விளையாட்டு வீரர்களின் மனநலம்: காலத்தின் கட்டாயம்

By செய்திப்பிரிவு

விளையாட்டு வீரர்கள் பள்ளி, கல்லூரி, தனியார் அமைப்புகள் மற்றும் நாடுகளின் முகவரிகளாகவும் நல்லெண்ணத் தூதர்களாகவும் திகழ்கிறார்கள். தாங்கள் தாங்கியிருக்கும் அடையாளத்துக்குப் புகழ் சேர்க்க, நிதியுதவி செய்கிறவர்கள், நண்பர்கள், மற்றும் உறவினர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தீரா ஆவலுடன் போராடுகிறார்கள். உடல் பலம் இருந்தாலும், இத்தொடர் முயற்சியில் பல காரணிகள் மனதளவில் தளர்வுறச் செய்வதால், விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் மனநல ஆலோசகர்கள் அவசியம் என்கிற புரிதல் உலக அளவில் அதிகரித்து வருகிறது.

பயிற்சியும் பங்கேற்பும்

பயிற்சிக் காலங்களில் சாதி, மத, இன வேறுபாடுகள், வறுமை, பாலின சமத்துவமின்மை, பாலியல் துன்புறுத்தல்கள், உடல்நோய், காயம், பயிற்சியாளருடனும் மற்ற வீரர்களுடனும் உருவாகும் புரிதல் குறைபாடு உள்ளிட்ட காரணிகள் வீரர்களின் மனநலனைப் பாதிக்கின்றன. உணவுப் பழக்கக் குறைபாடுகளால் வீரர்கள் பலர் துயருறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது, ஜிம்னாசியம், நீச்சல் உள்ளிட்ட விளையாட்டுக்களில் விளையாடுகிறவர்கள் உடல் எடை கூடிவிடக் கூடாதென மிகக் குறைவாகச் சாப்பிடுகிறார்கள்.

அதிகம் சாப்பிட்டுவிட்டோமோ என்கிற பொய்யுணர்வில், மேலும் குறைக்கிறார்கள். சிலர், தாங்களாக முயன்று வாந்தி எடுக்கிறார்கள். மாத்திரையால் வயிற்றுப்போக்கு வரச்செய்கிறார்கள். இதனால், சராசரிக்கும் குறைவான எடையுடன் போதிய அளவு திறனை வெளிப்படுத்த முடியாமல் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். மறுபுறம், குத்துச்சண்டை, பளுதூக்குதல் பிரிவில் உள்ளவர்கள் உடல் எடையை அதிகரிக்க நிறைய சாப்பிடத் தொடங்கி, பிறகு உடல் எடையைக் குறைக்க முடியாமல் பதற்றப்படுகிறார்கள்.

போட்டியில் பங்கேற்க மாநிலம், நாடு கடந்து போகிறவர்களின் உடல், புதிய நேர சுழற்சிக்கும், அங்கு நிலவும் தட்பவெப்ப நிலைக்கும் விரைவில் பழக வேண்டும். இல்லையென்றால், உடலும் மனமும் வலுவிழக்கும்.

போட்டியில் பங்கேற்கும்போது, தான் எதிர்கொள்ளும் வீரர் தன்னைவிட தரவரிசையில் முன்னே இருப்பவரென்றால், அல்லது ஏற்கெனவே அவரிடம் வெற்றியை இழந்திருந்தால், ஈட்டி எறிதல், வில்வித்தை போன்ற போட்டிகளின்போது திடீரென மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமானால் வீரர்கள் இயல்பாகவே பதற்றப்படுவார்கள். புள்ளிகள் குறைகின்ற நேரத்திலும், வெற்றியைத் தீர்மானிக்கும் கடைசிப் பந்து போடும்போதும் பதற்றம் அதிகரித்து நிறையத் தவறிழைப்பார்கள். பார்வையாளர்களின் பெருஞ் சத்தமும், பாராட்டும், இகழ்ச்சியும் அவர்களை சமநிலை இழக்கச் செய்யும். போட்டியின்போது சதைப்பிடிப்பு, சதை விலகல், எலும்பு முறிவு ஏற்பட்டால் எதிர்காலம் சூன்யமான உணர்வெழும். இறுதிப் போட்டி, அல்லது ஒலிம்பிக் போன்ற உயர் விருதுக்குரிய போட்டிகளில் விளையாடும்போது தூக்கமின்மையும், மன அழுத்தமும் தொந்தரவு செய்யும்.

