒரு வேளை உங்கள் நண்பர் அத்தகைய சோர்வுக்குள்ளாவார் என்றால், அதிலிருந்து அவரை மீட்க முயல்வது நட்பின் கடமை. எனவே, ‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்கிற நம்பிக்கை ஏற்படும் விதமாக உங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ளுங்கள்.
முக்கிய செய்திகள்
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
7 hours ago
சிறப்புப் பக்கம்
1 hour ago
சிறப்புப் பக்கம்
21 hours ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
1 day ago
சிறப்புப் பக்கம்
2 days ago
சிறப்புப் பக்கம்
2 days ago