போட்டிக்குப் பிறகு மகிழ்ச்சி அல்லது துயரம் இரண்டின் உச்சத்தையும் வீரர்கள் தொட்டுவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். ஏனென்றால், வீரர்கள் மீதான ரசிகர்களின் விமர்சனங்களும் பாராட்டும் அவர்களின் விளையாட்டுத் திறனையும், அன்றாட வாழ்வையும் பாதிக்கும்.

உதாரணமாக, 15 வயதுப் பள்ளி மாணவர் பிரணவ் தனவாதே 2016-ல் கிரிக்கெட்டில் 1009 ஓட்டங்கள் எடுத்தார். பாராட்டிய மும்பை கிரிக்கெட் சங்கம் ஐந்து ஆண்டுகளுக்குத் தருவதாகச் சொல்லி, ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் கொடுத்தது. ஆனால், 2017-ல் பிரணவின் தந்தை ‘பணம் வேண்டாம்’ எனச் சொல்லிவிட்டார். “பிரணவின் குடும்பத்தினரை வேற்றுக்கிரக வாசிகள்போல் உள்ளூர் மக்கள் பார்த்தார்கள். அவர்களின் பொய்ப்பேச்சுகள் காயப்படுத்தின. எதிர்பார்ப்பிற்கு ஏற்ப ஆட இயலாதது மன உளைச்சலைக் கொடுத்தது” எனப் பயிற்சியாளர் குறிப்பிட்டார்.

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டோக்கியோ- 2020 ஒலிம்பிக் காலிறுதியில் தோற்றபிறகு அவர் மீதான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எல்லை மீறுகின்றன. “கடந்த ஒரு வாரமாக நான் தூங்கவில்லை. என் மனம் வெறுமையாக இருக்கிறது. என் வாழ்வில் என்ன நடக்கிறது என்று என்னாலேயே உறுதி செய்ய முடியவில்லை. பொதுவெளியில் இருக்கும் அனைவரும் என்னை ஒரு சடலத்தைப்போல் பாவிக்கின்றனர். ஒரு நபராக இயல்பாக இருக்க என்னை அனுமதிக்கலாமே. நான் முழுவதுமாக உடைந்து போயுள்ளேன்” என வேதனையுடன் போகட் குறிப்பிடுகிறார்.

ஒலிம்பிக் ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியாவுக்கு நிகழ்ந்ததுபோலவே வெற்றியைத் தவறவிட்ட வீரர்களை நிறம், மொழி, சாதியைச் சொல்லி அவமதிப்பது உலகம் முழுக்கவே இருக்கிறது. தேசத்துக்காக விளையாடி புறக்கணிப்புகளைச் சந்திக்கும்போது எழும் ஆற்றாமையும் அயற்சியும் வீரர்களைப் பாதிக்கிறது. மாற்றுத்திறனாளி வீரர்கள் என்றால் அவர்களுக்குக் கூடுதல் சிக்கல்கள் உள்ளன.

பயிற்சியாளர்களுக்கு மனநலப் பயிற்சி

பயிற்சியாளர்களும் மனநலச் சிக்கலுக்கு ஆளாகிறார்கள். முக்கியப் போட்டிகளில் அணியினர் வெற்றி பெறவில்லையென்றால் தன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாது அல்லது தான் வேலையைத் துறக்க வேண்டும் என்கிற சூழலில் பணிபுரிகின்ற, சவாலில் வென்று தங்கள் பெயரைக் காப்பாற்ற நினைக்கின்ற ஆசிரியர்களும், பயிற்சியாளர்களும் மன அழுத்தத்துக்கு ஆட்படுகிறார்கள். தங்களின் எதிர்பார்ப்பையும், மன அழுத்தத்தையும் வீரர்கள் மேல் இறக்கி வைக்கிறார்கள்.

உதாரணமாக, 'பிகில்' திரைப்படத்தில் வீரர்கள் இறுதிப் போட்டியில் பின்தங்கி இருக்கும்போது, பாண்டியம்மா எனும் வீராங்கனையை நோக்கி, “தண்டச்சோறு. ஓடச்சொன்னா உருள்றாய். என்னடி இது… குண்டம்மா குண்டம்மா” என வார்த்தையாலும், உடல் மொழியாலும் பயிற்சியாளர் பிகில் பேசுவார். ஊக்கமூட்டுவதாக அவர் நினைக்கிறார். ஆனால், ஒரு வீராங்கனை மீது நிகழ்த்தப்பட்ட அப்பட்டமான உளவியல் தாக்குதல் அது. பயிற்சியாளர்களுக்கும் மனநல ஆலோசனை தேவை என்பதைத் தெளிவாகப் புரியவைக்கும் காட்சி அது.

விளையாட்டு உளவியலாளர்கள்

விளையாட்டின் ஒவ்வொரு சூழலையும் அணுகுவதற்கான நுணுக்கங்களையும், வழிமுறைகளையும் விளையாட்டு உளவியலாளர்கள் (Sports psychologists) பயிற்றுவிக்கிறார்கள். இலக்குகளை நிர்ணயிக்க, விளையாட்டுத் திறனை அதிகப்படுத்த, கவனம் குவிக்க, மன அழுத்தம், பதற்றம், தூக்கமின்மை, உணவுப் பழக்கக் குறைபாடு உள்ளிட்டவற்றை வெற்றிகொள்ளக் கற்பிக்கிறார்கள். காயம் குணமாகி விளையாடத் தொடங்குகையில் தன்னம்பிக்கை அதிகரிக்கவும், காயம்பட்ட இடத்தில் கவனத்தைச் சிதறவிடாமல் இருக்கவும் உதவுகிறார்கள். விளையாட்டு உளவியலாளர்களும், பயிற்சியாளர்களும் இணைந்து பணியாற்றும்போது வீரர்களின் காயம் விரைவில் ஆறுவதாகவும், விளையாட்டுத் திறன் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

‘உடல், மனக் காயம் இருந்தாலும் போட்டியில் விளையாடியே ஆக வேண்டும். காயத்தையும் மீறி விளையாடுகிறவர்களே சிறந்த வீரர்கள்’ என்கிற புரிதல் உலக அளவில் மெல்ல மாறி வருகிறது. மன அழுத்தத்தினால் கடந்த காலங்களில் வீரர்கள் சிலர் தற்கொலை செய்திருந்தாலும், ‘தங்கத்தின் கனம்’ (The Weight of Gold) எனும் குறும்படம் வழியாக ஒலிம்பிக் வீரர்கள் தங்களது மனச்சோர்வு, தற்கொலை எண்ணம் குறித்து வெளிப்படையாகப் பேசி கவனம் ஈர்த்துள்ளார்கள். மனநலச் சிக்கல்களைச் சொன்னால் போட்டிக்குத் தன்னைத் தேர்வு செய்யமாட்டார்கள் என்கிற அச்சத்தைக் களையவும், விளையாட்டு உளவியல் பாடத்தை பள்ளி, கல்லூரிகளின் பாடத்திட்டத்தில் சேர்த்து நிபுணர்களை உருவாக்கவும் அரசு திட்டமிடுவது காலத்தின் கட்டாயம்.

- சூ.ம.ஜெயசீலன்,

எழுத்தாளர் / மொழிபெயர்ப்பாளர்

தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

8 hours ago

சிறப்புப் பக்கம்

4 hours ago

சிறப்புப் பக்கம்

5 hours ago

சிறப்புப் பக்கம்

6 hours ago

சிறப்புப் பக்கம்

7 hours ago

சிறப்புப் பக்கம்

9 hours ago

சிறப்புப் பக்கம்

10 hours ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

1 day ago

சிறப்புப் பக்கம்

2 days ago

மேலும்